உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்!
கதிர்பாரதி, ஓவியங்கள்: ரவி
ழுத்தாளர்கள், கவிஞர்கள் கண்ணாடிப் பேழையைப் போன்றவர்கள். அவர்களைக் கவனமாகக் கையாள வேண்டும்’ என்பார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். தமிழின் சில 'கண்ணாடிப் பேழை’களைப் பற்றி...
வண்ணதாசன்
கவிதைகளில் கல்யாண்ஜி, சிறுகதைகளில் வண்ணதாசனாக இலக்கிய முகம் காட்டும் சி.கல்யாணசுந்தரம், ஓர் ஓவியரும்கூட. 'தமிழ்நாட்டில் ஓவியர் கோபுலு, கேரளாவில் நம்பூதிரி, ஆந்திரப்ரபா பாபு... இவர்களுடைய ஓவியங்கள் எனக்கு விருப்பமானவை. நான் தொலைந்துபோக விரும்பும் காடாக இவர்களது கோடுகள் இருக்கின்றன. இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் என் கட்டைவிரலை தட்சணையாகத் தரவும் சம்மதம்’ என்பார் வண்ணதாசன்.
''பனிக்குடத்தில் இருந்து சிசு வெளியே வருவதை, ஒரு பசு கன்று ஈனுவதை, முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு ஒரு பறவைக் குஞ்சு உலகை ஸ்பரிசிப்பதை... ஒவ்வோர் ஆணும் பார்க்க வேண்டும். நான், பசு கன்றை ஈனும்போது, கன்று தரையில் விழுவதற்கு முன்பாக கைகளில் ஏந்தியிருக்கிறேன். அந்த நேரத்தில் என் கைகளில் படிந்த உயிரின் பிசுபிசுப்பு இன்னும் என் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டு வருகிறது'' என்கிற வண்ணதாசன், தான் நடந்து செல்கிற பாதையில் இறகுகள் உதிர்ந்துகிடந்தால், பொறுக்கி எடுத்துக்கொள்வாராம். காரணம், ''பறவைகளை வளர்ப்பதைப் போல, நான் இறகுகளை வளர்ப்பதாக நினைத்துக்கொள்வேன். தவிரவும், உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே!'' என்கிறார். சமீபத்தில் சரஸ்வதி பூஜையின்போது வண்ணதாசன் மஞ்சள் தூளைப் பிசைந்து செய்த அம்மனைத்தான் அவரது இல்லத்தில் வழிபட்டிருக்கிறார்கள்!
தியடோர் பாஸ்கரன்
போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன். ''என் முக்கிய பொழுதுபோக்கே புகைப்படம் எடுப்பதுதான். குஜராத்தில் இருந்தபோது 'இந்திய மாடுகள்’ என்ற கான்செப்ட்டில் புகைப்படங்கள் எடுக்க ராஜ்கோட்டுக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றேன். அங்கே கிர் இன மாடு ஒன்று கிட்டத்தட்ட குட்டி யானை அளவுக்கு நின்றிருந்தது. அந்த மாட்டைப் பராமரிக்கும் பெரியவருக்கு 72 வயது. எனக்கு மலைப்பாக இருந்தது. அந்த மாட்டைக் கட்டிக் காப்பாற்றி வந்த பெரியவருக்கு செய்யும் மரியாதையாக, நான் அவரைப் போலவே திருகிவிட்ட கூர் மீசை வைத்துக் கொண்டேன். அதுவே பின்பு என் அடையாளமாக மாறிவிட்டது. அன்றைக்கு நான் எடுத்த அந்த கிர் மாடு புகைப்படம், 1999-ம் ஆண்டு அஞ்சல்தலையாக வெளிவந்தது!'' என்கிற தியடோருக்குப் பிடித்த பறவை... ஆந்தை. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகில் ஐந்து ஆந்தைகள் குடிவந்த பூரிப்பில் திளைக்கிறார் தியடோர்!
நாஞ்சில் நாடன்
தமிழ் நவீன இலக்கிய உலகத்தில் மரபு தோய்ந்த குரல் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடையது.
'' 'உச்சத்தைத் தொடணும்னா உச்சத்தில் இருந்து ஆரம்பிக்கணும்’னு ஒரு ஜென் தத்துவம் இருக்கு. இதுதான் என்னை இயக்கும் மந்திரம்.'' என்கிற நாஞ்சில் நாடன், முன்பெல்லாம் வருடத்துக்குஅதிகபட்சம் மூன்று சிறுகதைகள்தான் எழுதுவாராம். பணி ஓய்வுபெற்ற பிறகு ஐந்து ஆறு என்று எண்ணிக்கை கூடியிருக்கிறது. கம்பன் பயன்படுத்திய சொற்களின் அழகு, ஆழம், வீச்சு... ஆகியவற்றை ஆராய்ந்து இவர் எழுதிய 'கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற புத்தகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் புதிது.
அந்தாதி, உலா, தூது இலக்கியம், பிள்ளைத்தமிழ்.. போன்ற சிற்றிலக்கிய வகை இலக்கியங்களை ஆராய்ந்து 'சிற்றிலக்கியம்’ என்ற புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார். ''நாஞ்சில் நாட்டு உணவு’ என்ற புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். இது நாஞ்சில் நாட்டுப் பண்பாட்டின் இயங்குதளம் குறித்த ஆய்வின் அடிப்படையில் எழுதப்படும் புத்தகம். ''காலம் அனுமதித்தால் இன்னும் ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் என் இப்போதைய ஆசை'' எனும் நாஞ்சில் நாடன், தன் அத்தனை படைப்புகளையும் கையால்தான் எழுதுகிறார். எழுதும்போது பின்னணியில் அருணா சாய்ராம், சஞ்சய் சுப்ரமண்யன், உன்னி மேனன், டி.எம்.கிருஷ்ணா பாடல்கள் கட்டாயம் ஒலிக்கும்!
கலாப்ரியா
கவிஞர் கலாப்ரியா, 40 ஆண்டுகளுக்கு முன் தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்களைச் சந்தித்து பால்யகால நினைவுகளுக்குள் 'தொபுக்கடீர்’ என நீச்சலடித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த அனுபவம் கலாப்ரியாவின் வார்த்தைகளிலேயே...
''காலம் பிரித்துப்போட்டவர்களை, சிவசைலம் 'அவ்வை ஆசிரமம்’ வளாகத்தில் குடும்பத்துடன் ஒன்று சேர்த்திருந்தான் தெய்வநாயகம். 'துலாபாரம்’ மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் அருகில் கை சூப்பியபடி அழுத 'சொக்கு’ என்கிற சண்முகத்தை 45 வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் எனக்கு கண்ணீர் மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது. ஒரே தெருக்காரன். ஆனால், பார்த்துக்கொள்ள இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.
'இது கீதா. செயின்ட் சேவியர் கல்லூரியில் பேராசிரியை. என் மருமகள்; உன் கவிதைகளின் பரம ரசிகை’ என்று எனக்கு வெட்கம் வரும்படி அறிமுகப்படுத்திய வெ.ராமச்சந்திரன் முகம் பார்த்து, அரை நூற்றாண்டு நெருங்குகிறது. கடினமான கணக்குகளை சரசரவென்று போடும் 'தங்க மெடல்’ பழனியாண்டி, சுந்தரனார் பல்கலையின் இயற்பியல் பேராசியர் என்றெல்லாம் செய்தி வரும். பார்த்து
40 வருடங்கள் ஆகிவிட்டன. முருகானந்தமும் நானும் ஒரே சாப்பாடு, ஒரே ரசனை, அவ்வப்போது ஒரே சரக்கு, ஒரே ஊறுகாய்... என நகமும் சதையுமாகப் பல காலம் பழகினவர்கள்தான். என்றாலும் பார்த்து பத்து வருடங்களாவது இருக்கும். ஆசிரமக் குழந்தைகள் வழங்கிய கலை விருந்தில் ஜனனி என்கிற குட்டிக் குழந்தை அழகாக ஆடியது. தெய்வு, என்னையும் என் துணைவியையும், அந்தக் குழந்தைக்குப் பரிசு கொடுக்கும்படி சொன்னான். பிஞ்சுக் கரத்தால் அந்தச் சிறிய சாப்பாட்டுத் தட்டைக்கூட தாங்கிப் பிடிக்க முடியவில்லை. ஆனால், அதன் வாழ்க்கைச் சுமையைக் கேட்டபோது தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜனனியின் அப்பா, அவள் அம்மாவைக் கொலை செய்துவிட்டுத் தானும் செத்துப்போய்விட்டானாம். என்ன ஜனனமோ, என்ன மரணமோ. திரும்பும்போது மனம் கனமாக இருந்தது... சில மலையாளக் கதைகள்போல!''
எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பச்சை நிற சட்டை, அதிலும் கட்டம் போட்ட சட்டைகள் அணிவ தென்றால் ரொம்ப இஷ்டம். எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கும் மிகப் பழமையான மரத்தைத் தேடிப் போய் பார்த்துவிடுவார். செய்யவேண்டிய எழுத்துப் பணிகள், பயண விவரம் போன்றவை முறையாகப் பட்டியல் இடப்பட்டு, எழுதும் மேஜையின் முன்பு இருக்கும். அந்தப் பட்டியல் வாரம் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
சென்னை உதயம் தியேட்டர் அருகில் உள்ள கோகுலம் பார்க் உணவகம், இவருக்கு விருப்பமானது. கோவில்பட்டியில் இருந்து லூதியானா வரை தீப்பெட்டி பண்டல் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்தது இவரால் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று. பொரிகடலை பொடித்துப்போட்ட வதக்கிய வெங்காயம் கொண்டு இவர் செய்யும் சமையல், குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாம். மாலை கே.கே.நகர் சிவன் பார்க்கில் நடைபயிற்சியும், காலை வீட்டின் முன்புறத்தில் ஷட்டில்காக் ஆடுவதும் வழக்கம். இவருடைய ஷட்டில்காக் தோழர்... இயக்குநர் சசி!
தேவதச்சன்
நவீன தமிழ்க் கவிஞர்களில் ஒரு தலைமுறை கவிஞர்களைப் பாதித்தவர் கவிஞர் தேவதச்சன். இவர் தமிழ் சினிமா குத்துப் பாடல்களுக்குப் பரம ரசிகர் என்பது நிச்சயம் ஆச்சர்யம்! ''குறிப்பா 'பரமசிவன்’ படத்துல வர்ற 'ஆச தோச அப்பளம் வடை’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையையும் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையையும் உளவியலாளர்கள் 'அனிமா’னு சொல்றாங்க. அப்படி ஒவ்வொரு மனித மனசும் 'அனிமா’வால் ஆனது. அந்த அனிமாதான் என்னை குத்துப்பாட்டை ரசிக்கவெக்குது. இன்னும் சொல்லப்போனா, 21-ம் நூற்றாண்டின் நெருக்கடியை குத்துப் பாடல்களின் ஒவ்வொரு வரி முடிவிலும் என்னால் உணர முடியுது!'' என்கிறார் தேவதச்சன்.
கோவில்பட்டியில் இருக்கும் இவரது நகைக் கடையில்தான் எப்போதும் இருப்பார். நண்பர்களோடு பேச வேண்டுமென்றால், காந்தி மைதானத்துக்கு வந்துவிடுகிறார். ''இடம் விஸ்தாரமா இருந்தா, பேச நல்லாருக்கு'' என்கிற தேவதச்சனின் அடுத்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு... 'எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது’
விக்ரமாதித்யன்
ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில் மகாகெட்டிக்காரர் கவிஞர் விக்ரமாதித்யன். தமிழகம் முழுக்கவுள்ள பாடல்பெற்ற தலங்கள் அனைத்தையும் தரிசித்துவிட்ட விக்ரமாதித்யனுக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறை, திருவீழிமிழலை... இரண்டு ஊர் கோயில்களும் மிகவும் பிடித்தமானவை. இவரது வாசகர் மதுரை எஸ்.செந்தில்குமார் வாங்கிக் கொடுத்த சேர் டேபிளில் உட்கார்ந்துதான் பெரும்பாலும் எழுதுகிறார். அதற்கு முன்பு சூட்கேஸ் பெட்டியை மடியில் வைத்து எழுதிக்கொண்டிருந்தாராம். ''என் கவிதை வாசகர் சரவணக்குமார் சமீபத்தில் சாலை விபத்தில் இறந்துபோனது என்னைத் துக்கத்தில் ஆழ்த்துகிறது. எனது இரண்டாவது காசி பயணத்துக்குப் பெரும் உதவி செய்தவர் சரவணன். என் கவிதைகளின் நுட்பமான வாசகனை நான் இழந்துவிட்டேன்'' என்று வருத்தப்படுகிறார்!
கி.ராஜநாராயணன்
வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா., தீவிரமான சிவாஜி ரசிகர். பூர்வீக இடைசெவல் கிராமத்துக்குப் போய் பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இயல்பாகவே கி.ரா., சாப்பாட்டுப் பிரியர். 'சாப்பிடுறது ரெண்டு இட்லி. ஆனா, மூணு சட்னி வேணும் இவர் நாக்குக்கு’ என்று மனைவி கணவதி அம்மாள் இவரைக் கிண்டலடிப்பார். 'எழுத்தாளர் ஆகவில்லையென்றால், மிகப் பெரிய இசைக் கலைஞராக வந்திருக்கக்கூடியவர்’ என்கிறார் இவரைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும் எழுத்தாளர் கழனியூரன். ’ஒரு கதை கொடுங்க...’ என்று கேட்டால் கி.ரா-விடம் இருந்துவரும் முதல் பதில் 'இல்லை... முடியாது’ என்பதுதான். ஆனால், எழுத வேண்டும் என்று மனசு வைத்துவிட்டால், தகவல்கள் சரம்சரமாகக் கொட்டும். ஒரு கதையை மூன்று முறையாவது திருத்தி எழுதிவிட்டுத்தான் பத்திரிகைகளுக்குக் கொடுப்பார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட கி.ரா., 'வலியோடு வாழ்வது எப்படி என்பதற்கு நாந்தான் உதாரணம்’ என்று அடிக்கடி சொல்லிச் சிரிப்பார். டி.கே.சி. ரசிகமணியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு வாரம் முன்பே தென்காசிக்குப் போய்விடுவார். விழா முடிந்தும் ஒரு வாரம் தங்கி இருப்பாராம். அந்த இரண்டு வாரங்களும் பேச்சு... பேச்சு... பேச்சு... என இலக்கியக் கச்சேரிதான். 'அந்தப் பேச்சுகளைப் பற்றிய பதிவுகள் எங்கும் இல்லை. அதைத் தொகுத்தால் கி.ரா-வின் நாவலைவிட முக்கிய இலக்கியமாக அவை இருக்கும்’ என்கிறார்கள் நண்பர்கள். வீட்டில் இருக்கும்போது கதர் வேட்டியும் மேல் துண்டும் மட்டுமே அணியும் கி.ரா., இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது மட்டும் பண்ணையார் போல பட்டு வேட்டி சட்டை உடுத்திக்கொள்வார்!
சுகுமாரன்
கவிஞர் சுகுமாரன் பிறந்தது கோவையில்; வாழ்வது திருவனந்தபுரத்தில். 12 வயது வரை படித்தது ஊட்டி வெலிங்டனில். வெளிவர இருக்கும் முதல் நாவலுக்கு 'வெலிங்டன்’ என்றே பெயர் வைத்திருக்கிறார். இந்தி மொழி கற்கும் ஆர்வத்துடன் இந்தி வகுப்பில் சேர்ந்தாராம். அங்கு இவருடன் படித்த ஓர் அழகியப் பெண் திடீரென வகுப்புக்கு வராமல் போகவே, இவரும் நின்றுவிட்டார். 'என் கையெழுத்து அழகாக இருக்கும். நான் இந்தி எழுத்துகளை அழகாக எழுதுவேன். அவளுக்கு நன்றாக இந்தி உச்சரிக்க வரும். அவள் இந்தி வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். 'இவனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?’ என்று அந்த இந்திக்கே பொறுக்கவில்லைபோல... அவள் வகுப்பிலிருந்து நின்றுவிட்டாள். நானும் இந்தி கற்பதை நிறுத்திவிட்டேன்’ என்று நண்பர்களிடம் சொல்லிச் சிரிப்பார். பிறகு, வைக்கம் முகமது பஷீர் எழுத்துகளைப் படிப்ப தற்காக மலையாளம் கற்றுக்கொண்டார். சுகுமாரன் நன் றாகச் சமைப்பார். வெண் பொங்கல் ரொம்ப ஸ்பெஷலாம். பெங்களூருவில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் அறிமுகமான இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஃப்ரான்சிஸ்கா மாசியானோ, சுகுமாரன் சமைத்த உப்புமாவைச் சுவைத்த பிறகு, நெருங்கிய நண்பராகிவிட்டாராம். இத்தனைக்கும் சுகுமாரனுக்குப் பிடிக்காத உணவு... உப்புமா!
கோணங்கி
பாரதியாரின் 'புதிய கோணங்கிகள்’ கவிதையில் வருகிற 'கோணங்கி’யை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டவர் எழுத்தாளர் கோணங்கி. சமீபத்தில் தனது 'த’ நாவலை தனுஷ்கோடியில் வைத்து தன்னந்தனியாக வெளியிட்டிருக்கிறார். ஒரு சுருட்டின் மீது மதுவை ஊற்றி அந்தச் சுருட்டைப் பற்றவைத்து கடலுக்குப் படைத்தவர், 'த’ நாவலின் 36பக்கங்களை கடலுக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார்.
ராமேஸ்வரத்தை சிதைத்த தனுஷ்கோடி புயலில், கடலில் மூழ்கிப்போன ரயிலுக்கு கடைசியாகக் கொடி காட்டிய ரயில்வே ஊழியரின் கைகளைப் பார்க்க வேண்டும் என்று தனுஷ்கோடிக்குச் சென்று அவரைக் கண்டுபிடித்து, அவரது கைகளைத் தடவிப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினாராம் கோணங்கி.
'தனுஷ்கோடியில் திரிகிற ஒவ்வொரு நாயும் எனக்கும் பழக்கம். எச்சில் ஒழுகுகிற அதன் நாவில் நான் இருக்கிறேன்!’ என்று அடிக்கடி சொல்வார் கோணங்கி.
No comments:
Post a Comment