19 November, 2024

`இன்சொல் வெளியீடு' புதிய இலச்சினை அறிமுகம்:


சில நண்பர்களுக்குத் தெரியும் பலருக்கு இனிமேல் தெரியவரும் `இன்சொல் வெளியீடு` என்பது எனது இலக்கிய இயக்கத்தில் இன்னொரு களம். எனது நூல் வெளியீட்டுக்காக மட்டும் தொடங்கப்பட்ட பதிப்பு நிறுவனம். இதன் மூலம், எனது மூன்றாவது கவிதை நூலான `உயர்திணைப் பறவை` முதல் புத்தகமாக 2020-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அது தமிழ்நாடு அரசு - தமிழ்வளர்ச்சித் துறை விருது, எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது, டாகடர் தாமோதரன் இஅக்கியப் பரிசு, சௌமா இலக்கிய கவிதை விருது, படைப்புக் குழுமம் கவிதை என ஐந்து விருதுக்குரிய நூலாகத் தேர்வானது. அந்த நூலுக்கு எழுத்தாளர் பாவண்ணன், `உயிர் எழுத்து` இதழில் எழுதிய விமர்சனத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். எனது முதல், இரண்டாவது கவிதைப் புத்தகங்கள்... `மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்`, `ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள்` ஆகியவை முறையே நான்காவது பதிப்பு, இரண்டாவது பதிப்பும் `இன்சொல் வெளியீடா`கத்தான் வெளிவந்தன. `இன்சொல் வெளியீடு` பதிப்பிக்கும் புத்தகத்துக்கான விற்பனை உரிமையை டிஸ்கவரி புத்தக நிலையத்துக்குக் கொடுத்திருந்தோம். அது இப்போதும் தொடர்கிறது. எனக்காக மட்டும் தொடங்கப்பட்ட `இன்சொல் வெளியீடு` பதிப்பு நிறுவனத்தில், இனி நண்பர்கள் புத்தகங்களையும் பதிப்பிக்கலாம் என நினைக்கிறேன். விருப்பமுள்ளோர் அணுகலாம். முன்பு மறுத்ததுபோல இப்போது மறுக்க வாய்ப்பில்லை. கீழே இணைப்பில் இருப்பது `இன்சொல் வெளியீடு` நிறுவனத்தின் புதிய இலச்சினை. அனைவருக்கும் நன்றி.

#சித்தாவரம் - சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களின் புத்தக வெளியீடு

கதிர்பாரதி, சாரு நிவேதா, அர.கண்ணன், டி.பாஸ்கரன்

சித்தாவரம்... எனது நண்பர் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களின் முதல் மருத்துவக் கட்டுரைப் பனுவலை, நேற்று (17நவ2024) எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் தலைமையேற்று வெளியிட்டார் (அவரது நல்ல உரையை ஸ்ருதி டீவி யில் கேட்கலாம்) நானும் இன்னும் சில நண்பர்களும் புத்தக அறிமுக உரையும் வாழ்த்துரையும் வழங்கினோம். அண்ணன் - பத்திரிகையாளர் எம்.பி. உதயசூரியனின் வாழ்த்துரை மிக ஆத்மார்த்தமாக இருந்தது. அற்புதமான ஒரு குடும்ப விழாபோல நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்கள். இவர் இம்காப்ஸ் என்கிற அரசு சித்தமருத்துவ நிறுவனத்தின் ஓர் இயக்குநரும்கூட. வேலூரில் புற்றுமகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தைத் தலைமையேற்று நடத்திவருகிறார்.

அத்திரி முனிவரின் இன்னொரு பெயர்தான் புற்று மகரிஷி. அவர் வேலூரில் 1516ல் வாழ்ந்தவர். வேலூர் ஜலகண்ட ஈஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தை நிர்மாணம் செய்தவர். அந்தக் குரு வழிமரபில் வந்த 49_வது தலைமுறைதான் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன். இவரது சிறப்பே நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதுதான். வந்த நோய்க்குத் தீர்வு மட்டுமல்ல. வரப்போகிற நோயையும் சொல்லிவிடுகிறார். கேட்டால், "எல்லாம் சித்தப் புருஷர்களின் ஆசீர் சார்..." எனப் புன்னகைப்பார்.

கொங்கணச் சித்தரின் மாணவரான சிவவாக்கியருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் மட்டும்தான் சித்த மரபில் திருமணம் செய்துகொண்டவர் என நினைக்கிறேன். 100க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். காசிக்குச் சென்று கொங்கணச் சித்தரை குருவாக ஏற்றுக்கொண்டவர். சிறந்த சித்தவைத்தியக் குறிப்புகளை விட்டுச் சென்றவர். மக்களைத் தேடி மருத்துவம் என்பதன் முன்னோடி சிவவாக்கியர். சித்தர்கள் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சேர்த்து மருத்துவம் பார்த்தவர். உடல் பேணி உயிர் காத்து, உடல் வழி இறையை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்த ஞான மரபில் வந்த சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களை, நான் ஒரு நவீன சிவவாக்கியர் என்றுதான் சொல்வேன். சிவவாக்கியர் போல இவரும் திருமணம் செய்துகொண்டவர். சிவவாக்கியருக்கு கொங்கணச் சித்தர் குரு. டி.பாஸ்கரன் அவர்களுக்கு குரு அவரது பெரியப்பா கேபி அர்ச்சுணன் குரு. இவர்கள் இருவருக்கும் மூல குருபரம்பரை தந்தைதான் புற்றுமகரிஷி. சிவவாக்கியரைப் போல 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துக் கட்டுரைகளை எழுதியவர் டி.பாஸ்கரன் அவர்கள்.

கொரானா காலத்தில் இவர் தயாரித்துக் கொடுத்த மூலிகைக் கவசம், வேலூர் மாவட்டத்தில் பலரின் உயிரைக் காத்தது. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசும், தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகமும் இவருக்கு விருது கொடுத்து அங்கீகரித்து மகிழ்ந்திருக்கின்றன. மருத்துவர் டி.பாஸ்கரன் சித்தாவரம் புத்தகத்தில் தனது வைத்திய சீக்ரெட்களை மருத்துவக் கட்டுரைகளாகச் சொல்லிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய உறவு நாகரீகம் தொடங்கி, ஆரோக்கியமான தாம்பத்திய உறவு வரைக்குமான அனைத்து வாழ்வியல் பண்பாட்டு செய்திகளையும சித்தாவரம் புத்தகத்தில் விவாதிக்கிறார் டி.பாஸ்கரன்.

சித்தாவரம் புத்தகம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், "தமிழ்நாட்டில் வாழ்கிற அனைத்துக் குடும்பங்களிலும் இருக்கவேண்டிய வாழ்வியல் மற்றும் மருத்துவக் கையேடு இது" என்றுதான் சொல்வேன்.

அற்புதமான சித்த மருத்துவக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்ட தேநீர்பதிப்பகம் கோகிலன் & தேவி அவர்களுக்கு நன்றி. நண்பரும் சித்தமருத்துவமான டி.பாஸ்கரன் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.

13 November, 2024

வாசிப்புக் குறிப்பு : கதிர்பாரதி, நாவல்: மண்ணும் மனிதர்களும், ஆசிரியர்: சிவராம காரந்த்

ன்னட இலக்கிய சிகரம் சிவராம காரந்த் எழுதிய "மண்ணும் மனிதரும்" 647 பக்கம் கொண்ட நாவல். சிறிது இடைவெளி விட்டு விட்டு இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன்.மூன்று தலைமுறைகள் கதை. "முதல் தலைமுறை நொடித்தால் தலைமுறை, மூன்றில் எழும்" என்ற சொல்வழக்கு இன்றும் கிராமத்தில் உண்டு. ஆண்கள் ஊதாரியாகவும் உபத்திரகாரர்களாகவும் திரிய, பெண்கள் சுமக்கமாட்டாமல் இந்த வாழ்வை சுமந்து சாகிறார். அல்லது வெல்கிறார்கள். கடற்கரையோரத்து கர்நாடகத்தில் மழையும் கடலும் மண்ணும் பாத்திரங்களாக மாறி மாறி மனத்தை ஈர்க்கின்றன. உப்பு சத்தியாகிரகத்துக் காலக் கதை. வாழ்வுதான் அகத்தைப் புடம்போடும் சத்தியாகிரகம். நாகவேணி, பார்வதி, சரசுவதி,

