கொதிக்கும் உலையில் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா !
புதுக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கலை இரவில் 'ஆத்தா உன் சேலை' பாட்டை ஒரு பாடகர் பாடினார் .
தொடர்ந்து உரை நிகழ்த்த வந்த எழுத்தாளர் Tamil Selvan ச.தமிழ்ச்செல்வன், "இதுபோன்ற பாடல்களைப் பாடி அம்மாவை புனிதமாக்கியது போதும். அவரையும் சக மனுசியாகப் பார்க்க எப்போதுதான் முன் வரப் போகிறீர்கள்!?" என்று கேட்ட கேள்வி அம்மா என்பவர் சக மனுசி .அவர் பொய் சொல்வார்- ஞானக்கூத்தன் சாட்சி - யாரும் அறியாமல் காசை ஒளித்து வைப்பார். எல்லாம் செய்யத் துணிபவர்களில் அம்மாவும் ஒருத்தி என்று நம்ப வைத்தது.
கதிர்பாரதி Kathir Bharathi , மீண்டும் அம்மாவை தியாக குருதி ஒழுகும்படி குடும்பத்துக்காக சிலுவையில் தொங்கவிட்டுவிட்டார். கவிதை எனும் ஆணியை மகன்களின், மகள்களின் கைகளில் இறக்குகிறார்.குற்ற உணர்வு கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது.
"அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது" நூலின் பின்னட்டையில் கரிகாலன் Karikalan R ,"கதிர்பாரதி காட்டும் அம்மா அவருடைய அம்மா மட்டும் அல்ல " என்கிறார்.எல்லாக் கவிதையிலும் ஒரே பாத்திரம் போல அம்மா இத்தொகுப்பில் காட்சி அளிக்கிறார். ஒரு கவிதையில் சிரிக்கிறார். ஒரு கவிதையில் முறைக்கிறார் .அவ்வளவே !
குஞ்சுகளைத் தூக்க வரும் பருந்தைக் கண்டதும் சீறியபடி குதிக்கும் தாய்க்கோழிதான் அவர்.
இத்தொகுப்பில் வரும் அம்மாக்களை அழகூட்டுவது பிள்ளைக்கு ஒன்றெனில் கொள்ளும் பிரத்யேகத் துணிச்சலும் அவர் எதிர்கொள்ளும் துயரங்களும்.
கதிர்பாரதி தன்னுடைய கிராமத்திற்கு சென்றும், நினைவுகளில் பின் ஊர்ந்தும் அம்மாவின் கிட்ட அமர்ந்து, எட்ட நின்று, அவர் முந்தானையைப் பிடித்து நகர்ந்துக் கொண்டே சென்று,
அவருக்கேத் தெரியாமல் தன்னை ஒளித்துக் கொண்டும் இக்கவிதைகளில் பார்த்துள்ளார்.
அப்பாவைத் தூரமாக நிறுத்தி விடுகிறார். எப்போதாவது அல்லது பிள்ளைகள் உறங்கிய பிறகு வீடு திரும்பும் அப்பாக்கள், பிள்ளைகளின் கவிதைக்குள் வருவது அரிதுதான். ஒரு சில கவிதைகளில் அப்பா எட்டிப் பார்க்கிறார். அப்போதும் அம்மா முறைத்து விடுகிறார் அல்லது அம்மாவின் துயரங்களில் பங்கெடுக்க முடியாத கையாலாகத்தனத்தில் அப்பா நடையைக் கட்டி விடுகிறார் .
ஒருமுறை தொடர்ந்து வாசித்து இத்தொகுப்பை முடித்து விட முடியவில்லை .பல பக்கங்கள் கடந்த பிறகு முந்தைய கவிதையில் ,பிறந்த வீட்டுக்குப் போகும்போது மை தீட்டிக் கொண்டு செல்லும் அம்மாவின் அழகை மீண்டும் ஒருமுறை தரிசிக்க மனம் பின் செல்கிறது. அதே மனதை பதைபதைப்புடன் ஓடிப் பார்க்க விரட்டுகிறது ,மகனைப் பார்த்தவுடன் தூக்குக் கயிற்றை கழுத்திலிருந்து தளர்த்திக் கொண்டே, "இரு சோறு போடுகிறேன்" என்று இறங்கி வந்த அம்மா ,மூத்த மகன் சாப்பிட்டு உறங்கியப் பிறகு, மீண்டும் கயிற்றைக் கையில் எடுத்துவிட்டால் என் செய்வது!?
மிகை உணர்வெழுச்சிக் கவிதைகள் வாசிப்பவனை ஆழ்த்துகின்றன.விதவிதமான அனுபவங்கள்,எண்ணிலடங்கா உயிர்ப்புமிகு காட்சிகளில் இருந்து சட்டென விலக முடியவில்லை.உண்மையின் கண்களை கவிதைகளில் ஒவ்வொரு முறையும் உற்றுப்பார்க்க முடியவில்லை.குறைந்தது அறுபது முறை வரலாறு தலையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே அனாதை மேகத்தின் பின் சென்ற அம்மாவை ,அப்படியே சென்று விடக் கூறலாம் போல் உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை துயரங்களைத்தான் அம்மா தாங்குவாள்!? தனக்காக வாழும் ஒரு அம்மா கூட இல்லையா!? வரலாற்றை மீண்டும் நினைவுறுத்தி அவரை அங்கேயே இருந்து தியாகங்களை செய்யச் சொல்கிறோமா!? என்று நிகழ்காலத்திலும் தொடரும் அம்மாவின் தியாகங்கள் பொருட்டு கவலைகள் உருவாகின்றன.
அதேநேரம் ஊஞ்சலில் அமரவைத்து அம்மாவை பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் கவிதைகள், வாசகனையும் ஒரு ஊஞ்சலில் ஏற்றி ஆட்டிவிக்கின்றன.மகிழ்வைப் பங்கு வைக்கின்றன.
கதிர் பாரதி, இத்தொகுப்பில் உணர்வின் சேதாரம் இன்றி தனித்த மொழிநடையைப் பின்பற்றி உள்ளார்.
வாசகனை உணர்வின் உச்சத்தில் கொண்டு நிறுத்திவிடுகிறார்.உயரத்திலிருந்து தவறினால் விழுந்துவிடும் பதட்டமும் அவன் பாதத்தில் சேர்ந்து கொள்கிறது.
அம்மா ,ஒரு கவிதையில் கொதிக்கும் அரிசியை உலையில் பார்த்துக் கொண்டு இருப்பார்.அது அவரை அவரே பார்ப்பது போல் இருக்கும்.
இவ்வாறு அம்மாவின் தியாகத்தில் புளங்காகிதம் அடைந்தாலும் ,உறவின் நிர்பந்தங்களை கடந்து தனிமனித வாழ்வை மதித்து அம்மாவை இக்கவிதைகளின் தியாகச் சங்கிலியில் இருந்து அறுத்துவிடவே மனம் விழைகிறது.
இத்தூண்டுதலோடு புத்துணர்வான வாசிப்பனுபவத்தையும், கவிதைக்கான அலமாரியில் தனித்த இடத்தையும் "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது " தொகுப்பு பெறுகிறது. வாழ்த்துகள்
-ஸ்டாலின் சரவணன்
No comments:
Post a Comment