06 December, 2012

தேவை: ஓர் அழுகையும் சில விசும்பல்களும்


உங்களுக்கு எப்படி ஆறுதல் தருவதென்று தெரிந்தேனில்லை.
உச்சந்தலை வருடி 
உள்ளம் தொட வேண்டும் போலிருக்கிறது.
கன்னத்தை இதமாகத் தாங்கலாம்தான்
அது இன்னும் உங்களை தளும்பச் செய்திடுமே.
உள்ளங்கையில் ஆதூரமாக ஓர் அழுத்தம் தந்து
என் ஆறுதலைக் கடத்திவிட முடியாதுதான்.
கண்களில் வழிகிற அந்தத் தவிப்பு
எனை வலிக்கச் செய்கிறதே
இறுக அணைத்து உங்கள் துக்கத்தைத்
தோள்மாற்றிக்கொள்ள முடியுமா என்றுகூட யோசிக்கிறேன்.
சலிப்பில் முளைத்த உங்கள் முன்நெற்றி சுருக்கத்தை நீவிவிடவும்
நடுங்கும் பெருமூச்சை ஆற்றுப்படுத்தவும்
என்னிடம் நிரம்ப உள்ளன சொற்கள்.
எனினும்
இப்போது உங்களுக்குத் தேவை.
கதறி
உடைந்து
நொறுங்கி
கரையும்
ஓர்
அழுகையும்
சில
விசும்பல்களும்.

1 comment:

manichudar blogspot.com said...

அறுதல் தருவது அவ்வளவு சாமான்யமான விடயம் அல்லவே . நிச்சயமாய் இப்படியெல்லாம் யோசிக்கவே வேண்டியிருக்கிறது. எளிய வரிகளில் ஆத்மார்த்தமான கவிதை.