சிவராம காரந்த் 
சத்தியபாமா, சுப்பு... என அத்தனைப் பெண்களின் கண்ணீர்தான் ராம ஐதாளரின் வாழ்வை துளிரச் செய்கிறது. கண்ணீர், வாழ்வின் கைப்பொருள் எனப் புரியவைக்கிறது. ஈரம் காயாத பெண்ணின் கண்ணீர்தான் கடலாகத் திரண்டு அலையடிக்கிறது நாவல் முழுக்க. தென்கர்நாடகத்தின் மண்ணையும் மக்களையும் விரும்பச் செய்யும் புதினம் இது. தி.பா.சித்தலிங்கையாவின் தமிழில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது


05 November, 2024

வினர்சனக் குறிப்பு : கதிர்பாரதி, நாவல் : சதுரங்கக் குதிரை, ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

ப்போதுதான் இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். 2011_ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாசிப்பு செய்திருக்கிறேன். 2013_ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதை நான் பெற்றுக்கொள்ள ரயிலில் ஜெய்ப்பூர் சென்றேன். அப்போது 'அக்கோலா' ரயில்வே ஸ்டேஷனைக் கடந்தபோது 'நாஞ்சில் நாடனும்','சதுரங்கக் குதிரை' நாவலும் நொடி நேரத்தில் நினைவுக்கு வந்துபோனார்கள். 

மணமாகாத ஒரு 45+ ஆணின் தனிமையுணர்ச்சியும் ஆற்றாமையும் நிராசையுமாக நகர்கிற கதை. நாஞ்சில் நாட்டுக்கும் மஹாராஷ்டிரத்துக்குமாக போய்ப் போய்த் திரும்புகிறது... ஓர் ஊசலாட்டம்போல. நாஞ்சில் நாடன் ஓரிடத்தில் சொல்கிறார்... "ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை" என. நாராயணன் என்கிற மணமாகாத ஆணை இப்படித்தான் உறவும் வாழ்வும் உலைக்கின்றன. அவர் வேலை பார்க்குமிடத்து ஆண்களில் அநேகர் அப்படித்தான் இருக்கின்றனர்.

ஊஞ்சலாட்டப் பாணியில் விரியும் கதை. தாய் இறப்புக்கு கடன் வாங்கிக்கொண்டு பம்பாயில் இருந்து நாஞ்சில் நாட்டுக்கு நாராயணம் வரும் பகுதி மிக உக்கிரமானது. ஆனால், அதைவிட உணர்ச்சிமயமான பகுதி, தான் கட்டிக்கொள்ளவிருந்த காமாட்சியின் மகள் திருமணத்துக்கு வந்துவிட்டு மீண்டும் பம்பாய் திரும்பும்போது, நாராயணனுக்கு பெண் தர மறுத்த அவனது பெரிய மாமா, " அடிக்கடி வந்து போடே... போனதும் கடிதாசி போடு..." எனத் தளும்பும் இடம். 

காமாச்சி மீதல்ல அவள் தங்கை கல்யாணி மீதே நாராயணின் காதல்; காமம் என கனவும் நினைவுமாக வெளிப்படும் இடங்கள் நிராசையின் சித்திரங்கள். எதற்கெடுத்தாலும் கூம்பிக்கொள்ளும் ஆண் மனம் அடையும் சஞ்சலங்கள். 

இந்த நாவலின் இன்னொரு முக்கியமான அம்சங்களாக இருப்பவை.. பயணமும் மனிதர்களும் உண்வுகளும். நாராயணன் அடையும் மன உலைச்சலுக்கு அவரது பயண அலைச்சலே ஒரு மாமருந்து எனத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாவிட்டால் அவனடையும் தனிமை உணர்ச்சியும், உறவுகளின் புறக்கணிப்பும் தற்கொலை முனைக்கு கொணடுவந்து நிறுத்திவிடும்.

நாஞ்சில் நாடன்

உறவுகளைவிட உலவிடத்து மனிதர்கள் மனிதமிக்கவர்களாக இந்த வாழ்விலும் நாவலிலும் இருக்கிறார்கள். தன் ஃப்ளாட்டை நாராயணனுக்கு எழுதித் தரும் ராகவேந்திர ராவ், கோவாவில் முதலிரவைக் கொண்டாட அழைக்கும் குட்டினோ - க்ளாரா, மழைக்கால இரவில் டீக்கடைக்குள் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் ஜல்கா ஜாமோட் ஆள், மேனோன், கேயார்வி., ஜாய்ஸ், காமாச்சி, கல்யாணி, பரசிவம், பூதலிங்கம், விபச்சாரத் தரகன், திருநவெலி க்ளீனர் பையன்,  பெரியமாமா, அத்தை, பெரியம்மை, குமரேசன், ராதா கேசவமூர்த்தி... என நல்லதும் கெட்டதுமாக எத்தனையெத்தனை மனிதர்கள். 

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்வு சடங்கு உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்கிறார் நா.நா. ஒரு சோளரொட்டிப் பற்றி எழுதினாலும் கடுகும் உளுந்தம்பருப்பும் கொஞ்சம் கறிவேப்பிலையும் கிள்ளிப்போட்டு தாலித்த சட்னி என டீட்டெய்ல தருகிறார். இது மஹாராஷ்டிர நகரத்து உணவுவகைக்கும் நீள்கிறது.

எத்தனை பெண்கள் அலுவலிடத்துக் குறுக்கிட்டாலும் அவர்களைவிட நாராயணன் ஊரில் பெண் தேடிக் களைப்பது ஏன்? சுயச்சமூகப் பாசமா? என்றால் அவன் பாத்திரம் இல்லை என்றுதான் சொல்கிறது. ராதா இடத்தில் மையலில் சாய்வது அப்படித்தான். பின்னர் ஏன் தனிமையும் ஏக்கமும்? எல்லாவற்றுக்கும் விடை தெரிய வாழ்க்கை ஒன்றும் கணிதமல்லவே.

மாட்டுங்கா சர்க்கிலுக்கு தனிமையாக வரும் நாராயணன், ஆர்ட் கேலரிக்கு வருகிறேன் எனச் சொன்ன ராதா ஏன் வரவில்லை என தனிமையில் நிற்கிறான். இந்தத் தீராநெடுந்தனிமை நீறுபடியா நெருப்புத் துண்டமாக நாவல் முழுக்க வருகிறது.

எழுதிமுடிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நெருப்புத் துண்டத்தின் அனலடிக்கிறது.

30 October, 2024

விமர்சனம் : சாய்வைஷ்ணவி / நூல் : ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் / ஆசிரியர் : கதிர்பாரதி

ழைமேகங்கள் சூழ்ந்து ஒளியும் இருளுமான மந்தகாசத்தை வானில் நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது உயிருள்ள விமானங்கள்போல கையெட்டும் தொலைவில் விர்ரென்று பறந்து திரியும் தட்டான்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவற்றின் ஒளி ஊடுருவும் மீச்சிறு இறகுகளைக் கவனித்திருக்கிறீர்களா? கண்களுக்குப் புலப்படாத அவற்றின் கடுகளவு கேமரா விழிகளை ஆராய்ந்திருக்கிறீர்களா? பண்படாத நிலங்களின் மீது பறக்கும் தட்டான்களுக்கு மோட்சம் இல்லை. நிலமென்பது மனமென கொள்க. தட்டான்களே உங்கள் ஆசைகள். கதிர்பாரதி தன் கவிநிலத்தில் "ஆனந்தியின் பொருட்டு சிலபல தட்டான்களை தாழப்பறக்கச்" செய்திருக்கிறார். தாழப்பறத்தலில் துயரம் இல்லை அல்லவா?

என்பொருட்டு இப்புத்தகம் கதிரின் கையெழுத்தோடு என் நிலத்தில் வந்து சேர்ந்தது. சொற்கையாடல் என்பது கதிருக்கு கைவந்த கலை என்பது அவரை அறிந்த அனைவரும் அறிந்ததே.  முதலிரண்டு தொகுப்பையும் கையாண்ட லாவகத்தோடு கூடுதல் கொஞ்சம் உப்பு காரத்தையும் தூக்கலாகச் சேர்த்து தந்திருக்கிறார் ஆனந்திக்கு. லிபி ஆரண்யா அவர்களின் மதிப்புரையில் குறிப்பிடுவதுபோல நிலங்களைப் பாடுதல் என்பது சமகாலத்தில் அழிந்துவரும் செஞ்சிட்டுப்போல் ஆகிவிட்டது. கதிர் அதற்கு கொஞ்சம் ஊட்டம் அளித்து பாதுகாத்துவைக்கிறார். அவர் பாடுவது பாலை. பாலை என்பது பாலைவனத்தை மட்டும்தான் என்பதல்ல. ஏனெனில் நாம் வாழும் இந்நிலமே பாலைக்கு ஒப்பானது அறிவீர்தானே?


சில கவிதைகள் ஒருமுறை படித்தாலே புரிந்துபோகும்.  சில கவிதைகளை இரண்டு மூன்று  முறை வாசித்து அவற்றின் முழுமையான சுவாசக் கருவை இதயத்திற்கு விழிவழி ஏற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. படித்ததும் என்னைக் கப்பென்று பற்றிக்கொண்ட ஒரு கவிதையின் கருப்பொருளாக முப்பெரும் இலக்குகளைக் கொள்கிறார். அவை உயர்ரக மதுப்புட்டி, வாலிப்பான பெண்,பின்னொரு வெள்ளாமை நிலம். இவற்றை ஒன்றோடொன்று பின்னிப் பின்னித் தாழம்பூ வாசத்தையொத்த கடைவரியை எப்படிச் செய்திருக்கிறார் பாருங்கள் ,

சாய் வைஷ்ணவி 
‘நிலமே
மதுவே
உனை ஒருவருக்கும் கொடேன்.
ஓரேர் உழவனாய்க் கைகொள்வேன்.
அயலான் அருந்த உனை எப்படிக் கைநெகிழ்வேன்
எனக்கான முதிரிளம் பருவத்து முலையே’

ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு லயத்தை ஒளித்துவைத்ததோடு அதன் வாலிப்பான உபதலைப்புகளில் வாசகனுக்குப் பித்தம் ஏறச்செய்து அவரே கவிதையின் இறுதியில் தெளியவைத்தும் விடுகிறார். புனித பைபிளிலிருந்து தேர்ந்தெடுத்த சில வேறுபட்ட சுவைதரும் கனி(வி) விதைகளை இத்தொகுப்பில் ஆங்காங்கே தூவி இனிமை கூட்டியிருக்கிறார். 

ஒவ்வொரு கவிதையின் வினையாக சிறுகுறு புன்னகையை சிற்சில பக்கங்களில் கொட்டிவிட்டுப் போனேன். அதில் பிரதானமானது,

 // குரங்குக்கென சில வரைமுறைகள் இருக்கின்றன// எனத் தொடங்கும் கவிதையில்,  குட்டிக்கரணம் போடும் குரங்கொன்றின் நிலையைப் பகடியாகக் கூறி இறுதி வரியில்

 //எங்கே ஒரு குட்டிக்கரணம் போட்டு
கூண்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் பார்ப்போம்.
ம்ம்ம்.. சமர்த்து//
என முடித்திருப்பார்.

குரங்காகவும், குதிரையாகவும், கடவுளின் கைபொம்மையாகவும், நிலமாகவும் இன்னும் பலவாகவும் தன்னையும் சிலசமயங்களில் முன்னிருக்கும் வாசகனையும் உவமைக்காட்டி சொல்லவந்ததை உள்ளங்கை எடுத்த நன்னீர் போல தெளிவாக விளக்குகிறார்.


பெண்ணை பாடாமல் கவிதை இன்புறுமா?  பெண்ணைப் பற்றி பாட எதையெல்லாம் ஒரு கவிஞன் முன்னிருத்துவானோ அதை கடந்து தன் காதலியோடான ஊடல்களை எளிமையல்லாத உவமைகளாக வெகுசிறப்பாகப் புனைந்து வந்திருக்கிறது சில கவிதைகள். முப்பிரி பின்னலிட்ட நாக சர்ப்பம் என்ற உபதலைப்பின் கீழ்க் காணும் கவிதை,

//உன் யவ்வனத்தின் உன்னதங்கள்
திறந்துக்கொள்கின்றன.
எனது பிரவேசத்துக்குப் பிற்பாடு//
எனத்தொடங்கி இடையில்,

//முகடுகளின் மென்மையிலும்
வளைவுகளின் தீவிரத்திலும்
நீர்வழிப் படூஉம் புணைப் போலாகிறேன்//
என அலாதியான இன்பத்தை சொல்லால் நிறைத்திருப்பார். 

கவிதையின் பாடுபொருளாய் எதைக்கொள்வதென்பது கவிஞனின் விருப்பம். அரசியல் தொடங்கி நிலவுடைமை, அதிகாரம் , சினிமாப் பாடல்கள் தழுவிய சொற்கள் என பல கருப்பொருள்கள் கவிதைகளாக அமைந்திருக்கின்றன.

