நன்றாக நினைவிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு விபத்தாக
வாசிக்க நேர்ந்தது சில புத்தகங்களை. அதில் இருந்த ஓவியங்கள்
என்னைத்திடுக்கிடச்செய்தன. உடலை முறுக்கி கைகளைத்திருகி
கால்களுக்குள் நுழைத்து 180ச -யில் தலையைப்பின்புறமாய் சுழற்றி மார்பு வரை
தொங்கிய நாக்கில் ஒரு நட்டுவாக்காலி சிரிக்க சுற்றிலும் வண்ணத்திகள்
படபடக்கும் வகையிலான ஓவியங்களில் மிரண்டு போயிருக்கிறேன்.
ஆக்சுவலா நீங்க என்ன சொல்ல வர்றீங்க? என்ற நமது தத்தியான
கேள்விக்கு அவர்கள் "வாசித்துப் புரிந்துகொள்ளவும்" என்று அம்புக்குறி
காட்டும் திசையில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஸர்ப்ப வரிகளிடம் போய்
சிக்கிக்கொண்டால் அதோகதிதான்.
ஓவியனின் அன்னாசிப் பழத்துக்கே கிழிந்து ரத்தக்களறியான நமது
வாயைப் பலாப்பழத்தைக் கையில் வைத்திருக்கும் கவிஞனிடம் ஒப்படைத்த
கதையாகிக் கந்தலாகிவிடும்.
இன்னும் நீங்கள் வளர வேணும் தம்பி! என அவர்கள் நமது திருவாய்
சுற்றளவின் போதாமை குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுதான்
அடாவடித்தனத்தின் உச்சம்.
தமிழ்க்கவிதைப் பரப்பின் அலுப்பூட்டும் தேசியநெடுஞ்சாலையின் மீது
அதிருப்தி கொண்டு சிற்றிதழ் அணுகு சாலைகளின் வழி இறங்கி வாகனப்புகை
இரைச்சல், தூசுக்கு அப்பால் காட்டுப்பூக்கள் மலர்ந்திருக்கும் நன்னிலத்திற்குப்
பயணப்பட விழையும் புதியவர்கள் எதிர்கொள்ளும் முதல் ராக்கிங் இதுதான்.
ஆனால் ராக்கிங் காலம் முடிந்து எழுதத்துவங்கிய "ஜூனியர்கள்" 362ச -
யில் தமது கபாலத்தைத் திருப்புவதாகச்சொல்லி குறி வரைக்கும் நாக்கைத்
தொங்கவிட்டு அதில் பூரான் விட்டுக் காண்பிக்க அரண்டுபோனவர்கள் இந்த
விளையாட்டை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்ற பொதுமுடிவுக்கு
வந்துவிட்டது போல் இருக்கிறது நிகழ்கால தமிழ்க்கவிதைப்போக்கு.
சற்றுத்தெளிந்தே ஓடும் நவீன தமிழ்க்கவிதையின் போக்கில்,
மனத்தடையற்று சலசலக்கிறது கதிர்பாரதியின் கவிதைகளும். பின்னட்டையில்
சொல்லப்பட்டதைப்போல் அதுவே அதன் பலமுமாகிறது.
கதிர்பாரதிக்கு இது முதலாவது தொகுப்பு. புது எழுத்தின் கண்காணிப்பில்
சுகப்பிரசவம். நல்ல வடிவுடன் வேறு இருக்கிறது. எடை நார்மல். வீறிட்டழும்
குரலை வைத்தே குழந்தை XY என்று முடிவெடுக்கலாந்தான்.
இப்படியாக பிரசவ அறைகளின் முன்புறம் நிகழ்த்தப்படும் உரையாடல்
போல் ஒரு கவிதைத்தொகுப்பு குறித்துப் பேசிவிடமுடியுமா என்ன?
நமது நிலத்தில் கவிதைகள் குறித்த பேச்சுக்கள் கவிதைகளைவிடவும்
திருகலாகத்தான் இருக்கின்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டியுள்ளது.
