12 April, 2010

கை உதறுதல்

காற்றென்னை கை உதறிய
பொழுதொன்றின் அந்திமத்தில்தான்
பருவத்தைக் கொட்டிச் செய்த ப்ரியத்தை
திரும்பப் பெற்றுக்கொண்டாய்

விண்மீன் உதிர்ந்துவிழுந்த தடத்தின்
வடுவென புகைந்து குமையும் இதயத்தில்
பகல் போல ஒளிரும் எனதன்புக்குள்
பூனைப்பாதம் பொறுத்தி ஊடுருவின
அமாவாசை சபலங்கள்

மலைமுகட்டின்மீதேறி தற்கொலைபுரியும்
அந்திப் பகலவனின் வண்ணம் கொண்டது
பலிகொள்ளப்பட்ட நேசத்தின் ரத்தம்

பழிப்பு செய்கிற காலம்
துவண்டெழும் வார்த்தைகளின்
சுவாசப் பரப்பெங்கிலும்
சுவாதீனத்தைக் கலந்து கெக்கலிக்கிறது

மல்லாந்து துயில முயன்ற
மொட்டை மாடி நிசி ஒன்றில்
உன் பாதரட்சையின் எழிலெடுக்கும் பிரயாசையில்
தோற்றுத்தோற்றுச் சரிகிறது
மூன்றாம்பிறை

யுகமாயினி ஜூலை 2010

2 comments:

பனித்துளி சங்கர் said...

சற்று மாறுபட்ட சிந்தனை . வார்த்தை பயன்படுத்தியிருக்கும் முறை மிகவும் ரசிக்கக்கூடியதாக உள்ளது .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

உயிரோடை said...

மிக அழகானதொரு கவிதை