22 July, 2012

காலத்தின் மீது விரைகிறது பொறுப்பு


பகலைக் கடந்து
முன்மாலைக்குள் விரைகிற இந்தப் பேருந்து
பேரூராட்சியின் பின்னிரவிலிருந்து வருகிறது.
மறுநாள் மாநகரத்தின் முன்னிரவுதான் இலக்கு.
மிகமிகப் பொறுப்பான பேருந்து இது.
பயணிகள் இருக்கைக்கு வந்துவிட்டால்
தாயின் கருவறை கதகதப்போடு தூங்கலாம்.
இதோ... இதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைகிறதைக் கவனிக்கிறீர்களா.
கர்ப்பிணியின் ஐந்துமாத வயிற்றில் அவள் தாய் பூசிவிட்ட
விபூதிகூட அழியவில்லை பாருங்கள்.
தகப்பன் மார்போடு அப்பிக்கொண்ட பிஞ்சுமலர்
கனவில் பொம்மைக்கு இடுகிற முத்தத்தையும்
லாகவமாகச் சுமந்து போவதை அறிகிறீர்களா.
வேங்கைப் பாய்ச்சலை இடைநிறுத்தி அது
சாலப் பரிந்தூட்டும் தேநீர், இளநீர்... இவையெல்லாம்
பேருந்தின் பேரன்பு என்பது புரிந்திருக்குமே உங்களுக்கு.
கவனத்தோடு மாநருக்குள் நுழைகிறது.
வரவேற்பது அதன் முன்னிரவுதான்.
இதோ பாருங்கள்
அலுங்காமல் இறக்கிவிடுகிறது இதயநோயாளியை.
குலுங்காமல் இறங்குகிறாள் கர்ப்பிணி.
தூக்கத்திலிருந்து புன்னகைக்கு தோள்மாற்றி
இறக்குகிறது சிறுமியை.
கடைசியாக, பேரூராட்சியின் பின்னிரவை
மாநகராட்சியின் முன்னிரவு
கைகொடுத்து இறக்குவதையும் பார்த்துவிட்டீர்களா.
நான்தான் சொன்னேனே
மிகமிகப் பொறுப்பான பேருந்து இதென்று.
 

4 comments:

பத்மா said...
This comment has been removed by the author.
பத்மா said...

முன்னிரவும் பின்னிரவும் கைகுலுக்கும் கதகதப்பு கவிதையிலும்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எனக்குக் கூட ஓரிருக்கை வேண்டும்போல இருக்கே கதிர்.

செம ஃபார்ம்ல இருக்கீங்க.கலக்குங்க.கலக்குங்க.

manichudar blogspot.com said...

நானும் பயணித்தேன் கவிதையின் வாயிலாக பேருந்தில்.