18 June, 2013

கிளிஞ்சலுக்குப் பெயர் செல்வி. காதலுக்குப் பெயர் செல்வி... சீனு ராமசாமி

அலையாடும் கடற்கரையில் நிற்கிறேன். ஒரு சிற்றலை வந்து கால்களை நனைத்துவிட்டு நழுவி ஓடுகிறது. பின்தொடர்கிறது ஓர் பேரலை. பேரலைக்குப் பின்பு ஒரு சிற்றலை. சிற்றலை அப்புறம் பேரலை. நான் சிற்றலையாக இருக்கிறேன். அவ்வப்போது பேரலை பின்தொடர்ந்து வந்து சிற்றலையைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது. கலைச்செல்வி எப்போதும் எனக்கு நீ பேரலைதான். காதலென்னும் கடலின் ஆழத்துக்குள் உனது பெயரைத் தாங்கிய பேரலை ஒன்று எனை இழுத்துக்கொண்டு போகிறது. அதன் அழுத்தமும் உக்கிரமும் எனைத் திக்குமுக்காடச் செய்கின்றன. ஆர்ப்பரித்த உன் நேசத்துக்கு முன்பும் பின்பும் கிளிஞ்சலாக காலத்தின் கரையில் தேங்கிக் கிடக்கிறது நேசம். கிளிஞ்சலுக்குப் பெயர் செல்வி. காதலுக்குப் பெயர் செல்வி... எப்போதும் இதுபோன்ற கனவுகளால், இதுபோன்ற கனவுக்கு நெருக்கமான உணர்வுகளால் என் ஒவ்வோர் அதிகாலையும் விழித்துக்கொள்கிறது செல்வி. கண்களைக் கசக்கி துழாவிப் பார்க்கிறேன். மனசின் ஆழத்தில் இரண்டொரு கிளிஞ்சல்கள் உன் கண்களாக நகர்கின்றன. இப்போதெனக்கு முப்பத்தொன்பதாவது ஆண்டின் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. உனக்கும் அப்படியே இருக்கலாம். இல்லை இரண்டொன்று குறைந்தும் இருக்கலாம்.
நான் காதலிக்கப்பட்டதைவிட காதலிப்பதற்காகப் பட்ட அவஸ்தைகள் அதிகம். நடுத்தரத்துக்கு கொஞ்சம் குறைவான வாருவாய் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு அனைவருக்கும் வாலிபப் பருவத்தில் முகிழ்க்கும் கூச்சம்தான் எனக்கு அப்போதும். முட்டையிடுவதற்கான கூட்டைத் தயார் செய்யும் முன்பு காகம், தன் அலகில் அதற்கான முள்குச்சியை ஏந்தி அலைவது போலத்தான் என் நேசத்தை கூச்சத்தோடு சுமந்துகொண்டு அலைந்திருக்கிறேன். மதுரையின் புறநகரின் முதுகுபுறத்தில் இருக்கும் திருநகரில் நாங்கள் குடியமர்ந்தபோதுதான் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரிக்கு கணிதம் பயில வந்தேன். அப்போது நான் சீனிவாசன். கணிதத்தோடு காதலும் இலக்கியமும் பயின்றது இங்கேதான். கூச்சம் கொஞ்சம் விலகி பிரகாசம் மெல்ல மெல்ல என் முகத்திலும் அகத்திலும் வந்தமர்ந்தபோது நான் பட்டிமன்றத்தில் பேசத் தொடங்கி இருந்தேன். பேசப் போன இடத்தில் ஒரு காதல் வரும் என்று எனக்கு அப்போது தெரியாது. தூறல்களுக்கு மட்டுமே மழை பொறுப்பாக இருந்தாலும், தன்னை அறியாமல் மண்வாசனைக்கும் அது காரணமாக இருப்பது போலத்தான் அன்றைக்கு மதுரை பெரியக்குளத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டி எனக்குள் காதல் மணத்தை எழுப்பி விட்டுப் போனது.
அந்தப் பேச்சுப் போட்டியில்தான் சந்தித்தேன் கலைச்செல்வியை. பெருந்திரளான பெண்கள் கூட்டத்தில் கொஞ்சம் கூச்சத்தோடுதான் மேடை ஏறினேன். போட்டிக்குத் தலைப்பு காதலிக்க தேவை அழகா... அன்பா. நான் அறிவின் பக்கம். அப்போதே அன்பின் பக்கமாகப் பேசினாள் செல்வி. போட்டியில் கூட அவள் எனக்கு எதிர்த்திசையில்தான் இருந்தாள். காதலுக்கும் காதலிக்கவும் தேவை அழுகுதான் என்று கம்பன் கண்ட ராமனை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு என் வாதத்தை முன்வைத்தேன். எந்த ஒரு பெண்ணாவது உடல் ஊனமுற்ற ஆணை மணக்க துணிவாளா? அழகற்ற முகம்கொண்ட ஆடவனின் தோள் சாயத் தயாராக இருப்பாளா? தோள் கண்டார் தோளே கண்டார்... அன்னமும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்றுதான் காதல் அரும்புமே தவிர அன்பால அல்ல என்று மேடையில் நிறுவிவேன்; கலைச்செல்வி பேசும்போது அழகைவிட காதலுக்கு முக்கியமானது அன்புதான். Beauty is the skin deep என்ற ஷெக்ஸ்பியரின் வார்த்தைகளையெல்லாம் அவர் வாதத்துக்காக எடுத்துக்கொண்டு மோதினாள். இறுதியில் வெற்றியும் கோப்பையும் எனக்குத்தான். ஆனால், என் மனசு கதறியது. அன்புதானே காதலுக்கு அஸ்திவாரம். அழகும் கவர்ச்சியும் மேல்பூச்சுகள்தானே. நடுவரின் கையிலிருந்து கோப்பையை வாங்கப் போன நான் மைக்கின் முன்னால் நின்று கூட்டத்தைப் பார்த்துச் சொன்னேன். வாதத்தில் நான் வேண்டுமானல் வென்றிருக்கலாம் ஆனால உணமையில் காதலுக்கு தேவை அன்புதான் அதை வலியுறுத்திய கலைச்செல்விக்குத்தான் இந்தப் பரிசு போய் சேரணும் எனவே எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கோப்பையை அவருக்கே கொடுத்துவிடுகிறேன் என்று மேடைக்கு கலைச்செல்வியை அவரது கரங்களில் நான் வென்ற கோப்பையை கொடுத்துவிட்டு கேண்டீனுக்கு தேநீர் ஆசுவாசத்துக்காக வந்துவிட்டேன். ஆனால் உண்மையில் அப்போதுதான் என் மனம் காதலால் விசும்பத் தொடங்கி இருந்தது. அழகுக்கே தளும்பிப் போகிற மனமுடைய நான் அழகும் அறிவும் கொண்ட கலைசெல்வி மீது காதல் கொண்டு குழம்பிப் போயிருந்தேன்.
நான் எங்கு போகிறேன் என்று கலைசெல்வி கவனித்திருப்பாள் போல. தேநீர் அருந்திக்கொண்டிருந்த என் காதுகளுக்குப் பக்கத்தில் கலைசெல்வியின் குரல். இது உங்களுக்கு சொந்தமானது எதற்காக எனக்குக் கொடுத்தீர்கள் என்று என்னிடம் கோப்பயை நீட்டினாள். வேண்டுமானால் நீங்கள் கோப்பையை வைத்துக்கொள்ளுங்கள். நான் சான்றிதழை வைத்துக்கொள்கிறேன் என்று சிறு சமாதானத்துக்குத் தயாரானேன். அப்போது எங்கள் பார்வைகளில் பறந்த பட்டாம்பூச்சிகள் காதலாக மாறி இருக்கும். இப்போது எங்கேயாவது கோகுல் சேண்டல் பௌடர் வாசனையை நுகர்ந்தாலும் குட்டிக்குரா வாசனையை உணர்ந்தாலும் மனம் செல்வி என்று பதறித் திரும்பும். பழைய டிரான்சிஸ்ட்ர் ரேடியோவை ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பியதும் திரைகானம் தெளிவாக காது நனைக்குமே அதுபோலத்தான் அந்தப் போட்டிக்குப் பிறகு நான் செல்வியின் திசைக்கு என் மனசைத் திருப்பி வைத்தேன்.
கல்லூரி முகவரிகள் பகிர்ந்து கொண்டோம். செல்வி விடுதி ஒன்றில் தங்கிப் படித்த பெண். நான் ஆறேழு அண்ணன் தம்பிகளோடும் இரண்டு அக்கா தங்கையோடும் பிறந்த ஆண். அப்போது ஓர் ஆணுக்கு பெண்ணின் பெயரிலும் பெண்ணுக்கு ஆணின் பெயரிலும் கடிதம் எழுதிக்கொள்வதென்பது இயலாத காரியம். நான் செல்விக்கு பெண்ணின் பெயரிலும் அவள் எனக்கு ஆணின் பெயரிலும் கடிதங்கள் எழுதிக்கொள்வோம். அப்போதெல்லாம் நான் கல்லூரி சென்றது கலைசெல்வியின் கடிதங்களைப் படிப்பதற்காகவும்தான் என்று இப்போது ஒதுங்கி நின்று பார்க்கும்போது உரைக்கிறது. கடித்தத்தைக் கொண்டு வந்து தரும் கல்லூரி ஊழியருக்கு அவ்வப்போது காலாஜ் கேண்டினில் இருந்து தேநீரை லஞ்சமாகத் தந்துகொண்டிருந்தேன். தேநீரின் புண்ணியத்தில் கடிதங்கள் காதலாக காதல் கடிதங்களாகப் பறந்துகொண்டிருந்தன.
திரும்பவும் நாம் மீட் பண்ணலாமே என்று ஒரு கடித்தத்தில் எழுதி இருந்தாள் செல்வி. அது கல்லூரிக்காலம் முடிந்து வீடு செல்லும் தினம். கண்ணியமான இடைவெளியில் பேருந்தில் அவளோடு பயணிக்கிறேன். நான் முதன்முதலாக ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்த பயணம் அதுதான். இரக்கமே இல்லாத பேருந்து எங்களை ஒரு கல்லறைத் தோட்டத்தில் இறக்கிவிட்டுப் போய் விட்டது. அவள் என்னை கல்லறையில் முளைத்திருந்த ஆவாரம் செடிகளுக்கு மத்தியில் நிறித்திவிட்டுப் போய்விட்டாள். நான் ஆவாரம் பூக்களின் மஞ்சள் நிறந்ததை அழுகையோடு பார்த்திருந்து விட்டு வந்துவிட்டேன். கல்லறைத் தோட்டம் கண்ணீர்த் தோட்டமானது.
இதற்கிடையில் எனக்கு சினிமா லட்சியம். மீண்டும் சந்தித்தோம். என் கூட வர சம்மதித்தாள். மறுமடியும் கூச்சம் பயம் குழப்பம். என்னோடு நீ வேண்டாம். உன்னோடும் நான் வேண்டாம் என்ற சொல்லிவிட்டு வந்துவிட்டேன். சினிமா பார்க்கப் போவதையே ஏற்றுக்கொள்ளாத என் அப்பா, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன் என்று கிளம்பிய நாளிலிருந்து சுமார் பத்துவருடங்கள் பேசவே இல்லை. சொந்த வீட்டிலே சுழன்றடிக்கும் புயலில் என்னை நம்பி வந்தவளை நான் எங்கே பாதுகாப்பது?
நிராதரவான உணர்வும், சந்தோசமற்ற குழந்தைப் பருவமும் - பால்ய பருவமும், விரும்பி ஏற்றுக்கொண்ட வறுமையும்... என சுமார் பத்து பதினைந்து வருடங்களை கோடம்பாக்கம் தின்றுவிட்டது. இயக்குனர்கள் சீமான், பாலுமகேந்திரா தந்த ஆதரவில் சினிமா கற்று தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்ந்த பிறகும்... அந்தப் படங்களில் நிறைவேறாத காதலோடு தவிக்கிற பெண் பாத்திரங்களுக்கு செல்வி என்று பெயர் வைக்கிற அளவுக்குத்தான் இன்று என் மனநிலை இருக்கிறது. மதுரை புறநகரில் வளர்ந்த சீனிவாசன், சீனுராமசாமி ஆகிவிட்டாலும்... குட்டிக்குரா.. கோகில் சாண்டல் பௌடர் வாசனைகளுக்கு முகத்தை வேறு பக்கம் திருப்பி நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. எனக்கே இரு பெண் குழந்தைகள் இருக்கும்போது கட்டாயம் செல்விக்கும் பதினைந்து வயதில் ஓர் ஆணோ பெண்ணோ குழந்தைகளாக இருக்கலாம். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வு மட்டுமே இப்போது எனக்கு அலையாடிக்கொண்டு இருக்கிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக லொகேஷன் பார்க்க சென்றிருந்த போது அந்தக் கல்லறைத் தோட்டத்துக்குப் போனேன். மௌனமாக நின்றேன். அன்று பூத்திருந்த புளியமரம் அப்போது இலையுதிர்த்து நிற்கிறது. கல்லரைகளில் கட்சிக்கொடிகள் ஆக்கிரமிப்பு அதிகமாகி இருக்கின்றன. பேனர்களும் பிளக்ஸ்களும் அதிக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் ஆவாரம் செடிகள் மஞ்சள் நிற பூக்களோடு தயக்கமாக என்னை பார்க்கின்றன. அவற்றுக்கு மத்தியில் யார்யாரோ வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். சத்தியமாக அங்கே செல்வி இல்லை. ஆவராம் பூவிலிருந்து சீறிவரும் அலை ஒன்றுக்குத் தப்பித்து ஓடிவருகிறான் பதினெட்டு பத்தொன்பது வயது மதிக்கத்தக்க ஒருவன். அவனைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொல்லி பெயர் கேட்கிறேன் சீனிவாசன் என்கிறான். அவனுக்கு நிச்சயம் ஊர் மதுரையின் புறநகரில் இருக்கும் திருநகராகத்தான் இருக்குமென கேட்காது வந்துவிட்டேன்.   

-
கதிர்பாரதி


கல்கியில் பிரபலங்களின் காதல் அனுபவம் -1

No comments: