31 October, 2026

நூல் வாசிப்பு: பா.மகிழ்மதி ~ தாய் இதழ் ~ நீர்மேல் நடக்கும் பூச்சிகளைப் போலக் கவிதைகள்! https://www.thaaii.com/?p=88471

 சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்ற கவிஞர் கதிர்பாரதியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூல் ‘உயர்திணைப் பறவை’.
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள், ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கம் தட்டான்கள் ஆகிய அவரது முந்தைய கவிதைத் தொகுப்புகள் இலக்கிய வெளியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
பாக்கியம் சங்கர் சொல்வதுபோல கதிர்பாரதியின் கவிதைகள் நரகத்தில் இருந்து சொற்கள் எடுத்து, சொர்க்கத்தின் நறுமணம் தடவி நம்முன் நடனமாடி சிரிக்கின்றன.
தமிழின் மிக முக்கியமான கவிதைகளை இந்தத் தொகுப்பில் கதிர்பாரதி எழுதியிருக்கிறான் என்று உறுதியாகச் சொல்லும் பாக்கியம் சங்கர், அதற்கு நானே சாட்சி என்கிறார்.
“நான்கு வருட இடைவெளியில் மூன்றாவது தொகுப்பு. நல்ல இடைவெளிதான். வயசில், மனதில், உடலில், வேகம் அடங்கி உள்முகமாக வளர ஆரம்பித்திருக்கிறேன்.
பேச்சில் செயலில் அணுகுமுறையில், கவனிக்கத் தகுந்த நிதானம் வந்ததுபோல தோன்றுகிறது.
இப்பருவத்தில் எழுதிய கவிதைகளில் அது படியவே செய்திருக்கிறது” என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடும் கதிர்பாரதி, காட்சி ஊடக உலகில் பணியாற்றி வருகிறார்.
எப்போதும் பசித்த மனநிலை யானையின் காதுக்குள் புகுந்துவிட்ட எறும்பின் புசி குடைந்து கொண்டே இருந்தது.
எங்கெங்கோ கூட்டிச்சென்றது. அதன்மூலம் நிறையப் பேரைத் தொட்டேன்.
பார்த்த, பேசிய, கேட்ட, படித்த, உணர்ந்த எல்லாவற்றையும் தாண்டிய ஒளியை இருளை கவிமனம் சலித்துச் சலித்துப் பார்த்து, தூங்கும்போதும் மனம் வேட்டை மிருகம் போல விழித்திருந்தது.
நடுச்சாமத்திலிருந்து நானே உதிர்ந்து நானே சேகரமானேன். இந்தப் பிரபஞ்சமே உன்னுடயதைப் போல நீ பிரகாசமாக இரு என்று ரூமி எனக்காகச் சொன்னதுபோல பிரகாசமாக இருந்தேன் என்கிறார் கதிர்பாரதி.
நூலின் 226 பக்கங்கள் முழுவதும் சிறிய, மிகச் சிறிய, நீண்ட, மிக நீண்ட கவிதைகளால் நிரம்பியுள்ளன. சலிக்கச் சலிக்க கவிதைகள் எழுதியுள்ளார் கதிர்பாரதி.
“அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது” என்ற தலைப்பில் அம்மாவைப் பற்றிய நினைவுகளைக் கவித்துவம் பொங்க முப்பது கவிதைகளில் இறக்கி வைத்திருக்கிறார்.
கதிர்பாரதி
“எண்களில் கவிதைகளை அடுக்கிச் சொல்வது மிகப் பழைய உத்தி. இந்தத் தொகுப்பில் இறங்குமுக எண்களில் சில கவிதைகள் இருக்கும்.
அது ஒரு விளையாட்டாகச் செய்தது என்றாலும், அதனதன் அளவில் ஒவ்வொன்றும் தனித் தனி கவிதையே என்றாலும், அகச்சரடு ஒன்று எல்லாக் கவிதைகளையும் இணைக்கிறது” என்று ஒரு நீளமான வாக்கியத்தை எழுதிக்கொண்டே செல்கிறார் கவிஞர்.
எதையும் முனைந்து கைப்பற்றத் தெரியாத எனது சுபாவம் இந்தக் கவிதைகளை எழுத எனக்கு உதவியாக இருந்தது என்று சொல்லும் கதிர்பாரதியின் சில கவிதைகள்…

எல்லாத் துயரங்களையும்
சிறு சுடராக்கி
அகலில் ஏற்றி
மாடக்குழியில் வைத்துவிட்டு
வீட்டுக்குள் போகிறாள்
அம்மா
அவள் கடக்கவிரும்பாத இரவு
வந்துகொண்டிருக்கிறது
முன்புபோல

*
மனைவிக்குக் காத்திருந்தேன்
மின்சார ரயில் நடைமேடையில்
‘ஏன்ப்பா நிக்கிற குந்து’ என்றாள்
சிமெண்ட் பலகை காட்டி
யாரோ ஓர் அம்மா
என் அம்மா பக்கத்தில்
குந்திக்கொண்டேன்

*
பால்குடி மறக்க
கற்றாழைச் சாற்றைக் காம்பில் இழுவி
முலை ஈந்த அம்மா
வாழ்வின் முதற்கசப்பையும்
உன் உடலில் இருந்தே
அருந்தப் பெற்றேன் என்பதையாவது
சொல்லிவிடுகிறேன்
*
வழிதவறிய சாவி
எவர் உலகைப் பூட்டிவிட்டு
யார் உலகைத் திறப்பதற்கு
வீதியில் வந்துற்றாய்
செல்லமே
மந்திரக் குச்சியே
நீ ஒளிந்திருக்கும் புதையல் காண
கோடிக் கண்களால்
இரவு விழித்திருப்பதைப் பார்
உன் ஒரே துழாவலில்
தாழ் விலகும் உலகுக்காக
அத்துணை ஆசையோடு காத்திருக்கிறேன்
அன்பே
*
கொல்

நெற்றிப்பொட்டில்
ஒரு சொல்
அதன் விசையை அழுத்து
ஓர் அழைப்பு மணியைப் போல
வீடெனத் திறந்துகொள்ளும்
கபாலத்தில்
இனி
போய் வாழும்
அந்தச் சொல்
*
மழை பாடுகிறது
நுணலும் பாடுகிறது
மழை நின்றது
பிறகும்
நுணல் பாடுகிறது
அதற்குள்
மழை பெய்கிறது
***
உயர்திணைப் பறவை: கதிர்பாரதி
வெளியீடு: இன்சொல்,
25, மோதிலால் தெரு,
தியாகராய நகர், சென்னை – 17
விலை ரூ. 260
பா. மகிழ்மதி

No comments: