24 April, 2010

கவிகிறது மெழுகின் சாட்சியோடு

தீ தின்னும் மெழுகை சாட்சி வைத்து
தன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் இரவு
வாதையின் கூடாரமென
சன்னமாய்க் கவிகிறது அவள் மீது

முகமன் சொல்லி வரவேற்கும்
அவள் முறுவலின் பின்புறத்தில்
சலசலக்கும் ரணங்களின் கண்ணீரில்
மேலதிகமாய் இருள்கிறது அவ்விரவு

வடிக்கட்டமுடியாத வக்கிரம்
இயலாமையின் கழிவிரக்கம்
அந்தரங்கத்தின் வெக்கை
கொண்டாட்டத்தின் எச்சம்...
யாவற்றையும் அவளுக்குள் துப்பிவிட்டு
பேய் சிரிப்பில் அதிரும் அவ்விரவை
யார் பார்வைக்கும் படாதவாறு
பதட்டத்தோடு ஒளிக்கவே விழைகிறாள்
தீட்டுத் துணியென

17 April, 2010

ஏக்கத்தில் விழுதல்

வன்நுகர்ச்சிக்குப் பலியான ஊமைச் சிறுமியின்
பீதியை நகலெடுத்த முகத்தோடும்
கட்புலனாகா கிரீடத்தைப் பொருத்தியிருக்கும்
அசௌகரியத்தோடும்
பார்வைக்கு வந்துபோகும் அவர்தான்
கடவுளின் நேரடி வாரிசு என்பதை அறிந்த கணம்
அவன் காலத்தை ஊழியலை தாக்கியிருந்தது

சர்வாதிகாரியின் கொடுங்கரத்தின்கண் சிக்குண்ட
சாமான்யப் பூச்சியைப் போல
பூலோகத்தின் பித்தலாட்டங்களும் துரோகங்களும்
அவரைக் கையாளத் துவங்கியிருந்தன

எழுச்சிக் குறைவான குறியை
வாய்க்கப்பெற்றிருந்தாராகையால்
விசனமுற்ற தாம்பத்யம்
அவ்வளவாய்ச் சேர்ப்பதில்லை என்பது குறித்து
அவருக்குண்டு அவர்மீது கழிவிரக்கம்

மதுவின் கணத்திலன்றி பிற பொழுதுகளில்
தான் கடவுளின் வித்தென்ற கித்தாப்பு
அவர் சிரசுக்குள் நிலைத்ததில்லை

இல்லத்துக்கு அவர் திரும்புகையில்...
நெகிழ்ந்திருந்த உள்ளாடையை திருத்தியபடி
அதரத்தில் நர்த்தனமிடும் முறுவலைச் சிந்தியவாறு
கடைவாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்
சாத்தான்

களைத்திருந்த மனைவியின் வியர்வையில்
நிறமிழந்த தமது அந்தரங்கத்தை
என்ன செய்வதென்று அறியாது
சாத்தானாகும் ஏக்கத்தில் விழுந்தார்
கடவுள்

நன்றி: உயிரோசை (27.09.10)

12 April, 2010

கை உதறுதல்

காற்றென்னை கை உதறிய
பொழுதொன்றின் அந்திமத்தில்தான்
பருவத்தைக் கொட்டிச் செய்த ப்ரியத்தை
திரும்பப் பெற்றுக்கொண்டாய்

விண்மீன் உதிர்ந்துவிழுந்த தடத்தின்
வடுவென புகைந்து குமையும் இதயத்தில்
பகல் போல ஒளிரும் எனதன்புக்குள்
பூனைப்பாதம் பொறுத்தி ஊடுருவின
அமாவாசை சபலங்கள்

மலைமுகட்டின்மீதேறி தற்கொலைபுரியும்
அந்திப் பகலவனின் வண்ணம் கொண்டது
பலிகொள்ளப்பட்ட நேசத்தின் ரத்தம்

பழிப்பு செய்கிற காலம்
துவண்டெழும் வார்த்தைகளின்
சுவாசப் பரப்பெங்கிலும்
சுவாதீனத்தைக் கலந்து கெக்கலிக்கிறது

மல்லாந்து துயில முயன்ற
மொட்டை மாடி நிசி ஒன்றில்
உன் பாதரட்சையின் எழிலெடுக்கும் பிரயாசையில்
தோற்றுத்தோற்றுச் சரிகிறது
மூன்றாம்பிறை

யுகமாயினி ஜூலை 2010

30 March, 2010

புதிர்வெளி

புரண்டு துயில்கையில்
கண்களிலிருந்து நழுவிய கனவொன்று
படுத்துக்கொண்டது அவனருகாமையில்
இணையையொத்த குழைவோடு

முதிராத முலையின் ஸ்பரிசத்துக்கீடாய்
குறுகுறுப்பை நல்கிய அதனியல்பால்
புலன்களுக்குள் முளைவிட்ட றெக்கை
மஞ்சத்தை பறவையாக்கிவிட்டதெனில்
அதொன்றும் துர்கனவல்ல

ஆகாசத்தில் நீரருந்தும் சக்கரவாகத்துக்கிணையாய்
நிரம்ப உண்டு சிலாகிப்பதற்கு ---
சாத்தானின் ஆசீர்வாதத்துக்கும்
கடவுளின் சாபத்துக்கும்
அடர்ந்த அன்பின் குரூரத்துக்கும்
கசந்த நேசத்தின் நெகிழ்வுக்குமான
புதிர்வெளியில் இப்போது அலைவுறும்
அந்தக் கனவு குறித்து

எனினும் இத்தோடு கைவிடலாம்
அதன் கழுத்திலும் தொங்கக்கூடும் கொடுவாலாய்
தாம்பத்யத்தின் செங்கோல்

யுகமாயினி ஜூலை 2010

14 February, 2010

காமத்தின் நவரச சிங்காரிப்பு

1
போதும் இம்சிக்காதே
மர்மஸ்தானத்தில் ஊடுருவும்
மனசின் விரல்களைத் திருப்பிக்கொள்
விகாரப்படும் துறவின் இச்சையென
கவிகிற புன்னகை
சபிக்கப்பட்ட பாலையில் வன்மங்கொண்டூரும்
சர்ப்பத்தின் விஷமென நைச்சியமாய்ப் படர்ந்து
ஆன்மாவுக்குள் மரணத்தை விதைக்கிறது

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

சாத்தானின் மனைவி

தேவகன்னியின் மயக்கத்தில்
நிர்வாணமாய்க் கிடக்கிறார் கடவுள்
அவ்வழியே கடக்கையில்
மனைவியின் கண்களைப் பொத்திக்
கூட்டிப்போகிறான் சாத்தான்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

அனுபவம்

யவ்வனம் கட்டியிழுத்துவந்த
ஆயிரம் யானைகள்
கிளப்பிய பெருமூச்சில்
ஒளி தூர்ந்த சூரியனை
வெட்கக் கீற்றனுப்பி
உயிர்ப்பித்தாள்
இப்படியாய் விடிந்தது
அவர்கள் சயன அறையின்
முதல் அனுபவம்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

13 February, 2010

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

சுகன் (ஆகஸ்ட் 2010)

02 February, 2010

சிறிது

என் சின்னஞ்சிறு திலீபனின்
குறுங்குடை மறைத்துவிடுமளவுக்கு
சிறிதிலும் சிறிது வானம்

நன்றி: கல்கி (28.02.10)