21 July, 2011

பிச்சி

பிச்சியாகிச் சுற்றிவருகிறாள் கடல்தேவதை
தஞ்சையின் கிழக்குக் கடற்கரைசாலையில்

சடைத்த தலைமுடிகளில்
ஊழிக்கூத்தின் வெக்கையும் பிசுபிசுப்புமாய்ப்
போய்க்கொண்டிருந்தவள்
சாலையின் வெயிலில் காயும் மச்சங்களுக்காய்
மார்பறைந்து சிந்தினாள்
கண்களிலிருந்து துளித்துளி கடல்களை

முலைகள் அதிர அதிர அலைகளின் முற்றத்தில்
அவள் சமீபிக்கையில்
பயந்து உள்வாங்கியது அந்த நீலப்பள்ளம்

வாய்க் குதப்பி உமிழ்ந்தாள் வசவுகளை
இருண்டு மருண்டிருந்த கடல்மீது
அந்தக் கொடி பொருந்திய கப்பல்
அவளை அதிஉக்கிரமாக்கியது

கடற்காகங்களைத் தடுத்தாட்கொண்டு
சில வார்த்தைகள் உபதேசித்து
அதனைக் கொண்டுசேர்க்கும்படிக்குப்
பிரயோகித்தாள் தமது அதிகாரத்தை

தொடுவானுக்கும் அவளுக்குமிடையில்
தத்தளித்துத் தவித்த கடலை
யாரேனும் ஒருவர் காத்தருளினால்
தேவலாம் போலிருந்தது

சுமக்குமளவுக்கு முந்தானையில்
மணலை முடிந்தவள்
தன் முலைகளுக்கு மத்தியமத்தில் பொதிந்து
கண்ணயர்ந்தாள்

அவள் கால்களைத் தழுவி நழுவியோடியது
ஒரு சிற்றலை

13 July, 2011

தொலைதல்

கரைபுரண்டோடிய
காவிரியோரம்
அன்னிய கம்பெனியின்
தண்ணீர்ப் பாட்டில்
அமோக வியாபாரம்
வாங்கிக் குடித்துத்
தாகம் போக்குகிறான்
வெள்ளாமை தொலைத்த
விவசாயி

28 June, 2011

பறவையின் பாடல்

எனக்குள் வேர்கொழித்து
பசிய அலை வீசும் வனத்தை
புகையிலைத் தேய்த்துருஞ்சும் உனக்குள்
எப்படியாகிலும் கடத்திவிட வேண்டும்
முதலில்

ஈரத்தைக் கொண்டு வர
வாய்க்கால் வெட்டினேன்
வெளிச்சத்திலும் கொஞ்சம் வெப்பத்திலும்
உயிர்கள் ஜனனிக்கும் ஆகையால்
அதனையும் செய்துவைத்தேன்
மகரந்தங்களைக் கடத்தும்வண்ணம்
வண்ணத்துப்பூச்சிகளையும் சிருஷ்டித்தேன்
வனத்துக்குக் கம்பீரமாய் இருக்குமென
மிருக செட்டைகளை உலவவிட்டேன்
பருவங்கள் சிலவும் வந்தன
எதுவும் உன் சுவரைத் துளைக்கவில்லை

எனினும் தெரியுமெனக்கு
வனத்தின் சல்லிவேர்களோடு
சிலவிதைகளைக் கவ்வி வருகிற
பறவையின் பாடலொன்றே போதும்

13 June, 2011

உயரம்

நேற்று...
இப்பெருமலை சிகரத்து உயரம்
அடிவாரத்தில் களைப்பாறும்
இந்தப் பறவையின்
பாதங்கள் கீழிருந்தது


08 June, 2011

மகரந்த அலை

யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது

வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு

தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்

இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்

தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

12 May, 2011

புத்தனின் கனவு

கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவினை

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
மேலும் எதுவாகவும்
வெளிப்படலாம் எதிர்பாராதருணத்தில்

கனவுக்கும் புத்தனுக்குமான இடைவெளியில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

03 May, 2011

நெடுஞ்சாலை மிருகம்

வனங்களை ஊடறுத்து
ஊரை ஒதுக்கிவிட்டுச் சலேரென
அதிவேகத்தில் நீளுளுளுளுளுகிற
தேசிய நெடுஞ்சாலைகளில்
உலவித் திரிகிறது மரணம்
வேட்டை மிருகமாக

இரு எதிரெதிர் வாகனங்களைக் குழப்பி
சின்னஞ்சிறு ஜீவனின் இடது விலாவின் மீது
தன் கொலைநகத்தைப் பதியவிட்டு
கனவுகளைப் பதியமிட்டு வளர்க்கும்
மூளையைச் சிதறடித்து
................................................
................................................
எதன் பொருட்டும் துணுக்குறாது
நக்கிச் சுவைக்கிறது
ஒரு கட்டிளங்காளையின் வலியை
வயோதிகத் தாயின் ஓலத்தை
பிஞ்சுக்குருத்தின் சடலத்தை
கணவனை இழந்த புதுப்பெண்ணின்
வெக்கையை

இம்முறை வீழ்த்தப்படுவது
ஒரு பாதசாரியாக... கர்ப்பிணியாக...
இதயநோயாளியாக... இராணுவ வீரனாக...
கன்னியாஸ்திரியாக... பாதிரியாக....

எவர்குறித்தும் இரக்கமில்லை

ஒரு பருவப் பெண்ணின் நளினத்தோடு
வளைகிற ஒவ்வொரு திருப்பத்திலும்
அவளின் வனப்பையொத்த மினுமினுப்புகளில்
வீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்

நன்றி: கல்கி 22.05.2011

==============================

(அதிவேகத்துப் பழக்கப்படாத ஒவ்வொரு
கிராமத்தின் புறத்தேயும் நழுவிச் செல்லும்
சாலை ஒன்று இருந்தது.காலத்தை அசைப்போட்டபடி
கால்நடைகளும் பாதசாரிகளும் புழங்கும் காட்சி
மங்கிய ஓவியம்போல் ரம்யமாய் இருக்கும்.
இப்போது அநதச் சாலைகளை மேம்படுத்தி
தேசிய நெடுஞ்சாலையாக்கி விட்டார்கள்.
அந்தச் சாலையின்அதிவேகத்தை
கிராமங்கள் மிரட்சியோடு பார்த்துக்கொண்டு
இருக்கின்றன. மனிதச் சுவடுகளைக்கூடப்
பதியவிடாத குரூரம் அதன் சுபாவமாகிவிட்டது.
இரவில் ஒளிரும் அதன் வெளிச்சத்தின் ஜுவாலை,
வேட்டை மிருகத்தின் கண்களென நடுநடுங்கச்
செய்கிறது. வேட்டையாடப்பட்டு விடுவோமோ
என அச்சத்தோடு புதரடியில் பதுங்கும் எளிய
ஜீவனைப் போல, சாலயோரத்துக் கிராமங்கள்
இரவுக்குள் பதுங்கி விம்முகின்றன நித்தமும்.
வேகத்துள் புழங்காத கிராமத்து ஜீவன்களை
அதிவேகச் சாலை மிருகம் அவ்வப்போது
வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரே இரவில் ஏழு வேட்டைகளைப்
பார்த்ததன் மனவிழிப்புதான் இக் கவிதை)



14 April, 2011

எலி

பற்றி எரியும் புராதன நகரமென
தகிக்கும் தீயுடல்
ஜ்வாலை தாளாது
எலியின் சாயல்பூசி அங்கிங்கெனப்
போக்கிடமற்று மோதிச் சிதைகிற
ஏதோவொன்று
உன் பருவம் மிழற்றும்
இசையின் நீர்மையில் தணிகிறது
தாப விமோசனமாய்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

05 April, 2011

ஆலகாலம்

சட்டையை உறித்து நழுவுகிற ஸர்ப்பமென நகரும்
நதியின் வலது கரையில் முளைத்திருக்கும் மரம்
ஆலகாலக் கனிகளைத் தரக் காத்திருக்கிறது

கிளைகளில் தொங்குகிற விரியன் குட்டிகள்
காய்த்துத் திரண்ட மரத்தின் மேனியெங்கிலும்
தம் பிளவான நாவுகளால் நீவிவிடப்
புல்லரித்த அதன் நிழலும் துளிர்க்கிறது

பச்சைய காலத்து இலைகளைக் கொய்து
தலைக்கு வைத்துறங்கும் அவளின் கனவுகளில்
நீலம் பாரித்துச் சலசலக்கிறது அந்நதி

மரத்தின் வேர்கள் நீளும் தூரத்துக்கு இணக்கமாய்
புதைத்துவிடுங்கள் நான் உயிர்த்துவிடுவேன்
என்று சபலப்படுகிறான் அவன்

அவன், அவள், விரியன், மரம், நிழல்
யாவற்றையும் இழுத்துக்கொண்டு சுழிக்கையில்
விரியன் மரமாகி அவள் விரியனாகி
அவன் நிழலாகி மரம் அவளாகி
நிழல் நதியாக

காலத்தை அறுத்துக்கொண்டு நுரைக்கிறது
ஆலகாலம்

நன்றி: 361 டிகிரி