21 March, 2022

இன்று உலகக் கவிதைத் தினம். எனது ``உயர்திணைப் பறவை`` கவிதைப் புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை...


பீர்பால் மூன்று ஆமைகள் வளர்த்தார்
...........................,.......................

1
அக்பருக்கு சந்தேகம்...
ஏழைகளை
எப்படி நடத்தவேண்டும்?
வணிகர்களோடு
எப்படிப் பேச வேண்டும்
பீர்பால்?

முதலில்

பூவாளியை எடுத்து
செடிகளுக்குத் தண்ணீர் ஊட்டினார்
பீர்பால்.

இரண்டாவதாக

மௌனமாக
இருந்தார்.

2
நெஞ்சுக்கு நெருக்கமாக
நிதமும் ஒரு மலரை
அணிய விரும்புகிறேன்
நவரத்தின மந்திரிகளே
உங்களின் சிபாரிசு என்ன?
கேட்டது அக்பர் பாதுஷா.

தாமரை - திருவின் உறைவிடம்
சூர்யகாந்தி - சூர்யத் தோழி
ரோஜா - மலர்களின் ராஜா
சாமந்தி - ஏழை ரோஜா
அல்லி - ஏரியின் செல்லம்
மல்லிகை - மன்மதம்
முல்லை - தேர்கொண்ட பூ
............
............
ஆளுக்கொரு மலரோடு
அவை வந்தனர்.

நத்தை கொண்டுவந்தார்
பீர்பால்.
அதன் 'அமைதி'யைச் சூடிக்கொண்டார்
அக்பர்.

3
பீர்பால்
வீட்டில் மூன்று ஆமைகள் வளர்த்தார்.
அவை அவரை
அறிவூட்டி வளர்த்தன.
அந்த அறிவு சொல்ல
மூன்று ஆமைகளையும்
யமுனையில் நீந்த விட்டுவிட்டார்.
அக்பர்
மூன்று புறாக்களை
வானில் பறக்கவிட்டார்.

4
'பீர்பால்
இது என் ஆசைக்குதிரை
நன்கு வளர்த்துவாருங்கள்' எனக்
கொடுத்தார் அக்பர்.

'மன்னிக்க வேண்டும் பாதுஷா
உங்கள் ஆசையை
நான் எப்படி வளர்க்க முடியும்' என்றார்
பீர்பால்.

'ஆம்
என் தாகத்துக்கு இன்னொருவர்
தண்ணீர் குடிப்பது
எங்ஙனம்?
மேலும்
என் உதையின் பொருள்
பீர்பாலுக்கு
எப்படி விளங்கும்?'என்றது
அக்பரின் ஆசை.

அக்பருக்குப் பேராசைதான்.

5
பீர்பால் செய்யாத குற்றத்துக்காக
ஒரு மூட்டை உப்பைக் கழுவி
சுத்தமாக்கும் தண்டனை அளித்தார்
அக்பர்.

மறுநாள்
வெறும் சாக்கோடு
அவைக்கு வந்தார் பீர்பால்

எங்கே உப்பு?

உப்பு அதன் தவறுகளோடு
இருக்கச் சம்மதித்துவிட்டது
அரசே.

அக்பர் புன்னகைத்தார்.

பீர்பால் செய்யாத
தவறும் புன்னகைத்தது.

6
அக்பர் பாதுஷா கேட்டார்...
'யமுனை அழுகிறது' என்று
என் மனைவி சொல்கிறாள்.
நாட்டில்
எனக்குத் தெரியாமல்
என்ன நடக்கிறது பீர்பால்?

இமையம் என்கிற பிறந்த வீட்டிலிருந்து
வங்கம் என்கிற புகுந்த வீட்டுக்கு
யமுனை செல்கிறது
அதனால் அழுகிறது அரசே.

உண்மை சொல்லுங்கள் பீர்பால்.

தெய்வக் குற்றம் ஏதாவது நடந்திருக்கும்
அதனால்
யமுனை அழுதிருக்கும்
நேர்ச்சை அளித்துவிடலாம் அரசே.

பீர்பால்...
நான் கேட்டது 'உண்மை'.

உங்கள் மனைவிதான்
கண்ணீருக்குத் தெரியாமல் அழுகிறார்.
அவர் மனதைத் தீர விசாரித்து
சமாதானம் செய்யுங்கள்
அரசே.

7
மொத்த பற்களும் உதிர்ந்து
ஒற்றைப் பல் மட்டும் மீந்திருக்கும்
விநோதக் கனவுகண்டார்
அக்பர் பாதுஷா.

'உங்கள் உறவினர்கள்
உங்களுக்கு முன்
இறப்பர்' எனக் கனவுப்பலன்
சொன்னான்
அரண்மனை நிமித்திகன்.

அக்பர் கோபத்தில்
அரண்மனை சிவந்தது.
நிமித்திகனுக்குக்
கசையடிப் பரிசு.

பீர்பாலும்
அதையேதான் சொன்னார்
அவருக்கோ பரிசு.
ஆனால், இப்படி...

'அரசே
உறவினர்களைக் காட்டிலும்
உங்களுக்கு ஆயுள் அதிகம்.'

8
ஒரு குழந்தைக்கு
இரு தாய்கள் உரிமைகோரும் கதை.
பீர்பால் தலையீடு இல்லாமல்
நீதி வழங்க நினைத்து
கதையில் இருந்து
அவரை வெளியேற்றினார்
அக்பர் பாதுஷா.
தர்பார் தொடங்கியது...
'இது என் குழந்தை கிடையாது' என்றாள்
உண்மைத் தாய்.
'என் குழந்தையும் அல்ல' என்றாள்
பொய்த் தாய்.
'இவர்கள் என் தாய் இல்லை' என்றது
குழந்தை.
இது
அக்பர் எதிர்பாராத குழப்பம்; திருப்பம்.
சுற்றும்முற்றும் கதைக்குள் பீர்பால் இல்லை.
வேறு வழியின்றி
அவரைக் கதைக்குள் அழைத்தார்கள்.
'கதையை இரு துண்டாக்குங்கள்' என்றார் பீர்பால்.
'அய்யா இது என் குழந்தை' என
பார்வையாளர் பக்கம் இருந்து வந்தாள்
கதை எழுதியவள்.
'ஆகா அற்புதம்' என பீர்பாலைப் பாராட்டி
பரிசில் வழங்கினார் அக்பர்.
பீர்பாலிடம் இருந்து
கதைக்கு சன்மானம் பெற்றுக்கொண்டாள்
குழந்தையின் தாய்.

தர்பார் முற்றிற்று.

#கதிர்பாரதி #உயர்திணைப்_பறவை #இன்சொல்_பதிப்பகம் 

No comments: