நூலின் பெயர்: அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது"/ நாதன் பதிப்பகம்: முதல் பதிப்பு: டிசம்பர், 2024/ பக்கங்கள்: 76/ விலை: ௹100
தொடர்புக்கு: +919884060274
"Life began with waking up and loving my mother's face " - George Eliot.
தன் அம்மாவைப் பற்றியும், அவள் வாழ்வின் மீதான அவளின் அழுத்தங்களையும், மெல்லிய இயல்புகளையும், அறியாமையும், கண்ணீரும், வெளிக்காட்டாத கண்களில் தெரியும் கோபத்தையும், அம்மாவின் மீதான தனக்கிருந்த அதீத அன்பையும், அக்கறையையும் தனது இயலாமையும் கலந்து எளிய சொற்களில் கவிதைகளாக கொட்டித் தீர்த்திருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி.
மொத்தம் 60 கவிதைகள். 60 ல் தொடங்கி இறங்கு வரிசையில் காட்டியிருப்பதும், மிக வித்தியாசமான தலைப்பும் கவிஞரின் தனித்துவத்தை காட்டி வியக்க வைக்கிறது.
"A mother's love is like a circle, it has no beginning and no ending"
பெண்கள் கண்களைக் கட்டிக் கொண்டு குடும்பத்தின் தேவைகளுக்காக உழைக்கும் பெண்களின் பிரதிநிதியாக கவிதைகளில் காட்டியிருக்கும் அம்மாவை, அம்மாவின் வாழ்வு மொத்தத்தையும் "ஒளியாங்கண்டு" விளையாட்டாக கூறியிருப்பது அருமை.
 |
புதுகை ஆதீரா |
"மனைப்பாம்பு" என்ற குறியீடு பெண்கள் காலம்காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். அது மனிதர்களாக, உழைப்பாக, வேலையாக, திணிப்பாக, சுமையாக, நோயாக என பலவற்றை அனாயாசமாக தெளிவு படுத்துகிறது. தனது வட்டார வழக்குச் சொற்களை கவிதைகளில்
கையாண்டிருப்பது சிறப்பு. கிராமங்களில் தானியம் தேடிவரும் "அடைக்கலாங் குருவி", உச்சிப் பகலோ, இரவோ வெளியில் செல்லும் பெண்களின் தலையில் வேப்பங்குச்சி இலையோடு தலையில் செருகிச் செல்லும் பழக்கம் போன்றவற்றையும் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
அப்பாவிடம், அம்மாவின் பயபக்தியாகக் கூறுவதோடு, தனது இன்றைய தலைமுறையின் இடைவெளியை "மீசை முறுக்கி விளையாடும் மனைவி" என்றும், அய்யனார் வேட்டை ஆயுதத்தில் மூக்குச் சொரியும் அடைக்கலாங்குருவி போல என்ற அழகான ஒரு உதாரணத்துடன் ஒரு கவிதையில் காட்டியிருக்கிறார். இப்படி எல்லாக் கவிதைகளும் கூற முடியாததால் சில கவிதைகளைக் காண்போம்.
முதல் கவிதையிலேயே மனம் கனத்து விடுகிறது. அம்மாவின் பால்யத்தை ஒளித்து வைத்த தாத்தா பிறகு கண் பொத்துவதில் அப்பாவின் ஏகபோக உரிமை எனவும், அம்மா தானே தன்னை பொத்திக் கொண்டு விளையாடிய வாழ்க்கையில், மூச்சுவிட முடியாமல் படும் அவஸ்தையை கூறும் இடம் கண்ணீர் வரவழைக்கிறது.
60
"காற்றில் வட்ட வட்டமாய்
வாய் பிளந்து
என் உயிரைத் தேடித் தேடி
ஒளியாங்கண்டு விளையாடுகிறேன்" என்றாள் அம்மா.
"அம்மா" என்றவுடன் சிவந்த அந்திநேரம் வயலில் நடந்து வருவதான தோற்றம் கவிஞருக்கு நினைவிற்கு வருவதாக கூறுமிடத்தில் நம்மையும் நம் அம்மாவை எப்படிப் பார்ப்போம் என யோசிக்க வைக்கிறது. அம்மா இல்லாத பொழுதுகளும் அந்தி நேர வான் பார்த்து கவிஞர் சமன் செய்வதாக உணரமுடிகிறது.
அம்மாவின் உடல்நலம் குறித்த கவிதைகளில் சில மனதை பாரமாக்கி நகரமுடியாமல் செய்துவிடுகிறது.
57
"தீனியாகும் எதன்மீதும்
கறையான்கள்
வாய்வைக்கத் தயங்குவதில்லை..
நாளுக்கு நாள்
உடல் நரங்கிய அம்மாவுக்குள்
புற்றுவொன்று வளர்ந்தபோதுதான்
அப்பாவின் சிரிப்பை
முதன்முதலில் கறையான்கள் அரித்தன
அவரும் செதில்செதிலாக உதிர்ந்தார்
செல்லரித்த ஒரு வாழ்வை
புற்றுக்கறையான் வேட்டையாட
நாகம் ஒன்று
வேடிக்கை பார்த்த கதை இது"
இந்தக் கவிதை படித்ததும் மனதில் அழுத்தும் பாரத்தை கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
30.
"கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலிப் பிணைத்து அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்
அப்போது கலைந்த முடியை
எத்துணை முறை சீவியும்
ஒழுங்குபடுத்த முடியவில்லை.
தன்னுடலுக்குத் தானே தீவைத்துக் கொள்ளும்
அந்திக்கு
இந்த வேதனை புரியும்"
அந்திக்கு மட்டுமில்லை கவிஞரே, வாசகனுக்கும் வேதனை அடையாமல் இந்தக் கவிதையைப் படித்துக் கடக்க முடியாது.
மற்றொரு கவிதையில்,
3. நெடுநாள் கழித்து மூத்த மகன் வந்து, விட்டம் பார்த்து அம்மா என கதறி அழ கழுத்தை இறுக்கிய சுருக்கு தளர்த்தி - " "வாப்பா, இரு சோறு போடுறேன்" என்ற வரிகளில்..
கண்ணீரைத் தவிர்த்திட முடியாது.
54
"வாடா மலரு" என்ற
கவிதையில் அம்மாவின் வெள்ளந்தியான அன்பின் வெளிப்பாடு. இரு கைகளையும் விரித்து "மலர்" என காளையை அழைத்ததும் ஓடி வந்து அம்மாவின் மார்பில் புதையும் ஜல்லிக்கட்டுக் காளையின் மூர்க்கத்தனம் முத்தமானது வெறுமனே கைவிரித்த அன்பினால் மட்டுமே சாத்தியம். "சரணாகதி" தத்துவத்தின் சாரமாக உணர்கிறேன்.
கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கின்றன.
உதாரணத்திற்கு சில:
* அம்மாவின் சேலை முடிச்சை- பாஞ்சாலி கொண்டையள்ளி முடிந்த வைராக்கியம் எனக் கூறுவது.
* தலை முடிதலை - "தொண்டைக் குழிக்குள் கத்தி இறங்கியது போல"
*அம்மாவுக்கு கையொப்பம் கற்றுக் கொடுத்தது - புதுச்செடி நிலத்தில் ஊன்றுவதாய்
* பூத்தொடுப்பதை இத்தனை அழகியல் கண்கொண்டு காண முடியுமா? என வியக்க வைக்கிறது. பூக்கள் விரல்களின் சிலும்பல்களில் - "கலைமான் கொம்புகள்" உருவாகி ஓடுவதாய்.
* குமுளி நீரில் கால் வைக்க - "கொலுசு போல சூழும் அயிரைகள்"
* அம்மா தாவாக்கட்டை பிடித்து செல்லம் கொஞ்சுவது - "முகத்தில் மொய்க்கும் ஆசையின் அயிரைகள் "
இப்படி ஏராளமான வித்தியாசமான உவமைகள் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
வயல், செடிகள், கொடிகள், பயிர்கள், தாவரங்களோடு, விலங்குகளோடு அம்மாவின் வாழ்க்கையும் அவைகளுடன் உரையாடல் என இருந்ததையும் ஏக்கத்தோடு வெளிப்படுத்துகிறார்.
ஒரு கவிதையில்,
அந்தியில் அம்மா ஒற்றையடிப் பாதையில் வந்து கொண்டிருந்ததை ஒரு "சித்திரம்" எனக் குறிப்பிடுவார். அவள் நேர்வகிட்டில் ஒரு "பேனாக" இறங்கி வந்து கொண்டிருந்தேன். "இன்னும் இறங்க முடியவில்லை" என்ற எழுத்தில் வலியை உணரலாம்.
சின்னப் பசுவின் அடிவயிறு நீவி உன்னி எடுத்தவள் - என்னோடு இருந்திருந்தால் - சுண்டு விரலை இறுகப் பற்றி, திரும்பிப் பார்த்து, புருவங்கள் நெரித்து, "என்ன?" என்று வாழ்க்கையை ஒரு கேள்வி கேட்டிருப்பேன்" என்ற அவரது வரிகளில் தாயின் உலகம் மாடுகளோடும், வயலோடும் வாழ்ந்த வாழ்க்கையில் தானில்லாத ஏக்கம் பிரதிபலிக்கிறது.
2
"சீமைக் கருவேல மரத்தடியில்
அழுதபடி
ஓரிரவு முழுக்க
தனித்துப் படுத்திருந்தாயே
ஏன் அம்மா?"
தனக்குப் புரியாத, அன்பின் ஏக்கத்தில், நிலவையும், "நீயும் பார்த்தாய்தானே நிலவே".. என்ற கேள்வியில் உருக்கி விடுகிறார்.
ஒவ்வொரு கவிதையிலும் அம்மாவின் கோபம், அழுத்தம், ஆதங்கம், வெறுப்பு, அன்பு என பலவகையான உணர்வுகளையும், அம்மாவுடன் வாழ்ந்த நாட்களுக்குள் மீண்டும் சென்று வந்திருக்கிறார் அவர் தன்னுரையில் கூறியதைப் போலவே.
நூல் மதிப்புரையில் கவிஞர் கரிகாலன் அவர்கள் கூறியிருப்பது போல கவிஞர் காட்டும் அம்மா சற்று வேறுபட்டவர். இவர் கவிதைகள் ஈரக் கவிதைகள். அவசியம் வாசிக்க வேண்டிய அழகான கவிதைத் தொகுப்பு. கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு.
சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். மேலும் பல வெற்றிகள் பெற கவிஞருக்கு அன்பின் வாழ்த்துகள்.