//உன்னை ஒன்று கேட்பேன் 
உண்மை சொல்ல வேண்டும் என
நம் சரோஜா தேவிகள்
நம்மைப் பார்த்து கண்களை சிமிட்டுகிறார்கள்//
 

நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதையே இக்கவிதை சொல்கிறது. முதலில் உண்மை பின்பு சத்தியம்.

//நானொரு நீதிமானின் வார்த்தை
குழந்தையின் புன்னகை//  
எனத்தொடங்கி

நானொரு துன்மார்க்கன்
நானொரு அவிசுவாசி// 
என்று வெறுப்பின் இறுதியில் உண்மையைக் கக்கும் உன்னதவானாய் ஆகிப்போகிறீர்கள் இக்கவிதையின் ஊடாக.

//ஊதாரி மைந்தன் செலவழிக்கும்
தாலந்து என் இன்றைய நாள்
எப்படியும் மாலை
கைவிட்டு போய்விடும்//
என்ற கவிதை "பத்து நிந்தனைகள்" என்ற உபதலைப்பில் அமைந்துள்ளது. ஊதாரி மைந்தர்களே நம் தாலந்துகளை பத்திரப்படுத்தி கொள்வோம்.  ஏற்கனவே சொன்னது போல தலைப்புகள் மட்டுமே ஒரு கவிதைகளாக தனித்து நிற்கின்றன.

"ஆல் தீ பெஸ்டின் புறவாசல்"
"கருவாட்டு ரத்தமூறிய இட்லி"
"ச்சியர்ஸ்"
"ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்"
"ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்"
"வெட்டுக்கிளியை சூப்பர்மேக்ஸ் பிளேடுக்கு பழக்குதல்"

இதெல்லாம் சொர்ப்பம்தான். தமிழெனும் பெருங்கடலிலிருந்து சொல் உப்பெடுத்து உலர்த்திவைத்து கவிதை உணவுக்கு சுவை சேர்த்திருப்பது புதுமை.

``பின் தங்கியவர்களின் உயரம்`` எனும் கவிதையில் பனிச்சறுக்கு வீரர்கள் உச்சியில் இருந்து சறுக்கி வருகிறார்கள். வீழ்ந்தும்,பறந்து பாய்ந்தும், விரைந்து சரிந்தும் ஒருவரை ஒருவர் முந்தி வரும் வீரர்கள் ஓநாய்கள் போல இலக்கு எனும் இரையைத் தொடத் துரத்துகிறார்கள். ஒரே தாவலில் இலக்கை அடைகிறான் ஒருவன்.
// இரைக்கு பின்தங்கியவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள். 
ஆம்
இரையை பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள்// இரைக்கு பின்தங்கியவர்கள் உச்சியை அன்னாந்து பார்த்துவிடும் பெருமூச்சில் பற்றும் தீயில் இக்கவிதை நம்மைப் பற்றிக்கொள்கிறது.

ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள் டிஜிட்டல் நாகரீகத்தின் விளைவாக நகரத்தின் ஓரத்தில் அமர்ந்து பல சம்பந்தன்களுக்கு முலையூட்டிக்கொண்டிருக்கிறாள். மெட்ரோபாலிட்டன் நகரில் பரபரக்கும் சாலையில் விரையும் இருசக்கர வாகனத்தின் பின்னிருக்கையிலிருந்து இளம் மொட்டான மலரொன்று ஆபத்தான யூ டர்னில் சரிந்து விழு யத்தனிக்கும்போது என் ரத்தம் கொதித்துயர ஆரம்பித்தது. நல்ல வேளையாக இக்கவிதைச் சிறுவன் சேனலை மாற்றிவிட்டு கண்டாங்கி பாடலுக்கு தாவச்செய்தான்.

//தூக்கிட்டுக்கொண்டவளின் அறையிலிருந்து அகாலத்துக்குள் சிக்கிக்கொண்டு திணறுகிற மவ்னம் அறையை திறந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடுவதைப் போல" என்ற கவியின் மௌனத்தில் கதறியழுது துடித்திறந்தது என் மனத்தின் பேரோசைகள். 

இறுதியாக, "எங்களிடம் நீர்முள்ளிப்பூக்கள் இருந்தன" என்ற கவிதையில் தாத்தாவிடம் இருந்ததும் இல்லாமல் ஆனதும் அல்லது பிடுங்கப்பட்டதும் அவருடையது மட்டுமல்லாது ஒட்டுமொத்த விவசாய தாத்தாக்களும் அவரது பரம்பரைகளும் இழந்ததே ஆகும் எனக்கண்டுணர்ந்தேன். மரண வீட்டிற்கு மீண்டும் போகும்போது அங்கு இறைந்து கிடக்கிறது நிம்மதி என்பதை விம்மலோடு விளக்குகிறது ஒரு கவிதை. 

சமகால மீப்பெரும் கவிஞனின் கவிதை தொகுப்பை விமர்சிப்பதென்பது ஒரு விமர்சகருக்கு மிகப்பெரிய சாகசம். படிக்கும் போது மனதில் உதித்ததத்தனையையும் ஒரு சில வரிகளில் அடக்குவதென்பது இயலாது காரியமென்ற போதிலும் இயன்றவரை முயன்றிருக்கிறேன். அதேபோல, ஒரு வாசகனின் மனதிற்குள் தமிழ் சாட்சியாக கவிதையை கரம்பற்றிக் கொள்ளச்செய்கிறது இத்தொகுப்பு. இறுதிவரை மறக்கவே கூடாது எனும் நோக்கத்தோடு வாசகனுக்கு தேர்ந்த கவிதைகளை அள்ளி அள்ளி தருவது ஒரு சிறந்த கவிஞனின் கடமையாகும் போது கதிர் அதை பரிபூரணமாக செய்திருக்கிறார்.

22 October, 2024

அஞ்சலி : எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன்... உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!

எம்.ஜி.கன்னியப்பன்
நான் 'கல்கி'யில் வேலைபார்த்தபோது அங்கே எனக்கு சீனியராக வேலைபார்த்தவர் இயக்குநர் மு.மாறன். அவரது நண்பராகப் பழக்கமாகி எனது நண்பராகவும் நட்பில் இணைந்தவர் எம்.ஜி. கன்னியப்பன். சினிமா பாடலாசியர், வசனகர்த்தா, கதாசிரியர்... என சினிமாவின் கிரியேட்டிவ் பக்கம் இயங்கியவர். நா.முத்துக்குமார், லலிதானந்த், குகை மா புகழேந்தி, கன்னியப்பன்... எல்லாம் ஒரு குழாம். நா.முத்துக்குமார் தூர் கவிதை மூலம் கவனத்துக்கு வந்ததுபோல, கன்னியப்பன், குமுதத்தில் எழுதிய கூட்டுக்குடும்பத்தில் கலவி குறித்து எழுதிய ஒரு கவிதை மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தவர். பாக்கெட் நாவல் காலத்தில் எழுதவந்து எல்லோரையும் அனபையும் எழுத்தின் மூலம் பெற்றவர். தனி இருக்கை இவரது சிறுகதைத் தொகுப்பு, நான்குக்கும் அதிகமான கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறார். நிறைய சினிமா கதைகளுக்கு ஸ்கிரிப்ட் டாக்டராக வேலைபார்த்தவர். பத்து நாட்களுக்கு முன்பு எனது நண்பர் இயக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுத்தாளராக கன்னியப்பனைச் சிபாரிசு செய்தேன். கன்னியப்பன் எழுத்தை அங்கே அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதை மகிழ்ந்து பேசினார். இப்போது அதிர்ச்சி செய்தியாகிவிட்டார். சென்னையில் எனது ஆரம்ப நாட்கள் முதல் இருந்துவந்தவர், இப்போது இல்லாமலாகிவிட்டார். உடல் அவரது சொந்த ஊரான சேலம் (அருகில் ஒரு கிராமம்) நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அஞ்சலி தலைவரே. உங்கள் வண்டி கிளம்பிவிட்டது! 

21 October, 2024

சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது_2013

 மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைப் புத்தகத்துக்கு ’’சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது- 2013” வழங்குகிறார் சாகித்ய அகாதெமியின் பிரசிடெண்ட் விஷ்ணு பிரசாத் திவாரி. இடம் : சங்கீத நாடக அகாடெமி- ஜோத்பூர் -ராஜஸ்தான் மாநிலம். தேதி : 05.02.2014 நேரம்: மாலை 5.30 க்கு மேல்..





கவிதை~ ஒரு என்பது எல்லாம்~ எனது கவிதையும் Sivakumar Ambalapuzha_ன் மலையாள மொழிபெயர்ப்பும்

மாட்டுவண்டி செல்கிறது. இல்லை வண்டிப்பாதை அழைத்துப்போகிறது. இல்லை காளைகள் இழுத்துப்போகின்றன. இல்லை சக்கரங்கள் நகர்த்திப்போகின்றன. இல்லை தெப்பக்கட்டை தாங்கிப்போகிறது. இல்லை அரிக்கேன் வெளிச்சம் வழிகாட்டுகிறது இல்லை எட்டுக்கால்கள் இரண்டு சக்கரங்கள் சேர்ந்துபோகின்றன. இல்லை கழுத்துமணிச் சத்தம் கூட்டிப்போகிறது. இல்லை சத்தியம் முன்போகிறது. வண்டி பின்போகிறது ஒரு வண்டிக்காரன் உறங்குகிறான் இவை எல்லாவற்றின் மடியில்.

- கதிர்பாரதி
- உயர்திணைப் பறவை

💚 കതിർ ഭാരതി (തമിഴ്)
കാളവണ്ടി പോകുന്നു
ഇല്ല
വണ്ടിത്താര കൊണ്ടുപോകുന്നു
ഇല്ല
കാളകൾ വലിക്കുന്നു
ഇല്ല
ചക്രങ്ങൾ ഇഴഞ്ഞുരുളുന്നു
ഇല്ല
മാർനുകം താങ്ങിപ്പോകുന്നു
ഇല്ല
റാന്തൽവെട്ടം വഴികാട്ടുന്നു
ഇല്ല
എട്ടുകാലുകളും രണ്ട് ചക്രങ്ങളും ചേർന്നുപോകുന്നു
ഇല്ല
കുടമണിയൊച്ച അലിഞ്ഞുചേരുന്നു
ഇല്ല
സത്യം മുമ്പേ പോകുന്നു
വണ്ടി പിൻതുടരുന്നു
ഇവയെല്ലാറ്റിന്റെയും മടിയിൽ
വണ്ടിക്കാരനുറങ്ങുന്നു
🔴

கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~

ப்பத்தா ஒரு நத்தை வேட்டையாடி.
மழையீரக் குடலைமட்டை அணிந்து
அவள் வேட்டையாடக் கிளம்பினால்
நத்தைகள் ஓடி ஒண்டும்.
நத்தைகள் மீது சிலுவைகள் வரைந்து மயக்குவாள்.
`மண்ணக வாழ்விலும் மேலான மறுமை வாழ்வு
உங்களுக்கு எம் வயிற்றிலுண்டு` என்று
பிரசங்கிப்பதுபோலிருக்கும்
அவள் வேட்டை.
நடவுபொழுதிலும் களையெடுக்கக் குனிந்தாலும்
நத்தைகளோடே நிமிர்வாள்.
சவ்வுமிட்டாய்க்காரன் பின்திரியும் சிறார்களென
அவளோடு நத்தைகள் வீட்டுக்கு வரும்.
மண்சட்டிக் குளத்தில் நீந்தும் நத்தைக் கனவுகளுக்கு
திருமுழுக்காட்டும் நடக்கும்.
அப்போது விசேஷமாக
தம் உணர்க்கொம்புகளை உயர்த்தி
நத்தைகள் அப்பத்தாவை ஆராதிக்கும்.
என்ன பிரயோஜனம்
கோணூசி குத்தி நெகிழப்படும் நத்தை இறைச்சி
வாழ்வின் அப்பமாக அன்றிரவு மாறும்.
கார் சாகுபடிக் காலையொன்றில்
அப்பத்தா தலையெட்டிப் பார்த்தபோது
அவளொரு வீட்டு நத்தையாய்த் தெரிந்தாள்.
தாத்தாவின் தார்க்குச்சி விளாசலில்
ஊமை நத்தையாய் ஒடுங்கிப் போனாள்.
நத்தை ஓடுகளைத் துளையிட்டு
சலங்கைக் கட்டி ஆடினோம்
அவள் பிணம் முன்பு.
நத்தைகள் கூடி தம் மூதாயை எடுத்துப்போய்
சவப்பெட்டியில் சிலுவை வரைந்து
களத்துமேட்டில் புதைத்தன.
யூரியா சல்ஃபேட் பொட்டாஷியம் பாக்டம்பாஸ்
எல்லாம் செரித்து
தாளடி நடவுக்கால வரப்பில் இழைகிறது
ஒரு புத்தம்புது நத்தை.
அது
அப்பத்தாவேதான்.
_கதிர்பாரதி