16 April, 2022

முன்னுரை ~ திரிசங்கு வெளிச்சம் ~ `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` ~ கவிஞர் கார்த்திக் திலகன் கவிதைத் தொகுப்பு - கதிர்பாரதி ....

 

``கவிதை என்பது மகாநதியில் மிதக்கிற ஒரு தோணி என்று சொன்னால்
ஓர் அளவில் கவிதை குறித்து நான் சொல்லிவிட்டேன் என்றே தோன்றுகிறது’’ என்கிறார் கவிஞர் தேவதேவன், தனது `மகாநதி` கவிதைத் தொகுப்பு முன்னுரையில்.

``கவிதைகள் என்பது எதற்கு என்றால் எல்லாவற்றில் இருந்தும் நம்மைக் காக்கவும், கட்டக் கடைசியில் நம்மிடம் இருந்து நம்மைக் காக்கவும்தான்’’ என்கிறார் சார்லஸ் புக்கோஸ்கி.

இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளுக்கும் இடையில் திரிசங்காகி நிற்கிற கவிதைகளாக `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்` என்கிற தலைப்பைக் கொண்ட கவிஞர் கார்த்திக் திலகனின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் பார்க்கிறேன். இது எனது பார்வை. யாரையும் அப்படிப் பாருங்கள் என நிர்பந்திப்பது அல்ல.

மேற்சொன்ன இரண்டு ஸ்டேட்மெண்ட்டுகளிலும் `தொட்டும்தொடாத` `அகலாது அணுகாது தீய்க்காய்கிற` தன்மை இருப்பதை ஆழ்ந்து வாசிக்கும் வாசகர் உணரக்கூடும். கார்த்திக் திலகனின் இந்தத் தொகுப்புக் கவிதைகளின் பண்பு இவை என்கிறேன்.

மகாநதியில் பிடிப்பற்று மிதக்கிற தோணிக்கு தனித்த பாதை என்று ஒன்று இல்லை; அதேநேரத்தில் இப்படி யோசித்துப் பாருங்கள்…`தோணிக்கு என்று உய்த்துணரும் மனம் ஒன்று இருந்து, அது தான் செல்ல விரும்புகிற பாதையைத் தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக்கொண்டால், அந்தப் பாதை நதி செல்கிற பாதையாகத்தானே இருக்கும்.’ நான் சொல்லவருவது கார்த்திக் திலகனுக்கும் விளங்கும் என்று நம்புகிறேன்.  

 

எது எதுடம் இருந்தோ கவிதை நம்மைக் காக்கிறதுதான். அதில் சந்தேகம் இல்லை. அப்படிக் காத்துத் தருகிற `நம்மை`, நம்மிடம் இருந்தும் காக்கிறதா என்றால்… ஆம் காக்கிறதுதான். இதைத்தான் கவிஞர் யூமா வாசுகி ஒவ்வொரு நேர்ப்பேச்சிலும் இப்படிச் சொல்வார்… ``தம்பி, இந்த வாழ்வை உயிர்ப்போடு நகர்த்திக்கொண்டுபோவது எது என்று நினைக்கிறாய்… அது கவித்துவம்.’’

தன்னியல்பில் இல்லாமல் மிதக்கிற தோணி போன்ற `நாம்` – நம்மிடம் இருந்து நம்மைக் காக்கிற `நாம்`… இந்த இரண்டுக்கும் இடையில் நிற்கிறவையாக இருக்கின்றன இந்தத் தொகுப்புக் கவிதைகள்.

 

அதனால்தான் …
……………………
…………………..

நான்
கொஞ்சம் தூங்கிக்கொள்ளட்டுமா
ஒரு சிலைக்கும்
அதன் மீது படிந்திருக்கும்
நம்பிக்கைக்கும் இடையில்
கடவுள் தூங்குவதைப்போல…

என்று ஒரு கவிதையில் எழுதுகிறார் கார்த்திக் திலகன்.

 

சிலைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் உள்ள திரிசங்கில் உறங்கும் கடவுளைப் போல என்கிற படிமத் தன்மையை யோசிக்கிறபோது `அடடா…’ என்று மனசில் ஒரு வெளிச்சம் தோன்றுகிறது அல்லவா… அதுதான் எதனோடும் சேர்ந்துவிட இயலாத திரிசங்கு வெளிச்சம். இந்த வெளிச்ச விளையாட்டு `விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்’ என்கிற தொகுப்பின் தலைப்பில் இருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. இந்தக் கவிதைகள் முழுக்க அந்த வெளிச்சம் இருக்கிறது என்பதைத்தான் நான் இவ்வளவு நேரமும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவந்திருக்கிறேன் நண்பர்களே

இந்த வெளிச்சம் உள்ள இன்னொரு கவிதையைப் பாருங்கள்…

தரையில் இருந்து
ஒரு பாதை மேலேறிப்போய்
மலைமீது குடிகொண்டிருக்கும்
அதுல்ய நாதேஸ்வரரையே
பார்த்துக்கொண்டு நிற்கிறது.
மலைக்கு அந்தப் புறம்
ஒரு பாதை
கீழே இறங்கிவருகிறது
அதன் முகத்திலும்
அவரைப் பார்த்த அதே அமைதி.

அதுல்ய நாதேஸ்வரரைப் பார்த்த பாதைக்கும் பார்க்காத பாதைக்கும் இடையே சமமான திருப்தி, அமைதி, வெளிச்சம்.

இப்படி புறவயச் சித்திரிப்புகள் மூலம் அகத்தைத் தூண்டுகிற வெளிச்சங்கள் இந்தத் தொகுப்பில் நிறையவே இருக்கின்றன. சின்னச் சின்ன வார்த்தைகளில் வாழ்க்கை அததன் அழகுகளோடு அர்த்தம்கொள்ளவைக்கும் வரி வெளிச்சங்கள். என்ன ஒரு விடுதலை என்றால், அவை தத்துவச் சோகையோடு இல்லாமல் படைப்பூக்கப் புஷ்டியோடு கவித்துவமாக இருப்பதுதான்.

உதாரணங்களாக…

`விநாடி என்பது ஒரு சித்தலிங்கப் பூ`

`வானம் நமக்காகப் படைக்கப்பட்ட மலர்’ 

`வெட்டவெளிதான் என் தாய்
ஆசையோடு அம்மா என்று அழைத்தேன்’

`முதன்முறையாக என் மனதைச் சுற்றிப் பார்க்கிறேன்.’

`உடலை மனம் வழி
இன்னோர் உடலுக்குள் செலுத்துவது
காதல்’

`இமைகளால் காற்றில் மேளம் கொட்டினேன்.’

`கண்ணுக்கு எட்டியும் எட்டாத தூரம் வரை
வெட்டவெளியாய்க் கிடப்பது
நீதான்’

`முகத்தை எட்டாத உயரத்துக்குள் தூக்கி வைத்துக்கொள்’

இன்னொரு முக்கியமான விஷயம்… பெண்மையின் மீது தீராத பிரேமை கொண்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் சற்றே அதிகமாக இருக்கின்றன. அறிவும் உணர்வும் அற்ற அதீத நிலைக்கு மனதைக் கொண்டுசென்று தன்னைத்தான் எழுதிக்கொள்ளும் உயிரின் வேட்கை அது. ஒரு கவிதையில் பெண்ணை `பூமியின் சதைச் சுடர்` என்கிறார் கார்த்திக் திலகன். இதைப் படிக்கும்போது காற்றில் நடுங்கும் சுடர்போலவே பெண்மையின் பேராற்றலை நினைத்து மனம் நடுங்குகிறது.

பூமியின் மீது ஒரு சதைச் சுடர்
மெத்தென்றெழுந்தாடினாற் போலவள்
நின்ற திருக்கோலம் கண்டு
அவளது
அகல் வடிவப் பாத நிழலில்
திரியாக என்னை ஏற்றிவைத்தேன்.

இந்த வரிகளைப் படிக்கும் மனம் நடுங்கிறதா… இல்லையா?!

இந்த நடுக்கம் உன்மத்தம் ஆகும்போது, கார்த்திக் திலகன் கவிதையில் பெண், கவிதையாகிறாள், சுடராகிறாள், தீயாகிறாள், பூமி ஆகிறாள், காளியாகி ஆணுக்குத் தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி, புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறாள்.

மேல் உள்ளவற்றை ஆண்பாலாக்கியும் வாசிக்கலாம்… ஆண் பெண்ணுக்கு கவிதையாகிறான், சுடராகிறான், தீயாகிறான், பூமியாகிறான், காளியாகி பெண்ணுக்கு தீரவே தீராத ஆன்மிக அனுபவமாகி புரிந்தும் புரியாத பேரண்ட வெளிச்சம் ஆகிறான்.

அந்தச் சுடரோடு, அர்த்தமின்மையோடு, அந்தக் காளியோடு, எதனோடும் ஒட்டாத அதன் பேரண்ட வெளிச்சத்தோடு போராடுகிற நிலைதான் மனித குலத்துக்கு. காலமும் வாழ்வும் முயங்கி இயங்குகிற நிலை இது. வாழ்வுக்கும் காலத்துக்கும் ஆண் என்ன பெண் என்ன எல்லாம் வாழ்வுதான்; எல்லாம் காலம்தான்.

என்
முத்தங்களை
கனிகளில் பதுக்கியிருக்கிறேன்
இளமையை
வேர்களில் பதுக்கியிருக்கிறேன்
முத்தங்களைப் பெறுவதற்கு
என்மீது கல்லெறிந்தால் போதும்
இளமையைத் தரிசிக்க
எனை வேரோடு சாய்த்தாக வேண்டும்
நீ.


என பித்தேறிய அடிமுடி தேடும் பிரேமையோடும் இயங்குகிற மனமும் அதுதான்.

இருண்மையில் இருந்து படிமம், காட்சிகள், கவித்துவம், புனைவு, என்ற பண்பு நிலைகளில் தமிழ்க் கவிதை நகர்ந்து, தற்போது உரைநடையில் கவித்துவம் கட்டி எழுப்புதல் என்ற இடத்தில் வந்திருப்பது குறித்தெல்லாம் கார்த்திக் திலகனுக்கு அக்கறை இல்லைபோல அல்லது அவர் அக்கறைபடுவதாக இல்லைபோல. மொழியை அவர் நிலத்துப் பாறைகளைப் போல அல்லது சுண்டக் காய்ச்சிய மந்திரம்போல பயன்படுத்துகிறார். அப்படித்தான் இந்தக் கவிதைகளில் அவரிடம் தொந்தரவுக்கு உள்ளாகிறது மொழி. அது கவிதை தற்காலத்தில் இல்லையோ (இருக்க வேண்டுமா? அதுதான் கவிதையா?) எனத் தோன்றுகிறது. இந்தக் கவிதைகளில் குறை – நிறை இரண்டும் இதுதான்.

ரட்சகி
உன் ஆயிரம் கால்களால்
எனை எட்டி உதை
நான்
தோல்விக்கும் வெற்றிக்கும்
அப்பால் போய்
விழ வேண்டும்


என்று கார்த்திக் திலகன் அவரது ரகசிய ரட்சகியிடம் விமோசனம் வேண்டுகிறார் ஒரு கவிதையில்.

இந்தத் தொகுப்பின் கவிதைகளும் அப்படித்தான் தோல்விக்கும் வெற்றிக்கும் அப்பால் போய் விழுந்திருக்கின்றன. முதுக்குக்குப் பின்னால் போய் விழும் நிழலை முகத்துக்கு முன்னால் இழுத்துப்போட முடியாது.

கார்த்திக் திலகனின் முகத்து வெளிச்சத்துக்கு வாழ்த்துகள்


நிறைய அன்புடன்
கதிர்பாரதி

14, நவம்பர் 2021

சென்னை - 17

 

1 comment:

Anonymous said...

சிறப்பு
கவிஞர் கார்த்திக் திலகனுக்கு வாழ்த்துகள்