11 May, 2016

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ - எழுத்தாளர் பாவண்ணன் http://puthu.thinnai.com/?p=32235

கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் தோன்றுவதில்லை. தேவையான அளவில் மட்டுமே இறுக்கத்தையும் தளர்வையும் கொண்டு தன்னளவில் பொருத்தமானதாகவும் வசீகரமானதாகவும் ஒவ்வொரு கவிதையும் அமைந்துவிடுகின்றது. மொழியின் தளத்திலும் உணர்வின் தளத்திலும் இந்த வசீகரம் ஒருபோதும் கூடிவிடாமலும் குறைந்துவிடாமலும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று இயைந்து ஒளிர்கின்றன. இதுவே கதிர்பாரதியின் கவிதைகளின் தென்படும் முக்கியமான சிறப்பம்சம். மற்ற கவிஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதும் இந்த அம்சமே.
கதிர்பாரதியின் கவிதைகள் புதிய வகையான குறியீடுகளை உருவாக்க விழைகின்றன. எழுதி எழுதிப் பழகிப் போய்விட்ட காற்று, வெப்பம், மலர், மழை, பறவை போன்ற குறியீடுகளைக் கூட முற்றிலும் வேறொரு தளத்தில் முன்வைக்க விரும்புகின்றன.
ஒரு ஊரில் ஒரு கழுகு வசித்துவருகிறது
தன் கூடு தாங்கும் மரத்தைக்கூட கொத்தி
வேரடி மண்ணோடு சாய்த்தும் வருகிறது
கோழிக்குஞ்சின் மாமிசத்துக்கு
தன் கூர் அலகைப் பழக்கிவரும் அது,
புறாக்கள் களைப்புறும் மாடங்களில்
மைனாக்கள் உலவுவது தகாது எனச் சீறிவிட்டு
கோயில் விமானத்தில் போய் உட்கார்ந்துகொண்டு
தன்னிரு இறக்கைகளைக் கோதிக்கொள்கிறது
பதற்றமே சிட்டுக்குருவிக்கு அழகு என்றும் சொல்லி
மகிழ்ச்சியின் வானில் சுற்றித்திரியும்
சிட்டுக்குருவிகளைப் பதற்றத்துக்குள்ளாக்கவே
கத்தியின் நகலான
தன் நகங்களப் பயன்படுத்திவருகிறது
அதில் பதறிப் போய்த்தான்
ஒரு சிட்டுக்குருவி தண்டவாளத்தில் விழுந்தது
அப்போது
கழுகின் நகம் பளபளத்துக்கொண்டது.
இப்படி ஒரு கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் விளைவுகளை ஒரு காட்சித்தொகுப்பாக முன்வைக்கும் இக்கவிதை தொகுப்பின் முக்கியமான கவிதைகளின் ஒன்றெனச் சொல்லலாம். தன் அதிகாரத்தின் கீழ் தன் வசிப்பிடமான மரம், தன்னைச் சுற்றியுள்ள வானம், மண், மண்ணுக்கும் விண்ணுக்குமிடையே பறந்து திரியும் புறாக்கள், மைனாக்கள், குருவிகள் என எல்லாவகையான பறவைகளையும் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து ஆட்சியை விரிவாக்கிக் கொள்கிறது கழுகு. முழு அதிகாரமும் வசப்பட்ட பிறகு, கழுக்குக்கு நகங்களோ அலகுகளோ தேவைப்படவில்லை. தன் தோற்றம் அல்லது இருப்பின் வழியாகவே தன் அதிகாரத்தை நிலைநிறுத்தித் தக்கவைத்துக்கொள்கிறது.  பார்வை ஒன்று மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்கிறது. கழுகை அஞ்சும் சிட்டுக்குருவிகள் தண்டவாளத்தில் விழுந்து சாகும் காட்சி மனத்தைக் கனக்கவைக்கிறது. வானம் விரிந்த வெளி. அவ்வெளியில் கழுகுக்கு ஓர் இடம், சிட்டுக்குருவிக்கும் ஓர் இடம் என்னும் இயல்பான வாழ்க்கைமுறை ஒரு முடிவைநோக்கி வந்துவிட்டது என்பதை அறிவிக்கும் கணமாக அந்த மரணம் அமைந்துவிடுகிறது. வானத்தையும் மண்ணையும் வசப்படுத்த நினைக்கும் கழுகின் பேராசைக்கு இன்று சிட்டுக்குருவிகள் பலியாகின்றன. நாளை இந்த அதிகாரப்பரப்பு இன்னும் விரிவாகலாம். அப்போது சிட்டுக்குருவியைவிட இன்னும் சிறியதும் சுதந்திரத்தை விரும்புவதுமான   வண்ணத்துப்பூச்சிகளும் மறையக்கூடும். உயிர்த்திருப்பதையே ஒரு துயரமான அனுபவமாகவும் மரணத்துக்கான காத்திருத்தலாகவும் மாற்றிவிடுகிறது அதிகாரம். அது எவ்வளவு பெரிய அவலம்.
கழுகின் அதிகாரத்தைச் சித்தரிக்கும் கதிர்பாரதி ‘அங்கிங்கெனாதபடி ஓடும் அணில்’ என்னும் கவிதையில் அணிலின் சுதந்திரத்தைப்பற்றியும் சித்தரிக்கிறார். பூங்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் தாவிக் குதித்தோடுகிறது அந்த அணில். சரசரவென வாதம் மர உச்சிக்கு ஏறுகிறது. அங்கிருந்து குதித்து சிதறிக் கிடக்கும் வாதம் விதைகளைக் கொறிக்கிறது. அருகில் விளையாடும் சிறுமியைக் குறுகுறுவெனப் பார்க்கிறது. பிறகு அந்தச் சிறுமியைப் போலவே தானும் தாவிப் பார்க்கிறது. வாழைமரத்தில் ஏறி வாழைப்பூவை முகர்ந்து பார்க்கிறது. நெருங்கி உட்கார்ந்திருக்கும் காதலர்களைப் பார்க்கிறது. மரத்தடியில் மல்லாந்து உறங்கும் மனிதர்களையும் பார்க்கிறது. உதிர்ந்து கிடக்கும் மலர்களையும் பார்க்கிறது. எல்லா இடங்களிலும் நின்றுநின்று பார்த்துவிட்டுக் கடந்துபோகும் அணிலைச் சித்தரிக்கும் போக்கில் ஒற்றைக்கணத்தில் புற உலகத்திலிருந்து நம் அக உலகத்துக்குள் அந்த அணில் தாவி விழுந்துவிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் அணிலாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை அணில் வாழ்க்கையாகிவிடுகிறது. அணில் வாழ்க்கை என்பதால்தான் அது கழுகால் அனுமதிக்கப்பட்ட வாழ்க்கையாகவும் சுதந்திரமான வாழ்க்கையாகவும் இருக்கிறது.
தனிமையின் துயரைச் சித்தரிக்கும் கதிர்பாரதியின் கவிதை பாரதியாரின் ’ஓடி விளையாடு பாப்பா’ என்னும் வரிக்கு எதிர்முனையில் இருக்கிறது.
மாநகர வாழ்வின்
கண்டிஷன்ஸ் அப்ளைகளுக்குப் பிறந்த மகனொருவன்
சிறகு முளைத்த பந்தை
யாருமற்ற தன் வீட்டின் அறைச்சுவரில்
அடித்து அடித்து விளையாடுகிறான்.
அந்தப் பந்து
அவனுக்கும் தனிமைக்குமாகப்
போய்த் திரும்பி
திரும்பிப் போய்
ஓய்கிற வேளையில்
வந்தே விட்டது
மற்றும் ஓர் இரவு
குழந்தைகள் கூட்டம்கூட்டமாக விளையாடி மகிழ்ந்ததெல்லாம் இன்று இறந்த காலமாகிவிட்டது. பள்ளியையும் படிப்பறையையும் மறந்து தோப்புகளிலும் குளக்கரையிலும் ஆற்றங்கரையிலும் கோவில் மண்டபங்களிலும் விளையாடி களிப்பில் ஆழ்ந்ததெல்லாம் ஒரு காலம். படிப்புக்கென ஒரு நேரத்தை வகுத்துக்கொண்டு எஞ்சிய நேரத்தையெல்லாம் ஆடிக் கழித்து மகிழ்ந்ததெல்லாம் வேறொரு காலம். சுதந்திரமான மானாக துள்ளித் திரிந்த காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இன்று எல்லா இடங்களிலும் தனிமை பரவியிருக்கிறது. யாரும் யாருடனும் இல்லாத அவலம். மாநகரத்திலோ அந்த அவலம் இன்னும் அதிகம். எண்ணிக்கையின் அடிப்படையில் மக்கள் தொகை மிகுதியான நகரில் யாரும் யாருடனும் இல்லாத தனிமையே மாபெரும் துயரம். பாதுகாப்புக்காக பூட்டப்பட்ட வீடுகளில் தனிமையில் தனக்குத்தானே விளையாடி பொழுதைக் கழிக்கும் குழந்தைகளை நினைக்கவே பாவமாக இருக்கிறது. முதுமைத்தனிமையை மட்டுமே இதுவரை பேசி வந்த உலகம் குழந்தைத்தனிமையை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. பொழுதைப் போக்குவதற்காக ஓர் அறையில் அல்லது ஒரு கூடத்தில் தனிமையில் தனக்குத்தானே சதுரங்கம் ஆடிக்கொள்ளும் முதியவர்களைப்போல, இப்போது அடுக்ககக்குழந்தைகள் பூட்டப்பட்ட அறைக்குள் தனிமையில் ஆடி பொழுதைப் போக்குகின்றன. குழந்தை அடிக்கும் பந்தை மறுமுனையில் ஓர் ஆளாக நின்று வாங்கித் திருப்பி அனுப்புகின்றன சுவர்கள். வீடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் சுவர்கள், தனிமையில் ஆடும் குழந்தைக்கு உயிரில்லாத் துணையாக மறுமுனையில் நின்று ஆடுகின்றன. மாநகரம் முழுதும் கோடிக்கணக்கான சுவர்கள். கோடிக்கணக்கான குழந்தைகள். ஒவ்வொரு சுவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு குழந்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சுவரைவிட்டு வெளியே வந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் பல குழந்தைகளின் துணை கிடைக்கக்கூடும். ஆனால் பாதுகாப்புச்சுவர்களை விட்டு கடந்துவரத் தெரியாத பரிதாபத்துக்குரிய குழந்தைகள் அவர்கள். பாதுகாப்பு என்னும் அம்சமே வாழ்வின் மிகப்பெரிய ஆனந்தத்தை குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டதென்னும் உண்மையை உணராத மாநகரம் இன்னும் இன்னும் என சுவர்களைக் கட்டியெழுப்பியபடி இருக்கிறது. கண்டிஷன்ஸ் அப்ளை விதிகளைக் கொண்ட விண்ணப்பங்களில் கையெழுத்திட்டு கடன் பெறும் மாநகரவாசிகளுக்காக அடுக்ககங்கள் உருவானபடியே உள்ளன.
’உன்னையொன்று கேட்பேன்’ என்னும் கவிதை மானுட மனத்தைத் தகவமைப்பதில் ஊடக பிம்பத்துக்கு இருக்கும் ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது. திரைப்படத்தைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு கிராமத்துக்குள் தன்னை ஒரு திரைப்படம் எடுப்பவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு நுழையும் ஒருவனைப்பற்றிய அயல்நாட்டுப் படமொன்றை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.  சுருள் இல்லாத படப்பெட்டியை ஓடவிட்டு, அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அப்பெட்டியின் முன்னால் நிறுத்திவைத்து தம்மைப்பற்றிப் பேசச் சொல்வான் அந்த இளைஞன். அவனுடைய பொய்மையைப்பற்றி எதுவுமே அறியாத கிராமத்தினர் கடவுளின் முன்னால் நிற்க நேர்ந்ததைப்போல நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க ஒவ்வொருவரும் தன் மனத்தைத் திறந்து பேசத் தொடங்குவார்கள். மின்ஊடகத்தின் வலிமை கற்பனைக்கு எட்டாததாக உள்ளது. ஊடகத்துடன் மானுடன் உருவாக்கிக்கொள்ள விழையும் உறவு வியப்பூட்டக்கூடியது. அந்த உறவுப்பின்னலின் சிக்கலை கதிர்பாரதியின் இந்தக் கவிதை வாசகர்களுக்கு உணரவைக்கிறது என்றே சொல்லலாம். உன்னையொன்று கேட்பேன் என்பது ஒரு பாடல். அப்பாடலுக்கு வாயசைத்து நடிக்கிறாள் ஒரு நடிகை. அந்த நடிகையின் முகவசீகரம் பார்வையாளனை அந்த வரிக்குப் பதில் சொல்லத் தூண்டுகிறது என்பதுதான் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம். சக மனிதர்களின் கேள்விகளையும் உறவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்கிறவர்களாகவே பல நேரங்களில் நாம் இருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு பிம்பம் முன்வைக்கும் பாவனைக் கேள்விக்கு மனமுருக, உயிருருக பதில்களை நம் ஆழ்மனம் மறுநொடியே முன்வைத்துச் செல்வதில் வேகம் காட்டுகிறோம். ஆச்சரியமான இந்த முரண் மிகப்பெரிய சமூக ஆய்வுக்குரியது.
’அலறி ஓடும் மவ்னம்’ கவிதை அதிர்ச்சியும் துயரும் கலந்த ஒரு சித்தரிப்பு.
இருபது நிமிடங்கள் நகர்வதற்கு முன்பு
தூக்கிலிட்டுக்கொண்டவளின் பொருட்டு
அறையை அறைந்தறைந்து கலங்குகிறது
அலறும் செல்பேசி .
நேற்றைய ஊடலை நேர்செய்வதற்கான
காதலன் முத்தம் தேங்கி நிற்கிற
அந்த செல்பேசிக்குள் சாபமென நுழைகிறது
அவன் அனுப்பிய அந்தரங்கக் குறுஞ்செய்தி
இனிப்புப்பண்டங்களின் மீது ஊர்கிற எறும்புகள்
தற்கொலையின் கசப்பைச் சுமந்து தள்ளாடுகின்றன
திரும்ப இயலாத அகாலத்துக்குள்
சிக்கிக்கொண்டு திணறுகிற அந்த அறையை
காற்று திறக்க அலறிக்கொண்டு ஓடுகிறது
விக்கித்து நின்ற மவ்னம்
கதிர்பாரதியின் கூறுமுறையில் உள்ள கருணையில்லாத விலகல் தொனி இக்கவிதையை செதுக்கிவைத்த சிற்பமாக்கிவிடுகிறது. தூக்கில் தொங்கி மரணமடைந்துவிட்டவளிடமிருந்து நேரிடையாகத் தொடங்கிவிடுகிறது கவிதை. செல்பேசி அலறுகிறது. எடுக்க ஆளில்லை. ஒருமுனையில் உயிரற்ற உடலாக சொற்களை உதறிக் கடந்து சென்றுவிட்ட ஒருத்தி. மறுமுனையில் சொற்களையும் முத்தங்களையும் ஆறுதல்களையும் கொட்டுவதற்குத் தயாராக உள்ள ஒருவன். அவனுடைய மன்றாடல்களாக அலறுகிறது செல்பேசி. திறந்துவைக்கப்பட்ட இனிப்புப்பண்டம் அழுத்தமான ஒரு படிமம். உண்டு மகிழவென வாங்கிவந்த இனிப்பு தின்னப்படாமலேயே எறும்புகளுக்கு உணவாகிவிடுகிறது. கலந்து மகிழவென தொடங்கிய வாழ்க்கை வாழப்படாமலேயே மரணத்தில் முடிந்துபோகிறது. அதைப்பற்றி அதிகம் பேசிவிடக்கூடாது என்பதில் கதிர்பாரதி காட்டும் எச்சரிக்கையுணர்வு மிகமுக்கியமானது. அந்தத் தருணத்தை மிகவிரைவாகக் கடக்க நினைப்பவர்போல அடுத்த வரிக்குச் சென்றுவிடுகிறார். இறந்து தொங்கும் உடல், அலறித் துடிக்கும் செல்பேசி, எறும்புகள் உண்ணும் இனிப்பு என ஒவ்வொன்றாகக் காட்டி நகரும் கவிதை இறுதியில் அரூபநிலையில் அங்கு தேங்கியிருக்கும் மெளனத்தின் நிலையைக் காட்டி நிறைவெய்துகிறது. ஓர் உயிருள்ள ஆகிருதியாக மெளனம் அக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் மூழ்கிவிடுகிறது. துன்பம் கொள்கிறது. துயரத்தின் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துடிக்கிறது. இறுதியாக காற்றின் கருணையால் திறந்த கதவின் வழியாக வெளியேறிவிடுகிறது. அந்த மெளனம் ஏன் அலறியடித்துக்கொண்டு ஓடவேண்டும் என ஒருகணம் நினைத்துப் பார்க்கும்போது கவிதையின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது. அந்த மெளனம் அந்த அறையில் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அந்தக் காதலர்கள் சிரித்து மகிழ்ந்ததையும் முத்தமிட்டுக் கொண்டதையும் பேசிக் களித்ததையும் ஒரு சாட்சியாக எப்போதும் பார்த்து வந்திருக்கிறது. இயல்பில்லாத முறையில் நிகழ்ந்துவிட்ட மரணத்தை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதையும் தடுக்கமுடியாமல் ஒரு சாட்சியாக நின்று பார்க்க நேர்ந்த துக்கத்தின் வேதனையிலிருந்தும் அதனால் தப்பிக்க முடியவில்லை. அந்த அலறலுக்கான காரணம் அதுதான். ஒருபுறம் செல்பேசியின் அலறல். மறுபுறம் அனைத்துக்கும் சாட்சியான மெளனத்தின் அலறல். ஓர் அலறலில் தொடங்கும் கவிதை இன்னொரு அலறலில் முடிவடைகிறது. வாசிப்பின் முடிவில் துயரத்தை நோக்கித் தள்ளும் அனுபவமே இதை கவிதையாக்குகிறது.
தொகுதி முழுதும் இப்படிப்பட்ட நுண்சித்தரிப்புகளைக் கொண்ட பல கவிதைகள் உள்ளன. கதிர்பாரதி வரிகளில் விவரித்திருக்கும் உலகுக்கு இணையாக இன்னொரு உலகத்தை வாசகனுக்குள் உருவாக்கும் ஆற்றல் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு இருக்கின்றன. ஒருவகையில் கதிர்பாரதியின் கவிதைமொழி மாயாஜால வித்தைக்காரனின் கையில் இருக்கும் அழகான வண்ணத்துணியை ஒத்திருக்கிறது. ஒருமுறை மடித்துவிட்டுப் பிரிக்கும்போது அது இதழ்கள் விரிந்த மலராகத் தோற்றமளிக்கிறது. இன்னொருமுறை அழகான குடையெனத் தோற்றமளிக்கிறது. அடுத்தமுறை சிறகுகள விரித்துப் பறக்கக் காத்திருக்கும் பறவையெனத் தோற்றமளிக்கிறது. கணம்தோறும் மாறிமாறித் தோற்றமளிக்கும் காட்சிகள் வாசகனின் மனவுலகில் விரிந்துவிரிந்து கற்பனைகளைத் தூண்டியபடி இருக்கின்றன. இந்தக் கற்பனைகளே கதிர்பாரதியின் கவிதைகள் வழங்கும் செல்வம் அல்லது கொடை.

(ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள். கதிர்பாரதி கவிதைகள். உயிர்மை பதிப்பகம். 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை. ரூ.85)

01 April, 2016

#ஆனந்தியின்பொருட்டுதாழப்பறக்கும்தட்டான்கள் கவிதைத் தொகுப்புக்கு லிபி ஆரண்யாவின் முன்னுரை

மேவும் அன்பில் அழியட்டும் நிலம்

லிபி ஆரண்யா

பிரியத்துக்குரிய ஒரு பரிசுப்பொருளின் மீது நசநசவெனக் கூடுதலாகச் சுற்றப்பட்ட பளபளப்பான காகிதங்கள்போல, நாம் அன்பு செய்யும் இணை யோடு தனித்திருக்க வாய்க்கும் அரிதான கணங்களில் வந்து நிற்கும் ஒரு ஜந்துபோல, விருப்பத்துக்குரிய ஒரு திரைப்படத்துக்காக திரையரங்க இருக்கை யில் இருக்கும்போது காத்திருக்கும் கணத்தில் ’எவ்வளவு முயற்சி பண்ணியும் முகேஷைக் காப்பாத்த முடியல’ எனக் கவலைப்படும் குரலைப்போல... இப்படிப் பல போலவற்றின் மீது கவிழும் அசுவாரஸ்யத்தின் நிழல்தான் கவிதைத் தொகுப்  புகளின் முன்னுரை மீதும் படிகிறதோ எனத் தோன்றுகிறது. வாசிப்பவர்க ளுக்கும் கவிதைக்கும் நடுவே நின்று பேசுவது அத்தனை சரியா என்றும் தெரிய வில்லை. இந்த இடையூறை தனக்குச் செய்யும்படி நண்பன் கதிர்பாரதி கேட்கும்போது மறுக்க முடியவில்லை.
தனது முதல் தொகுப்பின் வழி தமிழ்க் கவிதைப் பரப்பில் பிரசன்னமான கதிர்பாரதியின் கவிதைகள், பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றன. ஆயிரமாயிரம் இலைகள் அசையும் தமிழ்க் கவிதையின் ஆதி விருட்சத்தில் மற்றுமொரு துளிர்ப்பு. ’மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ என்கிற அந்தத் தொகுப்பு பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.
இப்போது தனது இரண்டாவது தொகுப்போடு வந்து நிற்கிறார் கதிர்பாரதி. முதல் தொகுப்புக்கும் இதற்கும் உள்ள ஒப்புமை குறித்தோ விலகல் பற்றியோ, வாசிக்கும் ஒருவர் சில வாக்கியங்களை உருவாக்கக்கூடும். நான் கவனப்படுத்த விரும்புவது அதையல்ல. சின்னஞ்சிறு வேர்களால் சின்னஞ்சிறு நிலத்துண்டைப் பற்றியிருந்த நாற்றாங்கால் பயிர் முதல் தொகுப்பு எனில், நிலத்தை இறுகப் பற்றிக்கொள்ள விழையும் விருட்சத்தின் வேர்தான் இந்தத் தொகுப்பு.
வேர்முண்டுகளில் ஒட்டியிருக்கும் ஈர மண்ணின் மணம்தான் இந்தக் கவிதைக ளுக்கும்.
 சமீபத்தில் ’நவீன தமிழ்க் கவிதைகளில் நிலவெளி’ என்கிற தலைப்பில் எழுதவேண்டியிருந்தது. அதற்காக என்னிடமிருந்த எல்லாக் கவிதைத் தொகுப்பு களையும் தரையில் பச்சைக்கடலைபோல குவித்து அதன் முன்பு சம்மணமிட்டு அமர்ந்துகொண்டேன். ஒவ்வொரு கடலையாக எடுத்து அதில் மண் ஒட்டியி ருக்கும் கடலைகளை இடதுப்புறமும், மண் ஒட்டாத கடலைகளை வலதுப் புறமும் ஒதுக்கிக்கொண்டிருந்தேன். வலதுப்புறக் குவியல் உயர்ந்தும் இடதுப்புறக் குவியல் தாழ்ந்தும் இருந்தது. சமீபத்திய தொகுப்புகள் பலவும் வலதுப்புறம் வந்து விழுந்தபடியே இருந்தன. இடதுப்புறம் விழுந்தவற்றிலும் கவிதைக்குள் செயல்படும் நிலம் குறித்த பிரக்ஞை வேறுவேறாக இருந்தது. பெண்களின் கவிதைகளில், தலித் அரசியல் கவிதைகளில்... நிலம் என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் நுட்பமான அரசியல் திறப்புகளைக்கொண்ட உரையாடல் வெளியாகவே எனக்குப் பட்டது.
இந்த நேரத்தில்தான் கதிர்பாரதி இந்தத் தொகுப்பை எனக்கு வாசிக்கத் தருகிறார். எனக்கு மகிழ்ச்சி. மொத்தத் தொகுப்பும் நிலத்தில் வேரூன்றிக் கிளைத்து நிற்கிறது. வாழ்வின் நினைவாகவும் நினைவின் வாழ்வாகவும் இந்தக் கவிதைகள் நிலத்தையே முன்வைக்கின்றன.
  கழிந்த மாதத்தின் ஒர் இரவில் குடியின் சன்னதத்தில் என் கைகளைப் பற்றிக்கொண்டார் ஒரு நண்பர். அவரை பல ஆண்டுகள் கழித்து அன்றுதான் பார்க்கிறேன். ’நமது சாலைகள் வளைகிற இடங்களிலெல்லாம் ஒரு காங்கிரஸ் நிலச்சுவான்தாரின் நிலம் இருக்கும்’ என நான் எப்போதோ அவரிடம் சொன்னதாகவும், அதை அவர் பல இடங்களில் சொல்லிவருவதாகவும் தனது நினைவைக் கிளர்த்தினார். நான் அவரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டேன். ’நண்பா... நமது சந்திப்புகளின் இடையிலான இந்தக் காலத்தில் வளைவுகளைத் தட்டித்தட்டி நமது சாலைகளை நேர்செய்துவிட்டனர். நமது புதிய எஜமானர்களின் செங்கோல்போல அவை வளையாது போய்க்கொண்டி ருப்பதை நீ கவனிக்கவில்லையா? பன்னாட்டு எஜமானர்களுடன் அதானிகளும் அம்பானிகளும் உலாப்போகும் தேர்க்காலின் சக்கரம், வளைவுகளில் எதிர்ப்பட்ட பழைய நிலச்சுவான்தார்களின் புட்டத்தில் ஏறிப்போய்க்கொண்டி ருக்கும்போது செத்துப்போன ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு நாம் திரிய முடியாது. தவிர, ’வளைவுகள் அழகு’ என்பதுகூட அரதப் பழசான ரசனை தானே’ எனச் சொன்னேன். ’ஒருவனது போதைக்கு எதிராக இயங்குபவனுக்கு நல்ல சாவு கிடைக்காது’ என்றான் உடனிருந்த இன்னொருவன். வாஸ்த வம்தான்.
  நிலம்தான் வாழ்வு; நிலம்தான் அடையாளம்; நிலம்தான் அதிகாரம்; நிலம்தான் போராட்டம்; நிலம்தான் யுத்தம்; நிலம்தான் இன விடுதலை; நிலம்தான் வரலாறு; நிலம்தான் சகலமும். நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதைப் பரிபூரணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களிலிருந்து நம்மை முற்றாகத் துரத்தியடிக்க விரும்புகிறார்கள். அந்த வட்ட வடிவக் கட்டடத்தில் இருக்கும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளும் நம்மை விரட்டிப் பத்திவிட, சட்டபூர்வமான குரைப்பொலிக்கு முயன்று முயன்று சோர்கின்றன.
  இந்த நேரத்தில் நமது நிலம் குறித்து, நிலத்தின் மீதான நமது வாழ்வு குறித்து, அதன் விழுமியங்கள் குறித்து யாரேனும் பேசினால் அவரை அன்பு செய்யத் தான் வேண்டும். அந்த வகையில் கதிர்பாரதி அன்புக்குரியவராகிறார்.
 நிலத்தோடு தொடர்புள்ள வாழ்வின் சில அறங்கள், மனித இயல்புகள் நிலத்தோடு தொடர்பற்ற கார்ப்பரேட் வாழ்வில் சிதைந்துபோகும் துயரை மாநகரப் பூங்காவில் இறகுப்பந்து விளையாடும் இருவரை முன்வைத்துப் பேசுகி றார். தவிர, போட்டி நிறைந்த வாழ்வு என்ற கற்பிதத்தின் வழி நிகழ்த்தப்படும் குரூரம் ஒரு பனிச்சறுக்கு விளையாட்டின் பின்னணியில், ’பின்தங்கியவர்களின் உயரம்’ என்னும் கவிதையில் காட்சிப்படுத்தப்படுகிறது..      
...........................
திருப்பமொன்றில் கவனம் பிசகியவன்
               முழங்கால் முறிந்து வீழ்கிறான்
               அவன் தொண்டைக்குழிக்குள் உந்துக்குச்சை ஊன்றி
               முன்னேறுகிறான் பின்வருபவன்.

  ’என் நிலமும் சொற்களும் வேறுவேறல்ல’ என்று அறிவிக்கிற கதிர்பாரதியின் கவிதைகள் அதற்கு நியாயம் செய்கின்றன. நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் தனது என்கிறார்.
   தனது கரம்பை நிலத்தில் உதிர்ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக் கடித்துச் சதிராடும் ஜோடி அணில்கள் குறித்த சித்திரம், மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்த தனது தாத்தாவுக்கு, டமக்கரான் போத்தலில் தண்ணீர் கொண்டுவந்த நினைவு என எல்லாம் நிலத்தின் பாடல்கள்தான்.
              …....................................
நடக்கும்போது பெயர்ந்துவிட்ட கால் பெருவிரல் நகத்தில்
சிக்கும் அருகம்புல் சொடுக்கிய வலி.
என்றொரு வரி போதும். இந்தக் கவிதைகளின் பாதங்கள் பாசாங்கற்று  நிலத்தை அளந்தவை என்பதை ருசுப்படுத்த.

உழுது பயிர்செய்திருக்கிறேன் உன் யவ்வனத்தை
நீர்க்கால் ஓரத்து மரங்களென
அது தளிர்க்கத் தொடங்கியிருக்கிறது
-நிலத்தை நேசிப்பவன் தனது காதலைக்கூட இப்படித்தான் சொல்லவேண்டியி ருக்கிறது.
  கதிர்பாரதியின் இரண்டு தொகுப்புகளின் கவிதைகளிலுமே விவிலிய மொழியின் கிருபை இறங்கியிருப்பதை அவதானிக்க முடியும்.  பழைய - புதிய ஏற்பாடுகளை நெக்குருகப் படித்ததால் கதிருக்கு வந்த ஞானம் இது எனச் சொன்னால் தெய்வக் குத்தமாகிவிடும். பைபிளை அணைத்தபடி தேவாலயம் செல்லும் தேவதைகளின் அருட்கொடையது. உண்மையில் அது ஒரு ஞாயிற்றுக்  கிழமைப் பின்தொடரலின் ரட்சிப்பு. இந்த விவிலிய மொழிமயக்கம் கொண்ட மொழிதல், கவிதைக்கு அணுக்கமாயிருக்கிறது.
  ’நான்’, ’எனது’ என சதா சுயம் துருத்திக்கொண்டிருக்கும்படியான கவிதைகள் இல்லாதது ஆறுதலானது. இதில் வரும் சுயமும்கூட தனது பொடனியில் தானே பல்பு மாட்டி ஒளிவட்டம் போடும் துர்செயலில் இறங்கவில்லை. பாசாங்குகள் தடுக்கிக் கிளை முறிந்து தனது சுயம் கிடக்கிறது என்பன போன்ற குற்ற உணர்வின் ஒப்புதல் வாக்கியங்களும், மாநகரச் சாலையைக் குறுக்குவாட்டில் கடக்கும் கர்ப்பிணிப் பூனை நான் என்பன போன்ற சுயக்கழிவிரக்க வாக்கியங் களும் வாசிப்பவனை நெருக்கமாக்குகின்றன.
 வேட்டி மட்டுமே உடுத்தும் மாமனுக்கு வாக்கப்பட்டு, மனசுக்குள் பெல்பாட்டம் பேண்ட்டை மடித்துவைத்திருக்கும் அத்தை போன்ற பெண் களும், கைப்பிரம்போடு அலையும் ஹெட்மிஸஸ்களைக் குரங்காக்கித் திரிய விடும் மன உலகம்கொண்ட குழந்தைகளும் கவிதைக்குள் இயல்பாக இருக்கி றார்கள்.
 தனது கண்ணில் கிடந்து உறுத்தும் தூசியில் பிரியத்துக்குரியவளது கெண்டைக்கால் முடியின் சாயலைப் பார்க்கிற மனம் எத்தனை காதலானது.

’என் எண்சாண் உடம்பு
உன் நினைவன்றி வேறென்ன’
எனக் காதலாகிக் கசிந்துருகும் கதிர்பாரதியின் கவிதைகளுக்கு, காதல் வேறு காமம் வேறு இல்லை. காமம் இல்லாத தூய காதல் என்பது போன்ற பம்மாத்து கள் இல்லாமல் மனத்தடையற்றுப் பேசுகின்றன இந்தக் கவிதைகள்.
..............................................................
சொத்தென்று தலையில் விழுகிற புளியம்பழத்துக்கு
உன் கீழுதட்டின் சுவை
ஆகவே
பழம் தின்று கை மீந்த புளியங்கோதுக்கு
உன் பெண்ணந்தரகத்துப்
பொன்னிற முடிகளின்
சுவை.

  சக மனிதர்களின் மீதான கரிசனமும் கவித்துவமும் கூடிவந்திருக்கும் கவிதை களைச் சொல்லவேண்டும். ஒரே மகனை விபத்துக்கு அள்ளிக்கொடுத்த துக்க வீட்டுக்கு மீண்டும் ஒருநாள் போகிறார்... துக்கம் வடிந்திராத அந்த வீட்டின் சித்திரங்களை யூகித்தபடி. கவிதை இப்படியாக முடிகிறது...
…....................................................
மீண்டும் போகிறேன்  
மரணத்தின்போது துளிர்த்திருந்த
அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்களைப்
பார்க்க வேண்டும் எனக்கு.

  மரண அஞ்சலி சுவரொட்டியில் கண்ணீர் சொட்டும் இரண்டு கண்களுக்கு மத்தியில் இருப்பவனது புன்னகையில் துக்கிக்கும் கவிதை அசலானது. ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள், அய்யனார் போன்ற சிறுதெய்வங்கள் பற்றிய கவிதைகளிலும், ரயில் என்பது ரயில் இல்லை, சிட்டுக் குருவி தண்டவாளத்தில் விழுந்துவிட்டது என்பன போன்ற கவிதைகளிலும் பாடுபொருள் விஸ்தீரணப் பிரயத்தனம் தொனிக்கிறது.

நிலமே
மதுவே
உனை ஒருவருக்கும் கொடேன்...
என்கிற குரல் நில அபகரிப்பு காலத்தில் ஒட்டுமொத்த உழவர்களின் கலகக் குரலாகிறது. மசோதா வழி நிலத்தைப் பறிப்பவர்களையும் மீத்தேன் வழி நிலத்தைக் கெடுப்பவர்களையும் ‘குள்ள நரி அழைக்கிறது வாரீர்’ என வஞ்சம் தீர்க்க அழைக்கிறது ஒரு கவிதை.
  காதலும் காமமும் மற்றமை மீதான கரிசனமும் பால்பிடித்த கதிராய் நிற்கும் நிலத்தின் பாடல்களே கதிர்பாரதியின் கவிதைகள் எனச் சொல்லலாம்.

நிலத்தின் பொருட்டில்லை
ஆனந்தியின் பொருட்டு நிலத்தின் மீது
தாழப் பறக்கின்றன தட்டான்கள்...
எதன் பொருட்டும் நிலத்தின் மேன்மையை விட்டுத்தராத கவிதை, ஆனந்தியின் பொருட்டு அதைச் செய்யத் துணிகிறது. ஆனந்தியின் பொருட்டு என்பதால் எனக்கும் புகார்கள் இல்லை. உங்களுக்கு?

மதுரை
29, அக்டோபர் 2015

27 January, 2016

இங்க இருக்கான்டா தமிழன்! ---------- திருலோகம் என்றொரு கவிஆளுமை’ - ஆவணப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.

பாரதியார் இறந்த பிறகு சில காலம் அவரது படைப்புகள் மீது ஒரு செயற்கை இருள் படர்ந்திருந்தபோது, பட்டிதொட்டி எங்கும் பாரதியார் படைப்புகளைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள்... பாவேந்தர் பாரதிதாசன், எழுத்தாளர் வ.ரா., கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், திருலோக சீதாராம். முன்னவர்கள் மூவரும் தமது மேடைப்பேச்சுக்கள் மூலம் பாரதியைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் எனில், பாரதியார் கவிதைகளை ஏறக்குறைய கதாகாலட்சேபம் செய்வதுபோல மேடையில் முழங்கியும் இசைத்தும் வந்தவர் திருலோக சீதாராம். 
அவ்வளவுதானா திருலோக சீதாராம்? இல்லை... தமிழ் இலக்கிய உலகில் அதிகம் அறியப்படாத ஆளுமைகளில் முக்கியமானவர்; ஆனால், தன்னை ஓர் ஆளுமையாக நிறுவிக்கொள்வதில் ஆர்வம் காட்டாதவர். 
25 வருடங்களுக்கு மேலாக `சிவாஜி’ இலக்கியப் பத்திரிகையை நடத்தியவர்; நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் `சித்தார்த்தன்’ புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்; மனுதர்மக் கருத்துக்களில் முழுமையாக உடன்பாடு இல்லாதபோதும், அதை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்; மூன்று கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்... திருலோக சீதாராமின் பன்முக அடையாளங்கள். எனினும் அவர் தன்னை `பாரதியாரின் ஆன்மிகப் புத்திரன்’ என அழைத்துக்கொள்வதில் ஆனந்தம் அடைந்தவர். 
`ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை’, திருலோக சீதாராம் பற்றி






`திருலோகம் என்றொரு கவிஆளுமை’ என ஆவணப் படத்தைத் தயாரிக்க, அதை எழுதி இயக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். 
ஆவணப் படத்தில் திருலோக சீதாராமின் ஆளுமை பற்றி பேசியிருக்கிறார்கள் அவரது நெருக்கமான நண்பர்கள்...
`ஒருமுறை சீதாராமின் தம்பி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். சீதாராமுக்கு தம்பி மீது அதீத பாசம். அவர் வீடு திரும்பும் வரை கிட்டத்தட்ட 18 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த சீதாராம், அப்போது பாரதியார் பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்துகொண்டே இருந்தார். அதனால் பாரதியாரின் அத்தனை பாடல்களும் அவருக்கு அத்துப்படி. இது அவர் செய்த தபஸ் என்றே சொல்ல வேண்டும். `பாரதியாரின் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்ததுதான் என் சொத்து’ என்று சொல்லி மகிழ்வார்’  என்கிறார் அவரது சீடரும் நண்பரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.
பாரதியாரின் கவிதைகளை அவர் முன்பு பாடிக்காட்ட திருலோக சீதாராமுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பாரதிதாசன் கவிதைகளை அவர் முன்பு பாடிக் காட்டி அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.  
`பாரதிதாசன் மாதம் ஒரு முறை, 
திருச்சி பொன்மலை ஆறுமுகம் பிள்ளை வீட்டில் திருக்குறள் வகுப்பு நடத்துவார். அப்போது ஒரு முறை திருச்சி தமிழ்ச் சங்கத்தில், பாரதிதாசன் முன்னிலையில் அவரது கவிதைகளைச் சொற்பொழிவாக நிகழ்த்தினார் சீதாராம். `மாவலி புறச் செலவு’ என்ற நெடியக் கவிதையைப் பாவங்களோடு அவர் பாடி, சொல்லி, மகிழ புளகாங்கிதம் அடைந்த பாரதிதாசன் எழுந்துபோய் அணைத்துக்கொண்டதை நான் கண்டேன்’ என்கிறார் பேராசியர் சத்தியசீலன். 
ஆனால், அதே பாரதிதாசனோடு சீதாராம் கோபித்துக்கொண்ட நிகழ்வும் உண்டு.
அது பாவேந்தருக்கு மணிவிழா ஆண்டு. கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையிலான மணிவிழா குழுவில் திருலோக சீதாராம் செயலாளர். திருச்சியில் நடைபெற இருந்த மணி விழாவுக்கு குறித்த தேதியில் பாரதிதாசன் வரவில்லை. வேறொரு நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டு அங்கே போய்விட்டார். திருச்சி விழா ரத்தாகிவிட்டது. ஆனால், சேகரித்த மணிவிழா நிதியை பாரதிதாசனிடம் திருலோக சீதாராம் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும் என முடிவானது. நிதியை எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி வந்த சீதாராமைப் பார்த்த பாரதிதாசன், விழா ரத்தான கோபத்தில், சற்றுக் கடுமையாகவே கேட்டார்... 
`‘ம்ம்ம்... என்ன விஷயம்?’’
‘`இல்ல... நீங்க சொன்ன தேதிக்கு மணி விழாவுக்கு வரலை. அதுல எல்லாருக்கும் வருத்தம். ஆனா, சேர்த்த நிதியைக் கொண்டுபோய் கொடுத்துடச் சொன்னாங்க. அதான் வந்தேன்.’’
``விழா நடத்தலை... என்னை அவமதிச்சிட்டீங்க. இது மட்டும் எதுக்கு?’’- பாரதிதாசன் இப்படிக் கேட்டதும் சீதாராமுக்குக் கடும் கோபம். 
``அய்யா கவிஞரே... நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஆனால், உங்கள் பாடல்கள் எங்களுக்குத் தேவை; இந்தச் சமூகத்துக்குத் தேவை’’ எனச் சத்தமாகப்  பேசியிருக்கிறார்.
உட்கார்ந்திருந்த பாரதிதாசன் உடனே எழுந்து விறுவிறுவென சீதாராம் பக்கம் வந்திருக்கிறார். எங்கே நம்மை அடித்துவிடுவாரோ என்ற பயம் சீதாராமுக்கு. நெருங்கிவந்த பாரதிதாசன், பக்கத்தில் இருந்தவர்களிடம் சீதாராமைக் காட்டி, `பார்டா... இங்க இருக்கான்டா தமிழன். நீ வேணாம்... உன் பாட்டுத்தான் வேணும்னு சொல்றான். இங்க இருக்கான்டா தமிழன்’ என நெகிழ்ந்தாராம்.
தான் நடத்திய `சிவாஜி’ இதழின் 17-ம் ஆண்டு மலருக்கு பாவேந்தரிடம் சீதாராம் கவிதை கேட்க, அவரோ சீதாராமைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்துவிட்டார். இவருக்கு அதிர்ச்சி. 
``என்ன... நான் மலருக்கு கவிதை கேட்டா... நீங்க என்னைப் பத்தி எழுதிக்கொடுத்துருக்கீங்க?’’ என சீதாராம் கேட்டார்.
‘`டேய்... உனக்கு என்ன பஞ்சம் தெரியுமா? புகழ் பஞ்சம். உன் அருமை உனக்குத் தெரியலை. அதான் நான் கவிதையா எழுதி, என் கையெழுத்தும் போட்டிருக்கேன். பரவாயில்லை, மலர்ல இந்தக் கவிதையை போடு’ என்று சொல்லியிருக்கிறார் பாவேந்தர். 
தேசிய இயக்கத்தில் ஈடுபாடுகொண்டவர் சீதாராம். எனினும், திராவிட இயக்கத்தவர்கள் மீது அளப்பரிய மரியாதை வைத்திருந்தவர். அதற்கு அடையாளம், `சிவாஜி’ பத்திரிகையின் அட்டையில் பெரியார் படத்தைப் பிரசுரித்ததும், `திராவிட நாடு’ பத்திரிகை தயாரித்த பாவேந்தர் மலரில் பாரதிதாசன் பற்றி கவிதை ஒன்றை அண்ணா கேட்க, உடனே எழுதித் தந்ததும்.   
1961-ம் ஆண்டு திருச்சியில் நடந்த `சிவாஜி’ பத்திரிகை வெள்ளி விழாவுக்குத் தலைமைத் தாங்கிய முதலமைச்சர் காமராஜர், சீதாராமின் கவியாற்றலை வியந்து, அவரை தமிழக அரசவைக் கவிஞராக்கும் ஆசையை, தன் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதற்கு திருலோகம் சென்னைக்கு வந்தால் வசதியாக இருக்கும் என காமராஜர் நினைக்க, திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலி தெருவுக்கு தன் பத்திரிகை அலுவலகத்தை மாற்றினார் திருலோக சீதாராம். ஆனால், பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தால் காமராஜரின் அந்தக் கனவு நிறைவேறாமலேயே போனது.
சீதாராமின் கவிதை வாழ்வின் கஷ்ட ஜீவனத்தை உணர்ந்து, `உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்... என்ன வேண்டும்?’ என 
ஜி.டி.நாயுடு கேட்டபோது, தனக்கென எதுவும் கேட்காமல், `திருச்சி சீதாலட்சுமி ராமசாமி காலேஜுக்கு ஒரு பஸ் கொடுங்க’ என கேட்டு வாங்கி, அதை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத் தது சீதாராமின் ஈர உள்ளத்துக்கு உதாரணம். இந்தக் குணத்தை தன் படைப்புலகம் வரை நீட்டியிருந்தார். தான் மொழிபெயர்த்த `சித்தார்த்தன்’ புத்தக ஆசிரியர் ஹெர்மென் ஹெஸ்ஸே ஜெர்மனியில் இறந்தபோது, தமிழ்நாட்டில் இருந்த சீதாராம், `பிரம்மரிஷி ஹெர்மன் ஹெஸ்ஸே இறந்த செய்தி கேட்டேன். அவருக்காக தீட்டு காக்கவில்லை என்றாலும், ஒரு முழுக்கு போட்டேன்...’ என தான் துக்கம் அனுஷ்டித்ததை எழுதியிருக்கிறார்.
தன் வாழ்நாள் எல்லாம் பாரதி, பாரதிதாசன் பாடல்கள் மற்றும் தனது கவிநண்பர்களின் கவிதைகளை மேடைகளில் பாடிப் பரப்பிய திருலோக சீதாராம் என்கிற கானக் குயிலின் கடைசி நாள் பற்றி ஆவணப் படத்தில் இப்படிச் சொல்கிறார் தமிழ் அறிஞர் தி.ந.ராமச்சந்திரன்.
`மாதாமாதம் தன் பதிப்புத் தொழிலின் கணக்குகளை எழுதி பேலன்ஸ் ஷீட் போடுவதில் மகா கெட்டிக்காரர் திருலோக சீதாராம். அவர் எழுதும் கணக்குகளில் அவ்வளவு துல்லியம் இருக்கும். அவர் இறந்த தினத்தன்றும் கணக்குப் பார்த்து முடித்தவர் கடைசியாக எழுதிய கடைசி வார்த்தை... `என் கணக்கு தீர்ந்தது’ அடுத்த சில மணி நேரங்களில் அவர் இறந்தும்போனார்’ என்கிறார் கலங்கிய கண்களுடன்.
இப்படி உருக்கமும் நெருக்கமுமான தகவல்களோடு, தமிழ் இலக்கிய வரலாற்றில் திருலோக சீதாராமின் பங்கைச் சுட்டிக்காட்டிய படியே விரிகிறது இந்த ஆவணப் படம். பாரதிதாசனின் பாடலுக்கு ஓவியர் மருது வரைந்த ஓவியங்களை அனிமேஷன் செய்து ஓட விட்டிருப்பது ஆவணப்படத்தில் புது முயற்சி. சுவாரஸ்யத் தகவல்களுக்கு இணையாக, பின்னணி இசையும் இடையிடையே பாரதி, பாரதிதாசன் பாடல்களும் ஆவணப் படத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.   
``தி.ந.ராமச்சந்திரன் பற்றி `சேக்கிழார் அடிபொடி’ ஆவணப்படம் எடுக்கும்போது, அவர் மூலமாகத்தான் எனக்கு திருலோக சீதாராம் பற்றி தெரியவந்தது. எங்கள் காவிரி பூமியான திருவையாறுதான் சீதாராமுக்கு பூர்வீகம் என்றாலும், பெரம்பலூருக்கு அருகில் தொண்ட
மாந்துறையில் தாய்மாமா வீட்டில் வளர்ந்தவர். இலக்கிய மேடைகளில் நவீனக் கவிதைகள் பற்றி பேசியும், இசையமைத்துப் பாடியும் வரும் என்னை, சீதாராம் வாழ்க்கை ஈர்த்ததில் ஆச்சர்யம் இல்லை. பாரதி கவிதைகள் மீது மட்டும் அல்ல... அவரது குடும்பம் மீதும் சீதாராமுக்கு அதிக ஈடுபாடு உண்டு. பாரதி மனைவி செல்லம்மா பாரதியின் இறுதிகாலத்தில், அவரோடு மூன்று மாதங்கள் தங்கி, அவருக்குப் பணிவிடை செய்தார் சீதாராம். செல்லம்மாவின் உயிர் பிரிந்தது, தன்னை பாரதியின் ஆன்மிகப் புத்திரன் என்று அழைத்துக்கொண்ட திருலோக சீதாராம் மடியில்தான். சீதாராம், தன் கவிதைகளாலும் இசையாலும் உருவாக்கியது ஒரு சௌந்தர்ய உலகத்தை. தேர்ந்த கணக்காளரான இவரது வாழ்வின் லௌகீகக் கணக்குகள் மட்டும் கடைசி வரை டேலி ஆகாமலே இருந்தது துயரம்தான். இவரைப் போன்ற எத்தனையோ ஆளுமைகள் சேர்த்துக்கொடுத்த இலக்கிய வளம் மூலம்தான் இன்றைக்கு தமிழின் பண்பாடும் பெருமையும் தெரியவந்தது. சீதாராம் போன்ற ஆளுமைகளை ஆவணப்படுத்துவது இன்றையச் சூழலில் மிக முக்கியம். அதை நிறைவாகச் செய்திருக்கிறேன். பிப்ரவரி மாதம் 18-ம் தேதி இந்த ஆவணப்படத்தை வெளியிட நினைத்திருக்கிறோம். அதன் பிறகு திருலோகம் என்னும் கானக்குயில் இலக்கிய ஆர்வலர்களின் காதுகளில் கூவும்’’ என்கிறார் ஆவணப் பட இயக்குநர் கவிஞர் ரவிசுப்பிரமணியன்! 

25 September, 2015

இந்த நாள் ஸச்சினால் ஆனது smile emoticon நன்றி : ஸச்சின் Sachin Sachin


========================================================
அன்போன் கதிர்பாரதி அவர்களுக்கு...... ஸச்சின்.
காய்ச்சல் ஆட்கொண்ட நாளொன்றில் மொட்டை வெய்யிலில் கால் பதித்து நீரினுள் கைகள் நனைத்து மஞ்சள் வெப்பத்தை உள்வாங்கும் சுகமென அமர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்தேன். எளிமையும், எளிமை என்று மட்டும் ஓர் சொல்லில் சொல்லவியலாத முதிர்ச்சியும், வசீகரமும் கொண்டவை அவை.பொதுவாக நல்ல கவிதைகள் என்று அறியப்படுபவை இருவகையாக (Personnel ஆக) உள்ளன. முதலாவது மொழிச்சிக்கல் மிகுந்த, குறைவான திறப்பை உருவாக்கும் சாத்தியமுடைய, மிகுந்த அகவயமான தன்மையுடைய இறுமாப்புக்கவிதைகள். இரண்டாவது, மொழிச்சிக்கலற்ற, பல திறப்புகளை உருவாக்கக்கூடிய, Reasonableஆன அக ஓட்டமும், Logicalஆன புற ஓட்டமும் கொண்ட Friendly கவிதைகள். இதில் உங்களது இரண்டாவது வகை.
எனது பள்ளிப்பருவத்தில் Exactஆக மேற்சொன்ன இருவகை குணங்களுடன் இரு ஆசிரியர்கள் இருந்தனர்.ஒருவர் வேதியியல் எடுத்தார். மற்றவர் இயற்பியல். இருவரும் திறமைசாலிகள்தான். ஆனால் இரண்டாமவர் அவருடைய casual ஆன அணுகுமுறையாலும், ஆளுமையாலும் எனக்குள் ஒரு ஊற்றை உருவாக்கினார். சொல்லப்போனால் நான் அவரிலிருந்தே மண்முட்டி, வேரூன்றி, மெல்லக்கிளைத்து வளர்ந்தேன் எனலாம். எனவே படைப்பளவில் உங்களவை அத்தகு திறன் வாய்ந்தவை என நம்புகிறேன். அதாவது ஆக்கப்பூர்வமானவை அல்லது ஆக்க வல்லவை.
*ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் எனும் தலைப்பை படித்ததிலிருந்து, எங்கேயோ கேட்ட பாடலொன்றை நாள் முழுதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பதைப்போல, அவ்வப்போது தட்டான்கள் எனை சுற்றி பறந்தபடியே இருக்கின்றன. மறைகின்றன. மேலும் இக்கவிதையில் மணிப்புறாவின் லாவகம், காற்றில் தட்டான்கள் பற்க்கும் கோட்டோவியம், தட்டான்மாலை போன்ற வார்த்தைகள் ஏற்படுத்தும் Visualகள் அற்புதமானவை. இக்கவிதையின் நிலம் சார்ந்து பேசும் குழந்தை மென்மை என்னை வருடுகிறது.
*அன்பின் வாதையில், வெயிலைக்கண்டு குளிர் நோக்கி ஓடுவதும் குளிரைக்கண்டு வெயில் நோக்கி ஓடும் இயல்பும், நன்மையும் தீமையும் ஒன்றெனவும், சொல்லப்போனால் தீமையின் நன்மையையும் பேசும் பாங்கு. எனக்கு மிகப்பிடித்த கவிதை இது.
*சமாதானத்தூதுவர் = ஹிட்லர் படிக்கும்போது, என்றாவது ஒருநாள் உன்னதமான அரசாளுகையின் கீழ் இருப்போம் என்ற கனவு கானல் நீர்தானென்ற நிதர்சனம் உரைக்கிறது. அரசு எப்போதும் அரசு தான். நாமெல்லாம் கருவிகளே/ USSR உடஞ்சி போச்சே! உடஞ்சா உடஞ்சிட்டுப்போகுது ,ரொம்ப நல்லது/ சுயராஜ்யம் சுயராஜ்யம்னு சொல்லி சுதந்திரம் வாங்கி ’நமக்கு நாமே’ திட்ட்த்தின் மூலம் நம்ம சதையையே பிச்சு தின்கிறோம் / இங்க , தமிழ் தமிழ்னு சொல்லி ஆட்சிய பிடிச்சு தமிழ்ப்பள்ளிகூடங்களையெல்லாம் தீண்டத்தகாதவை ஆக்கிட்டோம் / ஒபாமா / ஒசாமா / சதாம் உசேன் ... அய்யையோ ஒரு கவிதை எவ்வளவு தொடர் வருத்தங்களை உண்டாக்குது. பரவாயில்ல , நல்லாயிருக்கு.
*அரசல்புரசலின் நிறம், மகாலொள்ளு. என் நண்பரொருவர் இதைப்படித்துவிட்டு இது கிரேக்க வரலாற்றை பகடி செய்யும் கவிதை என்றது அதைவிடப் பெரிய லொள்ளு. ஆனால் இந்தக்கவிதை உள்ள பக்கத்தைப் புரட்டும்போது அப்பக்கம் மட்டும் இளஞ்சிவப்பு சிவப்பாய் கண்ணைக் கவர்கிறது.
’’ *‘வேர்கொழித்து பசிய அலை வீசும் வனம்’ ஆகா.
சில விதைகளை கவ்வி வரும் பறவையின் பாடல் போதுமென்ற கவிமனத்திற்கு நான் ரசிகன்.
* சிறுமிக்கு வரிசையில் முன்னேற இடம் கொடுத்து உங்கள் கரிசனத்தை அறிய ஆவலெனக்கேட்கும் கவிதையில் மனதிற்கு மிக நெருக்கமாகிறீர்கள் தாங்கள். எல்லாருள்ளும் ஒளிந்திருக்கும் சுயவிளம்பரக்காரன், தற்புகழ்ச்சிக்காரன் எட்டிப்பார்ப்பதை எவ்வளவு நுட்பமாய் பதிவு செய்துள்ளீர்கள். அந்த சம்பவ நேரத்து கண்களையே சற்று கூச்சத்துடன் நினைவு கூர்கிறோம் நாம்.
*கபிலனும் , திலிபனும் Post Modernist என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகளின் கதைகளையும் அவர்கள் வரையும் கோடுகளையும் தன் நாம் மெனக்கட்டு மெனக்கட்டு மீட்டுருவாக்கம் செய்து தோற்கிறோம். அவர்கள் அனாயசமாக அதகளம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுகளைக் குழைத்து சரிவிகிதத்தில் வண்ணமடிக்கிறார்கள். எப்படி ? ஏனென்றால் அவர்கள் மாய எதார்த்தவாதிகள். உண்மையான Post Modernistகள்.
*அப்படித்தான் விழுகிறது. தப்பு
வி
ழு
கி

