01 April, 2013

நினைவில் அகலாத கொண்டலாத்தியின் குகுகுகுப்பு = லிபி ஆரண்யா =========== (என் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் புத்தகத்துக்கு வந்த முதல் விமர்சனம் லிபி ஆரண்யா எழுதியது. அதன் சுருக்கப்பட்ட வடிவம் அம்ருதா (ஏப்ரல் 2013) இதழில் வெளியாகி இருக்கிறது. விரிவான வடிவத்தையும் இணைத்திருக்கிறேன். லிபியின் சிரிப்பையும் முத்தங்களையும் போல இந்த விமர்சனமும் எனக்கு மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது. நன்றி : லிபி, அம்ருதா இதழ், நண்பர் தளவாய் சுந்தரம்.)



நன்றாக நினைவிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு விபத்தாக
வாசிக்க நேர்ந்தது சில புத்தகங்களை. அதில் இருந்த ஓவியங்கள்
என்னைத்திடுக்கிடச்செய்தன. உடலை முறுக்கி கைகளைத்திருகி
கால்களுக்குள் நுழைத்து 180ச -யில் தலையைப்பின்புறமாய் சுழற்றி மார்பு வரை
தொங்கிய நாக்கில் ஒரு நட்டுவாக்காலி சிரிக்க சுற்றிலும் வண்ணத்திகள்
படபடக்கும் வகையிலான ஓவியங்களில் மிரண்டு போயிருக்கிறேன்.
ஆக்சுவலா நீங்க என்ன சொல்ல வர்றீங்க? என்ற நமது தத்தியான
கேள்விக்கு அவர்கள் "வாசித்துப் புரிந்துகொள்ளவும்" என்று அம்புக்குறி
காட்டும் திசையில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஸர்ப்ப வரிகளிடம் போய்
சிக்கிக்கொண்டால் அதோகதிதான்.
ஓவியனின் அன்னாசிப் பழத்துக்கே கிழிந்து ரத்தக்களறியான நமது
வாயைப் பலாப்பழத்தைக் கையில் வைத்திருக்கும் கவிஞனிடம் ஒப்படைத்த
கதையாகிக் கந்தலாகிவிடும்.
இன்னும் நீங்கள் வளர வேணும் தம்பி! என அவர்கள் நமது திருவாய்
சுற்றளவின் போதாமை குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுதான்
அடாவடித்தனத்தின் உச்சம்.
தமிழ்க்கவிதைப் பரப்பின் அலுப்பூட்டும் தேசியநெடுஞ்சாலையின் மீது
அதிருப்தி கொண்டு சிற்றிதழ் அணுகு சாலைகளின் வழி இறங்கி வாகனப்புகை
இரைச்சல், தூசுக்கு அப்பால் காட்டுப்பூக்கள் மலர்ந்திருக்கும் நன்னிலத்திற்குப்
பயணப்பட விழையும் புதியவர்கள் எதிர்கொள்ளும் முதல் ராக்கிங் இதுதான்.
ஆனால் ராக்கிங் காலம் முடிந்து எழுதத்துவங்கிய "ஜூனியர்கள்" 362ச -
யில் தமது கபாலத்தைத் திருப்புவதாகச்சொல்லி குறி வரைக்கும் நாக்கைத்
தொங்கவிட்டு அதில் பூரான் விட்டுக் காண்பிக்க அரண்டுபோனவர்கள் இந்த
விளையாட்டை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் என்ற பொதுமுடிவுக்கு
வந்துவிட்டது போல் இருக்கிறது நிகழ்கால தமிழ்க்கவிதைப்போக்கு.

சற்றுத்தெளிந்தே ஓடும் நவீன தமிழ்க்கவிதையின் போக்கில்,
மனத்தடையற்று சலசலக்கிறது கதிர்பாரதியின் கவிதைகளும். பின்னட்டையில்
சொல்லப்பட்டதைப்போல் அதுவே அதன் பலமுமாகிறது.
கதிர்பாரதிக்கு இது முதலாவது தொகுப்பு. புது எழுத்தின் கண்காணிப்பில்
சுகப்பிரசவம். நல்ல வடிவுடன் வேறு இருக்கிறது. எடை நார்மல். வீறிட்டழும்
குரலை வைத்தே குழந்தை XY என்று முடிவெடுக்கலாந்தான்.
இப்படியாக பிரசவ அறைகளின் முன்புறம் நிகழ்த்தப்படும் உரையாடல்
போல் ஒரு கவிதைத்தொகுப்பு குறித்துப் பேசிவிடமுடியுமா என்ன?
நமது நிலத்தில் கவிதைகள் குறித்த பேச்சுக்கள் கவிதைகளைவிடவும்
திருகலாகத்தான் இருக்கின்றன என்பதைச் சொல்லத்தான் வேண்டியுள்ளது.
"ஆட்கள் வேலை செய்கிறார்கள்" என்று சாலைகளில் வைக்கப்படும்
அறிவிப்புப் பலகைகளைக் கவனித்திருப்பீர்கள். குறுக்கே கட்டப்பட்ட சிவப்பு
நாடாவைத் தாண்டிப் போகிறவர்கள் தோண்டப்பட்டிருக்கும் குழிகளில் விழ
வாய்ப்புண்டு. அந்த அளவில் அந்த அறிவிப்புப் பலகைகளுக்கு அடிப்படை
நேர்மை இருக்கும்.
"ஒலி எழுப்பாதீர்" "மாற்றுப்பாதையில் செல்லவும்" "அபாயகரமான
வளைவு" "வலப்புறம் திருப்புக" என்பன போன்ற விமர்சன வாசகங்கள்
தமிழ்க்கவிதைச் சாலைகளில் பிரம்மாண்டமாக வைக்கப்படுகின்றன. ஆனால்
அதை நம்பி வண்டியை நொடிப்பவர்கள் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் வாகான
பள்ளங்களில் திடுமென விழ நேர்வது தற்செயலானதல்ல.
ஆக இதுபோன்ற ஆற்றுப்படுத்தும் துர்வாசகங்களுக்குத் தப்பித்தான் நாம்
எழுதும்படியாகிறது.தொகுப்புகள் ஜனிக்கும்படியாகிறது.
அந்த வகையில் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்றபடி தப்பித்து
வந்து நிற்கும் கதிர்பாரதியைத் தழுவிக்கொள்ளலாம்தான்.

நினைவு கொப்பளிக்கும் நிலம், காமம் நுரைக்கும் காதல், துயரம் சொட்டும்
பிரிவு, அன்பு பரியும் மனம், தினப்பாடுகளின் கேவல் என பன்முகமாய் விரியும்
கவிதைகளின் வகைமைகள் தொகுப்பிற்கு பலம் சேர்க்கின்றன.
கம்பிப்பதத்தில் சர்க்கரைப்பாகு தேவைப்படும் சில பதார்த்தங்களை நீங்கள்
அறிவீர்கள்தானே. பதம் தவறினால் செய்கிற பதார்த்தம் சோபிக்காது. இந்தக்
கம்பிப்பதம் கவிதையின் புழங்குமொழிக்கும் பொருந்தியே வருகிறது.
மண்டை வெல்லத்தை அசிரத்தையாகத் தட்டிப் போட்டாலும்
ஒத்துக்கொள்ளும் உரைநடையின் பெருந்தன்மை இந்தக்கவிதைகளுக்கு
ஒருபோதும் வருவதில்லை. இதைக் கதிர்பாரதி புரிந்து வைத்திருக்கிறார்.
கவிதை கோரும் மொழியின் கம்பிப்பதம் கதிர்பாரதிக்கு
கைகூடியிருக்கிறது.
வார்த்தைகளின் நிலைப்படங்கள் உறைந்த பிலிம் சுருள் வா¢கள்
வாசிக்கப்படுகையில் உறைந்தவை உயிர்த்தெழ சலனப்படமாகி காட்சிகளை
விரிக்கப் பண்ணும் தொழில்நுட்பம் கவிதைகளுக்கு அவசியம்தான்.
காட்சிப்படுத்தும் அத்தொழில்நுட்பம் கதிர்பாரதிக்கு வாய்த்திருக்கிறது.
“உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப
நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று”
- என்ற காட்சியும்
விதைப்புக் கால வரப்பில் விழுந்திட்ட நெல்மணிகளை
கா¢ச்சான்கள் கொத்திப் போவதென
நிகழ்ந்தப் பிரிவைக் கொட்டி
உப்புச் செடிகள் இரண்டை வளர்க்கிறேன் கண்களில்
- என்கிற காட்சியும் அதை உறுதி செய்கின்றன.
அங்கதத்தைக் கவிதையாக்குவது உள்ளபடியே சவாலானது.
"கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள்
ஊதா நிறத்தில்தான் இருந்தனவாம்"
-என்ற் ஆரம்பிக்கும் வா¢கள்
கேரட்கள் இளஞ்சிவப்பு நிறம் கொண்டதும்
இப்படி அரசல்புரசலாகத்தான் என்றால்
நம்பவா போகிறீர்கள்"
- என்ற இடத்தில் கவிதையின் நிறத்தைப்பூசிக்கொள்கின்றன.
பரோட்டாவால் கைவிடப்பட்ட கவிஞனை கேரட் காப்பாற்றிவிடுகிறது.
"வெயிலுக்குப் பொறுக்குத்தட்டிய விளைநிலத்தில்"
"கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது"
- என்று விட்டு வந்த நிலத்தின் நினைவுகள்
உடைப்பெடுக்கும் கவிதை வா¢கள் தொகுப்பு முழுக்க விரவிக்கிடக்கின்றன.
ஓர் இடதுசாரி இயக்க செட்டைகளின் கீழ்நின்று சின்னச்சின்னக்
களப்பணிகளில் தோய்ந்திருந்த காலத்தில் ஒரு சம்பவம்.அந்த ஊரின்
நுழைவாயிலில் சாலையின் மருங்கே தேமே என்று நின்றுகொண்டிருந்த
மின்கம்பங்களின் தலையில் ஒளிவிளக்குகள் முளைப்பதற்காகப் போராட்டத்தைத்
துவக்கினோம்.




ஒருவாறு விளக்குகள் ஒளிர்ந்தன. எங்கள் பின்மண்டையைச் சுற்றி
போராட்ட ஒளிவட்டம் தெரிவதாக சிலர் தட்டேத்திக்கொண்டிருக்க நாங்களும்
நம்பத்துவங்கியிருந்தோம்.
ஓரிரண்டு நாட்கள் தான். விளக்குகள் எரியவில்லை. யாரோ
உடைத்திருந்தார்கள். முச்சந்தியில் நின்று கொண்டு அரசியல் எதிரிகளை
நோக்கி எச்சா¢க்கை வாக்கியங்களை விசிறியடித்தோம். பிற்பாடு மனந்தளராத
விக்கிரமாதித்தன் களாய் கம்பமேறி புது பல்புகளை மாட்டிவிட்டு இறங்கினோம்.
மீண்டும் அதே கதிதான். கடுப்பானோம். கண்டுபிடிக்க உளவுத்துறையை
முடுக்கிவிட்டோம்.
எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதை எமது ஊரின்
பெண்கள்தான் உடைத்திருக்கிறார்கள். அவர்கள் உடைத்தது குழல் விளக்கை
மாத்திரம் அல்ல. பெண்களின் பிரச்சனைப்பாடுகளில் "குழல் விளக்கென"
இருந்த எங்கள் மனதையும், ஆண்மனதுடன் இயங்கும் இயக்கங்களையும் தான்.
எங்கள் செவிட்டில் அறைந்த இந்த உண்மை சு¡£ரென்றது.
கழிவறை வசதியற்ற எங்கள் கிராமத்தில் பகலைச் சபித்தபடி சூரியன்
தொலையும் வரை தாளா அவஸ்தையுடன் நகரா நிமிடங்களை நகர்த்தியபடி
இருந்திருக்கிறார்கள் பெண்கள். வெளிச்சக் குறைவைக் கோரும் அந்த
இடத்தில்தான் நாங்கள் போராடி வெளிச்சங்காட்டியிருக்கிறோம்.
பெண்களின் பாடுகள் வேறாகத்தான் இருக்கின்றன, ஆண்களின்
கண்கள் கொண்டு புரிந்து கொள்ளவியலாதபடிக்கு.
இதையே கதிர்பாரதியின் ஒரு கவிதை ருசுப்படுத்துகிறது.
"முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மித வேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளைத்
தாலாட்டி தாலாட்டி"
தூரத்தில் ஒரு குழந்தை பசித்திருக்க பயண வழியில் பால்
கட்டிக்கொண்டு அவஸ்தையுறும் முலைகளின் மீது 'ஏக்கம்' என்ற சொல்லை
வீசுவதும், ரயில் தாலாட்டுவதாக "ரொமாண்டிசைஸ்" பண்ணுவதும் ஆணின்
பார்வைதான்.
சுரக்கவியலா மார்புகளுடன் சபிக்கப்பட்ட ஆண்களுக்கு பெண்களின்
வலிகளை உணர வாய்ப்புகளேதுமில்லைதான். இக்கவிதையைக்
குறிப்பிடுவதற்கு வேறு காரணமும் இருக்கிறது. தற்போது பெண்குரலில் பேச
முயற்சிக்கும் ஆண் கவிதைமொழியில் பாசாங்கின் துர்நிழல் படிவதைப்
பார்த்தபடிதான் இருக்கிறோம்.
கவிதை எப்போதும் உண்மையின் திசையில் இயல்பின் வருகையை
எதிர்பார்த்தபடிதான் காத்துக்கொண்டேயிருக்கிறது.
அந்த வகையில் ஆண்களைப் பெண்கள் முன்பு அம்பலப்படுத்தும்
கவிதையின் பணிக்கு இடையூறு செய்யாதிருப்பதே நேர்மைதான்.
கதிர்பாரதியின் பாசாங்கற்ற பேச்சு இந்த நேர்மைக்கு மிக அருகில் இருப்பது
ஆரோக்கியமானதென்றே கருதுகிறேன்.
ஏனெனில் அவர்தாம் வேறு ஒரு இடத்தில் பசப்புகளுக்கும், பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலம் குறித்த தனது ஒவ்வாமையைப் பதிவு செய்திருக்கிறார்.
“தள்ளாடித் தள்ளாடி மனுஷ்யகுமாரன் இழுத்துப் போகிற
சிலுவை மரத்தின் அடி நுனியின் தேய்மானத்திலிருந்து
கசிந்து கொண்டே இருக்கிறது. எப்போதும் போல
எம்மீதான கிருபை”.
- என்ற வா¢களினூடாக முள் முடியும் கசையடியுமாக சிலுவை
சுமக்கும் வலியார்ந்த சித்திரமொன்றின் ஒட்டுமொத்த வேதனையையும்,
கருணையையும் "இழுபடும் சிலுவை மர அடிநுனித் தேய்மானத்தில் " கசியக்
காண்பது இளக்கமான கவிமனத்தின் அரிய கூறு.
தொகுப்பை மூடி வைத்த பின்பும் பசுவின் முதுகில் பவனி வரும்
கொண்டலாத்தியின் குகுகுகுப்பு அகல மறுக்கிறது.
"ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய் நிலம்"
- என்ற வா¢கள் உப்பி மேலெழும்பும் கமலையாகி காமம் நுரைக்கும்
காதலை இறைந்தபடியேயிருக்கிறது.
"மகன்களும் மகன்களின் நிமித்தமும்" என்ற தலைப்பிலான கவிதைகளில்
தந்தைமை குறித்த பெருமிதத்தைக் கழித்து விட்டு வாசிப்போர் குழந்தைகளின்
புதிரும் விளையாட்டும் குதூகலமும் ஒவ்வாமையும் புனைவும் நிறைந்த
அகஉலகை விரிக்கும் சித்திரங்களைக் காணவியலும்.
மாடுமுட்டி விட்டதாகச் சொல்லும் குழந்தையின் தழுதழுப்பிற்கு குற்ற
உணர்ச்சியில் கொம்பு முளை விடும் குதிரை பொம்மை கவிதை
குறிப்பிடத்தக்கது.
குழந்தை வைத்த கொலுவில்...
"ஆசிரியர் பொம்மைக்குப் பாராமுகமாக நிற்பது
கபிலன் யுகேஜி யாகத்தான் இருக்க வேண்டும்"
-என்ற வா¢களில் நம் வாசிப்பு நங்கூரமிடுகிறது.
குழந்தைகளின் மொழியில் விரியும் ஆகச்சிறந்த ஒரு புனைவு
"நான் ஹோம் ஒர்க் செய்யணும்
அவ்ளோ தான் கதை"
- என்ற துர் சொற்களில் அறுந்து தொங்குவது தான் துயரம்.
“அவ்ளோ தான் கதை" என்கிற குழந்தைமை மீதான படுகொலைக்கு
நாமும் நமது கல்வி முறையும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
கடவுள் - சாத்தான் எதிர்வைப் பற்றிக் கொண்டிருக்கும் சில கவிதைகளும்
எழுத்துக்களை ஒன்றன் கீழ் ஒன்றாய் எழுதிப் பரவசங்கொள்ளும் சில
கவிதைகளும் ஏற்கனவே நாம் பேசிய "ராக்கிங்" கால பாதிப்புகளைக்
கொண்டிருக்கின்றன.
"ஒரு காட்சி - புனைவு - அங்கதம்" என்று மூன்றையும் பக்குவமாக சேர்த்து
விழுதாக அரைத்து நமக்குத் தரப்படும் சிட்டுக்குருவி லேகியத்திற்காக
கதிர்பாரதிக்கு முத்தங்கள்.
"என் தேவனே என் தேவனே" என்று முடியும் தொகுப்பின் இறுதிக்
கவிதையில் கதிர்பாரதி கசாப்புக்காரனின் வாகனத்தில் கிடந்து கதறும் ஒரு
மறிக்காக விசனங்கொள்கிறார். தொகுப்போ "மீன் குழம்பின் ருசிக்கு" சமர்ப்பணம்
செய்யப்பட்டிருக்கிறது. நிலத்தில் ஊற்றுப் பா¢யும் கதிரின் அன்பு ஏன் நீரில்
வற்றிப் போகிறது என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாதுதான். ஏனெனில் அது
சின்மயியின் கேள்வியாகிவிடும் ஆபத்து இருக்கிறது.
நமக்கு நாமே முரண்பட்டுக் கொள்வதுதான் அழகு. அது அன்பின்
நிமித்தமெனில் பேரழகு தான் கதிர்.
பள்ளி மாற்றுச்சான்றிதழில் அங்க அடையாளம் என்று அச்சிடப்பட்டு
அதன் எதிரில் இரண்டு கோடுகள் நீண்டிருக்கும். ஒன்றில் குழந்தைகளது
மச்சத்தையும் ஒன்றில் அவர்களது தழும்பையும் கொண்டு நிரப்புவது வாடிக்கை.
சொன்னால் நம்பமாட்டீர்கள் இப்போது அந்த இரண்டு கோடுகளிலும் மச்சங்களே
ஏறி அமர்ந்து கொள்கின்றன. அடையாளத்திற்குக் கூட தழும்புகளற்ற
குழந்தைகள் பெருகி வருவது பதற்றமூட்டுவதாய் இருக்கிறது.
கதிர்பாரதி தனது முதல் தொகுப்பினூடாக ஒன்றுக்கு மூன்றாய்
மச்சங்காட்டி நிற்கிறார். குறித்துக் கொள்ள தழும்புகளைக் கோரி நிரப்பப்படாது
நீண்டு கிடக்கிறது ஒரு கோடு.
"இடதுசாரிக் கொள்கைப் பற்றும் விவசாய வாழ்வுப் பின்ன்ணியும் கொண்டவர்"
என்பதாக அறிமுகம் செய்து வைக்கப்படும் கதிருக்கு வலிகளும் தழும்புகளும்
இல்லாது போகுமா என்ன?
எறும்புகளால் இழுத்துச் செல்லப்படும் ஒரு வண்ணத்தியின் இறகுகளில்
உறையும் நான்கு கண்கள் வழியே வெளியேற ஆயாவின் உயிர்
முடிவெடுத்துவிட்டதாக வலியைக் கவிதையாக்குகிறார் கதிர். அவரால் இந்த
போகத்திற்கு முற்றாக உலர்ந்துபோன நம்பிக்கையின் புட்டியில் பூச்சிமருந்தை
நிரப்பியவனின் உயிர், வராத நீருக்காய் பயிர்கள் கருகும் நிலத்து வெடிப்புகளின்
வழியே வெளியேறிக்கொண்டிருக்கும் துயரையும் காட்சிப்படுத்தமுடியும்.
கோடிட்ட இடத்தை நிரப்புவீர்கள்தானே கதிர்.
உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

23 March, 2013

கதிர்பாரதியின் கவிதை நூலான “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” குறித்து ரசவாதியின் நாட்குறிப்புகள் கவிஞர் இளஞ்சேரல்



                  பிரதியாக்கங்களில் தத்துவங்களுள் முதன்முதலாக கான்ட்டியமே விமர்சன தத்துவம் என அங்கீகரிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டு பிரஞ்சு தத்துவ அறிஞர் மான்டேன் தத்துவங்களை நம்பிக்கையின்மையின் வாதங்கள் மற்றும்(எதிராக) மதநம்பிக்கை வாதங்கள் என்று பகுத்திருந்தார். கான்ட்டின் நூல்களுள் அடிக்கடி குறிப்பிடப்படுவனவாகியதுய அறிவு திரனின் விமர்சனம்” ”அரசியல் அறவியல் அறிதிறனின் விமர்சனம்“ “அழகியலின் மதிப்பீட்டுத்திறனின் விமர்சனம்எனும் மூன்று நூல்களின் வழியாக விமர்சனம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. தலைப்பும் பொருளடக்கமும் சிந்தனை இயக்கமுமாய் மையம் வகிக்கிறது. அந்த வகையில் கவிதை நூல்களுக்கான விமர்சனம் அல்லது அறிமுகங்கள் என்பதாக நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஏற்பாடு செய்திருக்கும் அகநாழிகை.தக்கை.361.டிகிரி இதழ்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி. பங்கு கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் கவிஞர்களுக்கும் மதிப்பிற்குரிய விமர்சகர்களுக்கும் முதற்கண் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

         கதிர்பாரதியின் கவிதை நூலுக்கு இரண்டாவது முறையாக அறிமுக குறிப்புகள் எழுதுவதில் மகிழ்ச்சி. அவருடைய கவிதையிலிருந்து துவங்குவோம்.

வெள்ளையாகச் சலனித்தல்
தண்ணீரைத் துளைத்துத் தொங்கும் தூண்டிலில்
துடிக்கும் புழுவை
முள்ளில் மாட்டிக் கொள்ளாமல்
கவ்வி இழுப்பது போன்ற கனவிலிருந்த சினை மீன்
கொத்தித் தூக்கிய கொக்கின் தொண்டையில்
அடிமேல் அடிவைத்து
வெள்ளையாகச் சலனிக்கிறது
உறைந்திருந்த காலம்
- பக்-28

  தற்கால உலகம் மற்றும் இலக்கிய வகைமைகளில் கவிதையின் வடிவங்கள் தனது இருப்பை தொடர்ந்து தகவமைப்பு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வருகிறது. நவீன நுகர்வு உலகின் அனைத்து வருவாய்கள் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுவது மாதிரியே நவீன கவிதையின் ஆக்கங்களும் அமெரிக்காவின் அடிமை நாடுகளாக இருக்கிற தேசங்களிலிருந்து தான் நவீன வடிவங்களைப் பெறுகிறது.        அடிமை தேசங்களிலிருந்தும் அவர்கள் இழந்ததைப் பற்றிப் பேசுகிறார்கள் நாம் இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். அவர்கள் தத்தம் தாய் மொழியை எந்தச் சூழலிலும் திருகித் திருகி உருப்போடுவது இல்லை. அடிமையின் தேசங்களில் ஆழக் கற்றவர்கள் இருக்க வாய்ப்பில்லை. மிகக் குறைந்த வாசிப்பும் மொழி மீது பற்று கொண்டதின் காரணமாகவும் தனது நாட்டில் நிலவும் தன்மை குறித்தும் உலகின் ஜனநாயக வெளிச்சத்தின் நீரோட்டத்திற்கு அறிவிக்கவுமே எழுதுகிறார்கள்அவர்கள் யாசிப்பதுவேண்டும் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் உனவுஉறங்க இடம் காற்றுக்கும்  மழைக்கும் கொஞ்சம் கூரை. இவற்றையே தனது கவிதைகளில் திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். அவற்றை இயற்கையிடம் கேட்கிறார்கள். தன்னை அடிமைப்படுத்திய வல்லாதிக்கத்திடம் கேட்கிறார்கள். கானகம் அழிந்து விட்டது. ரசாயன குண்டுகளால் பறவைகள் இல்லை. அதிகாரம் தன்னுடைய அதீதமான இருப்பையும் பேராசையையும் காட்டியதின் விளைவே இந்த அழித்தொழிப்பு

       கதிர்பாரதியின்மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்தொகுப்பில்  சர்வதேசிய அளவில் இன அழித்தொழிப்பக்கு எதிரான கவிதைகள் சில எழுதியிருக்கிறார். நவீன கவிதை வடிவங்களில் பாசாங்கு அற்ற மொழியில் மனித அறம்  சட்டகமில்லாத எளிய வாழ்வு குறித்து எழுதுபவர்கள் மிகக்குறைவு. மனித அறம் என்பது என்ன எனத் தெரிந்தால் தானே அவர்களுக்கு எழுத வரும். பிரதியின் நோக்கம் பிரதியின் வடிவம் பிரதிகளின் செயலாக்கம் குறித்த கலாபுர்வமான அணுகுமுறையே ஒரு கவிஞனின் ஆக்கத்தையும் சமகாலத்தின் அரசியல் இருப்பையும் தெரிவிக்கிறது.

         உலக கவிதைகளில் மொழிகளில் எண்ணற்ற கவிஞர்கள் என்னதான் எழுதுகிறார்கள் என்று நாம் அறிய பிரியப்படுகிறோம். அறிந்து கொள்ள விழைகிறோம். நீர் நிலைகளின் ஆசீர்வாதத்தில் மனித உயிரினமும் வாழந்து கொள்கிற ஆசீர்வாதம் கிட்டியிருக்கிறது இயற்கையால். நாம் இயற்கையை வைத்துக் கொண்டாடி வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது ஒரு கூட்டம் இன்னொரு கூட்டம் அரசியலை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்கிறது .

        எனினும் உலக கவிதையியக்கம் நமக்கு முன்பாக மாபெரும் சவாலை முன்னிருத்துகிறது.

            சமகாலத்திலும் இதற்கு முன்பு பதினாராம் நுற்றாண்டுகளில் நிகழ்ந்த பிரஞ்சு புரட்சி,ரஷ்யப் புரட்சி இரண்டு உலகப்போர்கள், பிறகு அடிமைநாடுகள் சுதந்திரம் பெற்றதும் அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள் பிறகு எல்லைகள் குறித்தத் தகராறுகளை நம்மை அடிமைப் படுத்திய நாடுகள் தகராறுகளை மறைமுகமாகத் தூண்டிவிடுதல் பிரிவினைவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிவருவதையும் நாம் அறிந்தே பேசாமல் இருக்கிறது என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

        கதிர்பாரதி சில கவிதைகளை நவீன யதார்த்தவாததில் எழுதியிருக்கிறார். ரியலிசம் பிரான்சில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய போது இரு உலகப் போர்களின் பின்னணி இருந்தது. ரியலிசம் என்னும் சொல் ஜெர்மானிய சொல்லான ரியல் பொலிடிக் என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. இச்சொல்லை முதல் முதலாக ஜெர்மானியரான பிஸ்மார்க் உபயோகித்தார். பொதுவாக கலைக்கு இரண்டு விதமான தன்மைகள் உண்டு. ஒன்று சூழ்நிலையைப் பரிச்சயப்படுத்திக் கொள்வது( cognitive)

இரண்டு பரிச்சயப் படுத்திக் கொண்டதை பிரதிபலிப்பது.(Reflective) இத்தகையத் தன்மையைத் தனது பண்பாகக் கொண்டதே யதாரத்தவியல் ஆகும். பால்சாக் முன்னோடி ஆளுமை.பிறகு வந்த குஸ்தாவ் ப்ளாவே ரியலிசத்தை அதன் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.ஜார்ஜ் எலியட்,சார்லஸ் டிக்கன்ஸ், பெர்னார்ட்ஷா,செகாவ் முக்கியமானவர்கள்.



கூச்சத்தைப் புசிக் கொள்ளும் பிள்ளையார் -கவிதையில் கதிர்பாரதியின்

யாதார்த்தவாதம் அற்புதமாக சித்தரிக்கப் படுகிறது.

 படையலின் பின்னந்தியில் கைவிடப்படும் அவர்
தனிமையின் இருக்கையில் தூக்கி நிறுவும்
குழந்தையின் பீதியை நகலெடுத்த தம் முகத்தையும்
சீந்துவாரற்ற கண்களில் துளிர்விடும்
பல்லக்கில் ஏறும் கனவையும் பற்றி
உங்களுக்குத் தெரியாதிருப்பதே நல்லது
ஏனெனில் ஒத்தக் காலைத் தூக்கி
அவர் மீது ஒண்ணுக்குப் பெயும் கெடா நாயை
பற்றியும் தெரியவந்தால்
இன்னும் திடுக்கிட்டுத்தான் போவீர்கள். பக்-8

         இக்கவிதை சர்ரியலிசத்தன்மையுடனும் பேசுவதை நாம் உணரலாம். “உலகை நாம் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொண்டால்  மட்டுமே உலகை மாற்றுவது சாத்தியம்என்று  பேசும் சர்ரியலிசம் என்ற சொற்றொடரை பிரஞ்சு கவிஞர் கில்லாம் அப்போலினர் தனது அபத்தமான நாடகமானலெஸ் மாமே லியாஸ் டே டைர்சியாஸ்எனும் நாடகத்திற்கு துணைத் தலைப்பானடிராமா சர்ரியலிஸ்ட்என்பது. அப்போலினரைப் பொருத்தவரை சர்ரியலிசம் என்பது யதார்த்தத்தை ஒப்பீட்டு அளவில் வெளிப்படுத்துவதாகும். அவருடைய கூற்றின்படிமனிதன் கால்களை நகல் செய்யும் பொருட்டு சக்கரங்களைக் கண்டு பிடித்தான் சக்கரம் என்பது மனிதனின் எந்திரக்கால்கள் ஆகும். அதுபோலவே ஒரு கலைஞன் மனித இருத்தலின் அடிப்படை உண்மைகளை கலைகளில் வெளியிடும்போது அது அப்பட்டமான நேரடி வாழ்க்கையை அப்படியே வெளிப்படுத்துவதாக இல்லாமல் ஒரு கவிஞனின் கற்பனை கலந்த இயல்போடு வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.                

           தற்கால கவிதைகளில் கியுபிசத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கதிர்பாரதியின் கவிதைகளில் ஒவியங்களின் பாதிப்பும் ஒவியசித்தரிப்புகளின் மீதான லயிப்பும் காணமுடிகிறது. பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் ஓவியங்களின் தன்மைகள் பிரமிக்க வைப்பவை.

பாரீஸ் நகரத் தெருக்களில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் திரிந்து கொண்டிருந்த இளைஞன் பாப்லோ பிக்காசோவை பிரஞ்ச் ஓவியர் பால்செஸான் தான் தோன்றியாக வரைந்திருந்த ஓவியங்கள் வசீகரித்தன. பிரஞ்ச் ஓவிய விமர்சகர் லூயி வாக்ஸால் இந்தப் பாணிக்கு சூட்டிய பெயர்தான் கியுபிசம். 1907 முதல் 1914 வரையிலான முதலாம் உலகப் போர் சமயத்தில் தாக்கத்தில் உருவாக்கப்பட்ட காலத்தில் பாப்லோ பிகாசோவும் ஜார்ஜ் பிரெக்கும் இணைந்து இக்கலை மரபு, ஓவியப்பார்வை, தொழி்ல் நுட்பம் மாடல்வைத்து வரைவது, நகலெடுப்பது போன்று எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்தது.

      புதிய நவீன கலை இலக்கியக் கோட்பாடாக வளர்ந்து கோலோச்சியது பிரான்சில் கில்லாம் அப்போலினேர்,ஜீன் காக்தோ,ரிவர்டி போன்றோர் கியுபிசக் கவிதைகளை எழுதினர்.



       நம் வாழ்வில் யாதார்த்த சர்ரியலிச கியுபிச நிகழ்வுகளை எல்லாம் அடிமை தேசங்களில் சிறப்பாக எழுதுகிறார்கள். தாம் எழுதுவது உலகின் மகத்தான கவிதைகளின்  இசம் சார்ந்தவை என்று அறியாமலே கூட சிறப்பாக எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். சமகாலத்தின் நவீன கவிஞர்கள். சிறு சிறு நகரம் போன்றிருக்கும் தனித்த தேசங்களில் அடிமைப்பட்டு கவிஞன் தன் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தியபடியே இருக்கிறான். நாடுகடத்தப்படுதலும் விரட்டப்படுதலுக்குள்ளாகவும் அவனுடைய கவிதைகளும் ஆங்காங்கு கடத்தப்பட்டு இணையங்களின் வழியாக உலக பிற தேச மொழி சார்ந்த மக்களின் பார்வைக்கு  வருகிறது.

    உலக கவிதையின் மொழி என்பதுஇயற்கையின் மகத்தான ஒழுங்குமீதான பிரமிப்பு மொழிதல், பேரழகின் வடிவமாக பரிணமிக்கிற பிம்பம் பற்றி எழுதுதல், அந்த அழகு தரும் பேராணந்தத்தையும் அதனூடாக தனது தனிப் பட்ட வாழ்வை எழுதுதல், அதே இயற்கையின் குருரமான அம்சங்களையும் அதாவது புயல் சீற்றம் பெருமழை மின்னல் பற்றியும் எழுதுதல்.அதற்குப் பிறகு வரும் மலரும் சோலைவனங்களையும் பறவைகளின் உயிர்ப்பை எழுதுவதின் மூலமாக தாமும் இயற்கையின் ஒரு அங்கமே என்றுணர்ந்து கொண்டாடிக் களித்தலுமாக உலக கவிதையின் இயக்கம் இருக்கிறது பொதுவாக.

         பிரபஞ்சத்தின் இடையறாத ஓசையை அதன் ஒழுங்கின்மையில்லாத ஆனாலும் சீரொழுங்கான ஞானத்தை உலக உயிர்களுடன் அதன் துடிப்புடன் அதன் வண்ணங்களுடன் அதன் பயணங்களுடன் வாழ்தல். அப்பிரபஞ்சத்துடன் பன்மை நிலையை அறிந்து தம்முள்ளாக தன்னைக் கண்டடைதல் என்பது.

         மனிதன் தனது ஆற்றலை மேம்படுத்த மேலும் தன்னைப் போல் ஒருவனுடன் அரசியலாக உறவு கொள்ள விரும்புகிறான். அதன் மீதான வன்மத்தையும் இடையிடையே எழும்பும் தடைகளை மீறி இணைவை அறிந்து கொண்டு செயல்படுதல் என்கிற பொதுமையில் எழுதுதல் இயங்குதல் என்றாகவும் உலக கவிதை பேசுகிறது.

          இயற்கையும் தானும் தான் இறுதியில் வாழத்தனிமைப் பட்டவர்கள் என்று உணர்ந்து கொள்கிற தனிமையை அவன் விரும்புகிறான். அவன் அறிவான் ஆயுதங்களால் எந்த உபகாரமும் இல்லையென்பதை. ஆயுதங்கள் தம் சுய விருப்பத்திற்கு உருவாக்கப் பட்டதே அன்றி பிறர் மீது செலுத்த அல்ல என்பதை அறிந்தே இருக்கிறான். திரும்பத்திரும்ப தன் மீது கவிந்து கொள்ளும் தனிமையை அறிய அறிய கவிதைகளாக எழுதுகிறான். அவன் அடையும் தீவிர தரிசனத்தின் விளைவாகவே உலகம் அவனுக்கு பல விடுதலை கீதங்களை எழுத வைக்கிறது. அப்படியாகவே அவன் கவிதைகள் பல தேசங்களுக்கு விடுதலை வாங்கியும் தந்திருக்கிறது. ஒரு எல்லையற்ற எல்லையை விடுவிப்பதற்கு கவிஞனும் அவன் வாழும் காலமும் போராடி முனைந்து கொண்டே இருக்கிறது.

          தமிழுக்கும் தமிழ்க்கவிதைக்கும் பொற்காலம் வாய்த்தது என்றால் அது கடைச்சங்க காலம் தான். இந்த சங்ககாலத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குப் பொற்காலம் ஏற்பட்டிருக்கிறது. சோழர்களுகளுடைய காலத்தில் முதல் குலோத்துங்க சோழன் முதலாக மூன்றாம் குலோத்துங்கன் வரையிலும் சோழரவையில் புலமையாளர்கள் பலர் வீற்றிருந்து தமிழ் நலத்தைப் பெருக்கியிருக்கிறார்கள் இலக்கியப் பாங்கு மாற்றம் பெற்றபோதும் தமிழ் எழுச்சி ஓங்கிய காலம் இது. பண்டிதரும் மகத்தான சோழ ஆராய்ச்சியாளரும் சதாசிவ பண்டாரத்தார் ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

இங்கு கம்பன் வழியாக நம் முந்தைய கவிதையின் காலத்தினை அறியலாம்.

       குலோத்துங்கனின் அம்பும் ஏற்கெனவே அவனால் ஏவப்பட்டிருந்தது. உள்ளத்திலேயுள்ள அம்பும் ஊடுருவியிருந்தது கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு. அம்பு தைத்த புண் தான் வெளியேதான் இருந்தது. ஆறாத மனப்புண் அவரை நலிவித்து விட்டதாகச் சோழன் உணரவில்லை. தம்பால் தைத்த அம்பினைப் பற்றியபடியே கம்பர் சோழனை நோக்குகிறார் அவர் உள்ளக் கொதிப்பு வெளிப்பட்டுச் செய்யுளாக கவிதையாக படிகிறது நம் இருதயத்தின் ஆழத்துள்ளாக.



வில்லம்புஞ் சொல்லம்பும் மேதகவே யானாலும்
வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து-வில்லம்பு
பட்டிருவிற் றென்னையென் பாட்டம்பு நின் குலத்தைச்
சுட்டெரிக்கும் என்றே துணி

    வில்லம்பும் சொல்லம்பும் ஆகிய இரண்டுமே இவ்வுலகில் சிறந்த தகுதியுடையன என்றாலும் வில்லம்பினும் சொல்லம்பே ஆற்றல் உடையதாகும் சோழனே! வில்லம்பு என் மார்பு உருவிற்று என் பாட்டாகிய இந்தச் சொல்ம்பு நின் குலத்தைச் சுட்டு எரித்துவிடும் என்று  நீயும் துணிவாயாக..என்கிறார். மரணத்தின் தருவாயில் ஒரு கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்களின் மூலமாக நாம் சொற்களுக்கு எத்தகையை வலிமை உள்ளது என்பதையும் அந்த சொற்களை நாம் மென்மெலும் வலிமையுள்ளதாக ஆக்கவேண்டும் என்பதை இந்த தொகுப்பின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம்.

   அது போன்றே மகாகவி கவிதை எழுதுகிறான் எனும் கவிதையில் கதிர்பாரதியின் சொற்கள் உருத்திர தாண்டவமாடுகிறது.



கவிதை இயற்றலில் லயித்திருக்கும்
ஒரு வெய்யில் பொழுதில்
நான்காம் அடுக்கின் தலையிலிருக்கும்
மொட்டைமாடியில்
வெளுத்த துணிகளை உலர்த்த
பணிக்கப்படுகிற மகாகவி
இடதுபுறம் ஒருகிளிப்
வலது புறம் ஒரு கிளிப் போட்டு
தன் கவிதையை
சூரியனில் காயவைத்து விட்டு
கிடுகிடுவெனக் கீழிறங்கி வருகிறான் - பக்-53

      இக்கவிதையில் யதார்த்தமும் சர்யலிசமும் கியுபிசமும் ரொமாண்டிசசமும் இணைந்திருக்கிறது. கம்பன் இப்படியாக அவன் அநாயசமாகப் பயண்படுத்தியிருக்கும் படிமங்கள் அளவில்லாதவை. மரபின் அழகில் லயித்தும் தற்காலத்தின் இருப்பியல்புகளைப் பேசுவதும் நவீன கவிஞனுக்கு அவசியமாகிறது.

        கவிஞனுக்கும் தான் எழுதும் கவிதைகளுக்குமான உறவைப் பேணுவதில் இருக்கும் வசீகரங்களை படைப்பவன் மட்டுமே அறிவான். அவனுக்குள் இயங்கும் கவிமனமும் மொழியும் கவித்துவமும் கற்பனையைத் தூண்டி சமூக ஆவல் மிக்கவனாக மாற்றி விடுகிறதுவசீகரத்திற்கும் கவியாழத்திற்கும் போக முனைந்தால் மறுபடியும் நாம் கம்பனிடமே போக வேண்டியிருக்கிறது.

         ஒரு சமயம் புலவர்கள் பலர் கூடியிருந்து காவிரியின் சிறப்பினைப் பற்றிப் பாடி கவிதைகளாக அளவாளாவிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு புலவரும் காவிரியின் ஒவ்வொரு சிறப்பையும் கவிதைகளாக வடித்தனர். கம்பன் அமைதி காத்தே இருந்தான். “கம்பர் பெருமான் தாங்கள் மட்டும் புகழாது இருந்தால் எதனாலோஎன்று கேட்க அவர் திடுமென

எச்சில் நீரான காவிரியைப் புகழ்வதோஎன்று கவியாக்க பலரும் திகைப்புற்றனர்.

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுவர்
கைகழுவ நீர்போதும் காவிரியே-பொய்கழுவும்
போர்வேற் சடையன் புதுவையான் தன் புகழை
யார்போற்ற வல்லார் அறிந்து..

ஆற்றிலே நீராடி வந்து சடையப்ப வள்ளலின் வீட்டில் கணக்கற்றோர் விருந்துண்டு போகின்றனர். அவர்கள் தம் கைகளைக் கழுவுகின்ற நீரும் காவிரி நீருடன் கலந்து தானே போகின்றது இப்படி மெய்கழுவிய நீரும் கைகழுவிய நீரும் கலந்து போவதால் காவிரி எச்சில் நீராகும் அல்லவோ என்றார் கம்பர். கதிர்பாரதி காவிரி வளநாட்டைச் சார்ந்தவர் என்பதால் இந்தக் கவிதையை அவர்க்கு உணர்த்தி நாமும் மகிழ்கிறோம்.

       எப்படி கம்பன் காவிரி நீரை எச்சில் என்று அதிர்ச்சியளித்தாரோ அதுபோன்று கதிர்பாரதியும் இக்கவிதையி்ல் அதிர்ச்சி தருகிறார்.

கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்.
 தலைப்புக் கவிதையில்

 அசோகவன சீதையின் பொருட்டு பத்துதலை காமத்தால்
ராவணின் உடல்வெப்பம் தகிக்கத் தொடங்க
அறையில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தேன்
அகலிகை சபலத்தில் இந்திரன் கௌதமமுனியாக உறுமாற
சாபம் வாங்கி கல்லாக உறைந்து கனத்தது இரவு
தந்தையின் மரண கணத்திலும்
மனைவியோடு ஆலிங்கனத்தில் இருக்கிற மோகன்தாஸ்
காந்தியாக இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க
கோவணத்தை வரிந்து கட்டியபோது
எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன்
எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா..

         கதிர்பாரதி பகடியிலும் வித்தார சிலேடையில், சொல்லாட்சி நடையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தற்கால நவீன கவிதையில் விமர்சன அமைப்பும் கருத்தியல் அமைப்பும் மேலோங்கி வருகிற நிலை நிலவுகிறதுகேலிச்சித்திர பொம்மைகள் வரைவது போன்று கேளிக்கைக் கவிதைகள் அரசியல் நிகழ்வகளினை பகடியாக்கி அதிகமாக எழுதப்படுகிறது. கற்பனை வறட்சியற்ற பகடியும் வித்தாரமும் இனைந்த சொல்லாட்சியுடன் எழுதப்படும் போதுதான் நவீன பகடி கவிதையும் கவிஞனும் புதுப்பொலிவுடன் மிளிர்கிறார்கள். அந்தக் கவிதைகள் வாசிப்பின் வழியாகவும் கலாச்சார நடவடிக்கைகளின் செயல்பாடுகளின் மூலமாகவும்

சமூக விமர்சனமாகவும் சிலேடையாகவும் அங்கதத்தொனியும் ஒருங்கே அமையுமானால் அக்கவிதை காலத்தால்வெல்ல முடியாத கவிதையாகி விடுகிறது.

        நம் மூத்தமரபின் கவிஞன் காளமேகம் பல விருத்தங்களிலும் வெண்பாக்களிலும் ஆட்சி புரிந்து இருக்கிறார். ஒரு சமயம் காஞ்சிபுரத்திலே விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார்.”பாவம் இப்படி இந்தப்பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே“ “சிவனுடைய மழு எங்கே“ “திருமாலின் சக்கரம் எங்கே“ “பிரமனின் தண்டம் எங்கே“ “இதனைத் தடுக்காமல் இருப்பதனால் அவர்களிடமிருந்து அவையாவும் பறி போய் விட்டனவாஎன்று வினவும் காளமேகம்



மூப்பான் மழுவும் முராரித்திருச் சக்கரமும்
பாப்பான் கதையும் பறிபோச்சோ-மாப்பார்
வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ
எலியிழுத்துப் போகின்ற தென் -
         இந்தக் கவிதையை நாம் வாசிக்கும் போது முன்பு குறிப்பிட்ட கதிர்பாரதியின் பிள்ளையார் குறித்த கவிதையை நினைவில் கொள்ளலாம்.

         பிரதி தரும் இன்பம் பற்றி ரோலன் பாத் குறிப்பிட்டதை நினைவு கூரலம். இன்பம் என்பது தொடர்ச்சியாக ஏமாற்றத்திற்குள்ளாக்குவது குறைந்துபோவது தீர்ந்து போவது. இன்பம் என்பது ஆசைக்குப் போட்டியாளன். நாம் ஆசையைப் பற்றி அதிக அளவில் எச்சரிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் இன்பம் குறித்து எப்போதும் அறிவுறுத்தப்பட்டதில்லை. ஆசைக்காவது ஒரு விதமான கண்ணியத்தன்மை இருக்கிறது இன்பத்திற்கு இல்லை. வாழ்வில் இன்பம் தரத்தக்க பொருட்களில் பிரதியும் ஒன்று ஒரு உணவுப் பண்டம்,ஒரு தோட்டம்,ஒரு சந்திப்பு,ஒரு குரல்,ஒரு தருணம் ஆகியவற்றைபோலவே ஒரு பிரதியும் இன்பம் தரத்தக்கதே.
         கவிதை நூல்கள் தரும் இன்பம் அளவில்லாதது. எழுதும் இன்பம் வாசிக்கும் இன்பம் அவை பற்றி பேசும் இன்பம் உரையாடும் இன்பம் இப்படியாக. யுகம் யுகமாக நீள்வது. இக்கவிதையை வாசிக்கும் போது வரும் இன்பமும் பிறகு வரும் கலித்தொகையின் பாடலையும் அறிவோம்.

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்- தலைப்பில்

மணிப்புறாவின் லாவகத்தோடு எழும்பி மிதக்கிற என் நிலத்திற்கு
ஆனந்தி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்
அதனால்தான் மேலெழும்பும் பாக்கியம் பெற்றதோ என்னவோ
அதனால்தான் அத்தனை வனப்போ செழிப்போ
தட்டான்கள் தாழப்பறந்தால் மழை வரும் தெரியுமா என்ற
ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன் முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது.

        எத்தனை விதமான கற்பனையும் ஆழமும் விசித்திரம் நிறைந்த நிலம் நம்முன் விரிகிறது. இதுபோன்றே சங்க காலத்தின் பாலைக் கலி பாடிய பெருங்கடுங்கோவின் புகழ்பெற்ற பாடல், காதலன் வெளியுர் செல்கிறான்
என்று அறிந்து கண்ணீர் வடித்த காதலி அவனுடன் தானும் வருவேன் என்று அடம்பிடிக்கிறாள். வெளியுர் செல்கிறேன் என்று சொன்னாலே வீரம் செறிந்த மகளிர் அழுது கண்ணீர் விடுவது ஏன் என்று யோசிப்பதும் பிறகு தான் பயணங்களின் போது படும் துயரங்களைச் சொல்லியும் கேளாமல் தன்னுடன் வருவேன் என்று விடாமல் கட்டாயப்படுத்தும் காதலியிடம் கவி பேசுகிறான்

மரையா மரல் கவர,மாரி வறப்ப-
வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆர் இடைச்செல்வோர்,
சுரை அம்பு,மூழ்கச் சுருங்கி,புரையோர்தம்,
உள்நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு-
தண்ணீர் பெறா அத்தடுமாற்று அருந் துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய,காடு என்றால்,
என்,நீர்,அறியாதீர் போல இவை கூறல்?
நின் நீர் அல்ல சூழாதே,ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின்,அது அல்லது
இன்பமும் உண்டோ,எமக்கு?
 “சொல்வதைக் கேள் நான் செல்லும் பாதை மிகவும் துன்பம் ஒரு புறம் மலை ஒரு புறம் காடு இவற்றிற்கு இடையே போகவேண்டும் காலமோ கோடைகாலம் நீர் நிலைகள் வற்றியிருக்கும் நா வறண்டால் குடிப்பதற்கு நீர் கிடைக்காது அத்தகைய வழியி செல்லவேண்டும் இந்தத் துன்பம் எல்லாம் உனக்கு எதற்கு?
அப்படியா துன்பம் உனக்கில்லையோ அதில் பங்கு கொண்டு உன் துயர் துடைப்பது தானே எனக்கு இன்பம் வீட்டிலே சுகமாக இருப்பதா எனக்கு இன்பம் இல்லை இல்லை நானும் வருவேன் அழைத்துச் செல் என்றாள் அவள் அவனுக்கு வேறு வழி?

நன்றி..

16.03.2013, 17.03.2013 அன்று சேலத்தில் தக்கை அகநாழிகை 361 டிகிரி இதழ்கள் நடத்திய 18 புத்தகங்களுக்கான விமர்சன அரங்கில் கவிஞர் இளஞ்சேரல் எழுதி வாசித்த விமர்சனக் கட்டுரை