கரிகாலன் - சு.தமிழ்ச்செல்வி |
கவிதையில் கரிகாலனுக்கு முன்பாக அந்நிலத்தைப் பதிந்தவர் கவிஞர் பழமலய். எனக்குத் தெரிந்து தன்னுடைய உரைநடைக்காக கதா விருதுபெற்ற முதல் தமிழின் நவீனக் கவிஞர் கரிகாலனாகத்தான் இருக்கும். பின்னர் உமா மகேஸ்வரி பெற்றார் என்பது நினைவு.
ஜனரஞ்சக இதழ்களிலும் இலக்கியம் செய்பவர் கரிகாலன் . குமுதம் இதழில் அவர் ஓராண்டுக்கு மேலாக எழுதிவரும் பத்தி எழுத்துகள் அதற்கு உதாரணம். 30க்கும் மேற்பட்ட நூல்களாக விரிந்திருக்கின்றன கரிகாலனின் இலக்கியப் பங்களிப்பு. அவற்றில் கவிதை, நாவல், திறனாய்வு எழுத்து, திரைப்பட அறிமுக எழுத்து, நூல் முன்னுரைகள், கட்டுரைகள் வகைகள் உண்டு.
இவரது மேலாண்மையில் உருவான களம்புதிது இலக்கிய அமைப்பும், களம் புதிது பத்திரிகையும் இலக்கிய பண்பாட்டு வெளியில் ஏற்படுத்திய அசைவுகள் கவனம் ஈர்த்தவை. முக்கியமாக நிறப்பிரிகை இயக்கத்தில் ஓர் உடைவு ஏற்பட்டபோது இவரது ஆசிரியத்துவத்தில் களம்புதிது பத்திரிகையில் வெளியான அ.மார்க்ஸ் நேர்காணல் அவரது இயக்கத்துக்கான முக்கிய ஆவணம்.
உலகத் திரைப்படங்கள், உலக இலக்கியப் போக்குகள், பண்பாட்டுவெளிகளில் உண்டாகும் உடைவுகள் ஆகியவற்றில் அப்டேட்டாக இருப்பவர் கரிகாலன். அவரிடம் பாடகி லேடி காகா பற்றியும் பேசலாம். ஆண்டாளின் மார்கழி குறித்தும் உரையாடலாம். இலக்கியத்திலும், களத்திலும் எப்போதும் எளியோர் பக்கம் நிற்கும் அவரது அரசியல் எனக்கு உவப்பானதே.
கரிகாலனின் களம் புதிது அமைப்பு எனக்கு வழங்கிய களம்புதிது கவிதை விருதை மிக முக்கியமான அங்கீகாரமாகக் கருதி நான் மகிழ்ந்துவருகிறேன். கரிகாலன் தனது கவிதைச் செயல்பாட்டுக்காக களரி அறக்கட்டளை - மணல் வீடு இலக்கிய வட்டம் விருதுபெருகிறார்.
அவரது வாழ்வுத் துணை எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி, நாவலுக்காக விருதுபெறுகிறார். ஏற்கெனவே இவரது நாவல் பங்களிப்புக்காக 'விளக்கு விருது', 'எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருது' உள்ளிட்ட ஏராளமான அங்கீகாரங்கள் பெற்றவர். இல்வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் வெற்றிகரமான இந்த எழுத்துத் தம்பதிகளை வாழ்த்துகிறேன். அதனால் மகிழ்கிறேன்.
No comments:
Post a Comment