29 October, 2012

தகிக்கிறது சிரிப்பு

உங்களுக்கு இல்லைவேயில்லை என்றாகிவிட்ட
ஒருத்தியின் சிரிப்போடு
விடுதியொன்றில் அறை எடுத்துத் தங்குகிறீர்கள்.
அறைக்குள் ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துவிட்டு 
அதற்கு எல்லாமுமாக ஆகிறது அந்தச் சிரிப்பு.
கண்ணாடித் தம்ளரில் நீரினை வெளியேற்றி
அவள் சிரிப்பினை நிரப்பி கடகடவெனக் குடிக்கிறீர்கள்.
மெல்ல சந்நதம் ஏறுகிறது உங்களுக்கு.
சிரிப்புக்குச் சொந்தமான அவள் இதழ்களை
ருசித்த நினைவுகளால் உன்மத்தமாகிறீர்கள்.
தகிக்கிறது சிரிப்பு.
சிரிப்போடு பிணைந்திருக்கும் ஒரு தருணத்தில்
வாளாக மாறும் சிரிப்பொலி ஊடுருவித் துளைக்க
வலியால் தத்தளிக்கிறீர்கள்.
தண்ணீர்க் குழாயைத் திறந்து சிரிப்பினைக் கையில் பிடித்து
முகத்தில் அடித்துக் கழுவும்போது
இயலாமையின் கண்களில் உப்புத்துளிகள் வழிகின்றன.
சிரிப்பின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கும் உங்களை
இனி எவற்றாலும் தேற்ற முடியாது.
அறையை நீங்கும்போது உங்களை கீழ்நோக்கி வளைத்து
திடீரென்று முத்தமாக மாறும் சிரிப்பை மட்டும்
தயவுசெய்து ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
ஏனெனில்
அது முத்தம் மட்டுமல்ல.

1 comment:

manichudar blogspot.com said...

சிரிப்பை சிரிப்பாக மட்டுமே உணர்ந்த எனக்கு திகைப்பை தந்தது உங்கள் தகிக்கும் சிரிப்பு.