21 July, 2012

கன்ஃபர்ம்

நெஞ்சடைத்து இறந்தவனின் முகநூல் பக்கத்தைப்
பார்க்க நேர்ந்தது
அவனது பதினாறாம் நாளில்.
பக்கங்களெங்கும் கனத்த மௌனமாகப் 
பாறையொன்று இறுகிக் கிடக்கிறது.
அதற்குள் ஜெலட்டின்குச்சாக மறைந்திருக்கும் 
வலியின் திரியில்,
பாறையின் பின்புறத்திலிருந்து கேட்கிற
காதல் மனைவியின் கூக்குரலும்
பருவ மகளின் விசும்பலும்
எந்த நேரத்திலும் நெருப்பை வைக்கலாம்.
குடும்பத்துக்கே அபயம் தந்த அவனது
சிரிப்பூரும் புகைப்படமொன்றும் சிதறப் போகிறது.
அவனது பக்கங்களில்
யார்யாரோ மாட்டிவைக்கும் செய்திகள்
உதிர்ந்துவிட்ட மாவடுவாகத் துவர்க்கின்றன.
விழுந்திருக்கும் லைக்குகள்
வயிற்றிலே மரித்துவிட்ட கருவாகி
அந்தப் பக்கங்களை நீலம்பாரிக்க வைக்கின்றன.
எச்சரிக்கை தோழர்களே...
ஒருபோதும் உயிர்க்க விரும்பாத அந்தப் பக்கத்துக்கு
வந்தபடி இருக்கும் ஃப்ரெண்ட் ரெக்யூஸ்ட்களை
யாரோ கன்ஃபர்ம் செய்தபடியும் இருக்கிறார்கள்.

5 comments:

rvelkannan said...

துக்கத்தில் ஆரம்பித்த சொற்கள் போக போக ஒரு இறுக்கத்தை கொடுத்தது. ஆனாலும் இறுதி வரி ஒரு அமானுஷ்ய அனுபவத்தை கடந்தது போல் இருந்தது கதிர்

'பரிவை' சே.குமார் said...

அருமை...
கடைசி வரிகள் கலக்கல்.

கீதமஞ்சரி said...

கவிதையின் துவக்கத்தில் நெஞ்சுக்குள் உருவாகிய துக்கம் பந்தாய் உருண்டு அடிவயிற்றுக்குள் பதைப்புண்டாக்குகிறது வாசித்து முடிக்கையில். பிரமாதம். பாராட்டுகள்.

ச.முத்துவேல் said...

Muthuvel likes this...

manichudar blogspot.com said...

I 2 like