31 May, 2010

கொள்முதல்

வசீகரச் செல்வாக்கு மிகுந்த
வார்த்தைகளைப் பெய்து
மனத்தை நனைக்குமவன்
கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி

கண்களின் குணத்துக்கேற்ப
கனவுகளை விநியோகிப்பதிலும்
கனவுகளைக் கைமாற்றிவிடுவதிலும்
கைதேர்ந்த மொழி அவன் நாவுக்கு
சொந்தமானது

கனவுகளை சூல்கொல்வதொன்றே
கண்களின் பிறவி பயனென
அவனுதிர்க்கும் சொல்வாக்கு
சில கண்களில் கனவுகளின் அபிலாசைகளைத்
துளிர்விக்கும்

யாருக்கும் இல்லையென இயம்பாது
இருக்கும் துண்டு கனவுகளைக்கூட
குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைத்துவிடும்
அவன் சாமர்த்தியத்தில் சாமான்யத்துக்கேற்ப
சலுகை திட்டமும் உண்டு

கனவுகள் அற்றுப்போகும்
பின்னிரவுப் புழுக்கத்தில்
அக்கம் பக்கம் பார்வை செலுத்தி....
நெளிவுகளை நேர்த்திருத்தி,
சுருக்கங்களை நீவி, முலாம் பூசி
அவன் வைத்திருந்த சாத்தானின் கனவுகளை
கொள்முதல் செய்துகொண்டு போன
கடவுளின் கண்களில்
ஒளி பெருகத் துவங்கியது

ஈரமண்ணின் நேசம்|ஜூலை 2010

16 May, 2010

பிழைப்பு

ஈரமற்று கானல் ஓடும் நதியில்
மூர்ச்சையுற்று மிதந்த பால்யத்தை
சுமந்துவந்து கண்ணம்மாபேட்டையில்
எரிக்கையில் துளிர்த்த வியர்வையில்
சற்றே உப்பு கரிக்கிறது பிழைப்பு

நன்றி: கல்கி(04.07.2010)

13 May, 2010

இழப்பு

கொஞ்ச காலமாய் கூடவே
வசித்துவருகிறது யாரும் கண்டறியாத மவ்னம்

மவ்னம்தானெனினும் அது சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் காலத்தின் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்க்கோழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
வார்த்தைகள் குரலிழந்து போகும்

நன்றி: கல்கி(04.07.2010)