03 May, 2011

நெடுஞ்சாலை மிருகம்

வனங்களை ஊடறுத்து
ஊரை ஒதுக்கிவிட்டுச் சலேரென
அதிவேகத்தில் நீளுளுளுளுளுகிற
தேசிய நெடுஞ்சாலைகளில்
உலவித் திரிகிறது மரணம்
வேட்டை மிருகமாக

இரு எதிரெதிர் வாகனங்களைக் குழப்பி
சின்னஞ்சிறு ஜீவனின் இடது விலாவின் மீது
தன் கொலைநகத்தைப் பதியவிட்டு
கனவுகளைப் பதியமிட்டு வளர்க்கும்
மூளையைச் சிதறடித்து
................................................
................................................
எதன் பொருட்டும் துணுக்குறாது
நக்கிச் சுவைக்கிறது
ஒரு கட்டிளங்காளையின் வலியை
வயோதிகத் தாயின் ஓலத்தை
பிஞ்சுக்குருத்தின் சடலத்தை
கணவனை இழந்த புதுப்பெண்ணின்
வெக்கையை

இம்முறை வீழ்த்தப்படுவது
ஒரு பாதசாரியாக... கர்ப்பிணியாக...
இதயநோயாளியாக... இராணுவ வீரனாக...
கன்னியாஸ்திரியாக... பாதிரியாக....

எவர்குறித்தும் இரக்கமில்லை

ஒரு பருவப் பெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்

நன்றி: கல்கி 22.05.2011

==============================

(அதிவேகத்துப் பழக்கப்படாத ஒவ்வொரு
கிராமத்தின் புறத்தேயும் நழுவிச் செல்லும்
சாலை ஒன்று இருந்தது.காலத்தை அசைப்போட்டபடி
கால்நடைகளும் பாதசாரிகளும் புழங்கும் காட்சி
மங்கிய ஓவியம்போல் ரம்யமாய் இருக்கும்.
இப்போது அநதச் சாலைகளை மேம்படுத்தி
தேசிய நெடுஞ்சாலையாக்கி விட்டார்கள்.
அந்தச் சாலையின்அதிவேகத்தை
கிராமங்கள் மிரட்சியோடு பார்த்துக்கொண்டு
இருக்கின்றன. மனிதச் சுவடுகளைக்கூடப்
பதியவிடாத குரூரம் அதன் சுபாவமாகிவிட்டது.
இரவில் ஒளிரும் அதன் வெளிச்சத்தின் ஜுவாலை,
வேட்டை மிருகத்தின் கண்களென நடுநடுங்கச்
செய்கிறது. வேட்டையாடப்பட்டு விடுவோமோ
என அச்சத்தோடு புதரடியில் பதுங்கும் எளிய
ஜீவனைப் போல, சாலயோரத்துக் கிராமங்கள்
இரவுக்குள் பதுங்கி விம்முகின்றன நித்தமும்.
வேகத்துள் புழங்காத கிராமத்து ஜீவன்களை
அதிவேகச் சாலை மிருகம் அவ்வப்போது
வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரே இரவில் ஏழு வேட்டைகளைப்
பார்த்ததன் மனவிழிப்புதான் இக் கவிதை)6 comments:

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

கதிரவன் said...

சாலை பெண்ணின் நளினமென்றால் விபத்து நடப்பது சகஜம்தான்...

கிருஷ்ணப்ரியா... said...

சபாஷ் கதிர். அசத்தலாகச் சொல்லிவிட்டீர்கள்..... வளைவுகள் அழகாய் இருப்பது மட்டுமல்ல, எப்போதுமே ஒரு பதட்டத்துடன் நம்மை அத்திசையில் திரும்ப வைக்கும்... நெடுஞ்சாலை மிருகம் தன் இரையை தேர்வு செய்யும் விதம் தான் என்ன என்று நமக்கு புரிவதேயில்லை... கண்ணீரும் வேதனையும் தீண்டாத தொலைவில் இருந்து வேட்டையாடும் அதன் இயல்பை படிப்பவர் மனம் துணுக்குற அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள்....

rvelkannan said...

அட்டகாசம் கதிர்

*இயற்கை ராஜி* said...

very nice

நிலாமகள் said...

//வேட்டை மிருகமாக
எதன் பொருட்டும் துணுக்குறாது
எவர்குறித்தும் இரக்கமில்லை
வீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்//

அப்பப்பா ...! குரூரம் தான்!!