கடவுளர்களை அதிகாரம் செலுத்தும் ஐம்பூதங்களே
உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் என்னை
உம் சக்திகளின் சகல வல்லமையோடும்
எனக்குள் சம்பவியுங்கள்
ஒருபோதும் என்னைக் கை நெகிழ்ந்துவிடாதீர்கள்
எதிரிகளைப் புறங்காணச் செய்யும்
உன்னதங்களையும் எனக்கு ஆசிர்வதியுங்கள்
எனக்கு எதிராய் உங்கள் செங்கோல்
திரும்பாதிருக்கட்டும் எப்போதும்
உம் நீதிபரிபாலனத்தின் சிறுதுரும்பும்
என்னைப் பரிசோதிகாத கொடுப்பினையின்
மகிழ்வைச் சுவீகரிக்கட்டும்
என் ஆசைகளைப் பூர்த்திக்கும்பொருட்டு
பிரயாசைகொள்ளட்டும் உம் ஏவலாளிகள்
பரியாசைக்காரர்களின் பாதங்கள்
தீண்டாதபடிக்கு என் நிலத்தை மீட்டருளும்
சேதமுறாவண்ணம் வதந்திகளிடமிருந்து
என் காற்றைத் தடுத்தாட்கொள்ளும்
வல்லூறுகளின் கூரிய நகங்களில்
கிழிபடாதிருக்க என் வானத்தை இரட்சியும்
தீயனவற்றோடு இணைத்து நன்மைகளையும்
காவுகொள்ளாத சக்தி கொடு என் நெருப்புக்கு
கொடும்வெக்கையிலும் ஈரத்தை இழக்காத
நீர்மை வேண்டும் என் நீருக்கு
இயலுமாயின் என்னைக் குறித்துக் களிகூறுங்கள்
உம் அதிகாரங்களின் பரிணாம நீட்சியாய்
நன்றி: கல்வெட்டுப் பேசுகிறது (ஜனவரி 2011)