"ஆட்கள் வேலை செய்கிறார்கள்" என்று சாலைகளில் வைக்கப்படும்
அறிவிப்புப் பலகைகளைக் கவனித்திருப்பீர்கள். குறுக்கே கட்டப்பட்ட சிவப்பு
நாடாவைத் தாண்டிப் போகிறவர்கள் தோண்டப்பட்டிருக்கும் குழிகளில் விழ
வாய்ப்புண்டு. அந்த அளவில் அந்த அறிவிப்புப் பலகைகளுக்கு அடிப்படை
நேர்மை இருக்கும்.
"ஒலி எழுப்பாதீர்" "மாற்றுப்பாதையில் செல்லவும்" "அபாயகரமான
வளைவு" "வலப்புறம் திருப்புக" என்பன போன்ற விமர்சன வாசகங்கள்
தமிழ்க்கவிதைச் சாலைகளில் பிரம்மாண்டமாக வைக்கப்படுகின்றன. ஆனால்
அதை நம்பி வண்டியை நொடிப்பவர்கள் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் வாகான
பள்ளங்களில் திடுமென விழ நேர்வது தற்செயலானதல்ல.
ஆக இதுபோன்ற ஆற்றுப்படுத்தும் துர்வாசகங்களுக்குத் தப்பித்தான் நாம்
எழுதும்படியாகிறது.தொகுப்புகள் ஜனிக்கும்படியாகிறது.
அந்த வகையில் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்றபடி தப்பித்து
வந்து நிற்கும் கதிர்பாரதியைத் தழுவிக்கொள்ளலாம்தான்.
நினைவு கொப்பளிக்கும் நிலம், காமம் நுரைக்கும் காதல், துயரம் சொட்டும்
பிரிவு, அன்பு பரியும் மனம், தினப்பாடுகளின் கேவல் என பன்முகமாய் விரியும்
கவிதைகளின் வகைமைகள் தொகுப்பிற்கு பலம் சேர்க்கின்றன.
கம்பிப்பதத்தில் சர்க்கரைப்பாகு தேவைப்படும் சில பதார்த்தங்களை நீங்கள்
அறிவீர்கள்தானே. பதம் தவறினால் செய்கிற பதார்த்தம் சோபிக்காது. இந்தக்
கம்பிப்பதம் கவிதையின் புழங்குமொழிக்கும் பொருந்தியே வருகிறது.
மண்டை வெல்லத்தை அசிரத்தையாகத் தட்டிப் போட்டாலும்
ஒத்துக்கொள்ளும் உரைநடையின் பெருந்தன்மை இந்தக்கவிதைகளுக்கு
ஒருபோதும் வருவதில்லை. இதைக் கதிர்பாரதி புரிந்து வைத்திருக்கிறார்.
கவிதை கோரும் மொழியின் கம்பிப்பதம் கதிர்பாரதிக்கு
கைகூடியிருக்கிறது.
வார்த்தைகளின் நிலைப்படங்கள் உறைந்த பிலிம் சுருள் வா¢கள்
வாசிக்கப்படுகையில் உறைந்தவை உயிர்த்தெழ சலனப்படமாகி காட்சிகளை
விரிக்கப் பண்ணும் தொழில்நுட்பம் கவிதைகளுக்கு அவசியம்தான்.
காட்சிப்படுத்தும் அத்தொழில்நுட்பம் கதிர்பாரதிக்கு வாய்த்திருக்கிறது.
“உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப
நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று”
- என்ற காட்சியும்
விதைப்புக் கால வரப்பில் விழுந்திட்ட நெல்மணிகளை
கா¢ச்சான்கள் கொத்திப் போவதென
நிகழ்ந்தப் பிரிவைக் கொட்டி
உப்புச் செடிகள் இரண்டை வளர்க்கிறேன் கண்களில்
- என்கிற காட்சியும் அதை உறுதி செய்கின்றன.
அங்கதத்தைக் கவிதையாக்குவது உள்ளபடியே சவாலானது.
"கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள்
ஊதா நிறத்தில்தான் இருந்தனவாம்"
-என்ற் ஆரம்பிக்கும் வா¢கள்
கேரட்கள் இளஞ்சிவப்பு நிறம் கொண்டதும்
இப்படி அரசல்புரசலாகத்தான் என்றால்
நம்பவா போகிறீர்கள்"
- என்ற இடத்தில் கவிதையின் நிறத்தைப்பூசிக்கொள்கின்றன.
பரோட்டாவால் கைவிடப்பட்ட கவிஞனை கேரட் காப்பாற்றிவிடுகிறது.
"வெயிலுக்குப் பொறுக்குத்தட்டிய விளைநிலத்தில்"
"கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது"
- என்று விட்டு வந்த நிலத்தின் நினைவுகள்
உடைப்பெடுக்கும் கவிதை வா¢கள் தொகுப்பு முழுக்க விரவிக்கிடக்கின்றன.
ஓர் இடதுசாரி இயக்க செட்டைகளின் கீழ்நின்று சின்னச்சின்னக்
களப்பணிகளில் தோய்ந்திருந்த காலத்தில் ஒரு சம்பவம்.அந்த ஊரின்
நுழைவாயிலில் சாலையின் மருங்கே தேமே என்று நின்றுகொண்டிருந்த
மின்கம்பங்களின் தலையில் ஒளிவிளக்குகள் முளைப்பதற்காகப் போராட்டத்தைத்
துவக்கினோம்.
ஒருவாறு விளக்குகள் ஒளிர்ந்தன. எங்கள் பின்மண்டையைச் சுற்றி
போராட்ட ஒளிவட்டம் தெரிவதாக சிலர் தட்டேத்திக்கொண்டிருக்க நாங்களும்
நம்பத்துவங்கியிருந்தோம்.
ஓரிரண்டு நாட்கள் தான். விளக்குகள் எரியவில்லை. யாரோ
உடைத்திருந்தார்கள். முச்சந்தியில் நின்று கொண்டு அரசியல் எதிரிகளை
நோக்கி எச்சா¢க்கை வாக்கியங்களை விசிறியடித்தோம். பிற்பாடு மனந்தளராத
விக்கிரமாதித்தன் களாய் கம்பமேறி புது பல்புகளை மாட்டிவிட்டு இறங்கினோம்.
மீண்டும் அதே கதிதான். கடுப்பானோம். கண்டுபிடிக்க உளவுத்துறையை
முடுக்கிவிட்டோம்.
எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதை எமது ஊரின்
பெண்கள்தான் உடைத்திருக்கிறார்கள். அவர்கள் உடைத்தது குழல் விளக்கை
மாத்திரம் அல்ல. பெண்களின் பிரச்சனைப்பாடுகளில் "குழல் விளக்கென"
இருந்த எங்கள் மனதையும், ஆண்மனதுடன் இயங்கும் இயக்கங்களையும் தான்.
எங்கள் செவிட்டில் அறைந்த இந்த உண்மை சு¡£ரென்றது.
கழிவறை வசதியற்ற எங்கள் கிராமத்தில் பகலைச் சபித்தபடி சூரியன்
தொலையும் வரை தாளா அவஸ்தையுடன் நகரா நிமிடங்களை நகர்த்தியபடி
இருந்திருக்கிறார்கள் பெண்கள். வெளிச்சக் குறைவைக் கோரும் அந்த
இடத்தில்தான் நாங்கள் போராடி வெளிச்சங்காட்டியிருக்கிறோம்.
பெண்களின் பாடுகள் வேறாகத்தான் இருக்கின்றன, ஆண்களின்
கண்கள் கொண்டு புரிந்து கொள்ளவியலாதபடிக்கு.
இதையே கதிர்பாரதியின் ஒரு கவிதை ருசுப்படுத்துகிறது.
"முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மித வேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளைத்
தாலாட்டி தாலாட்டி"
தூரத்தில் ஒரு குழந்தை பசித்திருக்க பயண வழியில் பால்
கட்டிக்கொண்டு அவஸ்தையுறும் முலைகளின் மீது 'ஏக்கம்' என்ற சொல்லை
வீசுவதும், ரயில் தாலாட்டுவதாக "ரொமாண்டிசைஸ்" பண்ணுவதும் ஆணின்
பார்வைதான்.
சுரக்கவியலா மார்புகளுடன் சபிக்கப்பட்ட ஆண்களுக்கு பெண்களின்
வலிகளை உணர வாய்ப்புகளேதுமில்லைதான். இக்கவிதையைக்
குறிப்பிடுவதற்கு வேறு காரணமும் இருக்கிறது. தற்போது பெண்குரலில் பேச
முயற்சிக்கும் ஆண் கவிதைமொழியில் பாசாங்கின் துர்நிழல் படிவதைப்
பார்த்தபடிதான் இருக்கிறோம்.
கவிதை எப்போதும் உண்மையின் திசையில் இயல்பின் வருகையை
எதிர்பார்த்தபடிதான் காத்துக்கொண்டேயிருக்கிறது.
அந்த வகையில் ஆண்களைப் பெண்கள் முன்பு அம்பலப்படுத்தும்
கவிதையின் பணிக்கு இடையூறு செய்யாதிருப்பதே நேர்மைதான்.
கதிர்பாரதியின் பாசாங்கற்ற பேச்சு இந்த நேர்மைக்கு மிக அருகில் இருப்பது
ஆரோக்கியமானதென்றே கருதுகிறேன்.
ஏனெனில் அவர்தாம் வேறு ஒரு இடத்தில் பசப்புகளுக்கும், பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலம் குறித்த தனது ஒவ்வாமையைப் பதிவு செய்திருக்கிறார்.
“தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன் இழுத்துப் போகிற
சிலுவை மரத்தின் அடி நுனியின் தேய்மானத்திலிருந்து
கசிந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் போல
எம்மீதான கிருபை”.
- என்ற வா¢களினூடாக முள் முடியும் கசையடியுமாக சிலுவை
சுமக்கும் வலியார்ந்த சித்திரமொன்றின் ஒட்டுமொத்த வேதனையையும்,
கருணையையும் "இழுபடும் சிலுவை மர அடிநுனித் தேய்மானத்தில் " கசியக்
காண்பது இளக்கமான கவிமனத்தின் அரிய கூறு.
தொகுப்பை மூடி வைத்த பின்பும் பசுவின் முதுகில் பவனி வரும்
கொண்டலாத்தியின் குகுகுகுப்பு அகல மறுக்கிறது.
"ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய் நிலம்"
- என்ற வா¢கள் உப்பி மேலெழும்பும் கமலையாகி காமம் நுரைக்கும்
காதலை இறைந்தபடியேயிருக்கிறது.
"மகன்களும் மகன்களின் நிமித்தமும்" என்ற தலைப்பிலான கவிதைகளில்
தந்தைமை குறித்த பெருமிதத்தைக் கழித்து விட்டு வாசிப்போர் குழந்தைகளின்
புதிரும் விளையாட்டும் குதூகலமும் ஒவ்வாமையும் புனைவும் நிறைந்த
அகஉலகை விரிக்கும் சித்திரங்களைக் காணவியலும்.
மாடுமுட்டி விட்டதாகச் சொல்லும் குழந்தையின் தழுதழுப்பிற்கு குற்ற
உணர்ச்சியில் கொம்பு முளை விடும் குதிரை பொம்மை கவிதை
குறிப்பிடத்தக்கது.
குழந்தை வைத்த கொலுவில்...
"ஆசிரியர் பொம்மைக்குப் பாராமுகமாக நிற்பது
கபிலன் யுகேஜி யாகத்தான் இருக்க வேண்டும்"
-என்ற வா¢களில் நம் வாசிப்பு நங்கூரமிடுகிறது.
குழந்தைகளின் மொழியில் விரியும் ஆகச்சிறந்த ஒரு புனைவு
"நான் ஹோம் ஒர்க் செய்யணும்
அவ்ளோ தான் கதை"
- என்ற துர் சொற்களில் அறுந்து தொங்குவது தான் துயரம்.
“அவ்ளோ தான் கதை" என்கிற குழந்தைமை மீதான படுகொலைக்கு
நாமும் நமது கல்வி முறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கடவுள் - சாத்தான் எதிர்வைப் பற்றிக் கொண்டிருக்கும் சில கவிதைகளும்
எழுத்துக்களை ஒன்றன் கீழ் ஒன்றாய் எழுதிப் பரவசங்கொள்ளும் சில
கவிதைகளும் ஏற்கனவே நாம் பேசிய "ராக்கிங்" கால பாதிப்புகளைக்
கொண்டிருக்கின்றன.
"ஒரு காட்சி - புனைவு - அங்கதம்" என்று மூன்றையும் பக்குவமாக சேர்த்து
விழுதாக அரைத்து நமக்குத் தரப்படும் சிட்டுக்குருவி லேகியத்திற்காக
கதிர்பாரதிக்கு முத்தங்கள்.
"என் தேவனே என் தேவனே" என்று முடியும் தொகுப்பின் இறுதிக்
கவிதையில் கதிர்பாரதி கசாப்புக்காரனின் வாகனத்தில் கிடந்து கதறும் ஒரு
மறிக்காக விசனங்கொள்கிறார். தொகுப்போ "மீன் குழம்பின் ருசிக்கு" சமர்ப்பணம்
செய்யப்பட்டிருக்கிறது. நிலத்தில் ஊற்றுப் பா¢யும் கதிரின் அன்பு ஏன் நீரில்
வற்றிப் போகிறது என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாதுதான். ஏனெனில் அது
சின்மயியின் கேள்வியாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
நமக்கு நாமே முரண்பட்டுக் கொள்வதுதான் அழகு. அது அன்பின்
நிமித்தமெனில் பேரழகு தான் கதிர்.
பள்ளி மாற்றுச்சான்றிதழில் அங்க அடையாளம் என்று அச்சிடப்பட்டு
அதன் எதிரில் இரண்டு கோடுகள் நீண்டிருக்கும். ஒன்றில் குழந்தைகளது
மச்சத்தையும் ஒன்றில் அவர்களது தழும்பையும் கொண்டு நிரப்புவது வாடிக்கை.
சொன்னால் நம்பமாட்டீர்கள் இப்போது அந்த இரண்டு கோடுகளிலும் மச்சங்களே
ஏறி அமர்ந்து கொள்கின்றன. அடையாளத்திற்குக் கூட தழும்புகளற்ற
குழந்தைகள் பெருகி வருவது பதற்றமூட்டுவதாய் இருக்கிறது.
கதிர்பாரதி தனது முதல் தொகுப்பினூடாக ஒன்றுக்கு மூன்றாய்
மச்சங்காட்டி நிற்கிறார். குறித்துக் கொள்ள தழும்புகளைக் கோரி நிரப்பப்படாது
நீண்டு கிடக்கிறது ஒரு கோடு.
"இடதுசாரிக் கொள்கைப் பற்றும் விவசாய வாழ்வுப் பின்ன்ணியும் கொண்டவர்"
என்பதாக அறிமுகம் செய்து வைக்கப்படும் கதிருக்கு வலிகளும் தழும்புகளும்
இல்லாது போகுமா என்ன?
எறும்புகளால் இழுத்துச் செல்லப்படும் ஒரு வண்ணத்தியின் இறகுகளில்
உறையும் நான்கு கண்கள் வழியே வெளியேற ஆயாவின் உயிர்
முடிவெடுத்துவிட்டதாக வலியைக் கவிதையாக்குகிறார் கதிர். அவரால் இந்த
போகத்திற்கு முற்றாக உலர்ந்துபோன நம்பிக்கையின் புட்டியில் பூச்சிமருந்தை
நிரப்பியவனின் உயிர், வராத நீருக்காய் பயிர்கள் கருகும் நிலத்து வெடிப்புகளின்
வழியே வெளியேறிக்கொண்டிருக்கும் துயரையும் காட்சிப்படுத்தமுடியும்.
கோடிட்ட இடத்தை நிரப்புவீர்கள்தானே கதிர்.
உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
No comments:
Post a Comment