16 December, 2009

காக்கைகள்

கறுப்பும் சாம்பலும் முயங்கிப் பெற்ற
வண்ணத்திலிருக்கும் காக்கைகளை
ஒற்றுமையின் படிமமென
ஒத்துக்கொள்ள மறுதளிப்பான் சின்னதுரை

இரைக்கு அடித்துக்கொள்ளும்
காக்கைகளை முன்னிறுத்தி
உழைக்காது சுற்றி வரும் காக்கைகள்
இருக்கவே செய்கின்றன ஊர்ப்புறத்தே
கண்ணசரும் வேளையில் எத்திப் பிழைக்க

லாபமாயின் காக்கைகள்
தயங்கவே தயங்காது
பிணங்களின் துர்நாற்றத்தையும்
பங்கிட்டுக்கொள்ள

காக்கைகளுக்காய்க் கசிந்துருகும்
குழந்தைகள் அறியக்கடவது
பாட்டியின் சோகம்

வடகம் திருடும் காக்கையைச் சாக்கிட்டு
வசைபெய்யும் சந்திராவால்
பக்கத்து வீடு காயப்படும் முப்போதும்

காக்கைகளைக்கூட மன்னிக்கலாம்
காக்கா பிடித்து காரியம் செய்பவனை
என்ன செய்வது
ம்ம்ம்ம்.... இருக்கின்றனவே
கல்யாண வீடு துஷ்டி வீடு
பேதமறியாது
எச்சிலைக்காகவே
சில காக்கைகள்


No comments: