12 July, 2012

துப்பாக்கிக்குள் நிரம்பும் சிரிப்பு

அவனிடம் நெடுநாட்களாகவே சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது.
எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான்.
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர்க் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது.
பிறகு, புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது.
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது.
வலிசுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தைத் தடவி
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது.
பகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப் போடுவதாகவும்
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாகவும்
அவ்வப்போது தோற்றம்கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும்
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன்.
சமீபத்தில்...
இலவசவேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
ஒரு துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிரிப்பின் சாதிப்பு !

ராமலக்ஷ்மி said...

சமூகத்தின் மீதான கோபத்தையும் சிரிப்பில் வெளிப்படுத்துவதாக முடித்த விதம் சிறப்பு.

கீதமஞ்சரி said...

விரக்தியின் விளிம்பிலும் வெளிப்படும் சிரிப்பு துப்பாக்கியுள் ரவை நிரப்பியதைப் போலானது என்பது சரிதான். எத்தனை உயிர்களை பறிக்கப்போகிறதோ அக்கோர சிரிப்பு!

மனம் தொட்ட படைப்பு. பாராட்டுகள்.

ஹ ர ணி said...

கதிர்பாரதி

சிரிப்புத்தான் ஆற்றுப்படுத்துகிறது எல்லாவற்றையும் அதேசமயம் அதுதான் வலிமையான ஒரு ஆயுதமாகவும் உருவெடுக்கிறது. சிரிப்பு துப்பாக்கிக்கு ரவை நிரப்யிது போல இருப்பதுவே எதிர்ப்பின் வெடிப்புதான்..வலிமையான கவிதையின் வெளிச்சம்.

நிலாமகள் said...

வல்லாங்கு!!

எங்க‌ தான் சார் தேடிப் பிடிப்பீங்க‌ இவ்வாறான‌ சொற்க‌ளை?!

நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன்//

நானும்!

இறுதியில் இல‌வ‌ச‌த்துக்கு அலைப‌வ‌ர்க‌ளுக்கு செருப்ப‌டியாய் அச்சிரிப்பு!