08 June, 2011

மகரந்த அலை

யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது

வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு

தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்

இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்

தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

12 May, 2011

புத்தனின் கனவு

கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவினை

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
மேலும் எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்

கனவுக்கும் புத்தனுக்குமான இடைவெளியில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

03 May, 2011

நெடுஞ்சாலை மிருகம்

வனங்களை ஊடறுத்து
ஊரை ஒதுக்கிவிட்டுச் சலேரென
அதிவேகத்தில் நீளுளுளுளுளுகிற
தேசிய நெடுஞ்சாலைகளில்
உலவித் திரிகிறது மரணம்
வேட்டை மிருகமாக

இரு எதிரெதிர் வாகனங்களைக் குழப்பி
சின்னஞ்சிறு ஜீவனின் இடது விலாவின் மீது
தன் கொலைநகத்தைப் பதியவிட்டு
கனவுகளைப் பதியமிட்டு வளர்க்கும்
மூளையைச் சிதறடித்து
................................................
................................................
எதன் பொருட்டும் துணுக்குறாது
நக்கிச் சுவைக்கிறது
ஒரு கட்டிளங்காளையின் வலியை
வயோதிகத் தாயின் ஓலத்தை
பிஞ்சுக்குருத்தின் சடலத்தை
கணவனை இழந்த புதுப்பெண்ணின்
வெக்கையை

இம்முறை வீழ்த்தப்படுவது
ஒரு பாதசாரியாக... கர்ப்பிணியாக...
இதயநோயாளியாக... இராணுவ வீரனாக...
கன்னியாஸ்திரியாக... பாதிரியாக....

எவர்குறித்தும் இரக்கமில்லை

ஒரு பருவப் பெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்

நன்றி: கல்கி 22.05.2011

==============================

(அதிவேகத்துப் பழக்கப்படாத ஒவ்வொரு
கிராமத்தின் புறத்தேயும் நழுவிச் செல்லும்
சாலை ஒன்று இருந்தது.காலத்தை அசைப்போட்டபடி
கால்நடைகளும் பாதசாரிகளும் புழங்கும் காட்சி
மங்கிய ஓவியம்போல் ரம்யமாய் இருக்கும்.
இப்போது அநதச் சாலைகளை மேம்படுத்தி
தேசிய நெடுஞ்சாலையாக்கி விட்டார்கள்.
அந்தச் சாலையின்அதிவேகத்தை
கிராமங்கள் மிரட்சியோடு பார்த்துக்கொண்டு
இருக்கின்றன. மனிதச் சுவடுகளைக்கூடப்
பதியவிடாத குரூரம் அதன் சுபாவமாகிவிட்டது.
இரவில் ஒளிரும் அதன் வெளிச்சத்தின் ஜுவாலை,
வேட்டை மிருகத்தின் கண்களென நடுநடுங்கச்
செய்கிறது. வேட்டையாடப்பட்டு விடுவோமோ
என அச்சத்தோடு புதரடியில் பதுங்கும் எளிய
ஜீவனைப் போல, சாலயோரத்துக் கிராமங்கள்
இரவுக்குள் பதுங்கி விம்முகின்றன நித்தமும்.
வேகத்துள் புழங்காத கிராமத்து ஜீவன்களை
அதிவேகச் சாலை மிருகம் அவ்வப்போது
வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரே இரவில் ஏழு வேட்டைகளைப்
பார்த்ததன் மனவிழிப்புதான் இக் கவிதை)



14 April, 2011

எலி

பற்றி எரியும் புராதன நகரமென
தகிக்கும் தீயுடல்
ஜ்வாலை தாளாது
எலியின் சாயல்பூசி அங்கிங்கெனப்
போக்கிடமற்று மோதிச் சிதைகிற
ஏதோவொன்று
உன் பருவம் மிழற்றும்
இசையின் நீர்மையில் தணிகிறது
தாப விமோசனமாய்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 April, 2011

ஆலகாலம்

சட்டையை உறித்து நழுவுகிற ஸர்ப்பமென நகரும்
நதியின் வலது கரையில் முளைத்திருக்கும் மரம்
ஆலகாலக் கனிகளைத் தரக் காத்திருக்கிறது

கிளைகளில் தொங்குகிற விரியன் குட்டிகள்
காய்த்துத் திரண்ட மரத்தின் மேனியெங்கிலும்
தம் பிளவான நாவுகளால் நீவிவிடப்
புல்லரித்த அதன் நிழலும் துளிர்க்கிறது

பச்சைய காலத்து இலைகளைக் கொய்து
தலைக்கு வைத்துறங்கும் அவளின் கனவுகளில்
நீலம் பாரித்துச் சலசலக்கிறது அந்நதி

மரத்தின் வேர்கள் நீளும் தூரத்துக்கு இணக்கமாய்
புதைத்துவிடுங்கள் நான் உயிர்த்துவிடுவேன்
என்று சபலப்படுகிறான் அவன்

அவன், அவள், விரியன், மரம், நிழல்
யாவற்றையும் இழுத்துக்கொண்டு சுழிக்கையில்
விரியன் மரமாகி அவள் விரியனாகி
அவன் நிழலாகி மரம் அவளாகி
நிழல் நதியாக

காலத்தை அறுத்துக்கொண்டு நுரைக்கிறது
ஆலகாலம்

நன்றி: 361 டிகிரி

29 March, 2011

1

முன்மாலைக்கும்

பின்மாலைக்கும் இடையே

மிதவேகத்தில் செல்கிற ரயில்

ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திச் சிவப்பில்

பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்

பயணிக்கிற

அவளின் முலைகளை

தாலாட்டி தாலாட்டி


2

நிச்சலனமுற்று

இருந்த தெப்பக்குளத்தில்

கொத்துக்கொத்தாய்

பார்வைகளை அள்ளி

வீசிவிட்டு வந்துவிட்டாள்

சலனமுற்ற மீன்களில் சில

நீந்திக்கொண்டிருக்கின்றன

அவனது ஈசான மூலையில்


3

இரவு தளும்பிக்கொண்டு

இருக்கிற குளத்தில்

நெளிந்துகொண்டு

இருக்கிற பௌர்ணமியை

கொத்தும் கொக்கு

றெக்கை விரிக்க

நிலவு பறக்கிறது

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

19 March, 2011

ஒலி விளையாட்டு

நாற்புறமும் எழும்பி நிற்கும் சுவற்றின்
சிறு வாயில் வழி உள்நுழைந்து
ஒலியை விசிறி எறிவதும்
அது எதிரொலித்துத் திரும்புகையில்
குதூகலிப்பதுமாய் விளையாடுகிறான் திலீபன்

அண்ணனின் விடுமுறை கழிக்க
அண்ணனோடு திலீபன் ஊருக்குச்
சென்றிருக்கையில்
அவனின் ஒலிவிளையாட்டை
அப்பா ஆட ஆரம்பித்திருந்தார்

இருபத்தெட்டு வயதான ஒலி
எதிரொலித்துத் திரும்புகையில்
ஒண்ணே முக்கால் வயதாயிருந்தது

நன்றி: புன்னகை -காலாண்டிதழ்



10 March, 2011

இருள்தான் எரிந்துகொண்டிருந்தது

ஒளி வருவதற்கு முன்பிருந்தே அந்த அறைக்குள்
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
ஒளி வருவது புலனானதே இருளால்தான்

ஒளி வேட்டை மிருகத்தின் சாயலில்
இருளைக் கடித்துத் தின்னத் தொடங்கியபோது
கருப்பாய்ச் சொட்டிக்கொண்டிருக்கும்
இருளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது அதன் திரி

இருளிலிருந்து உயிர்கொண்ட ஒளியிலிருந்து
தன் புன்னைகையைச் சரிசெய்கிறான் சிவன்

பின்பு சிவனே இருளாகி அவனே ஒளியாகிறான்
அவனொளியில் ஒளிர்கிறது உலகம்

இருளே ஒளியாகி ஒளியே சிவனாகி
சிவனே உலகாகி உலகே இருளாலானால்
இருளே சிவனல்லவா

எல்லாம் இருள் மயம்

04 March, 2011

லாலிபாப் சாபம்

மம்மி... டாடி...
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க
லாலிபாப்பை வாயில திணிச்சுடுவேன்
என்னைத் திட்டுனீங்க
உங்களை பஃப்ஃபல்லோவா மாத்திடுவேன்

மூனரை வயதுக்கு வளர்ந்துவிட்ட
கபிலனின் கடும் எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாததால்
இப்போது இரண்டு பஃப்ஃபலோக்கள்
ஒரு லாலிபாப்பைச் சுவைக்கும்
சாபத்தில் இருக்கின்றன