08 November, 2012

மோகினியிடம் இருக்கும் மூன்று அரளிப் பூக்கள்

1
உன்னோடு இருந்ததை
எதனோடு உவமிக்கலாம் என்று
எண்ணிக்கொண்டிருந்த வேளையில்
உலகில் எங்கோ ஒரு மூலையில்
அரளிச்செடி ஒன்று
தன் முதல் மலரை 
மொட்டு அவிழ்த்திருக்கும் மோகினி.
அதிலிருந்து வழியும் வாசனை
உன் கழுத்துக்குச் சொந்தமானது
என்பதைச் சொல்லிக்கொண்டே
நான் மரிக்கும்போது
என்னிலிருந்து இரண்டாவது மலர் மலர்கிறதே
அறிவாயா?

2
ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிவைக்கப் பட்டிருக்கிற
செவ்வரளியாகின்றன உன் இதழ்கள்.
அவற்றைத் தொடுத்து
எனக்குச் சார்த்துகிறபோது
நீலம்பாரித்துப் போகிறேன்.

3
உன் வெட்கத்தில் கதகதப்பாக மடல்விட்ட
வெள்ளரளியில் மயங்கி
அரைத்துக் குடித்துவிட்டு
நுரைத்தப்பித் தள்ளாடுகிற காலம்
ஓங்காரித்து எனை உமிழ்ந்ததில்
உன் காலடியில் விழுந்தேன் 
நான்.
தயவுசெய்து சாகவிடு.

4 comments:

manichudar blogspot.com said...

அபூர்வமான அரளியின் உவமைகள் அசத்தலாய் இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாவது மிகவும் அருமை...

அப்பாதுரை said...

அரளி பக்கமே போறதில்லே அதான் :)

சேலம் ராஜா said...

அருமை சார்