27 December, 2024

மொழி போர்த்தியிருந்த அலங்காரங்களைக் கலைத்து | எழுத்தாளர் கரிகாலன் | கதிர்பாரதியின் ’’அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’’ கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பின்னுரை |

அட்டைப்படம் :
ஓவியர் மணிவண்ணன்

நாம் அருந்திய முலைப்பாலின் கவுச்சியை  சொற்களாகக் கொண்டவை கதிர்பாரதியின் இக்கவிதைகள். அம்மாவோடு 'ள்' சேர்த்தால் அம்மாள். அதுவே பின் அம்பாள் ஆனது. பேயுருவில் நெருங்கிய காரைக்காலம்மையாரை, ஈசன் 'அம்மை' என்றான்.  கதிர்பாரதி காட்டும் அம்மா , அவருடைய அம்மா மட்டும் அல்லர்.  தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம் அவர்.  ஈன்ற மகவைக் காக்க,  தெய்வமாக மட்டுமல்ல, பேயாகவும் மாறும் அம்மா அவர். 

தாயைப் போற்றும் நெடிய மரபைக் கொண்டது தமிழ். அக இலக்கியங்கள் 'அன்னாய் வாழி' எனத் தாயைப் போற்றின. 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்றாள் ஔவை. 'மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்' என்றது உலகநீதி.  ஈன்றாளை முதன்மைப்படுத்தி அறம் பழக்கினார் வள்ளுவர். 

உலக அளவில் சில்வியா பிளாத், பிலிப் லார்க்கின், ரூட்யார்ட் கிப்ளிங், எட்கர் ஆலன் போ, கிறிஸ்டினா ரோசெட்டி, என எத்தனையோ கவிகள் அன்னையைப் பாடியிருக்கிறார்கள். ஆனாலும், கதிர்பாரதி காட்டும்  அம்மா சற்று வேறுபட்டவர். இதுவரை அம்மா மீது மொழி போர்த்தியிருந்த, அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து , ஓர் அசல் கிராமத்து அம்மாவை தன் கவிதைவழி காட்டுகிறார் கதிர்.  அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் குழந்தையே உலகென, உலகை மற்றமையென நினைக்கிறவர் கதிர்பாரதியின் அம்மா. 

வாசிக்கிறவர்கள் கண்ணீர் பட்டு கரைந்துபோகவும், பின் இதயத்தில் நீங்காத வலியாக தேங்கிவிடவுமான சொற்கள் கொண்டு  இக்கவிதைகளை எழுதியிருக்கிறார்  கதிர்பாரதி. அம்மாவை எழுதி, எழுதி,  இவர் விரல்கள் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கிவிட்டனவோ?  என எண்ண வைக்கிற ஈரக் கவிதைகள் இவை. கதிருக்கு ஒரு அம்மாதான். இந்தக் கவிதைகளால் இவர் பிள்ளைகட்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள். 
இத்தொகுப்பைப் படித்து முடித்தபிறகு,  ஒரு பெரிய கருப்பையாகத் தோன்றுகிறது நாம் வாழும் உலகம்.

No comments: