அறிமுக இயக்குநர் கார்க்கி எழுதி - இயக்கி - கதைநாயகனாக நடித்த pen ஒன்று கண்டேன் குறும்படம் பார்த்தேன். சென்னை - தி.நகரில் போஸ்ட் பாக்ஸ் டிஜிட்டல் மீடியா தியேட்டரில் நேற்று மாலை(20.10.26) திரையிடல் நடந்தது. ஏராளமான சினிமா - இலக்கிய ஆளுமைகள் திரையிடலில் கலந்துகொண்டார்கள்.
இந்தக் குறும்படம் வித்தியாசமான ஒரு ஃபேண்டஸி முயற்சி. நேர்த்தியான குறும்படம் என தைரியமாகச் சொல்லலாம். முதன்முறை கார்க்கி எழுதி இயக்கி நடிக்கிறார். ஆனால், `முதன்முறை` என்ற எந்தக் குறையையும் அதில் என்னால் காண முடியவில்லை. மனிதனின் பேராசை எல்லை என்பது எந்த அளவுக்கு எல்லையற்றது. அவன் கையில் அதிகாரம் (POWER) கிடைத்துவிட்டால் அவனது மனம் கொள்ளும் ஆசையின் விரிவுக்கு முன்னால், பிரபஞ்சம் என்பது சிறுபுள்ளிதான் என்று மீண்டும் உணரவைத்த கதை. அதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்பதில் இருக்கிறது அழிவும் மீட்சியும். ஒரு சாமன்யனை POWER எப்படித் தலைக்கீழாக கவிழ்க்கிறது என்பதையும் உளவியல்பூர்வமாக அணுகுகிறது குறும்படம். கார்க்கி இதற்கு முன்பு காமிரா முன்பு நடிப்புக்காக நின்றவர் அல்ல. நடிப்பு என்பதைப் பற்றி யோசிக்காதவர். ஆனால், இந்தக் குறும்படத்தை முன்வைத்து அவரது முதன்மைத் திறமையாக (SKILL) எனக்குத் தோன்றியது, அவரது மெச்சூரிட்டியான நடிப்புதான். காமிரா பயம் துளியும் இல்லாமல் நடித்திருக்கிறார். அதற்கான சின்ன நெருடல் ஓரிடத்தில்கூட அவரிடம் இல்லை. நல்ல டான்ஸராக வரக்கூட ஒரு அடையாள ஷாட்டையும் ( ஒரு துள்ளு துள்ளி கால்களால் க்ளாப் செய்து, அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்) காணமுடிந்தது. என்னால் ஒரு குறையும் காண முடியாத ஒரு குறும்படத்தைக் கண்ட திருப்தி இருந்தது. ஒரு முழு நீளத் திரைப்படத்தைக் கனவுகண்டு அதை இயக்கி எடுக்கும் திறமையும் கார்க்கியிடம் இருப்பதாகவே உணர்கிறேன்.
கார்க்கி மிக அமைதியானவர். நுணுக்கமாக வாழ்வைக் கவனிக்கக்கூடியவர். இளங்கலை சட்டம் படித்தவர். வணிகவியலில் மேலாண்மை படிப்பையும் முடித்தவர். ஆனால், கலை - இலக்கியம் யாரை எப்போது தொடும் என்று அரிதியிட்டுக் கூறமுடியாது. அப்படியான மேஜிக்கை இந்தக் குறும்படம் மூலமாக கார்க்கி நிகழ்த்தியிருக்கிறார். இன்னும் திறம்பட பயிற்சியும் முயற்சியும் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே தமிழ்த் திரைக்கு ஓர் இளைய நம்பிக்கையாகக் கார்க்கி கிடைப்பார். இவர் இயக்குநர் நந்தா பெரியசாமியின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறும்படத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இருவர்... ஒளிப்பதிவாளர் பிச்சுமணி (செழியன் மாணவர்), படத்தொகுப்பாளர் டிஜி சுந்தர். குறும்படத்தில் இந்த இருவரின் பங்களிப்பும் மிகப்பெரிய பலம். அவர்கள் இருவரும் திரையிடலுக்கு வந்ததும் போனதும் தெரியவில்லை. ஆனால், இவர்களது நேர்த்தியான வேலையால் யார் இவர்கள் எனத் தேடவைத்தார்கள். எனது நண்பர் பாரதி.ஆர். இதில் எக்ஸுக்யூட்டிவ் புரோடியூசராகப் பணியாற்றியிருக்கிறார். ஒரு கேரக்டருக்கு குரல்கொடுத்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்.
எழுத்தாளர்கள் சு. தமிழ்ச்செல்வி - கரிகாலன் இணையரின் மகன்தான் கார்க்கி.
களம் புதிது பிக்சர்ஸ் தாயரித்திருக்கும் இந்தக் குறும்படம் விரைவில் பொதுவெளிக்கு, மக்கள் கண்டுகளிக்க வரும். அப்போது கார்க்கியின் திறமையை உலகம் கண்டுகொள்ளும்.
கார்க்கிக்கும் குறும்படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
.jpeg)

No comments:
Post a Comment