03 July, 2013

விமர்சனம் ~ கதிர்பாரதியின் கவிதை உலகு ~ மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் ~ எழுத்தாளர் மா.அரங்கநாதன்

பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்று சொன்னார் அரிஸ்டாட்டில். அன்றும் சரி இன்றும் சரி அவர்தான் வானவியலின் தந்தையாக மதிக்கப்படுகிறார். அதெப்படி, பையன்களுக்குக்கூடத் தெரியுமே இந்தப் பூமி சூரியமண்டலத்தின் ஒரு கிரகம். சூரிய மண்டலமே பிரபஞ்சத்தின் தூசிக்கு சமம். அப்படி இருக்க எப்படி இந்த அரிஸ்டாட்டில் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் வானவியலின் தந்தையாக இருக்கிறார்.

அரிஸ்டாட்டிலின் ஞாபகத்தை ஏற்படுத்தியது கவிஞர் கதிர்பாரதி செய்த வேலை. அவரது கவிதைத் தொகுப்பை முதலாவதாகப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள் சிரத்தை எடுத்துக்கொண்டு கவிதையில் நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி இருக்கிறார். அவரது கவிதைகள் நவீனத்தின் பாற்பட்டு மிளிர்கின்றன. அவரது எல்லா கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற அவாவும் எழுகிறது. ஒரு நல்ல படைப்பாளியின் அடையாளம் இது.

 அரிஸ்டாட்டில் பற்றி ஏதோ ஆரம்பித்தேனே அதைச் சொல்ல வேண்டும்.
பிரபஞ்சத்தின் மையம் பூமி இல்லைதான். தெரிந்துவிட்டது. ஆனால், எத்தையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு மையம் இருந்தாக வேண்டும் என்ற உண்மை வெளிப்படுகிறது அல்லவா- அதுவே அரிஸ்டாட்டிலின் பெருமைக்குக் காரணம். பிரபஞ்சம் பற்றிய பக்கவாட்டு உண்மைகள் சாதாரணம். 

கதிர்பாரதியின் ஒரு கவிதை:
 \\அண்ணன்
குதிரை பொம்மை கொண்டு
அடித்துவிட்டதைச்
சொல்லத் தெரியாது
திணறலோடு
இறுதியில் சொல்லிவிடுறான்
மாடு முட்டிவிட்டதாக.

 குற்ற உணர்ச்சியில்
குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது.\\

 குழந்தை பேசியாக வேண்டும். முட்டிவிட்டது தெரியும். வேறு எதுவும் தெரியாதபோது தெரிந்ததைக் கொண்டு விளக்கம் தருகிறது. ஆனானபட்ட அரிஸ்டாட்டில் சொல்லலாம், குழந்தை சொல்லக்கூடாதோ. கதிர்பாரதியின் மொழி தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது. நவீனத்துவம் எளிமையாக்கப்பட்டுள்ளது. சொற்கள் தாமாகவே வாக்கியத்தை அமைத்துக் கொள்கிறதோ என்று சகஜமாகச் செல்கிறது நடை.

 இத்தொகுப்பில் பலவித எண்ணங்களை- பழைய நினைவுகளைத் தோற்றுவித்தது கிழ்கண்ட வரிகள்
 \\இரவு தளும்பிக்கொண்டு
இருக்கிற குளத்தில்
நெளிந்துகொண்டு
இருக்கிற பௌர்ணமியை
கொத்தும் கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது\\

 மேறகண்ட கவிதை வரிகள் மதுரையில் நடந்த இலக்கிய கூட்டத்திலும் பேசப்பட்டது அறிந்து சந்தோசம். இன்னொரு சிறந்த படைப்பச் சொல்ல வேண்டும்.

 \\ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைக்காரனின்
இருசக்கர வாகனத்தில்
 குறுக்குவாட்டாகக் கிடந்து கதறுகிற
மறியைப் பார்த்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்

 என் பிதாவே... என் பிதாவே...
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
 என் தேவனே... என் தேவனே.. என்று
 கைத் தொழுவேன் நான்\\

 மேற்படி கவிதைத் தோன்றுவதற்கு ஓர் ஆழ்ந்த மனோபாவமும் தைரியமும் வேண்டும். அதற்கு இந்த மனிதகுல மாண்புக்கு முன்னர் வேறு எதுவும் இப்போதைக்கு வேண்டாம் என்று உறுதிப்பட எடுத்துக்கொண்ட துணிவே காரணம். ’’பரந்துகெடுக உலகியற்றின்யான்” என்று நம் பாட்டன் சொன்னான் - சரி - எத்தனைப் பேர் அதை வரவேற்று வழி மொழிந்துள்ளனர்- எத்தனை பேருக்கு அந்தத் துணிவு இருந்திருக்கிறது.

 NIKOS KAZANTZAKI போன்றோர் சுதந்திர உணர்வோடும் தைரியத்தோடும் இவ்வகை வெளிப்பாட்டை அச்சில் கொண்டு வந்து சிரமப்பட்டிருக்கிறார்கள். கடவுளைப் பற்றிச் சொல்வதால் ஏதோ மனிதநேயத்துக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட்டது போல ஆர்ப்பாட்டம் செய்யும் வைதீகம் பற்றியோ, வீணர்கள் பற்றியோ கவலைப் பட வேண்டியதில்லை. வெளிப்பாடு பக்குவநிலையை அடைந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.  NIKOS KAZANTZAKI மட்டுமல்ல வேறு பலரும் கேட்டிருக்க வேண்டும். இங்கே காட்டுப் பகுதியில் பொருளைப் பறிகொடுத்த சுந்தரமூர்த்தி நாயனார் சிவனைப் பார்த்து, ’’நீ எல்லாம் எதற்காக ஐயா இங்கே இருக்கிறீர்’’ என்று கேட்டதையும் இதுபோல் எடுத்துக்கொள்ள முடியுமா?

 NIKOS KAZANTZAKI, RUSHDIE, சுந்தரமூர்த்தி நாயனார் போன்றோர் சொன்னதெல்லாம் சரி என்றோ தவறு என்றோ சொல்லத் தேவையில்லை. சரி - தவறு என்பன படைப்பைப் பொறுத்தவரை அது கொண்டிருக்கும் கவிதாம்சம் பெற்றுள்ள நிலையில்தான் எடுத்துக்கொள்ள முடியும். அங்கு லோகாதாயத்துக்கு வேலையில்லை. ஏசு கிறிஸ்துப் பற்றி மேற்படி கவிதை சிந்திக்க வைக்கிறது என்பதைவிட மௌனமடையச் செய்கிறது என்பதுவே சரி. விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாதபடி கவிதையின் முடிவு மௌனம்தான். அது ஒரு நிரந்தரமான முடிவு PEOTRY IS AN END IN ITSELF என்று சொன்ன அயல்நாட்டு அறிஞர் ஒருவரும் ஞாபகத்துக்கு வருகிறார்!

 கதிர்பாரதிக்கு வாழ்த்துகள்.
 மா.அரங்கநாதன் 03.06.2013
03.06.2013
 (இந்தக் கட்டுரையின் எடிட் செய்யப்பட்ட பிரதி காலச்சுவடு ஜூலை 2013 இதழில் பிரசுரமாகி இருக்கிறது)

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அழகாக சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துக்கள் கதிர்பாரதி.

thirukkannapurathaan said...

very nice review