05 September, 2026

பதினான்காம் சகாயராணி : ஒரு பெரு வாழ்வின் சின்னஞ்சிறு பகுதி _ விமர்சனம் : கிருத்திகா தாஸ்

திர்பாரதி அவருடைய கவிதைகளோடு ஒன்றிணைந்து வாழ்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும் அவருக்குள் இருந்துதான் அவரின் கவிதைகளை வெளிக்கொண்டு வருகிறார் என்று சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும்.

 நினைவுகளின் ஒவ்வொரு ஆழங்களிலும் அவருக்கென்று வாழ்ந்த ஓர் வாழ்க்கையும் ஓர் உலகமும் சொல்லிவிட இருக்கிறதுஅது புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வாசகரை விரல்பிடித்து நடக்கச்செய்து அழைத்துச் செல்கிறார் புத்தகம் முழுமைக்கும்

 புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மூடி வைக்கும்போது புத்தகம் நிறைவடையவில்லை. அப்போதுதான் அது வாசகரைச் சுற்றி நிறைந்துவிடுவதைத் தொடங்குகிறதுகவிதைகள் நம் எண்ணங்களுக்குள் வேறொரு உலகத்தையும் வேறொரு புரிதலையும் மற்றொரு புரிதல் இருக்கலாம் என்ற சாத்தியத்திற்கான தைரியத்தையும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

 மலர்ந்து விட்டாயா.. புன்னகைத்துக் கொள்.. உதிர்ந்து விட்டாயா.. கண்ணீரைத் துடைத்துக்கொள்.. உன் புன்னகையையும் உன் கண்ணீரையும் உன்னைவிட வேறு யார் அறிந்து விட முடியும் சலோமி’.. சலோமியை வாசித்து முடித்தபோது என் ஜன்னல் வழி மரக்கிளை ஒன்றில் சலோமி ஊஞ்சல் கட்டி விளையாடத் தொடங்கியிருந்தாள் உக்கிர வெயில் புழுதி பறக்க ஆயிரம் ஜென்மங்களாய் அவளுக்குப் பிடிக்கும் என அவள் மட்டுமே அறிந்த பாடல் ஒன்றைப் பாடியபடி.

உன் முதல் வார்த்தைகளும் என் பதில் வார்த்தைகளும் வேறு வேறாய் இருந்தாலும் அவை இரண்டுமே ஒன்றுதான். உன் தொட்டிச் செடிகள் பூ பூக்க நான் பொறுப்பு. உன் மேகங்கள் மழை பொழிய நான் பொறுப்புஎன்று சொல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன காப்ரியல் மாமாவுக்கும் லீலி மலர் சித்திக்கும் இடையில் இருக்கும் ஒரு நியதி

அது உன்னை துரத்தவில்லை. நீ அதை இஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறாய். ஒவ்வொரு நொடியும் உன் கையோடு அல்ல உன் வாழ்க்கையோடு அனுதினமும் அதைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய். ஒரு நாளில் நீ மறைந்து போவாய். அப்பொழுதும் உனக்கு அது துணையாய் வரும்என்கிறதுஒரு கோட்டு சித்திரக் குறிப்புகள்கவிதை.

கதிர்பாரதியின் 5வது கவிதை நூல்

 ஒன்றுமில்லையாய் ஆகுதல்.. ஒன்றும் இல்லையை அடையாளம் காணுதல்.. ஒன்றும் இல்லைக்குள் புகுந்து கொள்ளுதல் அத்தனை எளிதான பாதை அல்ல.. உன் கேள்வி உன்னிடம் இருக்கக்கூடும். ஆனால் அதற்கான பதில் கிடைத்த நொடி அந்தக் கேள்வி மறைந்துவிடக்கூடும்.. அந்தப் பதில் உனக்கு மறந்துவிடக்கூடும்.. அந்த ஒன்றும் இல்லையை நீ உணர்ந்து இருக்கிறாயா.. உணர்ந்து கொள்.. ஒரு நாளில் ஒன்றுமில்லையாய் மாற்றம் கொள்.. பின் திரும்பி வா.. மீண்டும் அடுத்த பாதைக்குத் தயாராகு.. என்று உரக்கச் சொன்னதுஒன்றுமில்லை என்று ஒன்று உண்டுகவிதை..

 சட்டென்று நான் எதிர்பார்த்திருக்காத அந்த நொடி. அந்தக் குட்டி நொடி வந்து விடுகிறது. அந்தக் குட்டி நொடியில் ஒரு குட்டிப் பூனையின் குட்டி நாக்கு இந்த மொத்த பிரபஞ்சமாய் எனக்குத் தெரிந்து விடுகிறது. அந்தக் குட்டிப் பூனையின் குட்டிப் பசிக்குக் கொஞ்சூண்டு பால் கொடுப்பது அன்றைய நம் வாழ்வின் அர்த்தமாய் மாறிவிடுகிறது. எங்கிருந்தோ வந்த அந்தக் குட்டிப் பூனையும் எங்கிருந்தோ இலக்கின்றி நடந்து வந்த நானும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அந்தக் குட்டிப் புள்ளி ஒரு குட்டி உலகமாய் மாறிவிடுகிறது. சரி. அடுத்த நொடி வரும் வரை இந்த ஒரு நொடி நீண்டு கொண்டே போகட்டும். என்கிறதுகுட்டியூண்டு பசிகவிதை..

 மழையின் ஈரத்தையும் கப்பல் விடும் குழந்தையையும் ரசிக்கிறாயா ரசித்துக் கொள்.. அங்கே முட்கள் கிடக்கிறது வழிப்போக்கர்களைப் பார்த்து நடக்கச் சொல்.. ம்ம்.. அங்கே யாரோ உதவி என்று கதறுகிறார்கள் பார் கண்டு கொள்ளத் தேவையில்லை கடந்து சென்று விடு.. மறக்காமல் கத்தியை எடுத்த இடத்திலேயே மீண்டும் சொருகி விடு அந்த உயிரின் தேவை இனி நமக்கில்லை.. ஒன்று மட்டும் நினைவில் கொள் உன் கண்ணாடி இனி உன்னை ஒருபோதும் ஒருவரிடம் இருந்தும் மறைக்காது.. ஆம்.. உன் கண்ணாடி நேற்றே சில்லு சில்லாக நொறுங்கி விட்டது.. ம்ம்.. கண்ணாடிக் கவிதைகள் சொன்ன வார்த்தைகள் நூறு. சொல்லாத வார்த்தைகள் ஆயிரம்.

 என்றோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு பிறவியில் அவள் அந்த நட்சத்திரத்தைக் கண்டிருக்கிறாள். அதோடு விளையாடி இருக்கிறாள். அதோடு கதைகள் பேசி இருக்கிறாள். அது சொன்ன சங்கதிகளைத் தன்னுள் இன்னும் இந்தப் பிறவியிலும் சுமந்து கொண்டு இருக்கிறாள். அவள் அன்றி யார் அறிவார் அந்த நட்சத்திரத்தின் கதைகளை. அது இத்தனை யுகங்களாகவும் இத்தனை பிறவியிலும் அவள் முன் தோன்றித் தோன்றித் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்ததோ என்னவோ. இன்று கிறிஸ்துமஸ் ரயில் பயணத்தில் அந்த நட்சத்திரத்தை அத்தனை சரியாக அடையாளம் கண்டு கொண்டு விட்டாள் அந்தக் குழந்தை..

 இன்னும் ஒருமுறை உற்றுப் பார். அந்தக் கயிறு கட்டப்பட்டிருப்பது அந்தக் குட்டி நாயின் கழுத்திலா அல்லது உன் கைகளிலா என்று உறுதி செய்துகொள். யாருடைய பிடி யாரிடம் உள்ளது என உடனடியாக அறிந்து கொள். உன் சிறு வயது, அந்தக் குட்டி நாய்க்கும் தெரியும் அந்தக் கயிறின் பிடிக்கும் தெரியும், நீ ஒளித்து வைத்திருப்பதாய் நினைக்கும் காலத்துக்கும் தெரியும். காலம்ஏமாற்றங்கள்என்று எழுதப்பட்ட ஒரு அன்பளிப்புப் பெட்டியை உன்னிடம் கொடுக்கவில்லை. பிறகு ஏன் அந்தப் பெட்டி ஒன்று இருப்பதாய் நினைத்துச் சுமந்து கொண்டே அலைகிறாய். அந்தக் குட்டி நாயின் கயிற்றை அவிழ்த்து விட்டுவிடு. அது உன்னோடு உன் காலடியிலேயே கூட நடந்து வரும். அல்லது தரதரவென்று இழுத்துக் கொண்டே செல். அது உனக்கு எதிர்த் திசையில் ஓடிவிடும்.. என்கிறதுசத்தியப் பாதைஎன்னும் அற்புதமான கவிதை..

