இத்தொகுப்பில் உள்ள கதிர்பாரதியின் கவிதைகள் முழுக்க பால்யத்திலும் விடலைப்பருவத்திலும் விழுந்து புரண்ட கரம்பை மண்ணும், உழுது பயிரிட்ட பொளியின் நீர்க்கால் ஓரத்து மரங்களும், கருவேலந்தூர்களும், நீர்முள்ளிப் பூக்களும், பூவரசந்திண்டுகளும் பரந்து கிடக்கின்றன. ஊசித்தட்டான்களும், முப்பிரி சர்ப்பங்களும், அடைக்கலாங் குருவிகளும், வெட்டுக்கிளிகளும் பறந்து திரிகின்றன. இது பால்யத்தின் ஏக்கமாக மட்டுமின்றி, அன்றாடங்களின் வெற்றிடங்களில் தன் நிலத்தையும் பொழுதையும் பூச்சிகளையும் சிட்டுகளையும் நிறைத்தபடியே செல்கிறார் - எப்போதும் இறுகப்பற்றி அவற்றைத் தன் உள்ளங்கைகளில் ஏந்தியபடி..! உயிரில் ஊறிய மண்வாசனையே காதலியின் முத்தத்தை கூட இவ்வாறு பாடிச் சிலிர்க்கச் செய்கிறது -
'...சொத்தென்று தலையில் விழுகிற புளியம்பழத்துக்கு
உன் கீழுதட்டின் சுவை
ஆகவே பழம் தின்று கை மீந்த புளியங்கோதுக்கு
உன் பெண்ணந்தரங்கத்துப்
பொன்னிற முடிகளின்
சுவை..'
பொருள்வயின் பிரிந்த நிலம் அவருக்கு மதுவாக, முதிரிளம்பருவத்து முலையாகத் தோன்றுவதோடு 'அயலான் அருந்த உனை எப்படிக் கை நெகிழ்வேன்' என ஆதங்கப்பட வைக்கிறது.
'உளுத்தங்காய்கள் மீதமர்ந்து
வெயில் அருந்தும் தட்டான்கள்
வால்களைப் பிணைத்துக் கொண்டு பறப்பதைப்'... பார்க்க நேர்கையில் காதலியின் நினைவு வந்து இம்சிக்கிறது.
வெறுமனே நிலம் குறித்த பழம் நினைவேந்தலாய் ஆவியாகி விடாமல், குள்ளநரிகள் பல்வேறு காரணங்களுக்காய் கூறு போடத் தயாராகிவிட்ட 'நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பான' தம் நிலத்தை இறுகப்பற்றியபடி, விட்டு விடோம் எனவும், அது 'பொட்டல்வெளி காளி வெளித்தள்ளிய நாவு' என அதிகாரத்தை
அச்சுறுத்தவும் செய்கிறது.
![]() |
அன்புச்செல்வன் |
அச்சுறுத்தவும் செய்கிறது.
காதலையும் காமத்தையும் வேளாண்குடி சார்ந்த வார்த்தைகளில் மிக இயல்பாக வடித்துச் செல்கிறார். அவ்வியல்பு ஏற்படுத்தும் உணர்வும் உருவகமும் அலாதியானதாய் இருக்கிறது. காதலியின் முத்தம் புன்செய் வெயிலாகிப் போனதில், அதைத் தணிக்க அவளின் நேசத்தையே மெல்லக் கவிழ்க்கிறார் மழையாய்த் தன் மீது..!
'..புராதனக் கோயில் ஸ்தலவிருட்ச நிழலில் நின்று
கடைவாய் நுரைத்து வழிய வழிய
அகத்திக்கீரையை மெல்லுகிற பசுவொன்று
எனைத் திரும்பிப் பார்க்கிறபோது
உன் அன்பு ஞாபகம் வருகிறதெனில்..' என்று பசுவுடன் சேர்ந்து கவிஞனும் நேசத்தை அசை போடுகிறான்.
வாழ்தலுக்கன்றி பிழைப்புக்காய் மாநகர் ஏகிய கெடுவாய்ப்பிலும் மழை பெய்து அழகாக்கும் நகரத்தின் பகல்களுக்காக சிலிர்ப்பதோடு, வேரற்று நிற்கும் திணை திரிந்த மெட்ரோபாலிட்டன் நகரத்தில் தன் மேல் அன்பு செலுத்தும் முதிரிளம் பெண்ணின் பொருட்டு தன் நிலத்தின் காய்த்துக் கனிந்த கற்றாழைப் பழம் சுவைத்தது போல் இந்நகரத்தை நேசிக்கவும் தொடங்குகிறார்.
லௌகீகத்தின் பொருட்டு தான் விட்டு வர நேர்ந்த நேசமிகு கிராமத்துத் தெருக்களும் நிலங்களும் ரயில் தண்டவாளங்களும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு கொடுங்கனவாய் மாறுவதைப் பற்றி வருத்தங் கொண்டு ரௌத்திரமாகிறார் - 'ரயில் என்பது ரயில் இல்லை', 'ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்', 'வெட்டுக்கிளியை சூப்பர்மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்', 'சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது' போன்ற கவிதைகளின் பாடுபொருளின் வழி.
கழிவிரக்கக் கவிதைகளும் சுயபுலம்பல் கவிதைகளும் பெரும்பாலும் இல்லை என்பதே தொகுப்பை கூடுதல் அழகுடையதாக்குகிறது. மற்றமைகளின் மீதான கவிஞனின் கவனம் கவிதைகளின்பால் நம்மை மேலும் அணுக்கமாக்குகிறது.
தட்டான்கள் குறித்தும் அணில்கள் குறித்தும் மறிகள் குறித்தும் மரண வீட்டில் கூட துளிர்த்திருந்த மாமரத்தின் செந்தளிர்கள் குறித்தும் அக்கறையோடும் அன்போடும் எழுதிச் செல்கிறார். பல்லுயிர் வாழ் சூழலே மனிதருக்குமாம் என்பது கதிர்பாரதியின் கவிதைகளின் இயல்பான ஓர்மையாய் துலங்குகிறது.
சிறிது
~~~
என் சின்னஞ்சிறு திலீபனின்
குறுங்குடை மறைத்துவிடும் அளவுக்கு
சிறிதிலும் சிறிது
வானம்.
அவன்தான் காடு வளர்க்கப்போகிறேன் என
டம்ளரில் தண்ணீர் எடுத்துப் போகிறான்.
அவனின் அடத்தை நினைவுறுத்தி
நசநசக்கும் மழைக்கு
தீஞ்சுவைப் பாலும் கொறிக்க குர்க்குரேவும்
கொடுக்கலாம் என்கிறாள் மனைவி
நான் முத்தமும் ஈந்தேன்.
காடு வளர்க்கிறேன் என்கிறான் திலீபன்.
நிலம் விட்டு தான் வர நேர்ந்தாலும், தன் சிறுவன் திலீபன் காடு வளர்க்கும் கனவுடன் இருக்கிறான் என்பதே அவருக்கு நிறைவளிக்கிறது - தன் தாத்தா அறுவடையில் எக்காளமாய் முழங்கிய விவசாயப் பாடல் பெற்ற நிலத்தையும் உழவு மாடுகளையும் நெல்லுக்கு நீரிறைத்த இறாப்புட்டியையும் பலி கேட்காத குலசாமிகளையும் இலந்தை இழுத்து வந்த மஞ்சள் வெயிலையும் ஒதிய மர நிழல்துண்டில் கிடைத்த உறக்கத்தையும் அடுத்த சந்ததிக்குக் கடத்திவிட வேண்டும் என்கிற எளிய வேளாண்குடியின் இறுதி உயிராய் பெருநகரத்து வீதிகளில் ஈருருளியின் புகையில் அலமலந்து கிடக்கும் சுயத்தின் முனகல்களாய் வெடித்துக் கேவுகிறது இத்தொகுப்பு.
- ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்
- கவிதைகள்
- கதிர்பாரதி
- இன்சொல் வெளியீடு
No comments:
Post a Comment