எழுத்தாளர் ஏக்நாத், கல்கி பத்திரிகை வேலையில் எனக்கு சீனியர். திருநெல்வேலியின் கீழாம்பூர் பகுதியிலிருந்து வந்த எழுத்துக்காரர்களில் மிக முக்கியமானவர். பெரும்பாலான இலக்கியக்காரர்கள் போல ஆரம்பத்தில் கவிதைகளும் பின்னர் உரைநடையும் எழுதிவருவவர். கெடைக்காடு, வேசடை போன்றவை இவரது முக்கியமான நாவல்கள். அம்பாசமுத்திர வட்டாரத்து மண்ணை விஸ்தாரமாகவும் தனித்த மொழியும் பதிவுசெய்துகொண்டிருப்பவர். எனது அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கவிதைத்தொகுப்பு குறித்து உள்ளத்தை ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் ஏக்நாத் அவர்களுக்கு நன்றி!
எழுத்தாளர் & இயக்குநர் அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகம் வெளியீடு
•••
நீங்களும் நானும் கதிர்பாரதியும் வேறுவேறல்ல
தன்னை உருட்டி விளையாடவோ, தரையில் மோதி மேலெழுகிற பந்தைப் போல விழுந்து எழவோ, மொழி தனக்காகத் தேர்ந்தெடுக்கிற ஆயுதம் கவிதை. சரியான கையில் அவ்வாயுதம் கிடைத்துவிட்டால், மேளதாளத்தில் கிறங்கி ஆடுகிற ஆவேசம் கொண்ட சாமி கொண்டாடிகளைப் போல, மொழி தன்னைத்தானே கொண்டாடிக் கொள்கிறது. அப்படியொரு கொண்டாட்டத்தை கதிர்பாரதியின் 'அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது' கவிதைத் தொகுப்பு தருகிறது என்பது வெற்றுப் புகழுரையல்ல.
தாய் எப்போதும் தனித்துவமானவள். அவளின் அன்பு மட்டுமே தூய்மையானது, அவளின் முந்தானை தரும் சுவையை, அவள் பாசத்துக்குள் மிதக்கும் கதகதப்பை, அவளின் கோபத்திலும் வெளிப்படும் மென்மையை, அவளின் கண்ணீரின் அடர்த்தியை, இன்னொருவரிடம் காண்பதரிது.
எனது அம்மாவும் கதிர்பாரதியின் அம்மாவும் வெவ்வேறானவர்கள் அல்ல. இருவருமே ஏதோ ஒரு கிராமத்தில், தலையில் விறகு கட்டோடும் கக்கத்தில் உணவு சுமையோடும் சென்றவர்கள். பின்னுரையில் கவிஞர் கரிகாலன் குறிப்பிடுவதைப் போல அவர், 'தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம்' தான்.
'அம்மா வாழ்க்கையே ஓர் ஒளியாங்கண்டு விளையாட்டுதான் ' என்று தொடங்குகிற அவரின் முதல் கவிதையில் இருந்து, அனைத்துக் கவிதைகளிலும் அம்மா நம்முடன் சமயபுரம் சந்நதியில் மாவிளக்கு போட்டபடியோ, மஞ்சள் சேலை உடுத்தி விரதம் இருந்தபடியோ உரையாடிக் கொண்டே வருகிறார். அல்லது அப்படியொரு சித்திரத்தை தன் எழுத்தின் வழி கதிர்பாரதி, பேருருவமாக படைத்திருக்கிறார்.
இக்கவிதைகளை வாசிக்கிற ஒவ்வொருவரையும் அவரவர்களின் அம்மாவின் நினைவுகளுக்குள் மூழ்க வைக்கிற சக்தி, கதிர்பாரதியின் கவிதைக்கு இருக்கிறது.
மிகுந்த சொற்சிக்கனத்தோடும் மொழியின் லாவகத்தோடும் எழுதப்பட்டிருக்கிற எல்லா கவிதைகளிலும் அம்மா நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
0
கக்கடைசியில்
ஏர்வாடி தர்க்காவில்
அம்மாவைச் சேர்த்தோம்.
சங்கிலிப் பிணைத்து
அழைத்துப் போகையில்
என் தலை தடவினாள்.
அப்போது கலைந்த தலைமுடியை
எத்துனை முறை சீவியும்
ஒழுங்குப்படுத்த முடியவில்லை
தன்னுடலுக்கு தானே
தீவைத்துக்கொள்ளும்
அந்திக்கு
இந்த வேதனை புரியும்.
இத்தொகுப்பின் 45-ம் பக்கத்தில் இருக்கும் இந்தக் கவிதையை தாண்டிச் செல்ல முடியாமல், திணறிக் கொண்டிருந்தால் நீங்களும் நானும் கதிர்பாரதியும் வேறுவேறல்ல.
No comments:
Post a Comment