15 April, 2013

காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித் தீர்க்கிறது கதிர்பாரதி பேனா. - வா.மு.கோ.மு

இயல்பாகவே கவிதை தொகுப்புகளை நான் வருடத்தில் மூன்று மட்டுமே படிக்கும்
வழக்கம் கொண்டவன். படிக்கத்துவங்கிய காலத்தில் கவிதை தொகுப்பு தவிர
எதுவும் படிக்க மாட்டேன். எல்லாம் காலத்தின் கோலம் எனலாம். இவ்வருட
துவக்கத்தில் வே.பாபுவின் “மதுக்குவளை மலர்” படித்து கவிதைகளின் உச்சபட்ச
சாத்தியக்கூறுகளைக் கண்டு அதிசயித்துப் போனேன். அதன் பிரமிப்பிலிருந்து
விடுபடாமல் நான் இருக்கையில் கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுதி கைக்கு
வந்து விட்டது. கவிதைகளை படிக்கத் துவங்குவதற்கு தனித்த வாசிப்பு
மனநிலைக்கு தயாராக வேண்டியது அவசியமாகிறது. மனநிலை ஒத்துவராத சமயத்தில்
வலுக்கட்டாயமாகப் படித்தால் கவிதைகள் வெறும் வார்த்தைகளாகவே பதியும்.
நிர்பந்தத்தின் பேரில் படித்தாலும் கவிதைகள் நமக்கு காட்டும்
பாதைகளுக்குள் நாம் செல்லவே முடியாது.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்.. தொகுதிக்குள் நுழைந்த போது முதல்
நான்கைந்து கவிதைகளை வாசித்ததும் இவ்வளவு இறுக்கங்களை சாதாரண வாசகன்
உணர்ந்து ரசிக்க இயலுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதற்கும் எனக்கு
வழி இருக்கிறது என்று கடைசிக் கவிதையிலிருந்து பின்புறத்தில் இருந்து
வந்தேன்.அவைகள் என் கைப்பிடித்து எளிமையாக முன்புறம் நோக்கி கூட்டி
வந்தன.
மதுக்கூடத்தில் கொண்டாட்டத்திற்கு நுழைந்த கவிஞன் கடைசி
மிடறுக்குப் பிறகு விசும்பத் துவங்குகிறான்...காதலியால் உதாசீனப்படுத்தப்
பட்டவன் விடுதியில் தங்கி அவளின் நினைவலைகளை அழிக்க முயன்று தடுமாறித்
தவிக்கிறான்...
இறப்பை நோக்கியே நகரும் கவிதைகள் காதலின் வலிகளை கசப்பாய்
விசிறியடிக்கின்றன...
கவிஞனாய் இருந்துவிட்ட கவிஞன் லெளகீக வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க
தடுமாறுகிறான். வாழ்வை கவிதையாய் வாழ முயற்சிக்கும் அவன் சுவரொட்டி மீது
மூத்திரம் பெய்து தன் கோபத்தை வெளிக்காட்டுகிறான்..அதுவும் நடு
இரவில்..கூடவே அவனுக்கு தன் பெயரை சுமந்து கொண்டு திரிவது கூட கனமாய்
இருக்கிறது.
காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித்
தீர்க்கிறது இவரது பேனா. இவர் நமக்கு காட்டும் கடவுள் கூட சாத்தானாகும்
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்.
தலைப்புக் கவிதையும், மகன்களும் மகன்களின் நிமித்தமும் இரண்டையும்
சிறுகதை வடிவில் வாசித்து மகிழ்ந்தேன்.
முதல் தொகுதி வந்த பிறகு சிலவற்றை கழித்திருக்கலாம் என்று கதிர்பாரதிக்கே
தோன்றி இருக்கலாம்..அவைகள் என் கண்களுக்கும் தட்டுப்பட்டன. ஒரு கவிதை
தொகுதி பாராட்டப் படுவதற்கு அனைத்து கவிதைகளுமே சிறப்பானவைகளாக இருக்க
வேண்டிய அவசியம் எதுவுமில்லை.


- வா.மு.கோமு

No comments: