27 December, 2024

நேரடித்தன்மை கொண்ட கவிதைகள் | எழுத்தாளர் ஜெயதேவன் | கதிர்பாரதியின் ‘’அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய விமர்சனம்|

வீன கவிதை புரியவில்லை என்று சொல்பவர்கள் சாகித்ய அகாடமி வழங்கிய "யுவபுரஸ்கர்" விருதுபெற்ற கவிஞர் கதிர்பாரதியின் Kathir Bharathi "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" என்ற 60 கவிதைகள் கொண்ட அழகிய பனுவலை வாசித்துவிட்டால், நவீன கவிதையை நோக்கி வர ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது குறைந்தபட்சம் கதிர்பாரதி எழுதிய மற்றத் தொகுப்புகள் எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வளவு அருமையான தொகுப்பு.

மற்றத் தொகுப்புகளில் இல்லாத எளிமையை இந்தத் தொகுப்பில் வைத்துள்ளார் கதிர்பாரதி. தவிர நூலின் கட்டமைப்பும் அழகாக இருக்கிறது. வழக்கமாக ஏ4 அளவு தாளில் இப்போது புத்தகங்கள் வெளிவருகின்றன.‌ ஆனால், இந்தப் புத்தகம் ஒன்றுக்கு ஐந்து என்ற கச்சிதமான அளவில் இருக்கிறது. கவிதைகளை வரிசைப்படுத்திய விதம் வித்தியாசமாக உள்ளது. ஒன்றிலிருந்து அறுபதுக்கு போகாமல் 60ல் இருந்து ஒன்றுக்கு கவிதைகள் நிரல் படுத்தப்பட்டுள்ளன.‌ இது ஒரு புதுமையான முயற்சி.
பின்நவீனத்துவம் அல்லது அதிதீவிர நவீனத்துவக் கவிதைகள் பேசக்கூடிய மிகையதார்த்தம், கட்டுடைப்பு ,மாயயதார்த்த வாதம் இன்னும் குறியீடு, படிமம், தமிழ் இலக்கணம் பேசும் உள்ளுறை இறைச்சி போன்ற பயமுறுத்தல்கள் எதுவும் இல்லாமல் நேரடித்தன்மை கொண்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.‌ கவிதைகள் முழுவதும் தன் அம்மாவைச் சுற்றிப் பின்னப்பட்ட நூற்கண்டுகள். ஆம்... அதில் ஆனந்தம் இருக்கிறது; அக்கறை இருக்கிறது; கண்ணீர் இருக்கிறது; கவலை இருக்கிறது; அம்மாவின் உழைப்பு இருக்கிறது; அம்மாவின் கொடை உள்ளம் இருக்கிறது... இன்னும் அம்மாவுக்கான என்னென்ன இலக்கணம் உண்டோ அத்தனையும் ஒவ்வொரு கவிதையிலும் ஊடாடி விரைவியிருக்கின்றன.
என்னுடைய வாசிப்பில் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிதைத் தொகுப்புகள் மட்டுமே எடுத்தவுடன் வாசிக்கக்கூடியன. இரண்டு மூன்றுமுறை வாசிக்கக்கூடியன. அவ்வாறு மூன்று முறை வாசித்த கவிதைத் தொகுப்பு "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது" என்ற இந்தச் சிறிய ,அழகிய தொகுப்பு.
லாக் பால் சார்த்தர், பிரடெரிக் நீட்சே, தஸ்தவேஸ்கி போன்ற இலக்கிய மேதைகள் உலகுக்குத் தந்த "இருத்தலியல்" excestennialism என்ற கோட்பாட்டில் நின்று இந்தக் கவிதைத் தொகுப்பு பேசுகிறது. இருத்தலியல் என்பது மனித இருப்பு பிரச்னையை ஆராயும் தத்துவ விசாரணையின் ஒரு வடிவமாகும். இருத்தலியல் தத்துவவாதிகள் மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்கின்றனர். அவ்வாறு கதிர் பாரதி அவர்கள் தன்னுடைய அம்மாவின் இருப்பை, வாழவைப் பல்வேறு விதத்தில் ஒரு மகனாக, ஒரு படைப்பாளியாக நுணுக்கமாகப் பதிவுசெய்கிறார். வரிக்கு வரி அம்மாதான் இந்தக் கவிதையை நகர்த்திச் செல்கிறார். கதிர்பாரதி ஒரு கருவி மட்டுமே. சென்னைப் புத்தகக் கண்காட்சி_48-ல் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் என்று விருப்பு, வெறுப்பற்று இந்த நூலைப் பரிந்துரை செய்கிறேன்.
•••••••••••••
மாதிரிக்கு ஒரு கவிதை
••••••••••••••
நான்
அதிகம் பாலகனாக இருந்தபோது வானம் மிகவும் கீழிருந்தது
அம்மா என்னைத் தோளில் சுமந்தபோது தலையில் இடிக்கும் அளவுக்கு....
"மானம் தலையில இடிக்குதம்மா" என்றேன்.
வானத்தை அண்ணார்ந்து பார்த்து "மேலே போ" என்றாள்.
அது மேலுக்கு மேலாக போய்விட்டது. பூமி அவள் காலுக்கும் காலாகக் கீழிருக்க சம்மதித்துவிட்டது.
••••••••••••••••
அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது |
கதிர்பாரதி • புதிய கவிதை நூல் |
நாதன் பதிப்பகம் |
9884060274
சென்னைப் புத்தக கண்காட்சி_48
அரங்கு எண் : 664 •

