எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய சமீபத்திய நாவல் "ஞாலம்" குறித்து, சென்னை ஜமீன் ராயப்பேட்டையில் பேசினேன். எழுத்தாளர் சரவண சந்திரன், ஆய்வாளர் ரெங்கையா முருகன், பேரா.மோகனா ஆகியோர் கலந்துகொண்டு நாவல் பற்றி பேசினார்கள்.
ஆங்கிலேயர்கள் முதன்முதலில் சென்னை மாகாணத்தில் கால் பதித்தது செங்கல்பட்டு ஜில்லாவில். தற்போதைய சென்னை ஜார்ஜ் கோட்டையை வெறும் 10 ஆயிரம் ரூபாய் குத்தகைக்குப் பெற்று வணிகக் கொத்தளம் அமைத்தனர். அதற்கு முன்பும், நவாப் ஆட்சிகால 30 ஆண்டுகளுக்கு முன்பும் நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் தமிழ் நிலப் பூர்வக்குடிகள்.
அவர்கள் தங்கள் அதிகார நிலத்தை இழந்த சூழ்ச்சியையும் அதனை மீட்டெடுக்க அத்திப்பாக்கம் அ.வேங்கடாசல நாயகர் நடத்திய அரை நூற்றாண்டு சட்டப் போராட்டத்தையும் பேசுகிறது தமிழ்மகனின் "ஞாலம்" நாவல்.
அண்ணல் அம்பேத்கரை, "இவரே நமது தலைவர்.." எனக் கொண்டாடியவர்; குடியரசு இதழில் எழுதியவர் தந்தை பெரியார். போலவே, "நம் இயக்கம் இப்போது பேசும் கருத்தியலை நமக்கு முன்பே பேசியவர் அ.வேங்கடாசல நாயகர் (1799-1897). நமது காலத்து பேரறிஞர் அவர்" எனப் புகழ்ந்தேற்றிப் பாராட்டினார். இவரின், 'இந்துமத ஆசார ஆபாச தர்ஷினி' என்கிற புத்தகத்தை 1948_ம் ஆண்டு பெரியாரும், 1993_ம் ஆண்டு வே.ஆணைமுத்து அவர்களும் அடுத்தடுத்த பதிப்புகளாகக் கொண்டுவந்தனர். இந்தப் புத்தகம் இந்நாளின் சமூக மூடங்களை ஒருநூற்றாண்டுக்கு முன்பே விவாத்திருக்கிறது.
செங்கல்பட்டு ஜில்லாவில் பூர்வக்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட மன்னவேடு நிலங்களை மீட்க, இங்கிலாந்து ராணி விக்டோரியா வரைக்கும் கடிதம் எழுதியவர் வேங்கடாசல நாயகர். போலவே, நவாபு காலத்தில் நடந்த நிலவுரிமை சூழ்ச்சிக் குளபடிகளை விளக்கி 'பாயக்காரிகளுக்கும் மிராசுகளுக்கும் இடையே உண்டாகியிருக்கிற விவாதம்' என்ற புத்தகம் எழுதியவர்.
பாரட்லா, இங்கிலாந்தில் நாத்திகச் சங்கத்தை உருவாக்கியவர். அந்தச் சங்கம் உருவான அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நாத்திகச் சங்கத்தை உருவாக்கி அதற்கென பத்திரிகையும் நடத்தியவர்கள் வேங்கடாசல நாயகர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் ( முனுசாமி நாயகர், அருணாசல நாயகர்...).
கூடவே, தஞ்சை மராட்டியர் காலத்து மோடி மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை ஆய்ந்து கட்டுரைகளை எல்லாம் எழுதி, சொந்த சமூகப் பகை சம்பாதித்தவர் இந்தப் பெரியவர்.
"ஞாலம்" நாவல் பூர்வக்குடிகளின் நிலம் பறிப்போன வரலாற்றை மட்டுமல்ல, நவீனச் சென்னையின் உருவாக்கக் காலத்தையும் பேசுகிறது.சூயஸ்கால்வாய் வெட்டப்பட வேண்டிய அவசியம் குறித்து உலகம் பேசிக்கொண்டிருந்த கால்த்தில், சென்னையில் பக்ஹிங்காம் கால்வாய் நெல்லூர் வரைக்கும் தோண்டப்பட்ட வரலாற்றைப் பேசுகிறது. கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி (இன்றைய ஸ்டான்லி ஆஸ்பத்திரி)யின், பஞ்சக்கால பங்களிப்பு குறித்தெல்லாம் நிறைய தரவுகளோடு நாவலை விரிக்கிறார் தமிழ்மகன்.
விஜயநகர பேரரசு எழுச்சிக்கும் வர்ணசாதி அடுக்கு கெட்டிப்பட்டதற்குமான சமூக இயங்கியலையும் கோடிட்டுக் காட்டுகிறது நாவல். மன்னவேடு நிலங்களில் படவேட்டம்மன் எழுந்தருளிய வரலாற்றையும் சுட்டுகிறது.
நவீன சென்னை உருவானதன் வாழ்நாள் சாட்சியாளராக அ.வேங்கடாசலம் இருந்திருக்கிறார். ஆங்கிலேயச் சென்னையின் தாகம் தீர்த்த ஏழுகிண்றுகள் தோண்டப்பட்டது, கஞ்சித் தொட்டி மருத்துவமனை உருவானது, அச்சகங்களும், நாணய அச்சகச்சாலைகளும் உருவானது இவரது வீட்டுக்கு அருகில்தான்.
24 ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் ஒன்றுசேர்ந்து நாட்டைப் பிடித்த நிகழ்வுதான், இந்தியா வரலாற்றில் மிக முக்கிய உடைப்பை ஏற்படுத்தியது என்பதை எல்லாம் இந்த நாவலுக்குள் எழுதிப் பார்க்கிறார் தமிழ்மகன்.
தமிழ்மகன் |
"வணிகம் செஞ்சி நான் பொருளாதார தன்னிறைவு அடைஞ்ச மாதிரி, என்னைப் பார்த்து சுண்ணாம்பு வணிகத்துக்கு வந்த நீயும் அடையணும். உனைப் பார்த்தும் இன்னும் 10 பேர் வரணும். நம்முடையது எல்லாம் நமுடையது அல்ல.. அது சமூகத்துடையது என்பதாக தமிழ்மகன் புனைவில் சொல்லியிருப்பார். நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் நிறைவேறிய எண்ணமாக அந்த இடத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.
வேங்கடாசல நாயகர் பற்றி எழுதப்பட்ட நாவலான 'ஞாலம்' என்கிற இலக்கிய தஸ்தாவேஜ்... அவருக்கு முன்னும் பின்னும் சமூக பன்பாட்டு இயங்கியலுக்கு பங்களித்தவர்களை எல்லாம் தொகுத்துக்கொண்டு படிக்கவும் சிந்தனையில் நிறுத்திக்கொள்ளவும் ஓர் ஏற்பாட்டைச் செய்கிறது. வாசிப்பு சுவாரஸ்யம் கொண்டதாக மட்டுமல்ல வரலாற்று சுவாரஸ்யம் கொண்டதாகவும் இருக்கிறது ஞாலம் நாவல்.
1 comment:
அருமை அருமை சிறப்பான விமர்சனம்! தமிழ் மகனின் எழுத்தின் வீரியத்தோடு ஒத்துப் போகிறது இந்த விமர்சனம்!
கதிர் பாரதியின் விமர்சனம் பாரதிதாசனின் வீச்சுக்களோடு வேலாக பாய்கிறது !வாழ்த்துக்கள் கதிர் பாரதி; வணக்கம்!
Post a Comment