30 January, 2013

கவிதைகள் செழித்த வயல் (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பு குறித்து) == சுந்தரபுத்தன்


ஒரு பத்திரிகையாளராக நண்பர் கதிர்பாரதியை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஆனால் கவிதை எழுதுவார் என்பது ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் இணையத்தில் சாட் வழியாக வரும்போது அந்தப் பக்கத்தில் எழுதிய கவிதைகளைப் படிக்க இணைப்புகளை அனுப்புவார். அப்போது படிப்பேன். அந்தக் கவிதைகளில் காமம் கொப்பளித்தாலும், அதை மீறிய கவித்துவம் நம்மைக் கவரும். சமீபத்தில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. ஓவியர் மணிவண்ணனின் வண்ணமயமான அரூப அட்டைப்படமும் நேர்த்தியான நூல் கட்டமைப்பும் அழகுடன் இருந்தன. வாசகனை தம் பக்கம் இழுக்க இவை தேவையானவைதான். இந்நூல் புது எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது.
மிக அடர்த்தியான வரிகளைக் கொண்ட நீண்ட மற்றும் குறு கவிதைகள். எல்லா கவிதைகளிலும் வயல் சார்ந்த நிலம் தொடர்பான பயிர், மரம், பறவை, பருவகாலம் தொடர்பான வார்த்தைகளைப் பார்க்கமுடிகிறது. அதுவே அந்தக் கவிதையை மேலும் உயிர்ப்புள்ளதாக்குகிறது. முதல் கவிதையான குடும்பப் புகைப்படம் கவிதையில், தளிர் முகமொன்றில் தன் சல்லிவேருக்குப் / பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது என்றும் அதே கவிதையின் கடைசியில் காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று/ பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது / கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது / அறுவடைக்கு நிற்கும் நெல் வயலொன்றில் தீ பரவுகிறது... இக்கவிஞர் வயலும் வயல்சார்ந்த மருதநில வாழ்க்கையைக் கொண்ட தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவர் என்பதற்கு மேற்கண்ட வரிகள் சான்றாக இருக்கின்றன. எல்லோருமே மாற்று நிலம் பற்றிய நினைவுகளை எழுதிவிடக்கூடும். சில கூர்ந்த கவனிப்புகளை அவர்கள் மறந்துவிட நேரிடும். ஆனால் கதிர்பாரதி, வாழ்வின் நெருக்கடிகளை மாநகர வாழ்வு தரும் அனுபவங்களைப் பாடும்போதுகூட நிலத்தை மறக்காதவராக இருக்கிறார். பலவிதமான படிமங்களும் கனவுமயமான காட்சிகளும் அவருடைய கவிதைகளில் மிதக்கின்றன.
ஒரு கவிதையைத் தொடங்கும்போதே அதன் காட்சிகளும் தொடங்கிவிடுகின்றன. இவருடைய கவிதைகளைப் படிக்கும்போது வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு... என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பு ஞாபகம் வருகிறது. சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளைக் கொண்ட கவித்துவம் பொங்க அவர் எழுதியிருப்பார். அந்தப் பாதையின் தொடக்கத்தில் கதிர்பாரதியைப் பார்க்கமுடிகிறது. வாசிக்கிறவரின் கற்பனைகளை கிளர்த்தும் சம்பவங்களையும் சிந்தனைகளையும் கவிதைகளில் விதைக்கிறார். ஆக... / ஹிட்லரின் அந்தப்புரத்தை சமாதானத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்... என்ற ஒரு கவிதை தொடங்கி.... நான் சமாதானத் தூதுவர் அல்ல/ ஹிட்லர் என்று முடிகிறது. மீண்டும் மருதம் எட்டிப்பார்க்கிறது ஒரு கவிதையில் வெயிலுக்குப் பொறுக்குத் தட்டிய விளைநிலத்தில் / வெற்றுப்பாதங்களுடன் நடக்கும் வேதனை தருகிற / உன் பார்வையை என்று தொடங்குகிறார் ஒரு கவிதையை. நிலத்திற்கு ஆனந்தி என்ற பெயரிட்டு அழைக்கும் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்ற கவிதை, வாசிப்பவனின் புரிதலை மெல்ல சோதித்துப்பார்க்கிறது. வாழ்வின் எதார்த்தத்தில் எள்ளலை இழையவிடுகிறார் கவிஞர். அதற்கு சரியான எடுத்துக்காட்டாக ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறன் என்ற கவிதை எனக்குப்படுகிறது. வெறும் கவித்துவம், உருவகம், உள்ளடக்கம் என்றில்லை மொழியை நவீனமாகப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் எளிமையும் வசீகரிக்கும் கவிதை மொழியையும் கைவரப்பெற்றிருக்கிறார். கிறித்தவமும் அது தமிழுக்கு வழங்கிய அழகு வார்த்தைகளும்கூட கதிர்பாரதியின் கவிதைகளில் புழக்கத்தில் இருக்கின்றன.
நாம் படிக்கும்போது நிதானிக்கமுடியாத வரிகளையும் எழுதுவதில் கதிர்பாரதி வாசகனைக் கவர்கிறார். உங்களுக்கு இல்லவேயில்லை என்றாகிவிட்ட / ஒருத்தியின் சிரிப்போடு... என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்று தெருவெங்கும் மிகுந்துவிட்ட மதுக்கூடங்களின் அனுபவத்தைக்கூட ஒரு கவிதையில் சுவாரசியமாகத் சொல்லத் தொடங்குகிறார். அதாவது.... சமூக நலக்கூடங்களுக்குள் நுழைதல் போல/ அத்தனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது/ கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது / அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது/ இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்... என்று போகிறது அந்தக் கவிதை. பலரால் பாராட்டப்பட்ட இக்கவிஞரின் யானையோடு நேசம்கொள்ளும் முறை என்ற கவிதையும் வாசகனுக்கு கவித்துவத்தின் புதிய சாளரங்களை திறந்துவைக்கும்.
ஓர் இலக்கிய விமர்சகனைப்போல கவிதையின் பலம் பலவீனங்களைப் பற்றி அலசவில்லை. இக்கவிதைகளை நான் புரிந்துகொண்ட எல்லையிலிருந்தே இக்கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். முதல் தொகுப்பில் ஒரு நம்பிக்கையான கவிஞராக தமிழ் கவியுலகின் வெளிச்சத்துக்கு வந்துள்ள நண்பர் கதிர்பாரதிக்கு வாழ்த்துக்கள்.

21 January, 2013

கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார் கதிர்பாரதி.

கதிர்பாரதி என்பவரின் முதல் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். கடந்த பத்தாண்டுகளில் படித்த கவிஞர்களில் முக்கியமானவராக பட்டார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவரைப் பற்றி குறிப்பிட்டதும் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் ஏழுதுங்கள், யாரேனும் நம்பிக்கை ஏற்படுத்துவதாய் தோன்றினால் நிச்சயம் அவர்களைப் பற்றி பதிவு செய்ய வேண்டும் என்றார். சீனியர்கள் நம்மை புறக்கணித்தாலும் பரவாயில்லை. இப்படி ஒரு புதுப்படைப்பாளிக்கு எங்கோ ஒளி சுடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நானும் நீங்களும் அந்த நம்பிக்கையில் தான் எழுதுகிறோம்.

நன்றி: அபிலாஷ் 

31 December, 2012

கவிஞர் நரன், ஆசிரியராக இருந்து கொண்டு வரும் இலக்கிய காலாண்டிதழ் இதழ் சால்ட்.., சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறது.




27 December, 2012

கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் வெளியீடு....

22.12.2012 அன்று எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், நண்பர் நிலாரசிகனின் மீன்கள் துள்ளும் நிசி நண்பர் இயற்கை சிவம் ஆசிரியராக இருந்து, கொண்டு வரும் வெயில் நதி சிற்றிதழ் அறிமுகங்கள் நிகழ்ந்தன. நிறைவான விழாவாக இருந்தது. முகப்பு புத்தகம் செல்போன் வழியாக பார்த்துக்கொண்ட நிறைய நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. விழாவில் கவிதைப் புத்தகங்கள் பேசிய அத்துனை பேரும் தயாரிப்போடு வந்திருந்திருந்தது ரசிக்க தக்கவையாக இருந்தன. விழாவை ஒருங்கிணைத்து நடத்திய யாவரும் டாட் காம் குழுவுக்கும் விழாவில் கலந்துகொண்ட அத்துனை தோழமைகளுக்கும்இடம் தந்து உதவிய டிஸ்கவரி புக் நிலையத்தாருக்கும் எனது நன்றி. விழாகுறித்த புகைப்படத்துளிகளை நான் பதிகிறேன். விழாகுறித்து நண்பர்கள் எழுதுங்கள்... அறியத் தாருங்கள். படிக்க ஆவல்... என் புத்தகம் குறுத்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்

18 December, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் == கதிர்பாரதியின் கவிதை புத்தக வெளியீடு


வணக்கம் நண்பர்களே...


எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
புது எழுத்து பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. புத்தகத்தினை மிகவும் நேர்த்தியாக
கொண்டு வந்திருக்கிறார் புது எழுத்து பதிப்பாளர் திரு. மனோன்மணி. அட்டைப்படத்தை
கவிதைத் தனத்தோடு வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கு
என் அன்பும் நெகிழ்வும். பின்னட்டைக் குறிப்புகளை மிகவும் வாஞ்சையோடு எழுதித் தந்திருக்கும்
கவிஞர் நரன் என் கவிதைகள் நீளும் திசைகளில் எல்லாம் இருக்கிறார்.

எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை அன்று எனது புத்தகத்தை கவிஞர் யூமா வாசுகி அறிமுகப்படுத்துகிறார்.
என் நண்பர் கவிஞர் வா.மணிகண்டன் புத்தகத்தைப் பெற்றுகொண்டு அறிமுகத்தை வழிமொழிகிறார்.
விழாவினை யாவரும்.காம் (அய்யப்பமாதவன், வேல்கண்ணன், ஜீவகரிகாலன்.... ) & புது எழுத்து பதிப்பகம் இணைந்து நடத்துகிறது.
விழாவில் கவிஞர் நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி வெளியீடும்
வெயில் நதி சிற்றிதழ் அறிமுகமும் நடக்கிறது

எனக்கு முக்கியமான இந்நிகழ்வில் உங்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன். வாருங்கள் நண்பர்களே....


விழா குறித்த விவரங்களுக்கு....
http://www.yaavarum.com/archives/660


அன்புடன்
கதிர்பாரதி9841758984
 

06 December, 2012

தேவை: ஓர் அழுகையும் சில விசும்பல்களும்


உங்களுக்கு எப்படி ஆறுதல் தருவதென்று தெரிந்தேனில்லை.
உச்சந்தலை வருடி 
உள்ளம் தொட வேண்டும் போலிருக்கிறது.
கன்னத்தை இதமாகத் தாங்கலாம்தான்
அது இன்னும் உங்களை தளும்பச் செய்திடுமே.
உள்ளங்கையில் ஆதூரமாக ஓர் அழுத்தம் தந்து
என் ஆறுதலைக் கடத்திவிட முடியாதுதான்.
கண்களில் வழிகிற அந்தத் தவிப்பு
எனை வலிக்கச் செய்கிறதே
இறுக அணைத்து உங்கள் துக்கத்தைத்
தோள்மாற்றிக்கொள்ள முடியுமா என்றுகூட யோசிக்கிறேன்.
சலிப்பில் முளைத்த உங்கள் முன்நெற்றி சுருக்கத்தை நீவிவிடவும்
நடுங்கும் பெருமூச்சை ஆற்றுப்படுத்தவும்
என்னிடம் நிரம்ப உள்ளன சொற்கள்.
எனினும்
இப்போது உங்களுக்குத் தேவை.
கதறி
உடைந்து
நொறுங்கி
கரையும்
ஓர்
அழுகையும்
சில
விசும்பல்களும்.

புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு:


புது எழுத்து வெளியீடாக வரவிருக்கும் என் கவிதைத் தொகுப்பு :

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்-கதிர்பாரதி

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின், இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள். பெருங்காமப் பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும் கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு. சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள் இவை.
-நரன்
 

08 November, 2012

மோகினியிடம் இருக்கும் மூன்று அரளிப் பூக்கள்

1
உன்னோடு இருந்ததை
எதனோடு உவமிக்கலாம் என்று
எண்ணிக்கொண்டிருந்த வேளையில்
உலகில் எங்கோ ஒரு மூலையில்
அரளிச்செடி ஒன்று
தன் முதல் மலரை 
மொட்டு அவிழ்த்திருக்கும் மோகினி.
அதிலிருந்து வழியும் வாசனை
உன் கழுத்துக்குச் சொந்தமானது
என்பதைச் சொல்லிக்கொண்டே
நான் மரிக்கும்போது
என்னிலிருந்து இரண்டாவது மலர் மலர்கிறதே
அறிவாயா?