மொழி போர்த்தியிருந்த அலங்காரங்களைக் கலைத்து | எழுத்தாளர் கரிகாலன் | கதிர்பாரதியின் ’’அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’’ கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட பின்னுரை |

அட்டைப்படம் :
ஓவியர் மணிவண்ணன்

நாம் அருந்திய முலைப்பாலின் கவுச்சியை  சொற்களாகக் கொண்டவை கதிர்பாரதியின் இக்கவிதைகள். அம்மாவோடு 'ள்' சேர்த்தால் அம்மாள். அதுவே பின் அம்பாள் ஆனது. பேயுருவில் நெருங்கிய காரைக்காலம்மையாரை, ஈசன் 'அம்மை' என்றான்.  கதிர்பாரதி காட்டும் அம்மா , அவருடைய அம்மா மட்டும் அல்லர்.  தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம் அவர்.  ஈன்ற மகவைக் காக்க,  தெய்வமாக மட்டுமல்ல, பேயாகவும் மாறும் அம்மா அவர். 

தாயைப் போற்றும் நெடிய மரபைக் கொண்டது தமிழ். அக இலக்கியங்கள் 'அன்னாய் வாழி' எனத் தாயைப் போற்றின. 'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்றாள் ஔவை. 'மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்' என்றது உலகநீதி.  ஈன்றாளை முதன்மைப்படுத்தி அறம் பழக்கினார் வள்ளுவர். 

உலக அளவில் சில்வியா பிளாத், பிலிப் லார்க்கின், ரூட்யார்ட் கிப்ளிங், எட்கர் ஆலன் போ, கிறிஸ்டினா ரோசெட்டி, என எத்தனையோ கவிகள் அன்னையைப் பாடியிருக்கிறார்கள். ஆனாலும், கதிர்பாரதி காட்டும்  அம்மா சற்று வேறுபட்டவர். இதுவரை அம்மா மீது மொழி போர்த்தியிருந்த, அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து , ஓர் அசல் கிராமத்து அம்மாவை தன் கவிதைவழி காட்டுகிறார் கதிர்.  அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் குழந்தையே உலகென, உலகை மற்றமையென நினைக்கிறவர் கதிர்பாரதியின் அம்மா. 

வாசிக்கிறவர்கள் கண்ணீர் பட்டு கரைந்துபோகவும், பின் இதயத்தில் நீங்காத வலியாக தேங்கிவிடவுமான சொற்கள் கொண்டு  இக்கவிதைகளை எழுதியிருக்கிறார்  கதிர்பாரதி. அம்மாவை எழுதி, எழுதி,  இவர் விரல்கள் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கிவிட்டனவோ?  என எண்ண வைக்கிற ஈரக் கவிதைகள் இவை. கதிருக்கு ஒரு அம்மாதான். இந்தக் கவிதைகளால் இவர் பிள்ளைகட்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள். 
இத்தொகுப்பைப் படித்து முடித்தபிறகு,  ஒரு பெரிய கருப்பையாகத் தோன்றுகிறது நாம் வாழும் உலகம்.

25 December, 2024

இரவோடி • நாவல் • என்.ஸ்ரீராம்


ன்.ஸ்ரீராம் எழுதியிருக்கும் மூன்றாவது நாவல் அல்லது சற்றே பெரிய முதல் நாவல் "இரவோடி". சென்னைப் புத்தகக் காட்சி 48_ல் பரிசல் வெளியீடாக வெளிவர இருக்கிறது.

கொங்கு நிலத்தின் அமராவதி ஆறு பாயும் / பாயாத நிலவாழ்வின் நவீனச் சங்கச் சித்திரப் பனுவலாக விரிகிறது "இரவோடி".

அமராவதி ஆற்று குத்துப் பாறையின் மீது நின்றுகொண்டு கொங்குவெளி யின் பொழுதுகளை, வாழ்வை, அஃறிணை - உயர்திணைகளின் ஒத்திசைவுகளை, சடங்கு - சாங்கியங்களை சிற்றுடுக்கையை இசைத்துக்கொண்டு பாடுகிறார் என்.ஸ்ரீராம். அமராவதி ஆறு ஓர் உயிரினம்போல நிலத்தையும் பொழுதையும் வாழ்வையும் சுற்றிவளைக்கிறது நாவல் எங்கும்.
இந்தப் பிரதியின் முதல் வாசகனாக இருந்து இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்... "தமிழ் நாவல்களின் கிளாசிக் வரிசையில் சேரத் தகுதியுள்ள ஒரு முக்கியமான நாவல் 'இரவோடி'." நல்ல நாவலைப் படிக்க தமிழ் வாசகர் தயாராக இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போதைக்கு "இரவோடி" முகப்பு அட்டையை இங்கே பகிர்கிறேன். நாவல் வெளியானதும் நிறையப் பேசுவோம்.
வெளியீடு: பரிசல்