14 July, 2012

என்ன செய்யலாம் இந்தப் பிரியத்தை வைத்துக்கொண்டு

நீங்களே சொல்லுங்கள்
தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தை வைத்துக்கொண்டு 
என்ன செய்துவிட முடியும்.
அரசாங்கத்தைக் கலைத்துவிடலாம் என்கிறீர்களா
ஆமாமாம் கலைத்து விடலாம்தான்.
அப்புறம்
அந்தப் பிரியத்தை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றலாம்.
எதிர்பாராத நேரத்தில் எதிர்ப்பார்த்த முத்தத்ததைப் பெற்றுக்கொள்ளலாம்.
போரடித்தால் உப்புமூட்டை சுமக்கலாம்.
பூர்வீகச் சொத்தை விட்டுக்கொடுத்துவிட்டு
பேசாமல்கூட இருக்கலாம்.
கட்டிப்பிடித்துக்கொண்டே படுத்திருக்கலாம்.
கண்ணீர்விட்டுக் கதறலாம்; கை உதறிப் பதறலாம்.
நாளுக்கொரு பரிசளித்துப் பூரிக்கலாம்; பூரிக்கவும் வைக்கலாம்.
என் கண்ணே, எதிர்காலமே, உயிர்க்கோளமே... என்பது போன்ற
ஈசல் வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை இந்தப் பிரியம்
எனவே, நம்ப வைத்தும் ஏமாற்றலாம்.
முகத்தின் முன்பு உருகிவிட்டு முதுகின் சமவெளியில்
எட்டியெட்டி உதைக்கலாம்.
இன்னும்... இன்னும்... எதிர்பார்க்கிறீர்களா?
அப்போ, ஒன்று செய்யலாம்...
மணிக்கட்டை பிளேடால் வாகாக அரிந்துகொண்டு
உயிரைப் போக்கலாம்.

3 comments:

நிலாமகள் said...

ஏன்? ஏன் இந்த‌ கொல‌வெறி?

ஹ ர ணி said...

கதிர் பாரதி..

கடுகளவு பிரியம் போதும் கடுகளவு நம்பிக்கைய வரையலாம் யாரும் அழிக்கமுடியாதபடி.

கிருஷ்ணப்ரியா said...

இந்தப் பிரியத்தை வைத்துக் கொண்டு

“ கவிதைக்கு கமெண்ட் போடலாம்.
பேசியில் அழைத்துப் பாராட்டலாம்.
பிறருக்கு பரிந்துரைக்கலாம்.
இவன் என் நண்பன் என்று பெருமை
பேசலாம்.
எல்லாவற்றிற்கும் மேலே
கதிரின் அடுத்த கவிதைக்காய்
காத்திருக்கலாம்....”

இத்தனையும் செய்யும் இந்தப் பிரியத்தை வைத்துக் கொண்டு நான் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் கதிர்...?