15 May, 2014

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!
கதிர்பாரதி, ஓவியங்கள்: ரவி
ழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்ணாடிப் பேழையைப் போன்றவர்கள். அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும்’ என்பார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் சில 'கண்ணாடிப் பேழை’களைப் பற்றி...
வண்ணதாசன்
விதைகளில் கல்யாண்ஜி, சிறுகதைகளில் வண்ணதாசனாக இலக்கிய முகம் காட்டும் சி.கல்யாணசுந்தரம், ஓர் ஓவியரும்கூட. 'தமிழ்நாட்டில் ஓவியர் கோபுலு, கேரளாவில் நம்பூதிரி, ஆந்திரப்ரபா பாபு... இவர்களுடைய ஓவியங்கள் எனக்கு விருப்பமானவை. நான் தொலைந்துபோக விரும்பும் காடாக இவர்களது கோடுகள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் என் கட்டைவிரலை தட்சணையாகத் தரவும் சம்மதம்’ என்பார் வண்ணதாசன்.
''பனிக்குடத்தில் இருந்து சிசு வெளியே வருவதை, ஒரு பசு கன்று ஈனுவதை, முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஒரு பறவைக் குஞ்சு உலகை ஸ்பரிசிப்பதை... ஒவ்வோர் ஆணும் பார்க்க வேண்டும். நான், பசு கன்றை ஈனும்போது, கன்று தரையில் விழுவதற்கு முன்பாக கைகளில் ஏந்தியிருக்கிறேன். அந்த நேரத்தில் என் கைகளில் படிந்த உயிரின் பிசுபிசுப்பு இன்னும் என் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டு வருகிறது'' என்கிற வண்ணதாசன், தான் நடந்து செல்கிற பாதையில் இறகுகள் உதிர்ந்துகிடந்தால், பொறுக்கி எடுத்துக்கொள்வாராம். காரணம், ''பறவைகளை வளர்ப்பதைப் போல, நான் இறகுகளை வளர்ப்பதாக நினைத்துக்கொள்வேன். தவிரவும், உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!'' என்கிறார். சமீபத்தில் சரஸ்வதி பூஜையின்போது வண்ணதாசன் மஞ்சள் தூளைப் பிசைந்து செய்த அம்மனைத்தான் அவரது இல்லத்தில் வழிபட்டிருக்கிறார்கள்!
தியடோர் பாஸ்கரன்
போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன். ''என் முக்கிய பொழுதுபோக்கே புகைப்படம் எடுப்பதுதான். குஜராத்தில் இருந்தபோது 'இந்திய மாடுகள்’ என்ற கான்செப்ட்டில் புகைப்படங்கள் எடுக்க ராஜ்கோட்டுக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றேன். அங்கே கிர் இன மாடு ஒன்று கிட்டத்தட்ட குட்டி யானை அளவுக்கு நின்றிருந்தது. அந்த மாட்டைப் பராமரிக்கும் பெரியவருக்கு 72 வயது. எனக்கு மலைப்பாக இருந்தது. அந்த மாட்டைக் கட்டிக் காப்பாற்றி வந்த பெரியவருக்கு செய்யும் மரியாதையாக, நான் அவரைப் போலவே திருகிவிட்ட கூர் மீசை வைத்துக் கொண்டேன். அதுவே பின்பு என் அடையாளமாக மாறிவிட்டது. அன்றைக்கு நான் எடுத்த அந்த கிர் மாடு புகைப்படம், 1999-ம் ஆண்டு அஞ்சல்தலையாக வெளிவந்தது!'' என்கிற தியடோருக்குப் பிடித்த பறவை... ஆந்தை. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகில் ஐந்து ஆந்தைகள் குடிவந்த பூரிப்பில் திளைக்கிறார் தியடோர்!
நாஞ்சில் நாடன்
மிழ் நவீன இலக்கிய உலகத்தில் மரபு தோய்ந்த குரல் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடையது.
'' 'உச்சத்தைத் தொடணும்னா உச்சத்தில் இருந்து ஆரம்பிக்கணும்’னு ஒரு ஜென் தத்துவம் இருக்கு. இதுதான் என்னை இயக்கும் மந்திரம்.'' என்கிற நாஞ்சில் நாடன், முன்பெல்லாம் வருடத்துக்குஅதிகபட்சம் மூன்று சிறுகதைகள்தான் எழுதுவாராம். பணி ஓய்வுபெற்ற பிறகு ஐந்து ஆறு என்று எண்ணிக்கை கூடியிருக்கிறது. கம்பன் பயன்படுத்திய சொற்களின் அழகு, ஆழம், வீச்சு... ஆகியவற்றை ஆராய்ந்து இவர் எழுதிய 'கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற புத்தகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் புதிது.
அந்தாதி, உலா, தூது இலக்கியம், பிள்ளைத்தமிழ்.. போன்ற சிற்றிலக்கிய வகை இலக்கியங்களை ஆராய்ந்து 'சிற்றிலக்கியம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். ''நாஞ்சில் நாட்டு உணவு’ என்ற புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இது நாஞ்சில் நாட்டுப் பண்பாட்டின் இயங்குதளம் குறித்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்படும் புத்தகம். ''காலம் அனுமதித்தால் இன்னும் ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் என் இப்போதைய ஆசை'' எனும் நாஞ்சில் நாடன், தன் அத்தனை படைப்புகளையும் கையால்தான் எழுதுகிறார். எழுதும்போது பின்னணியில் அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமண்யன், உன்னி மேனன், டி.எம்.கிருஷ்ணா பாடல்கள் கட்டாயம் ஒலிக்கும்!
கலாப்ரியா
விஞர் கலாப்ரியா, 40 ஆண்டுகளுக்கு முன் தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்களைச் சந்தித்து பால்யகால நினைவுகளுக்குள் 'தொபுக்கடீர்’ என நீச்சலடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த அனுபவம் கலாப்ரியாவின் வார்த்தைகளிலேயே...
''காலம் பிரித்துப்போட்டவர்களை, சிவசைலம் 'அவ்வை ஆசிரமம்’ வளாகத்தில் குடும்பத்துடன் ஒன்று சேர்த்திருந்தான் தெய்வநாயகம். 'துலாபாரம்’ மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் அருகில் கை சூப்பியபடி அழுத 'சொக்கு’ என்கிற சண்முகத்தை 45 வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் எனக்கு கண்ணீர் மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது. ஒரே தெருக்காரன். ஆனால், பார்த்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.  
'இது கீதா. செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியை. என் மருமகள்; உன் கவிதைகளின் பரம ரசிகை’ என்று எனக்கு வெட்கம் வரும்படி அறிமுகப்படுத்திய வெ.ராமச்சந்திரன் முகம் பார்த்து, அரை நூற்றாண்டு நெருங்குகிறது. கடினமான கணக்குகளை சரசரவென்று போடும் 'தங்க மெடல்’ பழனியாண்டி, சுந்தரனார் பல்கலையின் இயற்பியல் பேராசியர் என்றெல்லாம் செய்தி வரும். பார்த்து
40 வருடங்கள் ஆகிவிட்டன. முருகானந்தமும் நானும் ஒரே சாப்பாடு, ஒரே ரசனை, அவ்வப்போது ஒரே சரக்கு, ஒரே ஊறுகாய்... என நகமும் சதையுமாகப் பல காலம் பழகினவர்கள்தான். என்றாலும் பார்த்து பத்து வருடங்களாவது இருக்கும். ஆசிரமக் குழந்தைகள் வழங்கிய கலை விருந்தில் ஜனனி என்கிற குட்டிக் குழந்தை அழகாக ஆடியது. தெய்வு, என்னையும் என் துணைவியையும், அந்தக்  குழந்தைக்குப் பரிசு கொடுக்கும்படி சொன்னான். பிஞ்சுக் கரத்தால் அந்தச் சிறிய சாப்பாட்டுத் தட்டைக்கூட தாங்கிப் பிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் வாழ்க்கைச் சுமையைக் கேட்டபோது தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜனனியின் அப்பா, அவள் அம்மாவைக் கொலை செய்துவிட்டுத் தானும் செத்துப்போய்விட்டானாம். என்ன ஜனனமோ, என்ன மரணமோ. திரும்பும்போது மனம் கனமாக இருந்தது... சில மலையாளக் கதைகள்போல!''

எஸ்.ராமகிருஷ்ணன்
ழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பச்சை நிற சட்டை, அதிலும் கட்டம் போட்ட சட்டைகள் அணிவ தென்றால் ரொம்ப இஷ்டம். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கும் மிகப் பழமையான மரத்தைத் தேடிப் போய் பார்த்துவிடுவார். செய்யவேண்டிய எழுத்துப் பணிகள், பயண விவரம் போன்றவை முறையாகப் பட்டியல் இடப்பட்டு, எழுதும் மேஜையின் முன்பு இருக்கும். அந்தப் பட்டியல் வாரம் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
சென்னை உதயம் தியேட்டர் அருகில் உள்ள கோகுலம் பார்க் உணவகம், இவருக்கு விருப்பமானது. கோவில்பட்டியில் இருந்து லூதியானா வரை தீப்பெட்டி பண்டல் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்தது இவரால் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று. பொரிகடலை பொடித்துப்போட்ட வதக்கிய வெங்காயம் கொண்டு இவர் செய்யும் சமையல், குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாம். மாலை கே.கே.நகர் சிவன் பார்க்கில் நடைபயிற்சியும், காலை வீட்டின் முன்புறத்தில் ஷட்டில்காக் ஆடுவதும் வழக்கம். இவருடைய ஷட்டில்காக் தோழர்... இயக்குநர் சசி!
தேவதச்சன்
வீன தமிழ்க் கவிஞர்களில் ஒரு தலைமுறை கவிஞர்களைப் பாதித்தவர் கவிஞர் தேவதச்சன். இவர் தமிழ் சினிமா குத்துப் பாடல்களுக்குப் பரம ரசிகர் என்பது நிச்சயம் ஆச்சர்யம்! ''குறிப்பா 'பரமசிவன்’ படத்துல வர்ற 'ஆச தோச அப்பளம் வடை’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையையும் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையையும் உளவியலாளர்கள் 'அனிமா’னு சொல்றாங்க. அப்படி ஒவ்வொரு மனித மனசும் 'அனிமா’வால் ஆனது. அந்த அனிமாதான் என்னை குத்துப்பாட்டை ரசிக்கவெக்குது. இன்னும் சொல்லப்போனா, 21-ம் நூற்றாண்டின் நெருக்கடியை குத்துப் பாடல்களின் ஒவ்வொரு வரி முடிவிலும் என்னால் உணர முடியுது!'' என்கிறார் தேவதச்சன்.
கோவில்பட்டியில் இருக்கும் இவரது நகைக் கடையில்தான் எப்போதும் இருப்பார். நண்பர்களோடு பேச வேண்டுமென்றால், காந்தி மைதானத்துக்கு வந்துவிடுகிறார். ''இடம் விஸ்தாரமா இருந்தா, பேச நல்லாருக்கு'' என்கிற தேவதச்சனின் அடுத்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு... 'எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது’  

விக்ரமாதித்யன்
ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில் மகாகெட்டிக்காரர் கவிஞர் விக்ரமாதித்யன். தமிழகம் முழுக்கவுள்ள பாடல்பெற்ற தலங்கள் அனைத்தையும் தரிசித்துவிட்ட விக்ரமாதித்யனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறை, திருவீழிமிழலை... இரண்டு ஊர் கோயில்களும் மிகவும் பிடித்தமானவை. இவரது வாசகர் மதுரை எஸ்.செந்தில்குமார் வாங்கிக் கொடுத்த சேர் டேபிளில் உட்கார்ந்துதான் பெரும்பாலும் எழுதுகிறார். அதற்கு முன்பு சூட்கேஸ் பெட்டியை மடியில் வைத்து எழுதிக்கொண்டிருந்தாராம். ''என் கவிதை வாசகர் சரவணக்குமார் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்துபோனது என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. எனது இரண்டாவது காசி பயணத்துக்குப் பெரும் உதவி செய்தவர் சரவணன். என் கவிதைகளின் நுட்பமான வாசகனை நான் இழந்துவிட்டேன்'' என்று வருத்தப்படுகிறார்!
கி.ராஜநாராயணன்
ட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இயல்பாகவே கி.ரா., சாப்பாட்டுப் பிரியர். 'சாப்பிடுறது ரெண்டு இட்லி. ஆனா, மூணு சட்னி வேணும் இவர் நாக்குக்கு’ என்று மனைவி கணவதி அம்மாள் இவரைக் கிண்டலடிப்பார். 'எழுத்தாளர் ஆகவில்லையென்றால், மிகப் பெரிய இசைக் கலைஞராக வந்திருக்கக்கூடியவர்’ என்கிறார் இவரைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும் எழுத்தாளர் கழனியூரன். ’ஒரு கதை கொடுங்க...’ என்று கேட்டால் கி.ரா-விடம் இருந்துவரும் முதல் பதில் 'இல்லை... முடியாது’ என்பதுதான். ஆனால், எழுத வேண்டும் என்று மனசு வைத்துவிட்டால், தகவல்கள் சரம்சரமாகக் கொட்டும். ஒரு கதையை மூன்று முறையாவது திருத்தி எழுதிவிட்டுத்தான் பத்திரிகைகளுக்குக் கொடுப்பார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கி.ரா., 'வலியோடு வாழ்வது எப்படி என்பதற்கு நாந்தான் உதாரணம்’ என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பார். டி.கே.சி. ரசிகமணியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வாரம் முன்பே தென்காசிக்குப் போய்விடுவார். விழா முடிந்தும் ஒரு வாரம் தங்கி இருப்பாராம். அந்த இரண்டு வாரங்களும் பேச்சு... பேச்சு... பேச்சு... என இலக்கியக் கச்சேரிதான். 'அந்தப் பேச்சுகளைப் பற்றிய பதிவுகள் எங்கும் இல்லை. அதைத் தொகுத்தால் கி.ரா-வின் நாவலைவிட முக்கிய இலக்கியமாக அவை இருக்கும்’ என்கிறார்கள் நண்பர்கள். வீட்டில் இருக்கும்போது கதர் வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணியும் கி.ரா., இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது மட்டும் பண்ணையார் போல பட்டு வேட்டி சட்டை உடுத்திக்கொள்வார்!
சுகுமாரன்
விஞர் சுகுமாரன் பிறந்தது கோவையில்; வாழ்வது திருவனந்தபுரத்தில். 12 வயது வரை படித்தது ஊட்டி வெலிங்டனில். வெளிவர இருக்கும் முதல் நாவலுக்கு 'வெலிங்டன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார். இந்தி மொழி கற்கும் ஆர்வத்துடன் இந்தி வகுப்பில் சேர்ந்தாராம். அங்கு இவருடன் படித்த ஓர் அழகியப் பெண் திடீரென வகுப்புக்கு வராமல் போகவே, இவரும் நின்றுவிட்டார். 'என் கையெழுத்து அழகாக இருக்கும். நான் இந்தி எழுத்துகளை அழகாக எழுதுவேன். அவளுக்கு நன்றாக இந்தி உச்சரிக்க வரும். அவள் இந்தி வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். 'இவனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?’ என்று அந்த இந்திக்கே பொறுக்கவில்லைபோல... அவள் வகுப்பிலிருந்து நின்றுவிட்டாள். நானும் இந்தி கற்பதை நிறுத்திவிட்டேன்’ என்று நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பார். பிறகு, வைக்கம் முகமது பஷீர் எழுத்துகளைப் படிப்ப தற்காக மலையாளம் கற்றுக்கொண்டார். சுகுமாரன் நன் றாகச் சமைப்பார். வெண் பொங்கல் ரொம்ப ஸ்பெஷலாம். பெங்களூருவில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் அறிமுகமான இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஃப்ரான்சிஸ்கா மாசியானோ, சுகுமாரன் சமைத்த உப்புமாவைச் சுவைத்த பிறகு, நெருங்கிய நண்பராகிவிட்டாராம். இத்தனைக்கும் சுகுமாரனுக்குப் பிடிக்காத உணவு... உப்புமா!
கோணங்கி
பாரதியாரின் 'புதிய கோணங்கிகள்’ கவிதையில் வருகிற 'கோணங்கி’யை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டவர் எழுத்தாளர் கோணங்கி. சமீபத்தில் தனது 'த’ நாவலை தனுஷ்கோடியில் வைத்து தன்னந்தனியாக வெளியிட்டிருக்கிறார். ஒரு சுருட்டின் மீது மதுவை ஊற்றி அந்தச் சுருட்டைப் பற்றவைத்து கடலுக்குப் படைத்தவர், 'த’ நாவலின் 36பக்கங்களை கடலுக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார்.  
ராமேஸ்வரத்தை சிதைத்த தனுஷ்கோடி புயலில், கடலில் மூழ்கிப்போன ரயிலுக்கு கடைசியாகக் கொடி காட்டிய ரயில்வே ஊழியரின் கைகளைப் பார்க்க வேண்டும் என்று தனுஷ்கோடிக்குச் சென்று அவரைக் கண்டுபிடித்து, அவரது கைகளைத் தடவிப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினாராம் கோணங்கி.  
'தனுஷ்கோடியில் திரிகிற ஒவ்வொரு நாயும் எனக்கும் பழக்கம். எச்சில் ஒழுகுகிற அதன் நாவில் நான் இருக்கிறேன்!’ என்று அடிக்கடி சொல்வார் கோணங்கி.

10 May, 2014

நீர்ப்பாய்ச்சி

திருநெல்வேலி
11.09.2013

பேரன்புத் தோழர் கி.ரா. அவர்களுக்கு
வணக்கம்

மகாகவி பாரதியின் 92 வது நினைவுநாள் அன்று இம்மடலை எழுதுகிறேன். செப்டம்பர் 16, 2013 -ல் தங்களுக்கு வயது 90 நிறைந்து 91 தொடங்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமிதமும் அடைகிறேன். தங்களுக்கும் தங்களை கண்ணின் மணிபோல பேணிப் பாதுகாத்துவரும் தங்கள் அருமைத் துணைவியாருக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் அன்புசால் வணக்கம்; நெஞ்சம் நிறை நல்வாழ்த்துகள். தாங்கள் மென்மேலும் சீரிய உடல்நலமும் உளநலமும் பெற்று தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தனித்தன்மையுடன் உயிரூட்டவும் ஒளியூட்டவும் அற்புதமான படைப்புகளைத் தருவீர்களாக. தங்கள் படைப்பாற்றல் மென்மேலும் வளர்க வெல்க. தமிழகம் சிற்ப்புறுக!
குமுதத்தில் தங்கள் கட்டுரைத் தொடரை சில வாரங்கள் மட்டுமே படித்தேன். மகாகவி லட்சியப் பாதையில் நாம் செல்வோம். உங்களிடம் இன்னும் உயர்தரமான வளமான கருத்தாழமிக்க வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை எதிர்பார்ப்பர் என்பதில் எனக்கு ஐயமில்லை. 24 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தங்கள் புதுவை வாழ்க்கையை மண்வாசனையுடன் மனிதநேயத்துடன் தாங்கள் தமிழுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்பதே இந்த 89 வயது தோழன் தங்களுக்கு வைக்கும் பணிவான வேண்டுகோள். ஆவணம் செய்க!

இன்றும் தமிழுடன் 
தி.க.சி.

-இதுதான்  தேங்காய்க் கடை சிவசங்கரம் பிள்ளையோட பேரன் தி.க.சி-யிடம் இருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். ஏன் தேங்காய்க்டை சிவசங்கரம்ம் பிள்ளையோட பேரன்னு குறிப்பிட்டுறேன்னு அப்புறம் சொல்றேன். இந்தக் கடிதத்தை, தி.க.சி-யை தாமிரபரணியின் நதிக்கரையில் தகணம் செஞ்சுட்டு வந்த இரண்டாவது நாள் இப்போதான் மறுபடியும் எடுத்துப் பார்க்கிறேன். இந்தக் கடிதத்தோட வார்த்தைகள்ல ஒருவித இறுக்கம் இருக்கிறது இப்போதான் எனக்கு மட்டுப்படுது. தமிழ்ப் பண்டிதர்கள்களோட பேசிட்டு இருந்துட்டு இந்தக் கடிதத்தை எனக்கு எழுதிருப்பார் போல. அதனாலதான் கடிதத்துல பண்டித்தமிழ் சாயல் நிறையவே இருக்கு. என்னமோ சொல்ல வந்திருக்கார். ஆனா, என்னனுதான் எனக்கு மட்டுப்படலை. ஆனாலும் என்ன... எனக்கும் தி.க.சி-க்கும் மட்டுப்படறது மாதிரி எத்தனையோ ஞாபகங்கள் இருக்கே... சம்பவங்களும் நாள்களும் இருக்கே... அதுங்க போதும்னு நினைக்கிறேன். என்னைப் போல திக.சி-யைத் தேடி வந்துபோன மனிதர்கள் இன்னும் இருக்காங்களே... அவங்க போதும்னு நினைக்க்கிறேன். இதுக்கு மேல ஒரு மனிதரைப் பத்தி வேற என்ன நினைச்சுட முடியும். சொல்லிட முடியும். இதுபோல ஆயிரமாயிரம் கடிதங்கள்... ஆயிரமாயிரம் உற்சாசமூட்டுற வேலைகள்னு கடைசிவரைக்கும் இயங்கிட்டே இருந்தார் தி.க.சி. ’’ - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முகத்தில் பாறையைப் போல இறுக்கமான கனத்த மௌனம். ஒரு நீண்ட பெருமூச்சை உள்வாங்கிக்கொண்டவர்  ஈரமும் பாரமுமான வார்த்தைகளில் திகசி நினைவுகளை இறக்கி வைத்தார்...


’’ தி.க.சி-யைப் பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி. அதனால்தான் வேர்கள் எல்லாம் அவரை நோக்கி நீண்டுகிட்டே இருந்துச்சு. இங்க வேர்கள்ங்கிறது ஆரம்பக் கால படைப்பாளிகள் உள்பட என்னையும் சேர்த்துதான் குறிக்குது. அவர் அளவுக்குப் படைப்பாளிகளை அரவணைச்சுக்கிட்டவங்க தமிழ் இலக்கிய உலகத்துல குறைவுணுதான் சொல்லணும். தன் படைப்புகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சிக்கறதுல நிறைய பேருக்கு அலாதியான ஆர்வம். தி.க.சி-யும் சின்னவன் பெரியவன் வயசு வித்தியாசமெல்லாம் பாக்காம எல்லாருக்குமான வார்த்தைகளை வெச்சுருந்தார். எல்லாருக்குமான வார்த்தைகள்னா ஆளுக்குத் தகுந்தார்போல பேசுவார்னு அர்த்தமில்லை. அவ்வளவு அரவணைப்பு. அவ்வளவு ஆதுரம். ஆனா, தான் வரிச்சிக்கிட்ட கொள்கையிலும் விமர்சனத்துலையும் கடைசிவரைக்கும் அத்தனை கறார்த்தனத்தோடதான் இருந்தார். அந்தச் சமயத்துல நாம கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகணும்.

1966 -ம் வருஷத்துல நான் ’பேதை’னு ஒரு கதை எழுதி தாமரை பத்திரிகைக்கு அனுப்பினேன். அப்போ அந்தப் பத்திரிகையோட ஆசிரியர் தி.க.சி. ஒரு பெண் கிடைச்சுட்டா போதும்... அவளை இந்தச் சமூகம் எவ்வளவு கிள்ளுக்கீரைத்தனமா நடத்துதுனு சொன்ன கதை அது. அந்தக் கதையை முடிக்கிறப்ப ’அவள், அவனோட உயிர்த்தலத்தைப் பிடித்தாள்’னு எழுதிருந்தேன். ’’இந்த ’உயிர்த்தலம்’ங்கிற வார்த்தையை எடுத்துடணும். ரொம்ப ஆபாசமா இருக்கு. அந்த வார்த்தையே வரக்கூடாது’’னு தி.க.சி. சொன்னார். ’’இல்லைங்க அந்த வார்த்தைதான் இந்தக் கதைக்கு ரொம்ப முக்கியம். அதுவும் இல்லாம ’உயிர்தலம்’ங்கிற வார்த்தை ஒண்ணும் ஆபாசம் கிடையாது. ஒரு பையன் கீழே விழுந்துட்டான்னா... ’உயிர்த்தல’த்துல எதுவும் அடிப்பட்டிருக்கா பாரு’னு ஊர்ல சாதாராணமாவே பெண்கள் சொல்வாங்க. அதுவும் இல்லாம தொட்டும் பார்ப்பாங்க. இதுல எங்க ஆபாசம் இருக்கு. சாதாரணமா மக்கள்கிட்ட புழங்குற வார்த்தைதானே’’னு நான் கேட்டேன். ’’இல்ல இல்லை... அந்த வார்த்தை ஆபாசம்தான். வேணும்னா என்.டி.வானமாமலை, எஸ்.ஏ.முருகானந்தம், என்.வானமாமலை இவங்ககிட்ட கேட்டுப்பார்ப்போம்’’னு சொன்னார். இதுல எஸ்.ஏ. முருகானந்தம் அப்போ தூத்துக்குடியில் ’சாந்தி’ பத்திரிகையை நடத்திட்டு வந்தவர். என்.டி.வானமாமலை வக்கீலா இருந்தார். என்.வானமாமலை பெரிய படிப்பாளி... இந்த விஷயத்தை தி.க.சி. அவங்ககிட்ட சொல்றதுக்குள்ள நாமளே முந்திக்கணும்னு நானே கதையை எடுத்துக்கிட்டுப் போயி அவங்களைப் பார்த்தேன். கதையைப் படிச்சுப் பார்த்துட்டு , ‘எனக்கு ஆபாசமா ஒண்ணும் தோணலை. ஆனா, அறுவெறுப்பா இருக்கு’னுடார் என்.டி.வானமாமலை. ஆனா, என்.வானமாமலையோ, ’தமிழில் தோன்றிய முதல் பெண்ணியச் சிறுகதை இதுதான்’னு சொன்னார். அடுத்த ரெண்டாவது வாரத்துல அதாவது 1966 ஜூலை மாசம் ’சாந்தி’ பத்திரிகையில ’பேதை’ கதையைப் பிரசுரம் பண்ணிப்பிட்டார் எஸ்.ஏ.முருகானந்தம். அப்போ சென்னையில் இருந்த தி.க.சி-க்கு இது பெரிய திடுக்கிடலாப் போயிடுச்சு. கட்சி, கமிட்டியில்கூட ’இந்தக் கதையை எப்படிப் பிரசுரம் பண்ணலாம்?’னு விவாதத்தை தி.க.சி. கிளப்பினதாக் கேள்விபட்டேன். நானும் அதைப் பத்தி ஒண்ணும் கேட்டுக்கிடலை அவரும் ஒண்ணும் சொல்லலை. ஆனா, எனக்கு அவர் மேல கொஞ்சம் மனத்தாங்கலா போயிடுச்சு. ஆனாலும் அவர் கடைசிவரைக்கும் தன்னோட கருத்துகள்ல கறாரா இருந்தார். கொஞ்ச நாள் கழிச்சு சென்னையிலேர்ந்து நேரா இடைசெவ்வல் கிராமத்துக்கு வந்தார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு ரொம்ப நேரம் பேசினார். ஆனா, இந்தக் கதையைப் பத்தி அது ஏற்படுத்துன மனக்கிலேசங்களைப் பத்தி ரெண்டு பேரும் ஒண்ணும் பேசிக்கிடலை. இதை ஏன் சொல்றேன்னா... இந்தக் கதையை எழுதுல சமயத்துல எங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பலமா சினேகிதம் இருந்துச்சு. ஆனாலும் அவர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காம தன் விமர்சனத்துல காட்டுன கறார்தன்மையில நான் திடுக்கிட்டுத்தான் போனேன்னு சொல்றதுக்காகத்தான்.

’அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி... அவரைத் தேடி வேர்கள் நீளும்’னு ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா... என்னோட வேர் அதாவது நான் எப்படி அவரைத் தேடிப் போனேன்னு சொல்லணும்ல... சொல்றேன். அப்போ நான் எழுதவே ஆரம்பிக்காத காலகட்டம். வசதியான குடும்பங்கிறதால வேலைக்கும் போறதில்லை. ஊர்சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் வேலை. ஆனா ஆளுங்களை நேர்ல போய் பாக்கிறல ஆர்வம் ஜாஸ்தி. பாக்கெட்ல பணத்தை எடுத்து வெச்சுக்கிட்டுக் கிளம்பிடுவேன். திருநவேலிக்கு வந்த நேரா நாங்க போறது கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸுக்குத்தான். அப்போ அண்ணாச்சி சண்முகசுந்தரம்தான் திருநவேலி ஜில்லா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர். சிந்துபூந்துறை முருகேசன்னா எல்லாத்துக்கும் தெரியும். ஏன்னா அப்போ திருநவேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு செயலாளரா இருந்தவரு. பினாடி கம்யூனிஸ்ட் கட்சியில் சேந்தாரு. அவர்கிட்டத்தான் முதன்முதலாக் கேட்டேன்.

’’தி.க.சி. வீட்டுக்கு எப்படிப் போவணும்.’’
’’ஜங்ஷன்லேர்ந்து டவுன் பஸ் புடி. ’சுடலை மாடன் கோயில் தெரு’ன்னு கேட்டு இறங்கு. இறங்கிட்டு ’தேங்காய் கடை சிவசங்கரம் பிள்ளை வீடு எது?’னு கேளு சொல்வாங்க’’னு சொன்னாரு.
இப்போதான் அது ’சுடலை மாடன் தெரு’. அப்போ அது ’சுடலை மாடன் கோயில் தெரு’. மனுஷங்க பேரை மாத்திக்கிடறது போல தெருவும் காலபோக்குல பேரை மாத்திக்கிடும் போல. அப்பறம் ஒரு விஷயம். நான் தி.க.சி-யைத் தேடி அவர் வீட்டுக்குப் போவும் அவங்க தாத்தா சிவசங்கரம் பிள்ளை தேங்காய் யாவரம் பண்ணலை. அதனால என்ன... அப்பவும் அவர் அங்கனகுள்ள இருக்கிற மனுச மக்களுக்கு தேங்காய்கடை சிவசங்கரம் பிள்ளைதான். அப்படியான காலகட்டம். நான் தி.க.சி-யைப் பாக்கப் போனப்போ அவர் ’தான்கோஸ் பேங்க்’ல உத்தியோகத்துல இருந்தாரு.
நேரா வீட்டுக்குப் போனேன். நல்லா பெரிய வீடு. நாலு குடும்பம் இருந்ததா ஞாபகம். முதல்ல பலகைக் கல்லு போட்ட திண்ணை. அதுலதான் தேய்க்காய் கடை சிவசங்கரம் பிள்ளை உட்கார்ந்து இருந்தாரு. என்னையை யாருன்னே அவருக்குத் தெரியாது. ஆனாலும் ’’வாங்க வணக்கம்’’னு சொன்னவரு... ’அப்படியே உள்ளே போங்க மாடில இருக்கான்’னு கை காமிச்சார். நான் தி.க.சி-யைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டார். என்னைப் போல அவர் எத்தனை பேரைப் பாத்திருப்பார். நான் அப்படியே நீண்ட வராண்டால நடந்து இடது கைபக்கமா திரும்பி மாடிப்படியில ஏறிப் போறேன்.  மாடியில் அப்போ நெல்லு காய வெச்சுருந்தாங்க. நட்ட நடுவுல ஊஞ்சல்ல உட்கார்ந்து இருந்தார் தி.க.சி. அவருக்கு முன்னாடி குறுக்குவாட்டா நிலைக்கண்ணாடி இருந்துச்சு. நான் அதுவரைக்கும் நீள்வாக்குல தொங்குற நிலக்கண்ணாடியைத்தான் பாத்துருக்கேன். ஆனா முதல் முறையா குறுக்குவாட்டு நிலக்கண்ணாடி... இதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு நெல்லு மேல நடந்து போனேன். அப்போ என் உள்ளங்கால்கள்ல நெல்லு முனைங்க குத்துனது இப்பவும் குறுகுறுக்குது. எந்திரிச்சு வந்தவரு என் கையைப் பிடிச்சுக்கிட்டார். அப்புறம் பேசுனோம்... பேசுனோம்... பேசிக்கிட்டே இருந்தோம். அதுக்கு பிறகு திருநவேலிக்கு வந்தா போனா, சுடலை மாடன் கோயில் தெருவுல அந்த வீடு நான் உண்டு உறங்கிற பேசிச் சிரிக்கிற எடமா மாறிப்போச்சு. அப்போ அங்க இருந்த நாலு வீடுகள்ல ரெண்டாவது வீட்டுல தி.க.சி-யோட தம்பி ஒருந்தர் இருந்தார். அவருக்கு அப்படியே தி.க.சி-யோட குரல். அவர் பேசுற நேரத்துல தி.க.சி. பேசுறது மாதிரியே இருக்கும். நான் கல்யாணி(வண்ணதாசன்)கிட்ட கூட கேட்பேன். ’’நாங்களும் சிலநேரம் அப்பாத்தான் பேசுறாருனு ஏமாந்திருக்கோம் மாமா”னு அவன் சிரிச்சுக்கிடுவான். அவன் நல்ல பையன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கல்யாணியை நான்தான் கூட்டிப்போயி பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். ம்ம்... வண்ணாரப்பேட்டை பள்ளிக்கூடம். தி.க.சி. அப்போ பேங்க் உத்தியோகம்னு சொன்னேன் இல்லையா... ஒரு நாள் என்கிட்ட, ’’இவனுக்கு படிப்பு கொஞ்சம் சரியா இல்லை. வேற ஸ்கூல மாத்தலாம்னு இருக்கேன். ஆனா, எனக்கு நேரமில்லை. நீங்கதான் கூட்டிட்டுப் போவணும்’’னு சொன்னார். என்கூட ’சாந்தி’ எஸ்.ஏ.முருகானந்தமும் வந்தார். ரெண்டு பேரும் கல்யாணியை பள்ளியில சேர்த்தோம். கல்யாணி, அவன் மகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது ’’பாரத்துல கையெழுத்துப் போடுங்க மாமா’’னு சொன்னான். ஏன்னு தெரியலை. நான் ஏன்னும் கேட்கலை. கையெழுத்துப் போட்டேன். என்னென்னமோ ஞாபகம் வருது பாருங்க... என்னனு சொல்றது இதை.

மனசுக்கு என்னமோன்னு இருந்தா திருநவேலிக்கு பஸ் புடிச்சுடுவேன். நேரா தி.க.சி. வீடு. அங்க பேசிட்டே இருப்போம். வீட்ல தி.க.சி. இல்லைன்னா பேங்குக்குப் போயிடுவேன் பாத்துக்கிடுங்க. அப்படியே பேசிட்டு இருந்துட்டு மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வருவோம். அங்கயே நைட்டு தூங்கி எந்திருச்சா... திருநவேலி டவுன் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கதுல ஒரு பாதை போவும். அது வழியா நடந்து காடு கரைக்குப் போயிட்டு, தாமிரபரணில குளிச்சுட்டு மேலக்கடைசியில் இருகிற ராஜகுலராமன் தெருவுக்கு வருவோம். அங்கதான் தொ.மு.சி. இருந்தார். அங்க போனா அரட்டைக் கச்சேரிதான். இங்க தொ.மு.சி. பத்தி ஒண்ணு சொல்லணும். புத்தகம் எழுதி முதன்முதலா ஜெலுக்குப் போன முதல் எழுத்தாளன் தொ.மு.சி-தான். ’முதல் இரவு’னு ஒரு நாவல் எழுதினார். பாலியல் கதைனு புடிச்சு ஜெயில்ல போட்டுது பகவத்சலம் மந்திரி சபை. ஆனா அதுல ஒரு வேடிக்கை பாருங்க... புக் கன்னாபின்னானு வித்துது. அந்தப் பணத்துல தன் மனைவிக்கு நெக்லெஸ் வாங்கிப் போட்டார் தொ.மு.சி. ஆனா, ’முதல் இரவு’ புத்தகத்தை தி.க.சி. ஏத்துக்கிடலை. அதையே ஏத்துக்கிடாதவர் என்னோட ’மறைவாய்ச் சொன்னக் கதைகள்’ புத்தகத்தை ஏத்துக்குவாரா? ம்கூம்... ’’ஏங்க வீணானதொரு விளையாட்டு வேலையில் ஈடுபடறீங்க’’னு சொன்னார். ஆனா, நான் அவர் சொல்றதைக் கேட்கலை. இவ்வளவு இருந்தாலும் எங்க சிநேகிதம் சிதையில்ங்கிறதுதான் முக்கியம். எனக்கு நிறைய புஸ்தங்களைக் குடுத்து படிக்கவெச்ச தமிழ் எழுத்தாளர்கள் ரெண்டு பேர் ஒருத்தர் திகசி; இன்னொருத்தர் தஞ்சை ப்ராகாஷ்.

’’இந்தப் புத்தகத்தை நான் வெச்சுக்கிடட்டுங்காளா?’’னு தி.க.சி-கிட்ட கேட்பேன்.
’’வெச்சுக்கிடுங்களேன்...”னு மென்மையா ஒரு சிரிப்பு சிரிப்பார். இனிமே அந்தச் சிரிப்பைத்தான் பார்க்க முடியாது.

தூத்துக்குடி எஸ்.ஏ.முருகானந்தத்துக்குப் பிறகு ’சாந்தி’ பத்திரிகையை தொ.மு.சி. நடத்தினார். அதுல தி.க.சி. எழுதின சினிமா விமர்சனம் பரவலாப் பேசப்பட்டுது. அதுலதான் முதன்முதலா சினிமா டெக்னிகல் விஷயங்களை அதாவது கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங்... பத்தியெல்லாம் தி.க.சி. எழுதினார். ’சாந்தி’ பத்திரிகை சார்பா ’புதுமைப்பித்தன் மலர்” கொண்டுவந்தாங்க. அதுலதான் சுந்தரராமசாமியோட முதல் சிறுகதை ’தண்ணீர்’ வெளிவந்துச்சு. அதுக்குப் பிறகுதான் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சார். அப்போ நான், தொ.மு.சி., தி.க.சி., சு.ரா. எல்லாரும் சேர்ந்து திருநவேலியை நடந்தே சுத்தி வருவோம். எங்களுக்கு அந்த இடமெல்லாம் ஏற்கெனவே பழக்கம். ஆனா, சுந்தரராமசாமிக்குப் புதுசு. அப்போதான் ஒரு இடத்தைக் காண்பிச்சு, ‘’இதுதான் மாடத்தெரு’’னு தி.க.சி. சொன்னார். அதைத் தாண்டினா தேரடி, அப்புறம் வாகையடி முக்கு. அங்கே தேர் நின்னுடும். கதை பாதிலேயே நின்னுடுச்சுனா புதுமைபித்தன் ’வாகையடி முக்குல படுத்துட்டது’னு சொல்வார். அந்தச் சொற்பிரயோகம் நவீன இல்லகிய உலகத்துல பின்னாடி பிரபலமாச்சு.

அப்போல்லாம் ஜீவா தலைமையில எட்டையபுரத்துல பாரதி விழா நடக்கும். அந்தக் காலத்துல கம்யூனிஸ்ட்காரங்க எல்லாரும் காக்கி கலர் அரைக்கால் டவுசர்தான் போடுவாங்க. ஜீவாவும் அரைக்கால் டவுசர்தான் போடுவார்.
’’ஏன் இப்படி டவுசர் போட்டுக்கிறீங்க. வேட்டி கட்டிக்கிடக் கூடாதா?”னு கேட்டேன்.
’’வேட்டி கட்டிக்கிட்டா மேடையில ஆட்டம் ஆடி பிரசாரம் பண்ணும்போது வேட்டி அவுந்துடும்’’னு சொன்னார்.
’’பச்சை பெல்ட் போட்டுக்கிடுங்க சரியாப் போகும்’’னு சொன்னேன்.
அதுக்கு அவர், “பச்சை பெல்ட் மிட்டா மிராசுகள் போடறது. நான் போடமாட்டேன்’’ சொல்லிட்டார்.
அப்புறம் ஒரு விழாவுல வேட்டி கட்டிருந்த ஜீவா என்னைக் கூப்பிட்டார்.
’’ராஜிநாராயணன்...’’ - இப்படித்தான் கூப்பிடுவார் அவருக்கு மட்டும் நான் ’ராஜநாராயணன்’ கிடையாது.
‘’வேட்டிக்கு மாறிட்டேன் பாத்திங்களா’’னு சொன்னார்.
இதுதாங்க நம்ம உடை. பெங்காலி புரஃபசரைப் பாருங்க. இன்னமும் பஞ்சகச்சம்தான் கட்டுறாங்கனு சொன்னேன்.
இதை எதுக்குச் சொல்றேன்னா... ஜீவானந்தம் போன்ற தலவர்கள்லாம் டவுசர் போட்டிருக்கும்போது, தி.க.சி-யும் தொ.மு.சி-யும் வேட்டிதான் கட்டிருந்தாங்க. அதுவும் தொ.மு.சி., கள்ளிஜிப்பா போட்டிருப்பார். கலைஞர்களை அவங்க போக்குல விட்டுடணும். அவங்களுக்கு விதிவிலக்குகள் ரொம்ப முக்கியம். ஆனா, கலைஞர்கள்கிட்ட நிறைய நெருக்குதல்கள்களை கம்யூனிஸ்ட் கட்சி தந்ததாலதான் நிறைய கலைஞர்கள் அந்தக் கட்சியைவிட்டு வெளிய வந்தாங்க. ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு ஏன் வந்தாருன்னு நினைக்கிறீங்க... ரெண்டாந்தாரம் கல்யாணம் கட்டிக்கிட்டார். கட்சியில விசாரணைனு கூப்பிட்டாங்க இவர் போகலை. அதான் காரணம். நான் யோசிக்கிறேன்... பி.ஜே.பி-க்கு ஆர்.எஸ்.எஸ்., விஷவ ஹிந்தி பரிஷத்... மாதிரி கம்யூனிஸ்ட் கட்சியிலேயும் அடுக்குகள் இருந்திருக்கணும். இருந்திருந்தா வைதீக கம்யூனிஸ்ட்களை அங்க தள்ளிவிட்டிருக்கலாம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைஞ்சதுக்கான காரணத்தை ’ஒண்ணு + ஒண்ணு = 11’னு ஒரு கட்டுரையா எழுதினேன். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் சொன்ன ஒரு சங்கம் இப்படி ரெண்டா உடைஞ்சுடுச்சு. உடைச்சது முதலாளிகள் சங்கம்தான். அவங்களுக்குள்ள ஒற்றுமை கட்சியில இருந்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது. ’நாங்க பிரிஞ்சு போகலை. ஆனா, கட்சியின் ஸதாபகரில் ஒருவரான டாங்கே தலைவர் பதவிலேர்ந்து விலகணும் மார்க்சிஸ்ட் கோரிக்கை வெச்சதை டாங்கே ஏத்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது’’னு எழுதின கட்டுரை படிச்சுட்டு, ’நீங்க சரியாத்தான் சொல்லிருக்கீங்க ஆனா யார் கேட்டா... இந்தக் கட்டுரையைக்கூட யாரும் பிரசும்கூட பண்ணமாட்டாங்க’னு வேதனையோட சொன்னதும் இல்லாம கடைசிவரை ஆதரிச்சவர் தி.க.சி. கூடங்குளம் அணு உலை நிர்மாணத்துக்கு எதிரா குரல்கொடுத்தது. ஆதரவு நிலை எடுத்த மார்க்சிஸ்ட்களை விமர்சனம் பண்ணினது மட்டுமில்லாம... அவங்களோட ஈழ எதிர்ப்பு கொள்கைகளையும் நிராகரிச்சு மண்ணுக்கேத்த மார்க்சீஸியத்தைச் சொன்னவராவும் இருந்தார் தி.க.சி..

என்னைப் பார்க்க நிறைய இளையவர்கள் வருவாங்க. ’என்ன எழுதுறீங்க... என்ன புத்தகம் கையில வெச்சுருக்கீங்க?’னு கேட்பேன். ’கவிதை எழுதுறேன் இல்ல... கவிதைப் புத்தகம் வெச்சிருக்கேன்”னு சொன்னாங்கன்னா... நான் அவங்க பக்கமே திரும்ப மாட்டேன்.  ஏற்கெனவே கவிதையில சொன்னதைவிட புதுசா யாரும் எதுவும் சொல்லிடலைங்கிறதுதான் என் அபிப்ராயம். இன்னும் சொல்லப்போனா உரைநடை இலக்கியம் தமிழ்ல வளராம இக்கிறதுக்கு கவிதைகள்தான் காரணம்.  என்னைத் தனிப்பட்ட முறைகள்ல கேட்டா கவிதைகளை தடை பண்ணனும்தான் சொல்வேன். இல்லைன்னா கவிதைக்கு, உரைநடைக்குனு தனித்தனி துறைகள் தொடங்கிடணும். ஆனா, தி.க.சி-கிட்ட இந்தக் குறபாடுகளோ கூப்பாடுகளோ இருந்ததே இல்லை. எல்லா எழுத்தையும் ஆதரிச்சார். அரவனைச்சார். உற்சாகப்படுத்தினார்.


நீர்ப்பாய்ச்சினார்.

அப்போ கல்யாணிக்கு மதுரைல பேங்க் உத்தியோகம். நாகமலை ரோட்லதான் வீடு. ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டான்; போனேன். ’’வீட்டுல பெரிய பெரிய பல்லிகள் இருக்கு மாமா என்ன பண்றதுனு தெரியலை..’’னு சொல்லிக் கவலைப்பட்டான். அவன் சம்சாரத்துக்கும் அதே கவலைதான். ’’அதுங்க இங்க இருக்கிறது நல்லதுதான். பூச்சிகளையெல்லாம் தின்னுடும். அதுல விஷப்பூச்சிகளும் அடக்கம். அதனால கவலைபடாத’’ சொன்னேன்.
அவங்க ஏத்துக்கிட்டாங்க.

 இலக்கியத்துல விஷமான கருத்துகளை எதிர்க்கிற வேலையைத்தான் தி.க.சி. பண்ணினார். அதன் மூலம் அவர் நம்பின இலக்கியத்தை அறிமுகத்தினார். அது நிறைய பேருக்கு உபயோகமா இருச்சுன்னு மட்டும்தான் இப்போ என்னால சொல்லமுடியுது...’’  

-இதன் சுருக்கபட்ட வடிவம் ஆனந்த விகடன் இதழில் வெளியானது
 
   
   
   

05 April, 2014

உயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைத் தேடும் கவிதைகள்.

''கதிர், உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் அன்பின் மாறாத அச்சில் செலுத்துவது எதுவென்று நினைக்கிறாய்? பணமோ, பகட்டோ, பதவியோ, புகழோ, இஷ்டபந்துமித்திரர்களோ... இல்லை கதிர். 'கவித்துவம்'தான் இந்த உலகை இயக்குகிறது. இதை நான் முழுமனதோடு விசுவசிக்கிறேன்; நீ விசுவசிக்கிறாயா..?’’ என்று அன்றொரு நாள் கவிஞர் யூமா வாசுகி என்னைப் பார்த்துக் கேட்டபோது, என்னைப் போலவே அவரது கண்களை நீயும் பார்த்திருப்பாய் என்றால், ’நம்மை, பாவத்திலிருந்து ரட்சிக்க வந்த கருணாமூர்த்தி இவர்தான்’ என்று நீயும் நம்பத் தொடங்கி இருப்பாய் வேல்கண்ணன். காருண்யமும் வாஞ்சையும் பொருந்திய மனிதராக அவரை என் கண்முன்னே காட்டியது அவரது கவித்துவம்தான். அந்தக் கவித்துவம் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!

வேல்கண்ணனின்  கவிதைகள் எதன் பொருட்டும் தன் சுட்டுவிரலை அல்ல, சுண்டுவிரலைக்கூட உயர்த்தி அதிர்ந்து பேசாதவை. அவற்றுக்குத் தன்னை நடுநாயகமாக நிறுவிக்கொள்ளும் யத்தனங்கள் இல்லை; அதனால், பதற்றங்களும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அதற்கான அவசியமே இல்லை. தன்போக்கில் கசியும் ஒரு ஊதுவத்தியைப் போல, தீராத ஆற்றாமையோடு அவை சதா முனகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த முனகல்களுக்கும் வியாதியஸ்தனின் முனகல்களுக்கும் நிரம்பவே வித்தியாசங்கள் உண்டு நண்பர்களே. ஏனெனில், இவரின் கவிதையின் குரலே இந்த முனகல்தான். அதனால்தான் அந்தக் குரலுக்கு ஒரு சுண்டுவிரல்கூட முளைக்கவில்லை என்றேன். ஆனால், அந்த முனகலை ஒருவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான் எனில், ராகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்த பாடகன், ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பும் முன், அவன் செய்யும் ’முன்தயாரிப்புகள்’ என்றே அவற்றைப் புரிந்துகொள்வான். எனவேதான் இந்தக் கவிதைகள் அனைத்தும் இசைக்காத இசைக் குறிப்புகளாக இருக்கின்றன.  ஒவ்வொரு கவிதையும் பால்யம், காமம், கழிவிரக்கம், துயரம், நிராயாசை, தாம்பத்யம், காதல், துரோகம்... என இவை தந்த அனுபவங்களை சதா முனகிக்கொண்டே, தன்னைத்தானே இசைக்க முற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

சரி... வேல்கண்ணன், கவிதை முழுக்க இப்படியே ஆற்றாமையோடு முனகிக்கொண்டேதான் இருக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. அவ்வப்போது ஆறுதலை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார். என்ன... இவர் ஆறுதல் அடைய ஒரு நிலா தேவைப்படுகிறது; வேல்விழி, ஓடிவந்து இவர் கழுத்தைக் கட்டிக்கொள்ளவேண்டி இருக்கிறது; விரல்களிடையே பற்றிக்கொண்டு காதுகுடைவதற்கோ அல்லது தன்னைத்தானே வருடிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கோ ஓர் இறகு வேண்டியிருக்கிறது. சிட்டுக்குருவியின் பாடல் வேண்டி இருக்கிறது; இவரை அகழ்ந்தெடுக்கும் விழிகளில் இருந்து, உயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலா, வேல்விழி, உயிர்க் கவ்வும் ஒரு சொல், சிட்டுக்குருவியின் பாடல், இறகு... இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்ததும் சமாதானமாகிவிடுகிறார். சமாதனத்துக்குப் பிறகு முனகல் இல்லையா என்றால்... இவர் நாசி தொடும் ’துரோகத்தின் கருகல் வாசனை’யும் (நீ வராத மாலை... பக்- 16) கடத்திப்போகப்பட்ட இவரின் ‘பெருங்காதை இளவரசியை மீட்பதற்காக’(வேள்வி... பக்-17) இந்த வாழ்வு இவருக்குக் கொடுத்திருக்கும் பொய்க்கால் குதிரைக்கு, தன் கால்களைக் கொடுத்துவிட்டு ரத்தம் கசியக் கசிய... மீண்டும் முனக ஆரம்பித்துவிடுகிறார். முனகல் நிற்கிற கணத்தில் இவரது கவிதையும் நின்றுவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனில், ’நான் முனகிக்கொண்டேதான்  இருக்க வேண்டுமா?’ என்று வேல்கண்ணன் என்னைக் கேட்பார் எனில், என் அழுத்தம் திருத்தமான பதில்... ’ஆமாம் வேல்கண்ணன்...’ என்பதுதான்.

பிறந்த நிலத்திலேயே கடைசிவரைக்கும் வாழ்ந்து மடிகிற பாக்கியம் 80-களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மிக அரிதாகவே கிடைத்திருக்கிறது. இங்கே ’வாழ்ந்து’ என்கிற பதத்துக்கு மிகுதியாக அழுத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். 80-களுக்குப் பிறகு பிறந்த அதிகமானவர்கள் கழுத்தில், கல்வி, கணினியைக் கட்டிவிட்டு தட்டச்சிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களை நிராதராவாக விட்டுவிட்டது. ஒரு சமூகமாக, அல்லது ஓர் இனக்குழுவாகச் சேர்ந்து வாழ்ந்த மனிதனைத் தகவல் தொழில்நுட்பம் தனித்தனி தீவாக்கிவிட்டது. இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கிக்கொடுத்த ஆகப்பெரும் சாபம், காமத்தை ஒரு கேப்ஸ்யூலில் அடைத்துக் கொடுத்ததுதான். அது, வேலையின் நிமித்தம் கலிஃபோர்னியாவில் இருக்கும் கணவன், காங்கேயத்தில் இருக்கிற மனைவியோடு தொழிற்நுட்ப உதவியுடன் பொய்யாக சல்லாபிக்கும் மெய்நிகர் உலக தலைமுறையை உருவாக்கியதை அன்றி வேறெதையும் செய்யவில்லை. இயல்பாக எழுகிற பாலுணர்ச்சியைச் சரியாகக் கையாளக் கற்றுத்தராத கல்வியாலும், சமுதாயத்தாலும் பலிகொள்ளப்பட்ட சமீபத்திய பலிதானே மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி.

இப்படியாக... மனசுக்கும், தொழில்நுட்பம் தந்த, தனித்த வெக்கையான வாழ்வுக்கும் இடையே ஏதோ ஒன்றைப் போல பிசுப்பிசுக்கும் காமத்தை ‘அறையில்...’ (பக-14) கவிதையில் கச்சிதமாக எழுதிச் செல்கிறார் வேல்கண்ணன்.

சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானநீரில்
நெளிகிறது என் நிழல்... 

என்று எழுதி இருக்கும் வேல்கண்ணன், ’நெளிகிறது’ என்ற வார்த்தையில் இறக்கி வைத்திருக்கும் வெக்கையும், தனிமையும், கொதிக்கிற ஒரு வெங்கோடையின் தார்ச்சாலையில் பாதுகைகள் இல்லாத கால்களோடு இறக்கிவிடப்பட்ட ஒரு சிறுமி அனுபவிக்கிற துன்பத்தைவிட இன்னல் மிகுந்தது.

தொகுப்பில் முதல் வரியில் இருந்து கடைசிவரை கவிதைத் தனம் கூடிவந்ததாக ’அறையில்’ கவிதையைப் பார்க்க முடிகிறது. பழுப்பேறித் தொங்கும் பகலையும், மின்னுகிற இரவுக் களியாட்டங்கள் திணித்த அணர்த்தங்களையும் உள்வாங்கிய ஒரு பி.பி.ஓ. தலைமுறையின் காமம் என்றுகூட இதைச் சொல்லலாம்!

இந்தத் தொகுப்பில் காமம் குறித்தும்,  காத்திருத்தல் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகள் உள்ளபடியே என்னைக் கவர்கின்றன. அதுவரைக்கும் ஏதோ ஒன்றை முனகிக்கொண்டிருக்கும் பேட்டரி ரேடியோவை... காற்றின் திக்கற்ற ஏதோ ஒரு திக்கில் திருப்பி வைக்கும்போது, அது உயிர்பிடித்துக்கொண்டு கானம் பொழிய ஆரம்பிக்குமே அதுபோலத்தான் காமம் குறித்து வேல்கண்ணன் எழுதும்போது அந்தக் கவிதைகளில் மட்டும் உயிர்ப்பின் பச்சையம் அதிகப்படியாகவே வந்து ஒட்டிக்கொகொள்கிறது.

 இசைக்காத இசைக் குறிப்பு கவிதையில் வரும்

’முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி’ 

என்ற வரியைப் படித்ததும் கொஞ்சம் விக்கித்துப் போய்தான்  நின்றேன். கவிதையை ஒதுக்கிவிட்டு இந்த ஒரு வரி மட்டுமே எனக்குள் பலவகையான சித்திரங்களை எனக்குள் எழுப்பிச் செல்கின்றன. பால் தூர்ந்துபோன சோமாலியாத் தாயின் மார்பை, பசியில் கடிக்கும் குழந்தையின் வாயில் கசிந்த ரத்தத்துக்குச் சமமானது இந்த வரியில் தொக்கி நிற்கும் வியர்வைத் துளி. கார்ல் மார்க்ஸ் மாளாத ஏழ்மையில் தோய்ந்தபோது அவரது குழந்தைகள் ஜென்னியின் மார்பகத்து ரத்தத்தை உறிஞ்சித்தான் பசியாறின என்று எனக்கு மிகையாகச் சொல்லப்பட்ட சித்திரமும் வந்துபோனது. மார்பகத்துக் காம்பில் வியர்வைத்துளியொன்று துளிர்த்து நிற்கிற அளவுக்கான உள்ளார்ந்த கூடல் ஒன்றும் நினைவுக்குள் வந்துபோகிறது.

உன் தலையை அரிந்து 
உன் மடியில் போட்டுக் கொண்டு 
நீயேதான் கோதிவிட வேண்டும்... என்ற இசையின் வரிக்கு முன்பும்

என் ரோஜாக்களைப் பன்றிக்குத் 
தின்னக் கொடுப்பேன்... என்ற வெய்யிலின் வரிக்கும் முன்பும்

காலமழை
குடைகளுக்கு சொந்த நிறத்தைக் கொண்டுவர,
செங்கொடிகள்
“ ஆட்கள் வேலை செய்கிறார்கள் “ என
சகதியின் நடுவே
படபடத்துக் கொண்டிருக்கிறது... என்ற சாம்ராஜ் வரிக்கு முன்பும்

ஒரே ஒரு மதுபோத்தல் அதற்கே நான் வந்தேன்... என்ற இளங்கோ கிருஷ்ணனின் வரிக்கு முன்பும்

எப்படி வாய்ப்பேச முடியாது விக்கித்து நின்றேனோ அப்படி நின்றேன் மேற்சொன்ன வரிக்கு முன்பும். அந்த ஒரு வரிதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியதே அன்றி, வேறு யாரும் இல்லை.

இந்தியாவின் விவசாயம் ஆண்டுக்காண்டு லாபத்தோடு நடந்துகொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்களைச் சொல்லி, ’நான்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியான விவசாயத் துறை அமைச்சர்’ என்று புளகாங்கிதம் அடைகிறார் சரத் பவார். ஆனால் அதே இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியோ... ’பாரதத் திருநாட்டின் உணவுப் பற்றாக்குறையை நீக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தரும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டுமே சாலச் சிறந்தது’’ என்கிறார். இந்த முரண்களில் இறுக முடிச்சுப் போட்டு, எங்கள் தஞ்சையாம், மருத நிலத்தை மீத்தேன் வாயுக்காக பன்னாட்டு முதலைகளிடம் விற்றுவிட்டார்கள். மருத நிலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் நிலகரிக்காக, நிலத்தின் இருதயமான விவசாயத்தைக் கூறுபோட கையெழுத்தாகிவிட்டது. நகைச்சுவையாளர் வடிவேலு அவர்கள், ’இங்கனகுள்ள இருந்த என் கிணத்தைக் காணோம்’ என்று சொன்னதைப்போல, இன்னும் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, தஞ்சை விவசாயிகளுக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னைப் போன்றோரெல்லாம் ’எங்கே எங்கள் காவிரி டெல்டாவைக் காணோம்? எங்கே எங்கள் நதியைக் காணோம், என்கே எங்கள் வாழ்வைக் காணோம்” என்று வாழ வக்கற்று உயிர்ப்பிசைந்து நிற்கப் போகிறோம். அப்போது, ’சோற்றுக்குப் பதிலாக உங்கள் வயிற்றுக்குள் மீத்தேன் வாயுவை நிரப்புகிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று அரசியல் கட்சிகள் எங்களை நோக்கி வருவார்களே அன்றி... ஒருபோதும் எங்கள் நதியோ, எங்கள் நிலமோ, எங்கள் வாழ்வோ திரும்பி வரப் போவதில்லை.

கரையோரத்து மணலை
இரு கைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி

என்று வேல்கண்ணன் எழுதுவதைப் போல நாங்கள் குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்துதான் போக வேண்டி இருக்கும்.

இந்தத் தொகுப்பில் படித்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளக்கூடிய வலி கடத்திகளாக ’பச்சையம்’, ’சுமக்கும் சாலை’ என்ற இரு கவிதைகளும் இருக்கின்றன. இந்தக் கவிதைகள் எழுதிய ஈரம் காய்வதற்குள் நான் படித்தபோது உணர்ந்த வலியை மறுபடியும் இப்போதும் உணர்கிறேன்.

வலியையும் துரோகத்தையும்... இன்னும் சகலத்தையும் தனக்குகந்த முனகல்களாக எழுதும் வேல்கண்ணன்தான், சில ’கண்டிஷன் அப்ளை’ கவிதைகளையும் எழுதி சலிப்படைய வைக்கிறார். கண்டஷன் அப்ளையோடு பிறந்து, கண்டிஷன் அப்ளையோடு வளர்ந்து, கண்டிஷன் அப்ளையோடு மணந்து, கண்டிஷன் அப்ளையோடு புணர்ந்து, கண்டிஷன் அப்ளைகளை குழந்தைகளாகப் பெற்றுக்கொள்கிற இந்த மாநகரத்தில் வாழ்கிற வேல்கண்ணனால், கண்டிஷன் அப்ளை’க்கு எழுதுவதைத் தவிர்க்கமுடியாமல் அல்லாடுவது தெரிகிறது.

அப்படி இந்தத் தொகுப்பில் ’என் காதல் கவிதையும் நீயும்’, ’மௌன தவம்’, ’மௌனப் புரிதல்’, சரிகை வண்ணத்துப் பூச்சி... போன்ற கவிதைகள் மாளாத  சலிப்பைத் தருகின்றன.  இந்தக் கவிதைகளில் பறக்கிற வண்ணத்துப்பூச்சி, அளவுக்கு அதிகமாகவே தமிழ் நவீனக் கவிதைகளில் பறந்து அலுத்துவிட்டது. தவிரவும் அதற்கு சாயமும்போய்விட்டது. எல்லாவற்றையும்விட எறும்பு இழுத்துப்போகும் இந்த வண்ணத்துப்பூச்சியை காதலின் சின்னமாக எழும்பிப் பறக்கவைக்க முயற்சிக்கிறீர்கள் வேல்கண்ணன். அது பறப்பதற்குப் பதிலாக கவிதையையும் இழுத்துக்கொண்டே பாதாளத்துக்குச் சரிகிறது!

கவிதையில் நீங்கள் புதைத்துவைக்கும் மௌனம் ஏற்கெனவே பலரும் புழங்கிப் புழங்கி துருவேறிய தகரம்தான். அதை எடுத்து நீங்கள் கவிதைக்குள் செருகும்போது கவிதைகள் நீலம்பாரித்து சுகவீனம் அடைகிறது!

தவிரவும், வேல்கண்ணன் சொற்களை இன்னும் இளக்கமாக இலகுவாகப் பயன்படுத்தலாம் என்பது எண்ணம். இந்தச் ’சொல் தயக்கத்தை’விட்டு வெளியே வந்தால் உங்களால் படைப்பூக்கத்துடன்கூடிய, நீங்கள் சொல்வதைப் போல ’உயிர்க் கவ்வும் சொல்லால்’ ஆன இன்னும் சில கவிதைகளை எழுத முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

என்னுடைய ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத் தொகுப்பு வந்தவுடன், கவிஞர் இசைக்கு போன் செய்து, ''நண்பா... என் தொகுப்பு வந்துருச்சு... வெளியீட்டு விழா எப்போனு சொல்றேன் வந்துடு'' என்றேன். ’’நண்பா, என்னால் விழாவுக்கு வர இயலாது. இந்தத் தொகுப்பின் மூலம் உனக்கு இன்னும் அதிகமான காதலிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்றான்.  அந்த ராஸ்கலின் வார்த்தைகள் இன்றுவரை பலித்துக்கொண்டிருக்கின்றன . தவிரவும், அந்தக் கவிதைத் தொகுப்பு, எனக்கு நிறைய நணபர்களையும், ஒரே ஒரு துரோகியையும் அடையாளம் காட்டியது. வேல்கண்ணன் உனக்கும் அப்படியான ஒரு தொகுப்பாக ’இசைக்காத இசைக் குறிப்பு’  அமையட்டும்.

இவை எல்லாவற்றையும்விட வேல்கண்ணன்... இந்தக் கட்டுரையை உனக்கும் எனக்கும் அன்பின் நிமித்தம் ’படா தோஸ்தாக’ இருக்கிற ஜீவகரிகாலனுக்குச் சமர்ப்பித்து, அவரிடம் வழங்குவதுதான் இந்த நேரத்தில் சிறந்த செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையைப் பெற்றுக்கொள்ளும்படி ஜீவகரிகாலனை அழைக்கிறேன்!


(08.03.2014 அன்று  டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த வேல்கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்புக்கான ’இசைக்காத இசைக் குறிப்பு’ அறிமுக நிகழ்வில் வாசிக்கப்பட்டது)

17 March, 2014

‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ - எழுத்தாளர் பாவண்ணன் விமர்சனம்

நினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’

பாவண்ணன்


காலம்தோறும் கவிதையின் மொழிதல்முறை மாறிக்கொண்டே வருகிறது. அதே தருணத்தில் எளிமை, இறுக்கம், கச்சிதம் என கவிதையின் புறவடிவங்களிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு மொழிதல்முறை பல கவிஞர்களால் மெல்லமெல்ல வளர்த்தெடுக்கப்பட்டு, அது அந்தக் காலத்துக்குரிய முறையாக உச்சம் பெற்று, கால ஓட்டத்தில் அது தேய்வழக்காக மாறிவிடும் தருணத்தில் மீண்டும் ஒரு புதிய மொழிதல்முறையோடு ஒரு புதிய தலைமுறை தோன்றுகிறது. தமிழ்க்கவிதையின் மொழிதல்முறையில் மாற்றங்கள் உருவான சமயங்களில் மிகச்சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தவர்கள் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிருமிள், நகுலன், ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன் போன்ற கவிஞர்கள். சமயவேல், யூமா வாசுகி ஆகியோர் தொடர்ந்து எழுதாவிட்டாலும் முக்கியமான ஒரு கட்டத்தில் மொழிதல்முறையில் ஓர் இன்றியமையாத திருப்பத்தை ஏற்படுத்திய கவிஞர்கள்.  முகுந்த் நாகராஜ், அய்யப்ப மாதவன் என இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருடைய மொழிதல்முறைகளுக்கான முன்னோடி அவர்கள். அவ்வரிசையில் எழுதிக்கொண்டிருக்கும் இளம் ஆளுமையாக கதிர்பாரதியை அடையாளப்படுத்தலாம். ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்னும் தொகுப்பு அதற்கான சாட்சியாக உள்ளது.
மொழிதல்முறையில் புதுமை உருவாகலாமே தவிர, அதுமட்டுமே ஒருபோதும் கவிதையாக மலர்ந்துவிடாது. கவிதைக்கே உரிய அவதானிப்பு மிக முக்கியம். அவதானிப்பும் புதுமொழிதல் முறையும் இணையும்போது மட்டுமே வசீகரமான ஆக்கங்கள் உருவாகும். கதிர்பாரதியின் பல படைப்புகளில் இந்த இணைப்பு பொருத்தமாக இடம்பெற்றிருக்கிறது. இதையே கதிர்பாரதியின் வலிமை என்று சொல்லலாம்.
‘சோழக்கடற்கரைப் பிச்சி’ என்றொரு கவிதை. கடலோரமாக மார்பில் ஓயாது அறைந்தபடியும் கண்ணீர் சிந்தியபடியும் அலைகிற ஒரு பிச்சியாகச் சுற்றிவரும் கடல்தேவதையின் சித்திரம் இக்கவிதையில் இடம்பெற்றிருக்கிறது. கண்களிலிருந்து துளித்துளிக் கடல்கள் சிந்த, அவள் விரிந்து கொந்தளித்தபடி உள்ள கடலின் முன்னால் நின்றிருக்கிறாள். அவளைக் கண்டு பயந்து உள்வாங்குகிறது அந்த நீலக்கடல். கடலில் காணப்படும் ஒரு கப்பலின் காட்சி அவளை மேலும்மேலும் சீற்றமுற வைக்கிறது. மருண்ட கடல்மீது வாய்குதப்பி வசவுகளை உமிழ்கிறாள் அவள். அலைந்து அலைந்து களைப்புற்றவளாக, கடைசியில் மணலை முந்தானையில் பொதிந்து மார்புக்கு நடுவே வைத்துப் பிடித்தபடி கரையிலேயே கண்ணயர்ந்துவிடுகிறாள். தொடுவானுக்கும் அவளுக்குமிடையே தத்தளித்த கடல், அவள் உறங்கியபிறகு, அவள் கால்களைத் தொட்டுத் தழுவித் திரும்புகிறது. அச்சமுறும் கடல் ஒருபுறம், கடலுக்கு அச்சமூட்டும் பிச்சி ஒரு புறம். பல மெளனங்களோடும் பல இடைவெளிகளோடும் கவிதை அழகான ஓர் ஓவிய அனுபவமாக மாறுகிறது.
‘கூச்சத்தைப் பூசிக்கொள்ளும் பிள்ளையார்’ என்னும் கவிதை குளக்கரை ஓரமாக வழக்கமாக உள்ள ஒரு பிள்ளையாரைப்பற்றிய சித்தரிப்புகளை முன்வைக்கிறது. முதலில் அவர் தோற்றம் பற்றிய குறிப்புகள். பிறகு அவருக்கு நிகழும் வழிபாட்டின் பெருமைபற்றிய குறிப்புகள். அங்கு வந்து செல்பவர்கள் பற்றிய குறிப்புகள். அப்புறம், அவருடைய தனிமை மற்றும் துயரம் பற்றிய குறிப்புகள். இறுதியாக, ஒரு தெருநாய், அந்த இறையுருவத்தை ஒரு சாதாரணக் கல்லாக நினைத்து ஓரமாக ஒண்டி சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் குறிப்பு. பிள்ளையாரின் சித்திரத்தை முன்வைப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதை, இறுதிவரிக்குப் பிறகு, நம் ஒவ்வொருவரின் சித்திரத்தையும் காட்டும் ஆடியாக மாற்றமடைந்துவிடுகிறது. பெருமையும் சிறுமையும் பிள்ளையாருக்கு மட்டுமன்றி, நம் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் என்பது புரிய ஒரு கணம் போதும். தினந்தோறும் நம் மீதும், நம் கனவுகள் மீதும், நம் திறமைகள்மீதும், நம் பெருமைகள்மீதும் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்லும் ஏராளமான சிறுமதியாளர்களைச் சந்தித்தபடியே செல்லும் நமக்கு இந்தக் கவிதை மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
சிறுமையையும் வலியையும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள உதவும் ஆயுதங்கள் பகல்கனவும் கற்பனையும் மட்டுமே. அத்தகு பகல்கனவின் காட்சி ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ கவிதையில் உள்ளது. அது ஓர் எளிய நிலம். அந்த நிலத்துக்கு அவன் சூட்டிய பெயர் ஆனந்தி. ஆனந்தி என்று பெயர்சூட்டிய கணத்திலிருந்து, அந்த நிலத்தில் ஆனந்தம் கரைபுரண்டோடுகிறது. இந்த மண்ணில் நிகழ்கிற எல்லாமே அந்த ஆனந்திக்காகவே நிகழ்கிறது. அந்த நிலத்தில் வீசுகிற காற்று ஆனந்திக்காக. அந்த நிலத்தில் படர்கிற வெயில் ஆனந்திக்காக. அந்த நிலத்தில் விளையும் விளைச்சல் ஆனந்திக்காக. மழைகொண்டுவரும் தட்டான்கள் அந்த நிலத்தில்   தாழ்வாகப் பறப்பதுகூட ஆனந்திக்காக. கவிதை எவ்வளவு உயர்வான வரம் ! ஒரு கனவின் வழியாக காற்றென அனைத்தையும் கடந்து மிதந்து வந்துவிட முடிகிறது.
’மகன்களும் மகன்களின் நிமித்தமும்’ என்னும் நீள்கவிதையின் பகுதிகள் முன்வைத்திருக்கும் அவதானிப்புகள் கவித்துவத்தின் உச்சமாக உள்ளன. ஒரு பகுதியில் ஐந்து விரல்களை ஐந்து ஊர்களின் அடையாளமாக மாற்றிச் சொல்லும் குழந்தைமையின் மொழி மனத்துக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. ஐந்து விரல்கள் வழியாக நகரின் சித்திரத்தையே குழந்தையின் உள்ளங்கை தாங்குகிறது. இப்படி எண்ணத் தொடங்கிய கணத்திலேயே வேறொரு காட்சியை நம் அகம் விரித்துக்கொள்கிறது. ஒற்றை விரலால் மலையைத் தூக்கி பிரளயத்திலிருந்து இந்த உலகத்தைக் காத்தருளும் தெய்வக்குழந்தையின் புராணப்படிமத்தைச் சட்டென ஒரு பிஞ்சுவிரல் தீண்டி இந்தத் தரைக்கு இழுத்து வந்துவிடுகிறது. கவிதையின் மற்றுமொரு பகுதியில் சிறுவன் உருவாக்கும் கொலுபொம்மைகளின் காட்சி இடம்பெறுகிறது. மானை முதுகில் சுமக்கும் புலி. பசுவின் நிழலில் இளைப்பாறும் சிங்கம். முகத்தோடு முகம் உரசி விளையாடும் கரடியும் குரங்கும். துப்பாக்கியை கையில் ஏந்தியபடி நிற்கும் காந்திஜி. புல்லாங்குழல் வாசிக்கும் வேட்டைக்காரன். ஓநாய்க்குட்டியை நாக்கால் தடவிக்கொடுக்கும் காட்டெருமை. இந்த உலகத்தின் வாழ்க்கைச்சூத்திரங்கள் எதையும் அறியாத குழந்தைமையின் கபடற்ற விளையாட்டை வாசிக்கும்போது புன்னகைக்கத் தோன்றும் கணத்திலேயே, இக்காட்சியைக் கட்டமைத்திருக்கும் மனத்தில் படிந்துள்ள ஆழ்ந்த ஏக்கத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இப்படித்தானே இந்த உலகம் இருந்திருக்கவேண்டும், ஏன் இப்படி இல்லாமல் போனது என்றொரு கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லை. அந்தக் கேள்விக்கான பதில்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளைப் புரட்டி நாம் தேடிக் கண்டடைய வேண்டும்.
தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்
துடிக்கும் புழுவை
முள்ளில் மாட்டிக்கொள்ளாமல்
கவ்வி இழுப்பதுபோன்ற கனவிலிருந்த சினைமீன்
கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்
இடவலமென அசைகிறது முள்ளாக மாறி-
அடிமேல் அடிவைத்து
வெள்ளையாகச் சலனிக்கிறது
உறைந்திருந்த காலம்

என்ற கவிதையில் இருக்கும் மீனின் சித்திரம் நம் மனத்தை அசைத்துவிடுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்கும் மரணத்தின் எதார்த்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் நம்மைக் கடந்துபோய் விடுகிறது. மரணம் கண்ணற்றது. இரக்கமும் இல்லாதது. அதன் முன் சாதாரண மீனும் ஒன்றுதான். சினைமீனும் ஒன்றுதான். அமைதியான தண்ணீர்ப்பரப்புக்குக் கீழே ஆழ்ந்த துயரளிக்கும் மரணம். அமைதிக்கும் சாட்சியாக, மரணத்துக்கும் சாட்சியாக நகர்ந்தபடியே இருக்கிறது தண்ணீர். மீனுக்குமட்டும் நேர்வதல்ல இந்த நிலைமை. மானுடன் உட்பட இந்த உலகின் எல்லா உயிர்களுக்கும் பொதுவானதொரு கோலம் அது.
ரயில்பயணக்காட்சியொன்றை கதிர்பாரதி கவிதையாக்கியிருக்கும் விதம் எளிதில் மறக்கமுடியாதபடி உள்ளது.
முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மிதவேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளை
தாலாட்டி தாலாட்டி

பயணக்காட்சியை தாய்மையின் சித்திரமாக மாற்றிவிடுகிறது கதிர்பாரதியின் கவித்துவம். பாலூட்டும் ஏக்கத்தோடு குழந்தையை மனத்துக்குள் தாலாட்டியபடி பயணம் செய்யும் தாய் ஒருபுறம். ஏக்கமும் சிந்தனையும் கொண்ட அவளுடைய கனத்த மார்புகளை தாய்மையுணர்வோடு தாலாட்டி நகரும் ரயில் இன்னொரு புறம்.
தொகுப்பில் இடம்பெற்றுள்ள இன்னொரு ரயில்பயணக்காட்சியை முன்வைத்துள்ள கவிதை தரும் வாசிப்பு அனுபவமும் முக்கியமானது.
கண் அவிந்த
ரயில் பிச்சைக்காரன் பாடலில்
வேர்க்கடலை உமிகளை
ஊதிவிடுகிறான்
கூடப் பயணிக்கும் பிரயாணி ஒருவன்
அவை
அந்தப் பாடலுக்கு ஏற்ப
அசைந்து
சுழன்று
ஆடி
ஏந்தியிருக்கும் பிச்சைப்பாத்திரத்தில்
விழுகின்றன.
அவனது பாடல்கூட
பிரயாணியின் காதில்
அப்படித்தான் விழுகிறது.

கண்ணற்ற ஒருவனின் பாடல் ஒருபுறம். கண்பார்வையுள்ள ஒருவனால் ஊதிவிடப்படும் வேர்க்கடலைத்தோல் மறுபுறம். காற்றில் இரண்டுமே மிதந்தலைந்து பரவுகின்றன. வேர்க்கடலைத்தோலின் பயண அசைவுகள் கண்ணுக்குப் புலப்படுவதுபோல, பாட்டின் பயண அசைவுகள் புலப்படுவதில்லை. தோல் அசைந்து அசைந்து சென்று, பிச்சைக்காரனின் தட்டில் நாணயங்களாக விழுகின்றன. பாடல் வரிகளும் அதுபோலவே அசைந்து அசைந்து சென்று, அந்தக் குறும்புக்காரனின் காதில் விழுகின்றன.  பிச்சைக்காரனின் பாட்டுவரி எந்தப் பேதத்தையும் உணர்வதில்லை. நாணயம் போடுகின்றவன், நாணயம் போடாதவன், கிண்டல் செய்பவன், முறைத்துப் பார்ப்பவன், பாவம் பார்ப்பவன், அருவருத்து முகத்தைச் சுளிப்பவன், உமிகளை அவனைநோக்கி ஊதுபவன் என எல்லாருக்கும் பொதுவாகவே அவன் வரி ஒலிக்கிறது. எல்லோரையும் ஒரே விதமாகவே சென்றடைகிறது. ஒரு பாடலின் ஓசைக்கு இருக்கிற சீரான உணர்வு, ஒரு மனிதனுக்கு ஏன் இருப்பதில்லை என்னும் கேள்வி, நெஞ்சைக் கனக்கவைக்கிறது.

வீட்டை எட்டிப் பார்த்தல், கடக்க இயலாத தெரு இரண்டும் ஒரே உண்மையை வெவ்வேறு கோணங்களில் உணர்த்தும் கவிதைகள். ’தெரு ஒன்றைக் கடப்பதென்பது உண்மையில் வாழ்வு ஒன்றைக் கடப்பதாகும்போல’ என்று மிகச்சாதாரணமாகத் தொடங்குகிறது கவிதை. நேர்க்கோட்டில் சாலையில் மட்டுமே கண்களைப் பதித்து செல்பவர்களுக்கு, ஒரு பிரச்சினையுமில்லை. அவர்கள் வில்லிலிருந்து இலக்குநோக்கிச் செல்லும் அம்புகளைப் போன்றவர்கள். பார்வையை அக்கம்பக்கம் வீசியபடியும் ஒவ்வொன்றையும் நின்றுநின்று பார்த்தபடியும் செல்வதுதான் உண்மையான பயணம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காட்சி பார்க்கக் கிடைக்கிறது. ஒரு வாசலில் புன்னகை. இன்னொரு வாசலில் கண்ணீர்த்துளி. ஒரு வாசலில் மலர். மற்றொரு வாசலில் வெறுமை. எல்லாம் கலந்த கலவையாக உள்ளது. இடமிருந்து வலமாக, குறுக்கிருந்து நெடுக்காக, வடகிழக்கிலிருந்து தென்மேற்காக, மேலிருந்து கிழக்காக என எந்தக் கோணத்தில் கடந்தாலும் தெருமுழுக்க எண்ணற்ற காட்சிகள் நிறைந்திருக்கின்றன. மகிழ்ச்சியையும் துயரத்தையும் மாறிமாறி அளிக்கும் காட்சிகள். விட்டத்தில் தொங்கி ஊசலாடும் உடலைக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் பார்க்கநேர்கிறது. அக்காட்சியின் அதிர்ச்சி, அந்தத் தெருவையே கடக்கமுடியாதபடி செய்துவிடுகிறது. தெருக்காட்சிகள் வழியாக வாழ்க்கைக்காட்சிகளை உய்த்துணரவைத்து, ‘ஒரு வீட்டில் மணவிழாக்காட்சி. இன்னொரு வீட்டில் பிணம்கிடக்கும் காட்சி’ என முன்வைத்து இந்த உலகம் இயங்கும் சூத்திரத்தை அடையாளம் காட்டிய பழைய புறநானூற்றுக் கவிதையின் புள்ளிவரைக்கும் பயணம் செய்யவைக்கிறது இக்கவிதை.
துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு, தெய்வமாக உறங்குகிறாய், அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு போன்ற இன்னும் சில கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. வசீகரமான வாசிப்பனுவத்தை வழங்கும் கதிர்பாரதியின் தொகுப்பு ஒரு வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் உள்ளது.
(மெசியாவுக்கு மூன்று மச்சங்கள். கவிதைத்தொகுதி. கதிர்பாரதி. புது எழுத்து பதிப்பகம், 2/205, காவேரிப்பட்டினம். விலை. ரூ.70)