''கதிர், உன்னையும் என்னையும் இந்த உலகத்தையும் அன்பின் மாறாத அச்சில் செலுத்துவது எதுவென்று நினைக்கிறாய்? பணமோ, பகட்டோ, பதவியோ, புகழோ, இஷ்டபந்துமித்திரர்களோ... இல்லை கதிர். 'கவித்துவம்'தான் இந்த உலகை இயக்குகிறது. இதை நான் முழுமனதோடு விசுவசிக்கிறேன்; நீ விசுவசிக்கிறாயா..?’’ என்று அன்றொரு நாள் கவிஞர் யூமா வாசுகி என்னைப் பார்த்துக் கேட்டபோது, என்னைப் போலவே அவரது கண்களை நீயும் பார்த்திருப்பாய் என்றால், ’நம்மை, பாவத்திலிருந்து ரட்சிக்க வந்த கருணாமூர்த்தி இவர்தான்’ என்று நீயும் நம்பத் தொடங்கி இருப்பாய் வேல்கண்ணன். காருண்யமும் வாஞ்சையும் பொருந்திய மனிதராக அவரை என் கண்முன்னே காட்டியது அவரது கவித்துவம்தான். அந்தக் கவித்துவம் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!
வேல்கண்ணனின் கவிதைகள் எதன் பொருட்டும் தன் சுட்டுவிரலை அல்ல, சுண்டுவிரலைக்கூட உயர்த்தி அதிர்ந்து பேசாதவை. அவற்றுக்குத் தன்னை நடுநாயகமாக நிறுவிக்கொள்ளும் யத்தனங்கள் இல்லை; அதனால், பதற்றங்களும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அதற்கான அவசியமே இல்லை. தன்போக்கில் கசியும் ஒரு ஊதுவத்தியைப் போல, தீராத ஆற்றாமையோடு அவை சதா முனகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த முனகல்களுக்கும் வியாதியஸ்தனின் முனகல்களுக்கும் நிரம்பவே வித்தியாசங்கள் உண்டு நண்பர்களே. ஏனெனில், இவரின் கவிதையின் குரலே இந்த முனகல்தான். அதனால்தான் அந்தக் குரலுக்கு ஒரு சுண்டுவிரல்கூட முளைக்கவில்லை என்றேன். ஆனால், அந்த முனகலை ஒருவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான் எனில், ராகத்தின் நெளிவு சுழிவுகளைத் தெரிந்த பாடகன், ஒரு ராகத்தைக் கட்டியெழுப்பும் முன், அவன் செய்யும் ’முன்தயாரிப்புகள்’ என்றே அவற்றைப் புரிந்துகொள்வான். எனவேதான் இந்தக் கவிதைகள் அனைத்தும் இசைக்காத இசைக் குறிப்புகளாக இருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் பால்யம், காமம், கழிவிரக்கம், துயரம், நிராயாசை, தாம்பத்யம், காதல், துரோகம்... என இவை தந்த அனுபவங்களை சதா முனகிக்கொண்டே, தன்னைத்தானே இசைக்க முற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
சரி... வேல்கண்ணன், கவிதை முழுக்க இப்படியே ஆற்றாமையோடு முனகிக்கொண்டேதான் இருக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. அவ்வப்போது ஆறுதலை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார். என்ன... இவர் ஆறுதல் அடைய ஒரு நிலா தேவைப்படுகிறது; வேல்விழி, ஓடிவந்து இவர் கழுத்தைக் கட்டிக்கொள்ளவேண்டி இருக்கிறது; விரல்களிடையே பற்றிக்கொண்டு காதுகுடைவதற்கோ அல்லது தன்னைத்தானே வருடிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கோ ஓர் இறகு வேண்டியிருக்கிறது. சிட்டுக்குருவியின் பாடல் வேண்டி இருக்கிறது; இவரை அகழ்ந்தெடுக்கும் விழிகளில் இருந்து, உயிர்க் கவ்வும் ஒரே ஒரு சொல்லைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலா, வேல்விழி, உயிர்க் கவ்வும் ஒரு சொல், சிட்டுக்குருவியின் பாடல், இறகு... இவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்ததும் சமாதானமாகிவிடுகிறார். சமாதனத்துக்குப் பிறகு முனகல் இல்லையா என்றால்... இவர் நாசி தொடும் ’துரோகத்தின் கருகல் வாசனை’யும் (நீ வராத மாலை... பக்- 16) கடத்திப்போகப்பட்ட இவரின் ‘பெருங்காதை இளவரசியை மீட்பதற்காக’(வேள்வி... பக்-17) இந்த வாழ்வு இவருக்குக் கொடுத்திருக்கும் பொய்க்கால் குதிரைக்கு, தன் கால்களைக் கொடுத்துவிட்டு ரத்தம் கசியக் கசிய... மீண்டும் முனக ஆரம்பித்துவிடுகிறார். முனகல் நிற்கிற கணத்தில் இவரது கவிதையும் நின்றுவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனில், ’நான் முனகிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?’ என்று வேல்கண்ணன் என்னைக் கேட்பார் எனில், என் அழுத்தம் திருத்தமான பதில்... ’ஆமாம் வேல்கண்ணன்...’ என்பதுதான்.
பிறந்த நிலத்திலேயே கடைசிவரைக்கும் வாழ்ந்து மடிகிற பாக்கியம் 80-களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மிக அரிதாகவே கிடைத்திருக்கிறது. இங்கே ’வாழ்ந்து’ என்கிற பதத்துக்கு மிகுதியாக அழுத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். 80-களுக்குப் பிறகு பிறந்த அதிகமானவர்கள் கழுத்தில், கல்வி, கணினியைக் கட்டிவிட்டு தட்டச்சிப் பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களை நிராதராவாக விட்டுவிட்டது. ஒரு சமூகமாக, அல்லது ஓர் இனக்குழுவாகச் சேர்ந்து வாழ்ந்த மனிதனைத் தகவல் தொழில்நுட்பம் தனித்தனி தீவாக்கிவிட்டது. இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கிக்கொடுத்த ஆகப்பெரும் சாபம், காமத்தை ஒரு கேப்ஸ்யூலில் அடைத்துக் கொடுத்ததுதான். அது, வேலையின் நிமித்தம் கலிஃபோர்னியாவில் இருக்கும் கணவன், காங்கேயத்தில் இருக்கிற மனைவியோடு தொழிற்நுட்ப உதவியுடன் பொய்யாக சல்லாபிக்கும் மெய்நிகர் உலக தலைமுறையை உருவாக்கியதை அன்றி வேறெதையும் செய்யவில்லை. இயல்பாக எழுகிற பாலுணர்ச்சியைச் சரியாகக் கையாளக் கற்றுத்தராத கல்வியாலும், சமுதாயத்தாலும் பலிகொள்ளப்பட்ட சமீபத்திய பலிதானே மென்பொருள் பொறியாளர் உமா மகேஸ்வரி.
இப்படியாக... மனசுக்கும், தொழில்நுட்பம் தந்த, தனித்த வெக்கையான வாழ்வுக்கும் இடையே ஏதோ ஒன்றைப் போல பிசுப்பிசுக்கும் காமத்தை ‘அறையில்...’ (பக-14) கவிதையில் கச்சிதமாக எழுதிச் செல்கிறார் வேல்கண்ணன்.
சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானநீரில்
நெளிகிறது என் நிழல்...
என்று எழுதி இருக்கும் வேல்கண்ணன், ’நெளிகிறது’ என்ற வார்த்தையில் இறக்கி வைத்திருக்கும் வெக்கையும், தனிமையும், கொதிக்கிற ஒரு வெங்கோடையின் தார்ச்சாலையில் பாதுகைகள் இல்லாத கால்களோடு இறக்கிவிடப்பட்ட ஒரு சிறுமி அனுபவிக்கிற துன்பத்தைவிட இன்னல் மிகுந்தது.
தொகுப்பில் முதல் வரியில் இருந்து கடைசிவரை கவிதைத் தனம் கூடிவந்ததாக ’அறையில்’ கவிதையைப் பார்க்க முடிகிறது. பழுப்பேறித் தொங்கும் பகலையும், மின்னுகிற இரவுக் களியாட்டங்கள் திணித்த அணர்த்தங்களையும் உள்வாங்கிய ஒரு பி.பி.ஓ. தலைமுறையின் காமம் என்றுகூட இதைச் சொல்லலாம்!
இந்தத் தொகுப்பில் காமம் குறித்தும், காத்திருத்தல் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகள் உள்ளபடியே என்னைக் கவர்கின்றன. அதுவரைக்கும் ஏதோ ஒன்றை முனகிக்கொண்டிருக்கும் பேட்டரி ரேடியோவை... காற்றின் திக்கற்ற ஏதோ ஒரு திக்கில் திருப்பி வைக்கும்போது, அது உயிர்பிடித்துக்கொண்டு கானம் பொழிய ஆரம்பிக்குமே அதுபோலத்தான் காமம் குறித்து வேல்கண்ணன் எழுதும்போது அந்தக் கவிதைகளில் மட்டும் உயிர்ப்பின் பச்சையம் அதிகப்படியாகவே வந்து ஒட்டிக்கொகொள்கிறது.
இசைக்காத இசைக் குறிப்பு கவிதையில் வரும்
’முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி’
என்ற வரியைப் படித்ததும் கொஞ்சம் விக்கித்துப் போய்தான் நின்றேன். கவிதையை ஒதுக்கிவிட்டு இந்த ஒரு வரி மட்டுமே எனக்குள் பலவகையான சித்திரங்களை எனக்குள் எழுப்பிச் செல்கின்றன. பால் தூர்ந்துபோன சோமாலியாத் தாயின் மார்பை, பசியில் கடிக்கும் குழந்தையின் வாயில் கசிந்த ரத்தத்துக்குச் சமமானது இந்த வரியில் தொக்கி நிற்கும் வியர்வைத் துளி. கார்ல் மார்க்ஸ் மாளாத ஏழ்மையில் தோய்ந்தபோது அவரது குழந்தைகள் ஜென்னியின் மார்பகத்து ரத்தத்தை உறிஞ்சித்தான் பசியாறின என்று எனக்கு மிகையாகச் சொல்லப்பட்ட சித்திரமும் வந்துபோனது. மார்பகத்துக் காம்பில் வியர்வைத்துளியொன்று துளிர்த்து நிற்கிற அளவுக்கான உள்ளார்ந்த கூடல் ஒன்றும் நினைவுக்குள் வந்துபோகிறது.
உன் தலையை அரிந்து
உன் மடியில் போட்டுக் கொண்டு
நீயேதான் கோதிவிட வேண்டும்... என்ற இசையின் வரிக்கு முன்பும்
என் ரோஜாக்களைப் பன்றிக்குத்
தின்னக் கொடுப்பேன்... என்ற வெய்யிலின் வரிக்கும் முன்பும்
காலமழை
குடைகளுக்கு சொந்த நிறத்தைக் கொண்டுவர,
செங்கொடிகள்
“ ஆட்கள் வேலை செய்கிறார்கள் “ என
சகதியின் நடுவே
படபடத்துக் கொண்டிருக்கிறது... என்ற சாம்ராஜ் வரிக்கு முன்பும்
ஒரே ஒரு மதுபோத்தல் அதற்கே நான் வந்தேன்... என்ற இளங்கோ கிருஷ்ணனின் வரிக்கு முன்பும்
எப்படி வாய்ப்பேச முடியாது விக்கித்து நின்றேனோ அப்படி நின்றேன் மேற்சொன்ன வரிக்கு முன்பும். அந்த ஒரு வரிதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியதே அன்றி, வேறு யாரும் இல்லை.
இந்தியாவின் விவசாயம் ஆண்டுக்காண்டு லாபத்தோடு நடந்துகொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்களைச் சொல்லி, ’நான்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியான விவசாயத் துறை அமைச்சர்’ என்று புளகாங்கிதம் அடைகிறார் சரத் பவார். ஆனால் அதே இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியோ... ’பாரதத் திருநாட்டின் உணவுப் பற்றாக்குறையை நீக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தரும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மட்டுமே சாலச் சிறந்தது’’ என்கிறார். இந்த முரண்களில் இறுக முடிச்சுப் போட்டு, எங்கள் தஞ்சையாம், மருத நிலத்தை மீத்தேன் வாயுக்காக பன்னாட்டு முதலைகளிடம் விற்றுவிட்டார்கள். மருத நிலத்தின் வயிற்றுக்குள் இருக்கும் நிலகரிக்காக, நிலத்தின் இருதயமான விவசாயத்தைக் கூறுபோட கையெழுத்தாகிவிட்டது. நகைச்சுவையாளர் வடிவேலு அவர்கள், ’இங்கனகுள்ள இருந்த என் கிணத்தைக் காணோம்’ என்று சொன்னதைப்போல, இன்னும் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, தஞ்சை விவசாயிகளுக்குப் பிள்ளையாகப் பிறந்த என்னைப் போன்றோரெல்லாம் ’எங்கே எங்கள் காவிரி டெல்டாவைக் காணோம்? எங்கே எங்கள் நதியைக் காணோம், என்கே எங்கள் வாழ்வைக் காணோம்” என்று வாழ வக்கற்று உயிர்ப்பிசைந்து நிற்கப் போகிறோம். அப்போது, ’சோற்றுக்குப் பதிலாக உங்கள் வயிற்றுக்குள் மீத்தேன் வாயுவை நிரப்புகிறோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று அரசியல் கட்சிகள் எங்களை நோக்கி வருவார்களே அன்றி... ஒருபோதும் எங்கள் நதியோ, எங்கள் நிலமோ, எங்கள் வாழ்வோ திரும்பி வரப் போவதில்லை.
கரையோரத்து மணலை
இரு கைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி
என்று வேல்கண்ணன் எழுதுவதைப் போல நாங்கள் குற்றவுணர்ச்சியில் குறுகுறுத்துதான் போக வேண்டி இருக்கும்.
இந்தத் தொகுப்பில் படித்ததும் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளக்கூடிய வலி கடத்திகளாக ’பச்சையம்’, ’சுமக்கும் சாலை’ என்ற இரு கவிதைகளும் இருக்கின்றன. இந்தக் கவிதைகள் எழுதிய ஈரம் காய்வதற்குள் நான் படித்தபோது உணர்ந்த வலியை மறுபடியும் இப்போதும் உணர்கிறேன்.
வலியையும் துரோகத்தையும்... இன்னும் சகலத்தையும் தனக்குகந்த முனகல்களாக எழுதும் வேல்கண்ணன்தான், சில ’கண்டிஷன் அப்ளை’ கவிதைகளையும் எழுதி சலிப்படைய வைக்கிறார். கண்டஷன் அப்ளையோடு பிறந்து, கண்டிஷன் அப்ளையோடு வளர்ந்து, கண்டிஷன் அப்ளையோடு மணந்து, கண்டிஷன் அப்ளையோடு புணர்ந்து, கண்டிஷன் அப்ளைகளை குழந்தைகளாகப் பெற்றுக்கொள்கிற இந்த மாநகரத்தில் வாழ்கிற வேல்கண்ணனால், கண்டிஷன் அப்ளை’க்கு எழுதுவதைத் தவிர்க்கமுடியாமல் அல்லாடுவது தெரிகிறது.
அப்படி இந்தத் தொகுப்பில் ’என் காதல் கவிதையும் நீயும்’, ’மௌன தவம்’, ’மௌனப் புரிதல்’, சரிகை வண்ணத்துப் பூச்சி... போன்ற கவிதைகள் மாளாத சலிப்பைத் தருகின்றன. இந்தக் கவிதைகளில் பறக்கிற வண்ணத்துப்பூச்சி, அளவுக்கு அதிகமாகவே தமிழ் நவீனக் கவிதைகளில் பறந்து அலுத்துவிட்டது. தவிரவும் அதற்கு சாயமும்போய்விட்டது. எல்லாவற்றையும்விட எறும்பு இழுத்துப்போகும் இந்த வண்ணத்துப்பூச்சியை காதலின் சின்னமாக எழும்பிப் பறக்கவைக்க முயற்சிக்கிறீர்கள் வேல்கண்ணன். அது பறப்பதற்குப் பதிலாக கவிதையையும் இழுத்துக்கொண்டே பாதாளத்துக்குச் சரிகிறது!
கவிதையில் நீங்கள் புதைத்துவைக்கும் மௌனம் ஏற்கெனவே பலரும் புழங்கிப் புழங்கி துருவேறிய தகரம்தான். அதை எடுத்து நீங்கள் கவிதைக்குள் செருகும்போது கவிதைகள் நீலம்பாரித்து சுகவீனம் அடைகிறது!
தவிரவும், வேல்கண்ணன் சொற்களை இன்னும் இளக்கமாக இலகுவாகப் பயன்படுத்தலாம் என்பது எண்ணம். இந்தச் ’சொல் தயக்கத்தை’விட்டு வெளியே வந்தால் உங்களால் படைப்பூக்கத்துடன்கூடிய, நீங்கள் சொல்வதைப் போல ’உயிர்க் கவ்வும் சொல்லால்’ ஆன இன்னும் சில கவிதைகளை எழுத முடியும் என்றும் நான் நம்புகிறேன்.
என்னுடைய ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத் தொகுப்பு வந்தவுடன், கவிஞர் இசைக்கு போன் செய்து, ''நண்பா... என் தொகுப்பு வந்துருச்சு... வெளியீட்டு விழா எப்போனு சொல்றேன் வந்துடு'' என்றேன். ’’நண்பா, என்னால் விழாவுக்கு வர இயலாது. இந்தத் தொகுப்பின் மூலம் உனக்கு இன்னும் அதிகமான காதலிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்றான். அந்த ராஸ்கலின் வார்த்தைகள் இன்றுவரை பலித்துக்கொண்டிருக்கின்றன . தவிரவும், அந்தக் கவிதைத் தொகுப்பு, எனக்கு நிறைய நணபர்களையும், ஒரே ஒரு துரோகியையும் அடையாளம் காட்டியது. வேல்கண்ணன் உனக்கும் அப்படியான ஒரு தொகுப்பாக ’இசைக்காத இசைக் குறிப்பு’ அமையட்டும்.
இவை எல்லாவற்றையும்விட வேல்கண்ணன்... இந்தக் கட்டுரையை உனக்கும் எனக்கும் அன்பின் நிமித்தம் ’படா தோஸ்தாக’ இருக்கிற ஜீவகரிகாலனுக்குச் சமர்ப்பித்து, அவரிடம் வழங்குவதுதான் இந்த நேரத்தில் சிறந்த செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கட்டுரையைப் பெற்றுக்கொள்ளும்படி ஜீவகரிகாலனை அழைக்கிறேன்!
(08.03.2014 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த வேல்கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்புக்கான ’இசைக்காத இசைக் குறிப்பு’ அறிமுக நிகழ்வில் வாசிக்கப்பட்டது)

No comments:
Post a Comment