 

கதிர்பாரதி

நிழல் பொய் சொல்வது கிடையாது. நிழலுக்குத் தனியான வாழ்க்கை கிடையாது. அதற்குக் கற்பனை செய்யத் தெரியாது. ம்ம். ஆனால் நிழல் பொய் சொல்லும். நிழலுக்குத் தனியான வாழ்க்கை உண்டு. அது கற்பனை செய்யும். ஆம். உன் பொய்யை அது சொல்லும் தன்னுடையதென . நீ திசை திருப்பிக் கொண்டே இருக்கும் உன் வாழ்க்கையை அது வாழ்ந்து கொண்டே இருக்கும். உன் கற்பனையை அது நிஜம் போலவே காட்டும். ஏனென்றால் அது உன்னுடைய நகல். அது உன்னுடைய போலி. அது உருவான நாளில் தொடங்கி நீ முடியும் நாள் வரை அதற்கு உன்னைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நீ எத்தனை தூரம் நடக்கும்போதும் கால் வலியைப் பற்றிப் புகார் சொல்லாமல் உன்னோடு நடந்து வரும். நீ எந்த உருவத்துக்கு மாறினாலும் கேள்விகள் கேட்காமல் அந்த உருவத்துக்கு அதுவும் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும். நிழலுக்குக் கேள்விகள் இருந்தாலும் உன்னிடம் அது கேட்காது.. உண்மை எது பொய் எது என்று அதற்கு நன்றாகத் தெரியும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அது அறியும். ஆனால் அவற்றை நீ தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிழல் முடிவு செய்து விடுகிறது.

உன் நிஜங்களை மட்டுமே தொடர்ந்து அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிழலுக்கு அதன் நிஜங்களை உனக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றது முடிவு செய்து விடுகிறது. நீ செய்த பாவங்களையும் புண்ணியங்களையும் ஒரு தராசின் இரண்டு பக்கங்களிலும் வைத்து அதைக் கிழக்கு மேற்காக வைத்து விடு.. நிழல் தனக்கு வேண்டிய நீள அகலங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.. நிழல் அது உன் நிஜத்தின் நகல். நீ அறியாத ஒரு வாழ்க்கையை உன் நிழல் வாழவில்லை ஆனால் உன் நிஜத்தை வாழ்ந்து கொண்டிருக்கும் நகலை நீ பார்த்ததே இல்லைஎன்று வாழ்வின் உண்மைகளைச் சொல்லாமல் சொல்கின்றன  ‘நிழல் என்பது நிஜப்போலிகவிதைகள்.

 நீ அவதரிக்கும் முன்பும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருந்தது.. நீ முடிந்து போன பின்பும் இந்த உலகம் இயங்கும்.. நீ விட்டுச் சென்றது எதுவும் ஒரு நாளில் இல்லாமல் போகும். பின் ஏதோ ஒரு நாளில் மறக்கப்பட்டுவிடும். ஏதோ ஒரு நாளில் நீ வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட இல்லாமல் போகும்.. அதன் பிறகும் உலகம் இயங்கும்.. இருத்தலின் பொருட்டு அவதரிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் எங்கோ ஒரு கதவு திறந்து கொண்டே இருக்கும்.. கண்டடைதல் போதுமானது.. போராடுதல் அவசியமற்றது..  ஒரு சிறு புள்ளியைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இரு.. இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தப் புள்ளி உன் உலகமாய் மாறி இருக்கும்.. உன் உலகமாய் மாறிய அந்தப் புள்ளிக்கு நீயும் உனக்கு அந்தப் புள்ளியும் இன்றியமையாத ஒன்றாய் மாறி இருப்பீர்கள் பின்பு வந்த சற்று நேரத்தில்.. அதன் பிறகும் சுழற்சி நடந்து கொண்டிருக்கும் நீ உணர்ந்தாலும் உணராவிட்டாலும். உன்னை நீ அவ்வப்போது சந்தித்துக் கொள்.. முன் பின் அறிமுகம் அற்ற ஒருவனைப்போல்.. நினைவு மங்கிய கனவில் கண்ட ஒரு உருவத்தைப் போல்.. அந்த முகம் தெரியாத இருளில் வழி கேட்டு மறைந்து போனவனைப் போல்.. உன்னை நீ சந்தித்துக்கொள் அவ்வப்போது.. ஏனெனில் உன்னை நீ இதுவரை முழுதாய் அடையாளம் கண்டு கொண்டதில்லை.. முழுதாய் அடையாளம் கண்டு கொள்ள இதுவரை உன்னை நீ அனுமதித்ததும் இல்லை.. ஆம், உனக்கு அது தெரியாது.. இல்லை, உனக்கு அது தெரியும்.. என்று அற்புதமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றனஅவரவர் அவரவர்க்கு எண் சாண்கவிதைகள்..

 பார்வைகளில் பட்டு விடும்படி அவள் எப்போதும் நடமாடிக் கொண்டிருப்பதில்லை.. அவள் குரல் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள் மறைந்துவிடுவாள்.. என் குரல் முழுதாய்க் கேட்கும் முன்னே என்னைக் கண்டுபிடித்து விடுவாள்.. எண்ணங்களின் ஏதோ ஒரு அடுக்கில் பத்திரமாய் அழுந்தப் பதிந்துவிட்ட ஒரு உருவமாய்.. ஒரு குரலாய்.. ஒரு தென்றலாய்.. ஒரு ஜன்னல் ஓரத்துக் குருவியாய்.. காலை நேரத்து இலைத் துளிராய்.. கண நேரத்தில் கடந்து போன சிரிப்பொலியாய்.. கோடைகால மழையாய்.. முடிந்து போகாத வாழ்வாய்.. எங்கோ.. எங்கோ வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் சகாயராணி சித்தி..

 ஆமைக்கு ஏன் இத்தனை பெரிய ஓடு  இருக்கிறது.. மழைத்துளி எதனால் மேலிருந்து கீழ் விழுகிறது.. ஏன் நேராகத்தான் பார்த்து நடக்க வேண்டுமா.. பின் பக்கமாக முதலில் நடந்து.. அதன் பிறகு இடது பக்கமாகத் திரும்பி.. மீண்டும் பின்பக்கமாகவே நடந்து செல்லக்கூடாதா..  ஏன் என் கைகளில் ஐந்து விரல்கள் தான் இருக்கின்றன..’’ ஏன் இந்த ஒரு கவிதையைப் பற்றி நான் எழுதும்போது மட்டும் வலது புறத்திலிருந்து தொடங்கி இடது புறம் நோக்கி எழுதக்கூடாது என்று ஒரு புன்னகைக் கேள்வி கொடுத்துக் கொண்டே இருந்ததுஇப்படிக்கு விதண்டாவாதம்என்னும் இந்த அழகிய கவிதை :)

ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அதை உன் கண்களால் பார். அதை உன் உணர்வுகளால் புரிந்துகொள்ளக் கொஞ்சம் பைத்தியமாக மாறு. ஒரு அர்த்தமற்ற கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதி வை. பின் அந்தக் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அந்தக் காகிதத்தைக் கிழித்தெறிந்துவிடு.. ஒரு குழந்தையை ரசிக்க உன் புன்னகையால் பார்அதன் குழந்தைமையை உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் பைத்தியமாக மாறிவிடு.. அது உனக்கானது என்று அறிந்துகொள்ள கொஞ்சம் உன் அறிவால் காண். அது எல்லாருக்குமானது என்று உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் பைத்தியமாக மாறுஎன்று சொல்லிக் கொண்டே இருக்கிறதுபைத்தியத்தின் பாரதூரம்கவிதை..

இன்னும்.. இப்படித்தான்.. பேசிக்கொண்டே இருக்கின்றன புத்தகத்தில் உள்ள அத்தனை கவிதைகளும்.. ஒரு வாழ்க்கைக்குள் அடங்கி இருக்கும் பல்வேறு வாழ்க்கைகளை.. பல்வேறு கதைகளை.. பல்வேறு உண்மைகளை.. பல்வேறு உலகங்களை.. புரிதல்களை.. இன்பங்களை.. இன்னல்களை.. இந்த வாழ்க்கை வேறு யாரோ கண்டு கொண்டிருக்கும் ஒரு கனவு போல்.. நாமெல்லாம் அந்தக் கனவுக்குள் ஒரு சின்னக் கண்ணாடிக் குடுவைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் போல். அந்தக் கண்ணாடிக் குடுவையை யாரோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றிக் கொண்டே இருந்தது புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரையிலும்..தொடங்கிய நொடி முதல் நிறைவு பெறும் நொடி வரை நிறைந்து இருக்கும் இந்த வாழ்வின் ஒவ்வொரு அணுவில் இருந்தும் கவிதைகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி அவர்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு மனிதனின் ஒரு நாளில் நீளும் பாதை என்பது அவனின் தனிப்பட்ட கால் தடங்கள் மட்டுமல்ல. பெருவாழ்வு வாழ்ந்து முடித்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, வாழப் போகிற பல கால் தடங்கள் நிறைந்த பாதையே அது..

அன்று அறிமுகமான ஒரு புத்தம் புதிய நண்பரிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு விடைபெற்ற பின் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகைக் கையசைவைக் கொடுத்துவிட்டுச் செல்லும் ஒரு சினேகத் தருணத்தைப் புத்தகம் உருவாக்குகிறது..

பதினான்காம் சகாயராணி’ - இது ஒரு பெரு வாழ்வின் சின்னஞ்சிறு பகுதி.. புத்தகத்தை மூடி வைத்த பின்பும் இந்தக் கவிதை எண்ணத்தில் ஆழப் பதிந்துவிட்டது.


நீ இறந்த பிறகு நடப்பதென்ன 

 அல்லது

 இறப்பில் நடப்பதென்ன? “

 நெடுநாள் கேட்டாய் அல்லவா..

 நம் ஒவ்வொருவரின் கண்ணாடியும்

 சில்லுச் சில்லாகி  

 துகள் துகளாகிவிடுகிறது..

No comments: