09 December, 2009

குருதட்சனை

திட்டமோ யதார்த்தமோ அவன் குறுக்கிடுகையில்
இவன் பாதை பதட்டமுறுகிறது
பாதங்கள் நடைகுளறித் தள்ளாட்டமிடுகின்றன

அவன் பவிசும் நயமும்
இவன் தன்னியல்பைக் குழைத்து
இருப்பை கேள்விக்குறியில் தொங்கவிடுகின்றன
நார்நாராய்க் கிழித்து

அவன் பூடகமௌனம்கொண்டு கல்லெறிகிறான்
காயம்பட்ட இவனின் வார்த்தைகள் துவள்கின்றன
இரத்தத்தாலும் நிணத்தாலும்

அவன் அருள்வாக்கு
இவன் கடவுளின் மென்னியைப் பற்றி நசுக்குகிறது

தலையைத் தடவி மூளையை உறிஞ்சும்
அவன் லாகவத்திடமிருந்து
வேர்களையாவது காப்பாற்றிக்கொள்ள முடியுமா...
வியர்க்கிறான் இவன்

அவன் பிரயோகிக்கும் கழிவிரக்கத்தாலும்
போலிகரிசனத்தாலும் துர்நாற்றமுறும்
இவன் நாட்களை அவனுக்குத் தெரியாமல்தான்
அகற்றியாகவேண்டும் இவன்

அதுவரைக்கும்
இவன் பட்டாம்பூச்சியின் சிறகுகள்
அவன் கண்களைச் சந்திக்காதிருக்க
வேண்டும்

No comments: