காயம்பட்டவனை அழைத்து வாருங்கள், களிம்பு தருகிறேன் எனச்
சொன்னவன் வலியை முதலில் அறிந்தவனாக
இருக்கிறன். துக்கம் வேறோடிய தன் உடலை ஒரு கவிஞன் இலையெனக் கழித்துவிடத் தயங்குவது எதனால் அன்பர்களே. முத்தத்தைத் திருவோடாக்கிக் காத்திருக்கும் கவிஞனுக்கு தங்களது பசிய உதடுகளால் இரண்டு முத்தங்களைப் பரிசளியுங்கள். உங்கள் உதடுகள் ஆசிர்வதிக்கப்படட்டும்.
கவிஞன் தன் இயலாமையிலிருந்து எழுதுகிறான் என்பதைவிட ஒரு மனிதன் தன் இயலாமையிலிருந்து வார்த்தைகளைக் கண்டுகொள்கிறான் என்றே நான் புரிந்துகொள்ளுகிறேன். ஒரு காலத்தில் கவிதை ஆசிர்வாதமாக இருந்தது. அது பசிக்கு உணவாக, தங்கக்காசுகளுக்கும், யானைகளுக்கும் மாற்றாக இருந்தது. அதன் பின் கவிதை மொழியின் ஆதிக்கத்திற்குள் போய் கற்றறிந்த மனிதர்களின் முன்னால் ஒரு வேசையாக விபச்சாரகனாக மாறிவிட்டது. தலையாட்டல்களுக்கும் தரகுக்கும் இடையே கவிதை தன் நிர்வாணத்தை மறைக்க மிகுந்த சிரமப்பட்டது. பின் கவிதை வேசைத்தனத்தின் மூலம் அரசியலை அறிந்தது.
கவிதைகள் பெரும்பாலும் தமிழில் பாடல்களாகவே இருக்கிறது. நவீனம் வந்தபிறகே பாடல்கள் கவிதைகள் என இரு கூறாகப் பிளவு கொண்டது. மலையாளத்தின் நவீன கவிதைகளை பாடல்களாகப் பாடுவதும் உண்டு. ஆனால், கவிதையின் இலக்கணத்தைச் சொல்லும் மொழியறியாதவன் இசையின் வழியாக வரிகளை அறிந்துகொள்கிறான். வரிகளுக்குள் ஓடும் இசையில் அவன் துக்கத்தை, துள்ளலை மொழிபெயர்த்தவனாகி
விட்டான். ஆனால் இதே கவிதை எந்த நிர்தாட்சண்யமும் இன்றி கவிதையாக இருக்கும்போது அது வாசகர்களுக்கு தேவையில்லாமல் போகிறது.
ஆனால் கவிதை மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும் என நான் இப்போது நினைக்கிறேன். கவிஞன் மக்கள் இல்லையா. இருக்கலாம், தனக்கென ஒரு உலகத்தை மொழிவழியே விரிக்கும் ஒருவனை மக்கள் என அழைக்கச் சங்கடமாக
இருக்கிறது. இதே சங்கடங்களை மக்கள் முன் கவிஞர்களும் கண்டடையவேண்டும்.
கவிதையைக் கவிதை என்று பாராமல் அது மதுப்போத்தல்களாகவும், கள்ளச் சீட்டுக்களாகவும், அடையாள அட்டைகளாகவும், கடவுச்சீட்டுக்களாகவும் கழுத்தில் தொங்குவதை இப்போது நான் எனது சமகாலத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். நவீன கவிஞர்கள் கவிதைக்கு முன் தங்கள் விரல்களால் எதை எழுதினார்களோ இல்லையோ தத்துவத்தை, (இங்கு நான் தத்துவம் எனக் குறிப்பிடுவது மார்க்சியத்தை மட்டும்தான். வாழும் காலத்தில் பயன்தரத்தக்க ஒன்றை மட்டுமே என்னால் தத்துவம் என அழைக்க முடிகிறது.) எதிர்த்தார்கள்.
வரிகள் உணர்ச்சி வசப்பட்டவுடனேயே கவிஞர்கள் உனர்ச்சிவசப்பட்டுக் கத்தியது அது கவிதையல்ல கோஷம், இது பிழைப்பு, இது அரசியல். இது அடிப்படை வாதம், துரதிருஷ்டம் இவை மூன்றும் இல்லாது எந்தச் செயலும் இல்லை. இன்று நவீன கவிஞர்கள் கையில் புழங்கும் பலமான சில்லறையாக செலவாணியாவது காதலின் விவரணை வடிவங்களும், இருண்மையின் வெளிச்சங்களும் மட்டுமே. இவையே பெரும்பாண்மையாக நவீன கவிதை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது.
கவிதை என்றால் என்னவென்று ஒரு நொடியில் சொல்லிவிடமுடியுமா என அகந்தையோடு கேட்கும் கவி உள்ளங்களை நானறிவேன். ஒரு வாசகனாக சாமனியனாக அதே கவிஞர்களிடம் எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது. பசி என்றால் என்ன… காதல் என்றால் என்ன… காமம் என்றால் என்ன…. உழைப்பு என்றால் என்ன.. மனிதன் என்றால் யார்…. இவற்றை எல்லாம் தெரிந்துவிட்டா நீங்கள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இல்லை, நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அல்லது வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம்.
கேள்விகள் நிலமெங்கும் தங்களது கனத்த கைகளால் நிலத்தை ஓங்கியறைந்து புழுதியைக் கிளப்புகிறது. இறுதியில், எதிர்பார்ப்பின் முகத்தில் குறைந்தபட்சம் காறியுமிழ்ந்துவிட்டு வாசகனுக்கு ஒரு சேவையையும், தனது அகங்காரத்தையும் இழந்து, பெற்றவற்றின் சுய நோக்கங்களை, சுய புலம்பல்களை, பெற வேண்டியவற்றை ஒரு மந்தைக்கு முன் நின்று கூவுகிறவரையே நான் கவிஞன் என்பேன். அவன் களத்தில் இறங்கினான் என்றால் அவன் எனக்கு மகா கவிஞன்தான். இதுவே என் கவிதை பற்றிய சிறிய புரிதல்.
சிறிய புரிதல் எனச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. உரையாடுவதன் மூலம் நீங்களோ நானோ ஓர் உத்தேசமான திசையைக் கண்டுபிடிக்கலாம். அல்லது, கவிதை தொன்மத்தில் சுட்டுகிற திசைப்பூண்டாகக் கூட நாம் கால்களை இழுத்து, தன் தலையில் மிதிக்க வைத்து நம்மை அலைய வைக்கலாம். ஆனால் அடிப்படையில் இங்கு நாம் உரையாட வேண்டும். ஆம் கவிதை குறித்து கவிதை எழுதிக்கொண்டே இருக்கமுடியாது. உரையாடித்தான் ஆகவேண்டும். அதுவே கவிதைக்கும் கவிதை வாசகருக்கும் ஒரு கவிஞராக நாம் செய்ய வேண்டிய உதவி. நிச்சயமாக இதை உதவியென்றே அழைக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். வழிகாட்ட நான் இருக்கிறேன், நான் கவிஞர் என நெஞ்சை நிமிர்த்துபவர்களும், பாடம் நடத்துபவர்களும் தீர்க்கதரிசிகளாகச் செத்தொழியட்டும்.
ஆனால், கவிஞன் தன்னைச் சூதனாக வைத்து வரிகளை பகடைகளாக உருட்டும் போதுதான் வரலாறு பிறக்கிறது. ( அதில் உள்ள சார்பே அவன் எந்த மக்களைக் குறித்து எழுதுகிறான் என்கிற அரசியலையும் பிறக்க வைக்கிறது) அரசும், ஆண்டியும் தீர்க்கதரியும் அவன் மொழி வழியாகவே இத்தனை ஆண்டுகாலமும் நம்மை வந்தணுகிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞனின் கண் காலத்தின் கண் எனச் சொல்லும் நாம் அதை மதுப்போத்தலின் முன்னாலும், என் பெயர் இதுதான் எனச் சொல்ல ஒரு வாசகமாகவும் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அவை எனக்கு மிகுந்த சிரமத்தை தருகிறது.
சிரமங்கள் வாழ்க.
மெசியாவின் காயம் எனத் தலைப்பிலிருந்து ஒழுகும் துயரம் கவிதைகள் அனைத்திலும் ஒரு ஊடு நரம்பாகவே ஓடியிருக்கிறது. அன்பை அளவுக்கு மீறிக் கவிஞர் போதிக்கையில் அவர் கவிதைகளை நாம் குரூரத்தோடுதான் வாசிக்கிறோமே என எண்ணத்தோண்டுகிறது. அன்பைச் சொல்லுகையில் கல்லறை மொழியை பார்வைக்குக் கொண்டு வந்துவிடுகிறார் கதிர்பாரதி. இத்தொகுதியில் நான் கண்டடைந்த கவிதைகளென ஒன்றை இங்கே ஞாபகமூட்டுகிறேன் கவிதைத்தலைப்பு சமாதானத் தூதுவர் = ஹிட்லர். (பக்_ 4 ) ஒரு கட்டியங்காரனின் மொழியில் இக்கவிதை தன்னுடலைக் கிடத்தியிருக்கிறது. ஆள்மாறாட்டமும் அரசியல் மாறாட்டமும் நடைபெறுகையில் எல்லாப் பக்கமும் மனிதர்களே காணக்கிடைக்கிறார்கள். மக்கள் தங்கள் கண்களை நம்பி மோசம் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். இதே தொனியை உடைய அரசியலை உயிர்ப்பந்தல் எனும் கவிதையிலும் வைத்திருக்கிறார். சோரத்தை விரும்பாத குற்றவுணர்ச்சி கொண்ட கவிதையாக இதை முன்மொழிகிறேன்.
ஒரு தோத்திரப் பாடல் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது. ஆனால் மதம் கட்டமைத்த மனிதனை மதமே காவு கொண்டு அதை மனிதன் குற்றவுணர்ச்சியின் அடிப்படையில் கேள்வியை முன்வைக்காது குற்றவுணர்ச்சியை அடிப்படையாக வைப்பது எந்த நியதியின் கீழ் எனத் தெரியவில்லை. கடவுள் மனிதர்களின் பெரும்பாரம் அல்லவா.
தொகுதியில் பத்துக்கவிதைகள் வாசகனின் நேரே விரல் நீட்டி, பற்றிக்கொள் என்கிறது. குறிப்பிட்ட கவிதைகளில் குறிப்பிட்ட வரிகளை நானே துண்டித்திருக்கிறேன். அது கீழ்க்கண்டவாறு…
நெடுநாட்கள் கழித்து குடும்பப்புகைப்படம்
ஒன்றைப் பார்க்கையில்
சுடர் விடும் அன்பைத் தரிசிக்கிறீர்கள்
நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிறீர்கள்
நீங்கள் நினைப்பது போலில்லை
குவித்து வைத்த ஏதோ ஒன்றெனத்தான் இருப்பார்
இளஞ்சிவப்பு நிறங்கொண்டது
என்கிறீர்களா
இரைக்காக அது மலம் கொத்திக்கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழத்தகுதியற்றவர்
ஆதிவாசிகளின் குகை ஓவியங்களுக்கு நிகராக
மிகு புராதானமான எனது தனிமைக்குள்
உங்கள் சந்தையைப் பரப்பிவிட்டீர்கள்
எருக்கம்புதர்கள் மண்டிக்கிடக்கும்
ஒரு பாழடைந்த வீட்டைக் கடக்கும்போது
உங்கள் இதயத்தாய் உற்றுப்பார்க்கிறீர்கள்
தெருவைக் கடக்கும்போது உணராவிட்டால்
இன்னும் நீங்கள் முழுதாகத் தெருவைக் கடக்கவில்லை
இதோ…இதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைவதைக் கவனிக்கிறீர்களா
வாழ்த்துக்கள்
நீங்கள் என்னை அழவைத்துவிட்டீர்கள்
கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்
அதைக்கொல்ல நினைத்துத்தான் இப்போது
சாராயத்தால் மிறுமிடறாக எர்ந்துகொள்கிறேன் என்கிறீர்கள்
இவ்வரிகளிலுள்ள தொனியின் ஒற்றுமை, கவிதைக்கு நம்மை வாசகனாக அடையாளம் காட்டுகிறதென நினைக்கிறேன்.
கதிர்பாரதியின் இத்தொகுதியில் எந்த வாசகனும் அதன் உடலில் இருந்து இரண்டு வரிகளைக் கலக்கிக் குடித்து பருக வைக்கும் இயல்பைக் கொண்டதாக
இருக்கிறது. முதல் தொகுதியென இதை முன் வைத்திருக்கும் கதிர் பாரதியின் மேல் எனக்கு இன்னும் சில நம்பிக்கைகளை அழுத்தமாக ஏற்றி வைக்கிறது. அதோடு கவிஞர் தன் வார்த்தைகளின் மேல் கத்தரிக்கோலை வைக்கத் தயங்கக்கூடாது என வேண்டுகோளும் வைக்கிறேன். நல்ல கவிதை எனச் சொல்லுவது, இங்கும் பெரும்பாலும் மொழியின் வழியே நாம் அடைந்த அனுபவத்தை சொல்லுவதுதான். அப்படியென்றால் உளநூல்கள் அனைத்தும் பெரும்பாலும் கவிதை மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதற்கு அறிவியல் மொழியே கையாளப்படுகிறது.
கவிதைக்கென்று ஒரு மொழி இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையிலேயே சொல்கிறேன். மொழியைக் கையாளத் தெரிந்த எவரும் கவிஞராகலாம். கொஞ்சம் அளவுகூடிய உழைப்பு அவ்வளவே.
மொழி கைவராத கவிதைகள் சில இத்தொகுதியில் உண்டு. உதாரணத்துக்கு மோகப்பரிபூரணி என்ற ஒன்று, வெறும் மொழிவிளையாட்டுடனேயே கணக்குப் போட்டு தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறது.
இது இத்தனை நிறைளைச் சொன்னவன் ஒரு குறையைச் சொல்லக்கூடாதா என்கிற கருப்புப் புள்ளியல்ல. முதல் தொகுதியில் இத்தனை கவிதைகளை எழுதியவர் கதிர்பாரதி என்ற ஒரு ஆனந்தமான மனநிலையில், ஒரு வாசகனாக நான் வைக்கும் எச்சரிக்கையே. எச்சரிக்கைகள் பாடத்திட்டங்களுக்கு உரியவை. ஆகவே யதார்த்தத்தில் ஒத்துவராதென கதிர்பாரதி நினைக்கலாம். ஆனால் பாடத்திட்டங்களின் படி வாழும் வாழ்க்கைதான் இது.
இறுதியாக ஒரு விவசாய வாழ்க்கையை வாழும் ஒருவன் வயலுக்கு கலையில் எழுந்து மாலைவரை உழுது வீடு திரும்பும் போது அவன் அதிகபட்சம் நூறு வார்த்தைகள் பேசியிருக்கலாம். மாட்டோடும் துணையாக உழுபவனிடமும். அதனால் அவனுக்கு காதல் இல்லையென்றோ உணர்வுகள் இல்லையென்றோ நான் நம்பிவிடக்கூடாது. இதுவே என் வரையறை.
இத்தொகுதியில் மாளாத எரிச்சல் உணர்ச்சியை எனக்கு வழங்கிய கவிதை. மகாகவி கவிதை எழுதுகிறான் என்ற தலைப்பிடப்பட்ட ஒன்று. பக்- 53
உலகை
உன்மத்த தாண்டவமாட வைக்கிற
கவிதையொன்றின் கடைசிவரியை
இயற்றிக்கொண்டிருக்கிற மகாகவியை
அவன் மகனின் மலத்தைக் கழுவிவிட
நிர்பந்திக்கிற கீழ்புத்தியுடைய இச்சமூகம்
அந்தக்கவிதையின் கடைசிவரியைப்
படிக்கையில் மூக்கைப்
பொத்திக்கொள்ளுகிறது
அதோடு மகா கவியை துணி காயப்போடச் சொல்லக்கூடாது, கவிஞரின் எரியும் கவிதையைக் கண்டு பெட்ரோல் மிரள்கிறது. இப்படியாக பேரிளம் பெண், அடுத்து மனைவி,ஆகக்கடைசியில் டூபிஸ் நடிகை எனத் தாண்டிச்செல்கிறது. இப்படியாக கவிதை நீண்டு செல்கிறது. குண்டி கழுவாத, அதுவும் அவன் மகனுக்குக் கழுவிவிடாத, கவிஞருக்கு உலகைத் தண்டாவமாடவைக்கிற கவிதைகளை எழுதமுடியாது என்பதோடு, அவர் தன் மூக்கையே சம்பந்தப்பட்ட மகாகவிதையை எழுதும்போது பொத்திக்கொள்ளட்டும்.
ஏனெனில் அவரது வீச்சம் அவரது உடலில் இருந்தே கசிந்து ஊறுகிறது. துவைத்த துணியைக் காயவைக்காத, கறிக்கடையில் நிற்காத, போட்டதை எடுத்துத் தின்று கொழுத்துக் கிடக்கும் பிராணிகளை கவிஞர் என்ற பதத்தைச் சுட்டி எப்படி மன்னிக்கமுடியும். அவர் கவிஞர் எனவும் அவர் எழுதியது மகா கவிதையெனவும் அழைக்க முடியும்.
இன்னும் ஒன்று இக்கவிதையில் வருகிற மகா கவிஞன் பெண்களை என்னவிதமாக எண்ணுகிறான் என்பதை, தனது பெண்பற்றிய புரிதலை, கவிஞர் கதிரிபாரதி சொல்ல முடியுமா என்று கேட்டால், அதை அவர் ஒரு கேள்வியாகவே எதிர்கொண்டால் போதுமானது.
இத்தொகுதியில் என்னை ஈர்த்த பல கவிதைகள் உள்ளன.
நிற்க
நண்பர்களே… இத்தொகுதியில் உள்ளவை, ஒரு வாசகனாக எனக்கு கவிதைகளாகவே தன் வரிகளைத் திறந்து போட்டிருக்கிறது. அதோடு முதல் தொகுதியில் இவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்திய கதிர்பாரதியைக் கவிஞர் என்றே அழைக்க ஆசைப்படுகிறேன். அவருக்கு என் ப்ரியமும். முத்தங்களும்.
வசுமித்ர
1 comment:
வாழ்த்துக்கள்...
Post a Comment