என் இனிய நண்பர் நா.வே.அருள் செல்பேசியில் அழைத்து, ”நினைவுகள் அழிவதில்லை’’ என்கிற படத்தில் நான் ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன். என் நண்பர் பகத்சிங் கண்ணன்தான் இயக்குனர். நாளைக்கு (14.04.2013) படம்பார்க்க வரமுடியுமா என்று கேட்டார். நா.வே.அருளின் நட்புக்காகவே தாராளாமாக வருகிறேன் சொல்லிவிட்டுப் படத்துக்கும் போய்விட்டேன். பிரிட்டிஷ் இந்தியாவில் கேரளாவின் கையூர் விவசாயிகள் உள்ளூர் நிலச்சுவந்தார்களை எதிர்த்து நடத்திய போராட்டமும் அதன் விளைவால் நான்கு இளைஞர்கள் தூக்குத்தண்டனைக்கு உள்ளானதைச் சொல்லும் நாவல் நினைவுகள் அழிவதில்லை. அதே பெயரில்தான் படமாக்கி இருந்தார் பகத்சிங் கண்ணன். லண்டன் வரைக்கும் எதிரொலித்த கையூர் விவசாயிகள் போராட்டம்தான் கதை. ஜனரஞ்சக சினிமாவுக்குரிய எந்தத் துருத்தலும் இல்லாத இந்தச் சினிமாவைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது. சுட்டிக்காட்டவும் தட்டிக்கொடுக்கவும் குறை - நிறைகள் நிறைய இருந்தாலும், முந்தைய தலைமுறையின் போராட்ட வாழ்வை படமெடுக்கவும் அதனால் ஏற்படப் படப்போகும் பொருளாதாரச் சிரமங்களை ஏற்றுக்கொள்ளவும் சித்தமாக இருக்கும் இயக்குனர் பகத்சிங் கண்ணனை நினைக்க பெருமையாக இருந்தது. இதுபோன்ற படங்களை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்ததும் வியப்பான அனுபவம். நண்பர் நா.வே.அருள், இயக்குனர் பகத்சிங் கண்ணன் மற்றும் பட்க்குழுவினர் அனைவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். நம் முன்னோர்களின் போராட்ட வரலாறுகளை அறிந்துகொள்வதற்கான தூண்டுகோல் இந்தப் படம். (இயக்குனர் சார்.. பண்ணையாரின் அடிபொடியாக நடித்த நண்பர் யார்? அவர் நடிப்பு அட்டகாசம்!)
1 comment:
சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி...
Post a Comment