23 September, 2024

கதிர்பாரதி 10 கவிதைகள் ~ உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்பில் இருந்து~

1. அப்பா என்கிற காலக்கல்
.............................
இப்போது
ஓர் எண் இருப்பதுபோல
முன்பு
ஒவ்வொருவருக்கும்
ஒரு குரல் இருந்தது…
அண்ணிக்கு அம்மாச்சிக்கு
கொளுந்திக்கு மச்சினனுக்கு.
அதைக்கொண்டு அவர்கள்
பூ பறிப்பார்கள்
வானவில் வரைவார்கள்
துளிக் கண்ணீர் சொட்டவிடுவார்கள்
சூடம் ஏற்றுவார்கள்
……………..
……………..
ஒரு முறை அப்பா
குரல்வழி ஒரு கல் எறிந்தார்.
அது
அத்தையைத் துரத்திக்கொண்டோடி மறைந்தது.
பிறகு அதை
அவள் புதைக்குழியில் கண்டெடுத்தோம்.
…………….
…………….
சமீபத்தில்
உறவினரின் குரலை
சுவரில் விசிறிவிட்டேன்.
தலைமுட்டி சுக்குநூறாகிவிட்டது
அந்தக்
கல்
சொல்
எண்.
**
2. மேஜை நாற்காலி மற்றும் லாட்டி
.........................
மரம்
மரமாக இருந்தபோது
எப்படியெல்லாம் இருந்தது தெரியுமா?
பறவைகளுக்கு அடைக்கலம் தந்தது
பூக்களால் வானத்தோடு பேசியது
நிழல் அமுதம் சுரந்தது
வழிப்போக்கனுக்கும் யாசகனுக்கும்
வித்தியாசம் தெரிந்துவைத்திருந்தது.
காற்றுக்கு
உருவம் கிடைத்தது மரங்களால்தானே.
கடவுளர்
முதலில் சிநேகமானது மரங்களோடுதானே.
மரத்தின் பெயரில் ஊருண்டு
வாழ்க்கைமீது குடைபோல விரிந்திருக்கும்
அதன் கருணை.
வெயிலோடு மழையோடு
மரம் பேசுவதுபோல ஒரு பேச்சு
கடவுளோடுகூடப் பேசிவிட முடியாது.
தோப்பு
வனம்
அடர்வனம் என
தன்னை எப்படியெல்லாம்
வைத்துக்கொண்டது தெரியுமா மரம்.
ஏன்
மேஜை நாற்காலியானதும்
தன்னை ஓர் அதிகாரி என நினைத்துக்கொள்கிறது?
அதன் கைகளில் எப்படி முளைத்துவிடுகிறது
விறைப்புத்தன்மை மற்றும் லாட்டி?
பாவம்
பறவைகளை அட்டென்ஷனில் நிற்கச் சொல்லி
சல்யூட்டை எதிர்பார்க்கிறது
மரம். **
3. பாதி மலர்
.....................
வீட்டின் முன்கதவு திறந்திருக்கிறது
முழுவதும் மூடாமல்
முழுவதும் திறக்காமல்
பாதியாக.
வானில் இருந்து
ஓர் அதிகாலை நட்சத்திரம்
கண்ணடிக்கிறது
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
இருக்கும்
அந்த வீட்டைப் பார்த்து.
**
4. ஒரே ஒரு ஹலோ…
...................
ஒரு
மாங்கனியைத் தீண்டும்போது
அதன் காம்பைத் தீண்டுகிறாய்
கிளைகளை இலைகளைத் தீண்டுகிறாய்
அடிமரத்தை
சல்லிவேர் முடிச்சுகளை
ஆணிவேர் நுனியை
அதன்வழி
பூமியின் ஆழத்தைத் தீண்டுகிறாய்.
பகலை இருளை
அதன் மூலம் வெளியைத் தீண்டுகிறாய்.
ஹலோ…
மாங்கனிப் புழுவைக்கூடத்தான்
தீண்டுகிறாய்.
**
5. அலைவுறுதல்
..................
பெரிதாக ஒன்றுமில்லை
இந்தப் பூமியைச் சுழற்றிவிடும் கை எதுவோ
அதுவே
இந்த ஊஞ்சலையும் அசைத்துவிடுகிறது.
ஆம்
காலத்துக்கும்
அகாலத்துக்கும்
போய்த் திரும்புகிற ஊஞ்சலை.
அது
ஓர் அரிசிக்கும்
ஒரு பருக்கைக்கும்
இடையிலான தூரம்.
**
6. கிருஷ்ண நிழல்
...............
கிருஷ்ணர்
அர்ஜுனனுக்குச் சொல்லவே முடியாத
கீதோபதேசம் கீழ்வருவன...
அதோ
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் பசும்வனப்பும்.
மரத்தில் இருக்கும் பூ தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மஞ்சள் நிறமும்.
பூவுக்குள் இருக்கும்
காய் மற்றும் கனி தெரிகின்றனவா?
தெரிகின்றன
அவற்றின் துவர்ப்பு
மற்றும் இனிப்பும்.
கனிக்குள் இருக்கும் விதை தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மழைத்துளி வடிவமும்.
விதைக்குள் இருக்கும்
மரம் தெரிகிறதா?
தெரிகிறது
அதன் மடிநிழலும்.
அம்பாறதூணியைக் கழற்றி
ஓரமாக வைத்துவிட்டு
வா…
`அந்த மரத்தின்` கீழ்
சிறிது நேரம்
உட்கார்ந்துவிட்டு வருவோம்.
**
7.ஆமை + நத்தை = ஜென்
......................
மலையில் அதன் உச்சியில்
காத்திருக்கிறார் துறவி
100 ஆண்டுகள் தனிமையில்
ஆமையாக
நிதானமாக.
மேலேறிவருகிறான் சீடன்
1000 ஆண்டுகள் தேடலில்
நத்தையாக
மிக நிதானமாக.
1100-ம் ஆண்டு அவர்கள் சந்திக்கிறார்கள்.
மகனே வா
உனக்காகவே காத்திருக்கிறேன்
தாமதிக்காமல்
அடிவாரம் செல்வோம்.
அங்குதான் இருக்கின்றன
நாம்
ஏறவேண்டிய உயரம்
மற்றும்
இறங்கவேண்டிய உயரம்.
**
8. உயர்திணைப் பறவை
...................
சகுந்தலை என்றால்
`பறவைகள் புடைசூழ வளர்பவள்` என்று பொருள்.
புடைசூழ் பறவைகள் மத்தியில்
உண்மைப் பறவை சகுந்தலை மட்டும்தான்
அதுவும் உயர்திணைப் பறவை.
தாய் பிரிந்த துயர்
காதல் பிரிந்த துயர்
மகன் பிரிந்த துயர்
வாழ்வு பிரிந்த துயர்
யாவற்றையும் பறந்து கடக்கிறாள் பறவைபோல
தண்டகாரண்யத்தை
தனித்த வானத்தை
சலசலக்கும் நதியை.
பலமுறை
மழைமேகம்போல பறந்து கரைய நினைத்தாள்.
ஆனால்
ஓர் எளிய மோதிரத்தின் எடை தாளாமல்
கீழே
கீழே வருகிறாள்.
துஷ்யந்த சாபம்
சகுந்தலைக்குக் காவிய சோகம்.
காதல் ஒரு பெண்ணுக்கு ஒளியூட்டும் என்றால்
சகுந்தலைக்கு இருளூட்டியது.
இருள் தின்று
துயர் தின்று
மாலினி ஆற்று மீனாகப் பரவியவள் சகுந்தலை.
கணையாழி
சிலம்பு
மோதிரம்
எல்லா அணிகலன்களும்
பெண் துயரில் உருவான விலங்குகள்.
அதோ
திசைகளை அழைத்துக்கொண்டு
மோதிரம் போன்ற காற்றுவளையம் புக
தன்னந்தனியே ஒரு பறவை பறக்கிறதே
அது
பறவையல்ல சகுந்தலை
சகுந்தலை அல்ல அவள் துயர்
துயர் அல்ல அவள் வாழ்வு
ஆம்
பெண் வாழ்வு.
**
9. சட்டை விதி
................
ஆன்லைன் வெளிர்நீலச் சட்டையை
உடலார அணிந்து
அதற்கு வாழ்வுகொடுக்க இருந்தவன்
மூன்று நாட்களுக்கு முன்பு
இறந்துவிட்டான்.
அது ஒரு துர்மரணம்.
வெயில், மழை, மேடு, பள்ளம்
வெற்றி, தோல்வியில் மயங்காமல்
அவன் உடலையும் மனதையும்
பாதைகளோடு இணக்கமாகச் சுமந்துபோன
ஸ்கூட்டருக்கு நன்றிமறந்து
அதிலாபவெறிக்கு OLX-ல் அதை விற்றுவிட்டான்.
அந்தக் கோபத்தில்
அது
அவனை
விபத்தில் தேய்த்துக் கொன்றுவிட்டது.
.................
.................
`நல்லவேளை
எதிர்காலத்தில்
அவன் கழுத்தை வளைத்து நெரிக்கும்
சாவான பாவத்தில் இருந்து
தப்பினோம்` என
முஷ்டி வரை ஏற்றியிருந்த கையைத்
தளர்த்திக்கொண்டது
சட்டை .
**
10. குடல் வேட்டை
..................
குடலாக
மடங்கிப்படுத்திருந்த மரவட்டை
எண்ணிறைந்த கால்களுடன்
அலையலையாகக் கிளம்பிவிட்டது
வேட்டைக்கு.
அதன் எதிர்நிற்கும் கடவுளர் யார்?

2 comments:

வண்ணைசிவா said...

அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் நண்பா.

Anonymous said...

கதிர்பாரதி : நன்றி நண்பரே