ஓர் இலை உதிர்வதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது
அது
தன்னிஷ்டமாக இலையுதிர் காலம் மீது
அலைந்து ஆடி உதிரும்.
ஒரு மரம் வளர்வதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
தன்னியல்பாக வேர்களை நீட்டிவிட்டு
பூமியின் மர்மங்களில் ஊடுருவும்.
ஒரு தண்டு அசைவதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
சூரியனோடு உறவுகொண்டு
பச்சையமாக எழுந்து வசந்தம் காட்டும்.
ஒரு முளை முண்டுவதை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அது
ஓர் இருண்டக் காலத்தைத் துளைத்து
வெளிச்சம் பருகி வளரும்.
ஒரு விதையை
உன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அதை
யாருக்கும் தெரியாமல் எதற்கு அடியிலாவது
புதைக்கலாம் நீ.
ஆனால் அறியமாட்டாய்
அது
விதை உனக்கு வழங்கிய வாய்ப்பு.
-கதிர்பாரதி
No comments:
Post a Comment