கதிர்பாரதி, சாரு நிவேதா, அர.கண்ணன், டி.பாஸ்கரன் |
அத்திரி முனிவரின் இன்னொரு பெயர்தான் புற்று மகரிஷி. அவர் வேலூரில் 1516ல் வாழ்ந்தவர். வேலூர் ஜலகண்ட ஈஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தை நிர்மாணம் செய்தவர். அந்தக் குரு வழிமரபில் வந்த 49_வது தலைமுறைதான் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன். இவரது சிறப்பே நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதுதான். வந்த நோய்க்குத் தீர்வு மட்டுமல்ல. வரப்போகிற நோயையும் சொல்லிவிடுகிறார். கேட்டால், "எல்லாம் சித்தப் புருஷர்களின் ஆசீர் சார்..." எனப் புன்னகைப்பார்.
கொங்கணச் சித்தரின் மாணவரான சிவவாக்கியருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர் மட்டும்தான் சித்த மரபில் திருமணம் செய்துகொண்டவர் என நினைக்கிறேன். 100க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். காசிக்குச் சென்று கொங்கணச் சித்தரை குருவாக ஏற்றுக்கொண்டவர். சிறந்த சித்தவைத்தியக் குறிப்புகளை விட்டுச் சென்றவர். மக்களைத் தேடி மருத்துவம் என்பதன் முன்னோடி சிவவாக்கியர். சித்தர்கள் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் சேர்த்து மருத்துவம் பார்த்தவர். உடல் பேணி உயிர் காத்து, உடல் வழி இறையை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்த ஞான மரபில் வந்த சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் அவர்களை, நான் ஒரு நவீன சிவவாக்கியர் என்றுதான் சொல்வேன். சிவவாக்கியர் போல இவரும் திருமணம் செய்துகொண்டவர். சிவவாக்கியருக்கு கொங்கணச் சித்தர் குரு. டி.பாஸ்கரன் அவர்களுக்கு குரு அவரது பெரியப்பா கேபி அர்ச்சுணன் குரு. இவர்கள் இருவருக்கும் மூல குருபரம்பரை தந்தைதான் புற்றுமகரிஷி. சிவவாக்கியரைப் போல 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துக் கட்டுரைகளை எழுதியவர் டி.பாஸ்கரன் அவர்கள்.கொரானா காலத்தில் இவர் தயாரித்துக் கொடுத்த மூலிகைக் கவசம், வேலூர் மாவட்டத்தில் பலரின் உயிரைக் காத்தது. இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசும், தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகமும் இவருக்கு விருது கொடுத்து அங்கீகரித்து மகிழ்ந்திருக்கின்றன. மருத்துவர் டி.பாஸ்கரன் சித்தாவரம் புத்தகத்தில் தனது வைத்திய சீக்ரெட்களை மருத்துவக் கட்டுரைகளாகச் சொல்லிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய உறவு நாகரீகம் தொடங்கி, ஆரோக்கியமான தாம்பத்திய உறவு வரைக்குமான அனைத்து வாழ்வியல் பண்பாட்டு செய்திகளையும சித்தாவரம் புத்தகத்தில் விவாதிக்கிறார் டி.பாஸ்கரன்.
சித்தாவரம் புத்தகம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால், "தமிழ்நாட்டில் வாழ்கிற அனைத்துக் குடும்பங்களிலும் இருக்கவேண்டிய வாழ்வியல் மற்றும் மருத்துவக் கையேடு இது" என்றுதான் சொல்வேன்.
அற்புதமான சித்த மருத்துவக் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்ட தேநீர்பதிப்பகம் கோகிலன் & தேவி அவர்களுக்கு நன்றி. நண்பரும் சித்தமருத்துவமான டி.பாஸ்கரன் அவர்களுக்கு அன்பும் வணக்கமும்.
No comments:
Post a Comment