08 July, 2013

‘அன்னக்கொடி’

‘அன்னக்கொடி’ - எனது கனவுப் படம் என்று சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. ஆனால், அந்தக் கனவு இவ்வளவு தட்டை யான ரசனைகளால் நிறைந்திருக்கும் என்று சராசரி தமிழ் சினிமா ரசிகன் கூட நினைத்திருக்க மாட்டான். ஆடு மேய்க்கப் போகும் இடத்தில் சாதி மீறி பூக்கும் காதலை, அதன் பிரிவின் வலியைச் சொல்ல வந்து அதில் துளிக்கூட யதார்த்தத்தைச் சொல்லாமல் நுனிப்புல் மேய்ந்த செயலாகி இருக்கிறது அன்னக்கொடி கதை. இந்தப் படத்துக்காக பார்த்திபனோடு ஊடல்; இயக்குனர் அமீரோடு உரசல்!

‘அன்னக்கொடி’யின் ஒவ்வொரு காட்சியும் பாரதிராஜாவின் பழைய படங்களில் ஏற்கெனவே வந்திருக்கிறதே என்றுசொல்லி விட முடிவது அவரது கற்பனை வறட்சியைத்தான் காட்டுகிறது! புழுதிக்காடும், ஆவாரம் பூக்களும், கள்ளிச்செடியும், கரட்டு மேடும் பாரதிராஜா படத்துக்குப் புதிதா என்ன?

மனைவியோடு, கணவனாக இல்லறம் நடத்த உடல் தகுதியில்லாத சடையன் மனோஜ் அத்தனை பெண்களையும் காமப் பார்வை பார்ப்பதும், தாசி வீட்டுக்குப் போவதுமென காட்டுவது எதை பில்டப் செய்ய? மனோஜின் ஒட்டு மீசையைப் போல, அவரது கீச்கீச் குரலும் பாத்திரத்தோடு பொருந்தவில் லையே!
ஆடு மேய்க்கும் இடத்தில் பாம்புக் கடி, பூரான் கடி போல முள் கடி அதாவது முள் குத்தியதற்காக பாரதிராஜா, ஹீரோ லக்ஷ்மணனுக்குச் சொல்லித் தந்திருக்கும் விரல் வழியாக சுனைத் தண்ணீரை வழிய விடும் வைத்தியமும் அதன் குளாஸ்-அப் காட்சிகளும் அடல்ஸ் ஒன்லி.

க்ளைமாக்ஸ் காட்சியில் மனோஜிடமிருந்து தப்பியோடும் கார்த்திகாவை ஏறக்குறைய முக்கால் நிர்வாணமாகக் காட்டியிருப்பதில் என்ன காட்சி நியாயம்?
மகன் மனோஜின் கையாலாகாத்தனத்தைத் தெரிந்து கொண்டு மருமகள் கார்த்திகாவை மாமனார் மனோஜ்குமார் விரசப் பார்வை பார்ப்பதில் என்ன புதுமையைக் கண்டார் இயக்குனர்? அல்லது என்ன சொல்ல வருகிறார்?

எல்லா காட்சியிலும் நீக்கமற இருக்கும் மனோஜ் முகம் ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்ட ஆரம்பிப்பது யார் (தோற்றப்) பிழை? அதுவும் ‘சஞ்சனக்கான் சனக்குத்தான் சடையன் போட்ட கணக்குத் தான்’ என்று அவர் தமது அக்மார்க் பாடலைப் பாடிக் கொண்டு சாகும்போதுகூட ரசிக்க முடிய வில்லையே!

புதுமுகத்துக்கு உரிய நிறைகுறைக@ளாடு, பாத்திரத்தோடு ஒன்றமுடியாமல் நொண்டுகிறார் லக்ஷ்மண்! மேக்-அப்போடு ஆடு மேய்க்க வரும் கார்த்திகாவின் தோற்றத்தில் கொஞ்சமாவது நேட்டிவிட்டி வேண்டாமா? அவருக்கு கேமரா பயமில்லை அவ்வளவுதான்!

ஜி.வி.பிரகாஷ்குமார் கல்யாண அவசரத்தில் பின்னணி இசை கோத்திருப்பார் போல. சுரத்தே இல்லாமல் சும்மா அதன் போக்கில் போகிறது! பாடல்களும் அப்படியே!

‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் இறுதிக் காட்சியில் விஜயகுமாரை வெட்டுவதற்காக நெப்போலியன் அரிவாள் வீசுவார். விஜயகுமார் ஒதுங்கிக் கொள்ள அது பக்கத்தில் இருக்கும் ராதிகாவைப் பலிவாங்கிவிடும். அந்தக் காட்சியை ‘அன்னக்கொடி’யின் இறுதிக் காட்சி நினைவுறுத்தினாலும், மனோஜ் தன் கையிலிருக்கும் அரிவாளால் தன்னைத்தானே வெட்டிக் கொள்வது எவ் வளவு சொதப்பலான காட்சி என்பது, படம் எடுப்பதில் பழம் தின்று கொட்டை போட்ட பாரதிராஜாவுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

எவ்வளவு பெரிய கலைஞனுக்கும் சறுக்கல் என்பது சாதாரணம்தான். ஆனால், தமது அடுத்த அடுத்த படைப்புகளின் வெற்றி மூலம் தம்மை நிரூபித்து விடுவார்கள். பாரதிராஜா, அப்படி நிரூபிப்பார் என்று தமிழ்
சினிமா ரசிகன் நம்புகிறான். நிரூபிப்பீங்களா?            

நன்றி : கல்கி 14.07.2013

3 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனப் பார்வை...

அன்னக்கொடி பற்றி எனது பதிவையும் பார்த்து சொல்லுங்களேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீரூபித்தால் சிகரம்... நம்புவோம்...!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

தொலைக்காட்சியில் விளம்பரத்தைப் பார்க்கும்போதே நினைத்தேன் - படம் தேறாது என்று. நல்ல விமர்சனம்