2
ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிவைக்கப் பட்டிருக்கிற
செவ்வரளியாகின்றன உன் இதழ்கள்.
அவற்றைத் தொடுத்து
எனக்குச் சார்த்துகிறபோது
நீலம்பாரித்துப் போகிறேன்.

3
உன் வெட்கத்தில் கதகதப்பாக மடல்விட்ட
வெள்ளரளியில் மயங்கி
அரைத்துக் குடித்துவிட்டு
நுரைத்தப்பித் தள்ளாடுகிற காலம்
ஓங்காரித்து எனை உமிழ்ந்ததில்
உன் காலடியில் விழுந்தேன் 
நான்.
தயவுசெய்து சாகவிடு.

01 November, 2012

டிவி தொகுப்பாளினியுடன் பத்து நிமிடம்

விடியும் நாளொன்று டிவி தொகுப்பாளினியால் ஆசிர்வதிக்கப்படுவது வரமா? சாபமா? விடிந்தும் விடியாமலும் உங்களின் தூக்கம் குறித்து அவள் விசாரிக்கிறாள். தூக்கத்தினால் சிவந்த உங்களின் கண்களைப் பற்றி வினவுகிறாள். தனது விரல்களால் உங்களின் கேசங்களை கோதிவிடுகிறாள்.

இப்படி ஒரு தினத்தை தன் செவ்விதழ்களால் தொகுத்தளிக்கும் தொகுப்பாளினியையும் அவள்
உருவாக்கிச் செல்லும் ஞாபக அலைகளைப் பற்றியுமான அனுபவத்தை கொடுக்கும் கவிதை கதிர்பாரதியின் “சர்வ நிச்சயம்”. சேலம் தக்கை பதிப்பகத்தின் மூலமாக வெளிவரும் “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை இது.

இந்தக் கவிதை வாசிப்பதற்கு எந்தச்சிக்கலும் இல்லாத எளிய, நேரடிக்கவிதை.

இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் செவ்விதழ்களால்
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அதிலிருந்து உதிரும் புன்னகை
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

இந்தக் கவிதையை முதலில் பிரித்துவிடலாம். இப்படி பிரித்துக் கொண்டு வரும் போது இடையில் ஏதேனும் வரியோ அல்லது வார்த்தையோ குழப்பம் உருவாக்குவதாக இருந்தால் அடிக்கோடிட்டுக் கொள்வேன். அந்தக் குழப்பத்தை தனியாக ‘டீல்’ செய்து கொள்ளலாம்.

குழப்பம் விளைவிக்கும் கவிதையை வாசிக்காவிட்டால் என்ன? விட்டுவிடலாம் அல்லவா? புதிர்களுக்கும் , சூடோக்கூக்களுக்கும் , விடுகதைகளுக்கும் விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆனாலும் கண்டுபிடிக்கிறோம். இல்லையா? அதே த்ரில், அதே அனுபவம்தான் கவிதையை புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேகத்தை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கியது.

கதிர்பாரதியின் மேற்சொன்ன கவிதையில் ’குழப்பம் உருவாக்கும் அம்சம்’ எதுவும் இல்லை. நேரடியாக பிரித்துவிடலாம்.

1) இவன் விழிக்கும் போதே டிவியை ‘ஆன்’ செய்துவிடுகிறான் என்பது கவிதையில் நேரடியாகக் இல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. “டி.வி தொகுப்பாளினியின் செவ்விதழ்களால் காலை திறந்து கொள்கிறது”என்ற முதல்வரியில்.

2) அவள் டிவியில் புன்னகைப்பது தன்னைப் பார்த்துதான் என நம்புகிறான். அந்தப் புன்னகையின் மூலமாக தனது உறக்கம் குறித்து விசாரிப்பாக புரிந்துகொள்கிறான்.

