18 October, 2012

முகங்கள் 3 கதிர்பாரதி


கதிர்பாரதி என்றொருவன் இருப்பதே எனக்குத் தெரியாது.
பொதுவாகவே தத்தமது பேர்களின் இறுதியில் ஒரு இறகைப் போல
பாரதியையும் காந்தியையும் இணைத்துக்கொண்டு பலபேர் இருப்பதைக்
காண்கிறோம்.எனக்கு அமிர்தம் சூர்யா உடனான நட்பு கிடைத்த பிறகு தான்
அவர் பணிபுரிகிற கல்கி இதழிலேயே கதிர்பாரதி என்னும் ஒரு துணை
ஆசிரியர் இருப்பதை அறிந்தேன்.
அதன் பிறகு நண்பன் நிலாரசிகன் ஏற்பாடு செய்திருந்த கவிதை
நிகழ்வு தூத்துக்குடி அருகே தேரியில் கடந்த ஃபிப்ரவரி 18 ஆம் தேதி
நடந்தது.அங்கே என் முகப்புத்தக இலக்கியஸ்னேகிதர்கள் பலரையும்
நான் முதன்முதலில் சந்தித்தேன்.முக்கியமாக வா.மணிகண்டன்,
பெரியசாமி பொன் இளவேனில்,இளஞ்சேரல்,கறுத்தடையான் மற்றும்
கதிர்பாரதி.

நேரில் பார்க்கும் போது கேட்டே விட்டேன்..."தம்பி
கதிர்பாரதி வரலையா..?"என்று.அதற்கு என்னை முறைத்தபடியே "
நாந்தாங்க கதிர்பாரதி"என்றார்.
இவ்வளவு யூ யூத்தான ஒரு துணை ஆசிரியர்
மற்றும் கவிஞரா....எனக்கு சந்தோஷமாக இருந்தது.ஒரு காலத்தில்
தமிழ் சினிமா சித்தரித்து வைத்திருந்த பத்திரிக்கைக் காரன் என்னும்
பிம்பம் கொடியது.கதர் ஜிப்பாவும் தோளில் ஒரு ஜோல்னாப் பையும்
மொக்கையாய் கழுத்தில் தொங்குகிற கேமிராவும் கண்ணில் கட்டாய
சோடா புட்டிக் கண்ணாடியும் என இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட
எல்லாவற்றின் மொத்த பிரதி பிம்பன் அவன்.ஆனால் இன்றைக்கு
பத்திரிக்கையாளர்கள் கணிணித்துறையில் வேலை பார்க்கிறவர்களை
விட ஃப்ரீக் அவ்ட் ஆக இருப்பது தான் நிஜம்.அவர்களின் பிரதிநிதியாக
நான் கதிர்பாரதியைப் பார்த்தேன்.
எண்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டோம். அதற்கு முன்பே
கதிருடனான ஸ்னேகம் எனக்கு குரல்வழியாகக் கிடைத்தது தான்
என்றாலும் கூட நேரில் பார்த்த பின் இன்னமும் இணக்கமாக மாறிற்று.
என்னுடைய தனிக்கவிதை ஒரு பக்கத்திற்கு கடந்த சனவரி மாதம்
"இயக்குநர்" என்னும் தலைப்பிலானது கல்கியில் வெளியாகி பரவலாக
அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது.அதற்கு கல்கி தேர்வெடுத்து
இணைத்திருந்த ஓவியம் மிகச்சிறப்பான ஒன்று.
கதிர் பாரதி தனது யவ்வனம் என்னும் வலைப்பூ
முகவரியைக் கொடுத்து "நண்பா...டைம் கிடச்சா பாருங்க நண்பா..."என்றார்.
நான் பார்த்தேன்.கவிதைகள் கவிதைகள்...அதுவும் வெற்று
வாசகங்கள் அல்ல.உணர்வுப் பூர்வமான கவிதைகள் தான் அத்தனையும்.
தொலைபேசியில் அழைத்து "கதிர் நல்லா இருக்குப்பா கவிதைகள் எல்லாம்.."
என்றால் எதிர்முனையிலிருந்து பலவீனாமான கூச்சக்குரலில்,"அப்டியா நண்பா
சொல்றீங்க...?"என்றார்.
இடையில் கொஞ்ச நாள் வேலைப் பரபரப்பில் கதிர்பாரதி
கவிதை எதையும் அப்லோட் செய்யவில்லை தனது யவ்வனத்தில்.அதற்கடுத்து
முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்ட எந்தக் கவிதையுமே எளிதில் கடந்து விடக்
கூடியவை அல்ல.
கதிர்பாரதியின் சிறப்பம்சம்..வளைந்து கொடுப்பது.வளைந்து கொடுப்பது
என்பதை இந்த சமூகம் மிகச்சரியாக தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது.அறம்
வழுவாது,அதே நேரத்தில் எந்த ஒரு மனமும் புண்படாது ஒரு குறிப்பிட்ட
நீட்சி வரை சென்றேனும் மனிதர்களைக் கையாளுவது ஒரு பெருங்கலை.அது
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்க்கப்பெறும்.அந்த வரிசை மனிதர்களில் என்
நண்பர் கதிர்பாரதியை சொல்லலாம்,.
கதிர்பாரதி நாம் என்ன தொனியில் என்ன வாக்கியங்களில்
பேசுகிறோமோ அதே தொனியைக் கூட நமக்குத் திருப்பித் தருபவர்.சிற்றிலக்கிய
அரசியல்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.ஆனால் அவரளவிற்கு
இது வரை யாரைப் பற்றியும் புறம் கூறியது இல்லை.இது ஒரு பெரிய்ய குணம்.அவர்
அடுத்த மனிதனைப் பற்றிப் பேசினால் கூட அந்தப் பேச்சில் அடுத்த மனிதனின் செயல்
குறித்தான விமர்சனம் மற்றும் விளக்கம் இருக்குமே ஒழிய மேம்போக்கான வெறுப்போ
பிறர் மீதான ஆத்திர உமிழ்தலோ கட்டாயம் இருக்காது.
கதிர்பாரதி இளைஞர்.கவிஞர்.இவற்றைத் தாண்டி இதழியல் ஊடகத்
துறைகளில் மிகப் பிரகாசமாக வருவதற்குரிய ஒரு நபர்.அவருக்கு அந்தத் தகுதிகள்
உண்டு.சிறந்ததொரு மனமும் உண்டு.மனிதர்களை கையாள்கிற எவனும் முன்னேறுதல்
கடினமல்ல.
அடிக்கடி தொலைபேசியில் அழைப்பேன்.எப்போதாவது தான் அவர் அழைத்துப்
பேசுவார்.ஆனாலும் எனக்கு அந்தகுறை தெரியாமல் அவரது இளவல் தன் மழலைக்
குரலால் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.அவரது செல்பேசியில்
AAவரிசையில் முதல் பெயராக ஆத்மார்த்தி இருப்பதால் மருமகப்பிள்ளை
அடிக்கடி என்னை அழைத்து சர்வதேச ரகசியங்களை மொழியும்..அதில்
சங்கேதசங்கீதம் பொழியவும் பொழியும்.


இன்னமும்
நட்பு
பாராட்டுவோம்

ஆத்மார்த்தி
 

No comments: