04 March, 2011

லாலிபாப் சாபம்

மம்மி... டாடி...
ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க
லாலிபாப்பை வாயில திணிச்சுடுவேன்
என்னைத் திட்டுனீங்க
உங்களை பஃப்ஃபல்லோவா மாத்திடுவேன்

மூனரை வயதுக்கு வளர்ந்துவிட்ட
கபிலனின் கடும் எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாததால்
இப்போது இரண்டு பஃப்ஃபலோக்கள்
ஒரு லாலிபாப்பைச் சுவைக்கும்
சாபத்தில் இருக்கின்றன


26 February, 2011

சிறகின் வழியே

மருத்துவமனையிலிருந்து துவண்ட நாற்றென
ஆயாவை வீட்டுக்கு ஏந்திவரும்
அந்தப் புளியமரத்து முடுக்குப்பாதையில்
தலைகுப்புற அசைவற்றுக் கிடந்த
வண்ணத்துப்பூச்சியை இழுத்துப்போகின்றன
கொலைக்கரம் வாய்த்த எறும்புக் கூட்டம்

காற்றுத் தொகுதி ஆராதித்துக்கிடந்த
அதன் வண்ணச் சிறகளிலிருக்கும்
நான்கைந்து ஓட்டைகளின் வழியே
வெளியேற முடிவு செய்துவிட்டது
ஆயாவின் உயிர்


10 February, 2011

காலத்தினாற்செய்த கொலை

துணுக்குற வேண்டாம்
இதில் எவ்வித தவறுமில்லை
இன்னும் சொல்வதென்றால்
இது நானுங்களுக்குக்
காலத்தினாற் செய்த உதவி

நீலம்பாரித்துக் கிடந்த உங்களது நாட்களை
மீட்டெடுக்க அவனுக்கேது உரிமை

வீழ்ச்சியுறுவதற்கெனவே உற்பத்தியாகும்
நதியிலிருந்து ஒரு கை நீரள்ளித்
தாகம்போக்க அவனெப்படிக் கற்றுத் தரலாம்

இறுக்கத்தின் நிலத்தில் நெகிழ்வின் துளிகளைச்
சொட்டுவிப்பது எந்தவகையில் முறை

பிடாரனின் பாம்புக்கூடையை ஆவலோடு
நோக்கிக்கொண்டிருக்கையில்
அழும் உங்கள் குழந்தைக்குப்
பால் புகட்ட பணிக்க இவன் யார்

எனக்குள்ளும் சாணைப் பிடிக்கும்
உங்களுக்கான கேள்விகளிலிருந்து
ஒன்றை உருவிப் பாய்ச்சினேன்
அவன் கழுத்தில்
பசித்திருக்கும் ஓநாயின் பாய்ச்சலாய்

வெளித்தள்ளிய நாவிலிருந்து
ஒழுகும் உமிழ்நீரில் நெளியவிருக்கும்
புழுக்களை அடித்துக்கொள்ளாமல்
பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)

29 January, 2011

மனுஷ்யகுமாரனின் மறியை பிதாவுக்குப் பலிகொடுத்துவிட்டு...

கக்கடைசியில் கல்வாரிக்கு அடித்திழுத்துப் போகிறாம்
எம் மனுஷ்யகுமாரனை
மனக்கசடு தோய்ந்த பரிகாசத்தோடும் - அவன்
காயங்களில் வழியும் நிணத்துக்கிணையான குரூரத்தோடும்
ஆறுதல் தரமுற்படுவோருக்கும் அவன் பாடுகளின்
துயரம்தான் கிட்டுமென்ற எச்சரிக்கையோடும்

தாளாது துவழும் அவன் காலடிகளைக்
கசையடிகளால் இம்சிக்க மறக்கவில்லை
அவன்பொருட்டு யாரேனும் கண்ணீர் உகுக்க நேர்ந்தால்
இம்சையை இரட்டிப்பாக்கவும் தவறவில்லை

மனுஷ்யகுமாரனின்
அத்தனை துயரங்களையும் கண்ணுற்ற எம் கண்கள்
வேசியின் வசப்பட்ட புலனாய்க் களிப்பால் திளைக்கிறது
அவன் தாகமென்று துவண்டபோது
திராட்சை ரசத்தில் எக்களித்த நாவுகளை இன்றும்
பாதுகாத்துக் கடத்துகிறோம் எம் சந்ததிகளுக்கு

தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன்
இழுத்துப்போகிற சிலுவைமரத்தின் அடிநுனியின்
தேய்மானத்திலிருந்து கசிந்துகொண்டே இருக்கிறது
எப்போதுபோல எம்மீதான கிருபை

மனுஷ்யகுமாரன் தொட்டுக் குணமளித்த
கரங்களைக் எம்மிடம் கையளித்துவிட்டு
சாந்தசொரூபியாய் முறுவலிக்கையில்
மனசின் வேசை திடுக்கிடுவதை மறைக்க
அடித்து இறக்கினோம் ஆணிகளை

விசணமுற்ற எம் குத்தீட்டிகள்
தூக்கிநிறுவிய சிலுவையில் தொங்கும் மனுஷ்யகுமரனின்
விலாநோகக் குத்தி உயிர்சோதிக்கையில்
பெருக்கெடுக்கும் ரத்தத்தில் நனைகிறது

அங்கலாய்த்த பெண்களையும் அவர்தம்
இறுக்கமுற்ற குழந்தைகளையும்
எம் கொடும் பார்வைகளால் அமர்த்தி
வழித்தவறிய மனுஷ்யகுமாரனின் மறியை
பிதாவின் பெயரால் பலிகொடுத்துவிட்டு
வீச்சமடிப்பது அதன் மாமிசம்தானென்கிறோம்

07 January, 2011

நாளின் பொம்மை

காற்றில் அடித்துக்கொணரப்பட்ட
கிழிந்த நாட்காட்டித் தாளைப் போலவும்
கறுத்துத் திரண்ட பாறையின்மீது
மோதிச் சரிகிற அலையைப் போலவும்
எனக்குச் சம்பவித்திருக்கிற இந்நாளுக்கு
நேற்றைய இயலாமையின் கழிவிரக்கமும்
எதிர்க்கால அச்சமும் முகமாயிருந்தது

எனது வலது பாரிசத்தில் கிடத்தி
ஆசுவாசப்படுத்தத் தாலாட்டினேன் அந்நாளை

நோயுற்ற குழந்தையின் கடவாயில்
மருந்து புகட்டும் சங்கின் வடிவில்
என் சொற்களை வடித்துக்கொண்டு
பருக்கினேன் துளி தைரியத்தை

வாலைக் குமரிகளின் யவ்வனம் கொப்பளிக்கும்
கூடுமிடங்களுக்குக் கூட்டிப்போய்
கிளர்ச்சியூட்ட எத்தனித்தேன்

புராதனமிகு கோயிலுக்குள் நடத்திச்சென்றபோது
அங்கிருந்து விடுபட மறுத்து எதெதையோ இட்டுக்கொண்டு
உதம்பியபடியேயிருந்த அந்த நாளின் மனம்
மார்கழியின் ஈரக்காற்றுத் தீண்டிய
சதைத் துண்டங்களாய் நடுக்கமுறுவதை
அவதானிக்க முடிந்தது

துக்கத்தின்பால் தோய்ந்துகிடக்கும்
துஷ்டிவீட்டைப் போல இருளத் துவங்கிய அந்நாளை
கபிலனிடம் ஒப்படைத்துவிட்டு உறங்கிப்போனேன்

அதிகாலை உறக்கம் விழிக்கையில்
நாளிலிருந்து என் சாயலில்
ஒரு பொம்மையை உருவாக்கிவிட்டு
புன்னகையை அணைத்தபடிக்கு
உறங்கிக்கொண்டிருந்தான்

நன்றி: உயிர் எழுத்து(மார்ச்2011)

15 December, 2010

படர்தல்

யாசித்துக் குரலெலுப்பும்
பிச்சைக்காரன் பொருட்டு
சட்டென்று மனம் கூம்பிக்கொள்ளும் நீ
நிறுத்தி வைத்திருக்கும்
கொல்லைபுற முற்றத்துப் பந்தலில்
குதூகலமாய்ப் படர்கின்றன
யாதொன்றுமறியா கனகாமரமும்
பாரிஜாதமும்

ஐம்பூதங்களின் அதிகாரியாக்குக

கடவுளர்களை அதிகாரம் செலுத்தும் ஐம்பூதங்களே
உம்மிடம் சமர்ப்பிக்கிறேன் என்னை
உம் சக்திகளின் சகல வல்லமையோடும்
எனக்குள் சம்பவியுங்கள்
ஒருபோதும் என்னைக் கை நெகிழ்ந்துவிடாதீர்கள்
எதிரிகளைப் புறங்காணச் செய்யும்
உன்னதங்களையும் எனக்கு ஆசிர்வதியுங்கள்
எனக்கு எதிராய் உங்கள் செங்கோல்
திரும்பாதிருக்கட்டும் எப்போதும்
உம் நீதிபரிபாலனத்தின் சிறுதுரும்பும்
என்னைப் பரிசோதிகாத கொடுப்பினையின்
மகிழ்வைச் சுவீகரிக்கட்டும்
என் ஆசைகளைப் பூர்த்திக்கும்பொருட்டு
பிரயாசைகொள்ளட்டும் உம் ஏவலாளிகள்
பரியாசைக்காரர்களின் பாதங்கள்
தீண்டாதபடிக்கு என் நிலத்தை மீட்டருளும்
சேதமுறாவண்ணம் வதந்திகளிடமிருந்து
என் காற்றைத் தடுத்தாட்கொள்ளும்
வல்லூறுகளின் கூரிய நகங்களில்
கிழிபடாதிருக்க என் வானத்தை இரட்சியும்
தீயனவற்றோடு இணைத்து நன்மைகளையும்
காவுகொள்ளாத சக்தி கொடு என் நெருப்புக்கு
கொடும்வெக்கையிலும் ஈரத்தை இழக்காத
நீர்மை வேண்டும் என் நீருக்கு
இயலுமாயின் என்னைக் குறித்துக் களிகூறுங்கள்
உம் அதிகாரங்களின் பரிணாம நீட்சியாய்

நன்றி: கல்வெட்டுப் பேசுகிறது (ஜனவரி 2011)

11 December, 2010

சேர்வது குறித்த சிந்தனை

வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கக்கடைசியில் கன்னிக் கழியாமலே
காலம் கழியலாயிற்று கோமதி அக்காவுக்கு

அவள் பார்வையின் குவிமையத்தில்
விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்வது குறித்துதான்
ஓரே சிந்தனையாய் இருக்கிறது

கோழியை மறுதலித்தல்

மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை

ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்

சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை

எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்