3) தொலைபேசியில் அவளோடு பேசிக் கொண்டிருக்கும் நேயருக்காக “அச்சச்சோ” என அவள் சொல்வதை ’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என இவனைப் பார்த்து அவள் உரிமையோடு கேட்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான்.

3) அவளது உரிமை இவனது கருகிப்போன காதலை ஞாபகப்படுத்துகிறது. அந்தக்காதல் பருவத்தில் உருவாகி கருக்கப்பட்ட காதல்- பிஞ்சுக்காதல். இந்த வரி மறைமுகமாக உருவாக்கும் புரிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். அவள் இவனுக்கு நெருக்கமானவளாக,பிரியம் மிக்கவளாகத் தெரிகிறாள். அந்த நெருக்கம் தனது பழைய காதலை/காதலியை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கிறது.

4) அவள் தனது விரல்களை கோர்த்துக் கோர்த்துப்பிரிப்பது இவனது கேசத்தைத் கோதுவது போன்ற பிரமையைத் தருகிறது.

5) அவள் ஒளிபரப்பும் பாடலின் மூலமாக அவனது தினத்தை தொகுத்துவிடுகிறாள். அந்தத் தொகுப்பில் பிரியம் நிறைந்திருக்கிறது.

பாடலின் மூலம் எப்படி ஒரு நாளைத் தொகுக்க முடியும்?
அது விர்ச்சுவல்- கற்பிதம் செய்து கொள்வது.

நாம் தினமும் எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான டி.வி தொகுப்பாளினிகளுக்கிடையே ஒருத்தி மட்டும் நம் கவனத்தை பறித்துவிடுகிறாள். ஒருத்தி மட்டும் நமக்கு நெருக்கமானவளாகிவிடுகிறாள். அது ஒரு சொல்லப்படாத பிரியம். வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அன்பு. அவள் நம் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு முகத்தையோ அல்லது தருணத்தையோ ஞாபகமூட்டிவிட்டு போய்விடுகிறாள். அவளை தனக்கு நெருக்கமானவளாக நினைத்துக் கொள்வதும் கூட ஒரு கற்பிதம்தானே? இப்படியான கற்பிதம்தான் ஒரு பாடலின் மூலம் அவள் தனது நாளை தொகுத்துவிட்டதாகச் சொல்வது.

6) அவள் இவனது நாளை தொகுத்துவிட்டு டிவித்திரையை விட்டு நகர்ந்துவிட்டாள். இவனும் குளிக்கப்போய்விட்டான். குளிக்கும் போது தலைக்கு மேலிருந்து வழிவது அவளின் குரல் என்று நம்புகிறான். அது தண்ணீர் வழியும் சத்தமா அல்லது தொகுப்பாளினியின் குரல் சத்தமா?

அவன் குளிக்கப்போன பிறகு டிவியில் ஒருவேளை அவள் திரும்ப வந்திருக்கலாம். அந்தக் குரல் இவன் குளிக்கும்போது கேட்டிருக்கலாம் அல்லது அவள் நகர்ந்து விட்ட பிறகும் அவளுடைய நினைவுகள் அவனைச் சுற்றிக் கொண்டிருக்கலாம். இதை கவிதையை வாசிக்கும் வாசகன் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தக் கவிதை உருவாக்கிப் போகும் சலனம் பல பரிமாணங்களை உடையது. டிவியும் அதன் தொகுப்பாளினிகளும்,சீரியல் நடிகர்/நடிகைகளும் நம் வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிட்ட காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இந்தக் கவிதையை புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்வின் பழைய ஞாபகங்களைக் கிளறிப்போகும் அம்சமாக, அவர்களுடனான நம் கற்பனை அலைந்து கொண்டிருப்பதை இந்தக் கவிதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டி.வி தொகுப்பாளினியுடன் பத்து நிமிட அனுபவம் உருவாக்கும் இந்தக் கவிதையிலிருந்து- ஒரு நாள் முழுவதும் அல்லது நாளின் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமிக்கும் டிவியுடனான நமது அனுபவத்தை அல்லது அதனுடனான நம் உறவைப் பற்றி யோசிப்பதற்கான தளத்தை உருவாக்கித் தருகிறது இந்தக் கவிதை. இதுதான் Reader's space. வாசகனுக்கான தளம்.

நன்றி : வா. மணிகண்டன்