உயரத்தின் சரிதம்
***
ஒளி
மிக மிக உயரத்தில் வசிக்கிறது
ஆனால்
தன்னைப் பீய்ச்சிப் பீய்ச்சி
பூமியில் தேடுகிறது
என்னை
உன்னை
புல் நுனிப் பனியை
நெருஞ்சி மலரை
சிறுநுணலை.
டார்ச் லைட்டுக்குள் வந்து
வசிக்கக் கூட சித்தமாயிருக்கிறது.
உயரத்தில் இருப்பவற்றுக்கு
உயரத்தில்
ஒரு
வேலையும் இல்லை.
__ கதிர்பாரதி.
மனித மனம் பல விந்தைகளால் ஆனது. நாம் பள்ளத்தில் இருக்கும் போது மேட்டில் ஏதோ இருப்பதாக நம்புகிறோம். அத்தனை துயரங்களையும் கடந்து மேட்டுக்கு சென்று பார்க்கையில் அங்கும் ஒன்றுமில்லை என்று மனதுக்குத் தோன்றுகிறது. மேட்டின் காற்று வெளியோ, கொண்டாட்டங்களோ ஒன்றுமின்மையோ விரைவில் ஒரு வெறுமையை ஏற்படுத்த சாதாரண மானுட மனம் கீழே இருந்தவற்றை விட்டு ஒன்றுமில்லையைக் காணத்தான் இப்படி ஓடிவந்தோமா என நினைக்கிறது. புறவசதி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் மேம்பட்டு சென்றவர்களும் ஒரு கட்டத்தில் அத்தன்மை சலித்து எளிமை நோக்கி நகர்வது, எளிய மனிதர்களுடன் வாழத்துடிப்பது இந்த உண்மையை உணர்ந்த பிறகு தான்.
ஒளி என்பது வெளிச்சங்களாலான பிரம்மாண்டம். அப்பிரம்மாண்டத்தின் கண்கூசலில் பலர் சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்து விடுகின்றனர் அல்லது அவர்கள் பெறும் ஒளி அவற்றைத் தடுக்கிறது.
“டார்ச் லைட்டுக்குள் வசிக்கக் கூட சித்தமாயிருக்கிறது”
என்ற வரிகளை இங்கேதான் நான் பொருத்தி பார்க்கிறேன்…நான் மேலே போனேன் என்று என்னைக் கைவிட்டு விடாதீர்கள்…
எப்படியேனும் ஏதோ ஒரு சந்தோஷத்தை உங்களைப்போல் அனுபவிக்க அனுமதி தாருங்கள் என்று அம்மனிதர்கள் ஓடி வந்து கேட்பதாக நான் யூகிக்கிறேன்.
அறிவினால், உள் எண்ணங்களால் மேம்பட்டு உயரம் போனவர்களும் ஏதுமற்ற ஒன்று நாம் அதுவே ஒளி என்பதை உணர்ந்து அனைத்திற்குள்ளும் தன்னைத் தேடுவதாக ஒரு பொருளும் எடுக்கிறேன்.
சிசிடிவி கேமராவின் கோணங்களை, உயர்திணைப் பறவையாக சகுந்தலையை இப்படி எல்லாவற்றையும் எழுதி எழுதியே தீர்க்க நினைக்கிற எழுத்துத் தாகம் உடையவரின் தொகுப்பாக “உயர்திணைப் பறவை” வந்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் கதிர்.
2 comments:
சிறப்பான விமர்சனம்
சிறப்பான விமர்சனம்
Post a Comment