01 November, 2012

டிவி தொகுப்பாளினியுடன் பத்து நிமிடம்

விடியும் நாளொன்று டிவி தொகுப்பாளினியால் ஆசிர்வதிக்கப்படுவது வரமா? சாபமா? விடிந்தும் விடியாமலும் உங்களின் தூக்கம் குறித்து அவள் விசாரிக்கிறாள். தூக்கத்தினால் சிவந்த உங்களின் கண்களைப் பற்றி வினவுகிறாள். தனது விரல்களால் உங்களின் கேசங்களை கோதிவிடுகிறாள்.

இப்படி ஒரு தினத்தை தன் செவ்விதழ்களால் தொகுத்தளிக்கும் தொகுப்பாளினியையும் அவள்
உருவாக்கிச் செல்லும் ஞாபக அலைகளைப் பற்றியுமான அனுபவத்தை கொடுக்கும் கவிதை கதிர்பாரதியின் “சர்வ நிச்சயம்”. சேலம் தக்கை பதிப்பகத்தின் மூலமாக வெளிவரும் “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை இது.

இந்தக் கவிதை வாசிப்பதற்கு எந்தச்சிக்கலும் இல்லாத எளிய, நேரடிக்கவிதை.

இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் செவ்விதழ்களால்
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அதிலிருந்து உதிரும் புன்னகை
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

இந்தக் கவிதையை முதலில் பிரித்துவிடலாம். இப்படி பிரித்துக் கொண்டு வரும் போது இடையில் ஏதேனும் வரியோ அல்லது வார்த்தையோ குழப்பம் உருவாக்குவதாக இருந்தால் அடிக்கோடிட்டுக் கொள்வேன். அந்தக் குழப்பத்தை தனியாக ‘டீல்’ செய்து கொள்ளலாம்.

குழப்பம் விளைவிக்கும் கவிதையை வாசிக்காவிட்டால் என்ன? விட்டுவிடலாம் அல்லவா? புதிர்களுக்கும் , சூடோக்கூக்களுக்கும் , விடுகதைகளுக்கும் விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆனாலும் கண்டுபிடிக்கிறோம். இல்லையா? அதே த்ரில், அதே அனுபவம்தான் கவிதையை புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேகத்தை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கியது.

கதிர்பாரதியின் மேற்சொன்ன கவிதையில் ’குழப்பம் உருவாக்கும் அம்சம்’ எதுவும் இல்லை. நேரடியாக பிரித்துவிடலாம்.

1) இவன் விழிக்கும் போதே டிவியை ‘ஆன்’ செய்துவிடுகிறான் என்பது கவிதையில் நேரடியாகக் இல்லாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது. “டி.வி தொகுப்பாளினியின் செவ்விதழ்களால் காலை திறந்து கொள்கிறது”என்ற முதல்வரியில்.

2) அவள் டிவியில் புன்னகைப்பது தன்னைப் பார்த்துதான் என நம்புகிறான். அந்தப் புன்னகையின் மூலமாக தனது உறக்கம் குறித்து விசாரிப்பாக புரிந்துகொள்கிறான்.

3) தொலைபேசியில் அவளோடு பேசிக் கொண்டிருக்கும் நேயருக்காக “அச்சச்சோ” என அவள் சொல்வதை ’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என இவனைப் பார்த்து அவள் உரிமையோடு கேட்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான்.

3) அவளது உரிமை இவனது கருகிப்போன காதலை ஞாபகப்படுத்துகிறது. அந்தக்காதல் பருவத்தில் உருவாகி கருக்கப்பட்ட காதல்- பிஞ்சுக்காதல். இந்த வரி மறைமுகமாக உருவாக்கும் புரிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டும். அவள் இவனுக்கு நெருக்கமானவளாக,பிரியம் மிக்கவளாகத் தெரிகிறாள். அந்த நெருக்கம் தனது பழைய காதலை/காதலியை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கிறது.

4) அவள் தனது விரல்களை கோர்த்துக் கோர்த்துப்பிரிப்பது இவனது கேசத்தைத் கோதுவது போன்ற பிரமையைத் தருகிறது.

5) அவள் ஒளிபரப்பும் பாடலின் மூலமாக அவனது தினத்தை தொகுத்துவிடுகிறாள். அந்தத் தொகுப்பில் பிரியம் நிறைந்திருக்கிறது.

பாடலின் மூலம் எப்படி ஒரு நாளைத் தொகுக்க முடியும்?
அது விர்ச்சுவல்- கற்பிதம் செய்து கொள்வது.

நாம் தினமும் எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான டி.வி தொகுப்பாளினிகளுக்கிடையே ஒருத்தி மட்டும் நம் கவனத்தை பறித்துவிடுகிறாள். ஒருத்தி மட்டும் நமக்கு நெருக்கமானவளாகிவிடுகிறாள். அது ஒரு சொல்லப்படாத பிரியம். வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அன்பு. அவள் நம் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு முகத்தையோ அல்லது தருணத்தையோ ஞாபகமூட்டிவிட்டு போய்விடுகிறாள். அவளை தனக்கு நெருக்கமானவளாக நினைத்துக் கொள்வதும் கூட ஒரு கற்பிதம்தானே? இப்படியான கற்பிதம்தான் ஒரு பாடலின் மூலம் அவள் தனது நாளை தொகுத்துவிட்டதாகச் சொல்வது.

6) அவள் இவனது நாளை தொகுத்துவிட்டு டிவித்திரையை விட்டு நகர்ந்துவிட்டாள். இவனும் குளிக்கப்போய்விட்டான். குளிக்கும் போது தலைக்கு மேலிருந்து வழிவது அவளின் குரல் என்று நம்புகிறான். அது தண்ணீர் வழியும் சத்தமா அல்லது தொகுப்பாளினியின் குரல் சத்தமா?

அவன் குளிக்கப்போன பிறகு டிவியில் ஒருவேளை அவள் திரும்ப வந்திருக்கலாம். அந்தக் குரல் இவன் குளிக்கும்போது கேட்டிருக்கலாம் அல்லது அவள் நகர்ந்து விட்ட பிறகும் அவளுடைய நினைவுகள் அவனைச் சுற்றிக் கொண்டிருக்கலாம். இதை கவிதையை வாசிக்கும் வாசகன் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தக் கவிதை உருவாக்கிப் போகும் சலனம் பல பரிமாணங்களை உடையது. டிவியும் அதன் தொகுப்பாளினிகளும்,சீரியல் நடிகர்/நடிகைகளும் நம் வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிட்ட காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இந்தக் கவிதையை புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்வின் பழைய ஞாபகங்களைக் கிளறிப்போகும் அம்சமாக, அவர்களுடனான நம் கற்பனை அலைந்து கொண்டிருப்பதை இந்தக் கவிதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு டி.வி தொகுப்பாளினியுடன் பத்து நிமிட அனுபவம் உருவாக்கும் இந்தக் கவிதையிலிருந்து- ஒரு நாள் முழுவதும் அல்லது நாளின் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமிக்கும் டிவியுடனான நமது அனுபவத்தை அல்லது அதனுடனான நம் உறவைப் பற்றி யோசிப்பதற்கான தளத்தை உருவாக்கித் தருகிறது இந்தக் கவிதை. இதுதான் Reader's space. வாசகனுக்கான தளம்.

நன்றி : வா. மணிகண்டன்


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் தளத்திலும் வாசித்து கருத்திட்டேன்... நன்றி...

அப்பாதுரை said...

வித்தியாசமான பார்வை.
தொகுப்பாளினி? தொகுப்பாளர் என்று பொதுவில் சொல்லவும் கேட்கவும் எளிதாக இருக்குமே? எல்லாவற்றையும் பால்படுத்தும் பழக்கம் இன்னும் தொடர்வது வியப்பு.