து
இசை கேட்பதுபோல் தலையை ஆட்டாமல் படித்தால் கவிதை முழுமை பெறாது. கண் அவிந்த பிச்சைக்காரனின் பாடல் இனிப்பதைப்போல் விழும் உமிகள், நுனிப்பற்களில் உப்புக்கரிக்கிறது.
*பொறுப்பான பேருந்து, உயிர் பேருந்து சித்திரம். கர்ப்பிணிக்கு தாய் பூசிவிடும் விபூதி, தாயின் கருவறைக்கதகதப்பு, சாலப்பரிந்தூட்டும் இளநீர், தேநீர் பேருந்தின் உயிர் சலசலக்கிறது.
“ நான் தான் சொன்னேனே , மிக மிகப் பொறுப்பான பேருந்து
இதுவென்று “ VOW.
*இத்தொகுப்பின் முன்பகுதியை விட பின்பகுதி மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. மோகப்பரிபூரணிகள் மற்றும் மோகினிகளால். முப்பொழுதையும் உண்டுசெரிக்கும் மோகப்பரிபூரணியின் தகிக்கும் வெம்மையின் மூலம் இத்தொகுப்பின் மொத்ததிற்குமான காதலையும் காமத்தையும் அழகியலையும் சொல்லிச்செல்கிறீர்கள். உச்சகவிதையாக இது உள்ளது.காமத்தை பேசுவதால் ஏற்படும் இயல்பான உணர்வெழுச்சியால் மட்டுமல்ல, இக்கவிதையின் படைப்பூக்கம் இன்னபிறவற்றையும் முழுமையாக்குவதால். எனவே வெம்மை தாளாமல் எல்லாரும் ஒரு சொம்பு நீரள்ளிக் குடிக்கிறோம். வாழ்க மோகபரிபூரணிகள்.
எல்லாக்கவிதைகளையும் பற்றிப் பேச வேண்டுமென அவா. நேரம்போதாமை. கழுத்து நெறிக்கும் வேலை. இயலவில்லை. ஆனாலும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நண்பர்களிடம் தங்களின் ஏதோவொரு கவிதையை பகிர்ந்துகொண்டபடியே உள்ளேன். மகிழ்ச்சி.
நம் ஆனந்த விகடனில் தேர்ந்த திரைப்படங்களைவிட , Values ஐ உள்ளீடாக்க்கொண்ட தேர்ந்த திரைப்படங்களுக்குதான் மதிப்பெண்கள் அதிகம் அளிப்பீர்கள். உதாரணமாக ஆரண்ய காண்ட்த்திற்கு 45 தான் என்றால் அங்காடித்தெருவிற்கோ, எங்கேயும் எப்போதுமிற்கோ 50 அளிப்பீர்கள். அதேபோல் இத்தொகுப்பில் உள்ள சமாதானத்தூதுவர், பிள்ளையார், லாபங்களின் ஊடுருவல், பறவையின் பாடல், காலத்தின் மீது விரையும் பொறுப்பு போன்ற கவிதைகள் அகத்தைத் தாண்டியும் பேசும் பொருட்கள் இதன் அடர்த்தியையும் முக்கியத்துவத்தையும் அதிகமாக்குகிறது.
நான், மெசியா ஒரு பெண்ணென்றே எண்ணியிருந்தேன். நீங்கள் ஆணென்று விட்டீர்கள். அதனாலென்ன, எழுதிமுடிக்கும்வரைதான் எழுத்து எழுத்தாளனுக்கு சொந்தம், அப்புறம் வாசகனுக்குத்தான் எனும் கணக்கில் மெசியாவை நான் பெண்ணென்றே கொள்கிறேன். ஆகவே நண்பா ! மெசியாவுக்கு மூன்று மச்சங்களுக்காக என் சார்பாக மெசியாவுக்கு மூன்று முத்தங்கள்.
நன்றி.

03 August, 2015

எம்.எஸ்.வி பற்றி பாடகி வாணிஜெயராம்... நன்றி : ஆனந்த விகடன்



‘தலை முதல் கால் வரைக்கும் சரஸ்வதிதேவியின் பூரணமான அனுக்கிரம் பெற்ற குழந்தை’ & மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களைப் பற்றி இப்போது இப்படித்தான் எனக்குச் சொல்லத் தோணுது. அருவியாகக் கொட்டும் மெட்டுக்களும், சரஞ்சரமாக வந்துவிழும் சங்கதிகளும் என்னைப் போல எத்தனையோ பாடகர்களைத் திக்குமுக்காட வெச்சுருக்கு. இந்த மனிதருக்கு எங்கிருந்து இவ்வளவு இசை வெள்ளமென ஊற்றெடுக்குதுன்னு ஆச்சர்யப்பட்டிருகோம்.

1973&ம் வருஷம் ஜனவரி 31, பிப்ரவரி 1... இந்த ரெண்டு நாட்களும், என்னோட இந்திப் பாடல்கள் லைவ் ஆர்கெஸ்ட்ரா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நானும் சென்னை வந்திருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஒருநாள் சீஃப் கெஸ்ட் எம்.எஸ்.வி சார். நிகழ்ச்சி முடிஞ்சதும் என்னை ரொம்பப் பாராட்டினார். ‘உங்களுக்கு அபாரமான ஸ்வர ஞானம்’னு சொன்னார். அதே வருஷம் ஏப்ரல் மாதம் எம்.எஸ்.வி. சார் இசையில் ‘தீர்க்க சுமங்கலி’ படத்துல ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ பாடல் பாடினேன். அதுக்குப் பிறகு ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’, ‘அபூர்வ ராகங்கள்’... படங்களுக்கு அவரோட இசையில் பாடின பாடல்கள், ரசிகர்கள் மத்தியில ரொம்ப பிரபலமாச்சு. நானும் தமிழில் ரொம்ப பிஸியானேன்.
இசையில் எம்.எஸ்.வி&யின் கற்பனை எங்களை ரொம்பவே பிரம்மிக்கவைக்கும். ‘நீங்க போட்ட சங்கதிகள்ல எதை எடுத்துக்கிறது, எதை விடறுதுன்னு தெரியலை சார்’னு பயந்துக்கிட்டே சொல்வேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே, ‘உங்களுக்கு எது ஈஸியா இருக்கோ அதை எடுத்துக்கங்கம்மானு சொல்வார். நல்லா பாடிட்டா ‘நான் மெட்டு போட்டதைவிட நல்லா பாடிருக்கீங்க’ம்மானு சொல்லிப் பாராட்டுவார். ஆனால் அவர் போட்ட சங்கதிகள்ல 60, 70 சதவிகிதம்தான் பாடிருப்போம்.
1977&ம் ஆண்டில் எம்.எஸ்.வி& தலைமையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இசைச் சுற்றுப்பயணம் போனோம். 17 நாட்களில் 18 நிகழ்ச்சிகள் பன்ணினோம். அப்போ அவரோட இசையில் நான் பாடின ‘நாதம் என்னும் கோயிலிலே...’ ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்’... இந்தப் பாடல்கள் ரொம்பப் பிரபலம். அந்தப் பாடல்கள் இல்லாத இசைமேடை நிகழ்ச்சியே இருக்காது. அந்தக் காலத்துல வாரத்துக்கு ஒரு இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்கும். எம்.எஸ்.வி சார் எனக்கு போன் பண்ணி இந்த வாரம், இந்த இடத்துல இசை நிகழ்ச்சி இருக்கு வந்துடுங்கம்மானு சொல்வார். நான் தவறாம கலந்துக்கிட்டிருந்திருக்கேன். அவரோட இசையில தமிழில் மட்டும் அல்ல, கன்னடம் தெலுங்கு மொழிகள்லகூட பாடிருக்கேன்.
‘ஏக் துஜே கேலியே’ இந்திப் படத்தோட ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு ‘மரோசந்திரா’. அந்தப் படத்துல எம்.எஸ்.வி இசையில் நான் பாடின அத்தனை பாடல்களுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

என்னைப் பத்தி ஒரு முறை ஒய்.ஜி.மகேந்திராகிட்ட ‘வாணியம்மா ஃப்ளோட்டிங் பேப்பர் மாதிரி சொல்லிக்குடுக்கிறதை அப்படியே பிடிச்சுக்குவாங்க’னு சொன்னாராம். இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்குக் கிடைச்ச பொக்கிஷமான ஆசிர்வாதங்கள். நிறையப் பேட்டிகள்ல வாணியம்மாவுக்கு ‘அபாரமான ஸ்வர ஞானம் உண்டு’னு சொல்லியிருக்கார். அந்த வார்த்தைகளைக் காப்பாத்தணுமேனு பயந்து பயந்து அவ்வளவு டெடிக்கேஷ்னோடு பாடுவேன்.
அபூர்வ ராகங்கள் படத்துக்காக அவர் இசையில் நான் பாடின ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ பாட்டு ரிக்கார்டிங் முடிஞ்சதும் என்கிட்ட, ‘வாணியம்மா... இந்தப் பாட்டுக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்கும்’னு சொன்னார். அவரது வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானது... எனக்கு முதல் தேசிய விருது அந்தப் பாடலுக்குக் கொடுத்தாங்க. அன்னைக்கு காலையில டெல்லியில விருது வாங்கிட்டு, மாலை சென்னையில் அவர் கச்சேரியில் பாட்டு பாடினேன். அப்போ பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்றை நான் அவர் கையில் கொடுத்து, நானும் என் கணவரும் எம்.எஸ்.வி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். என்னால மறக்க முடியாத கச்சேரி அது.

‘பத்தினிப்பெண்’ படத்துல எம்.எஸ்.வி சார் இசையில் ‘உலகெங்கும் நம் வீடு’னு ஒரு பாட்டு. பாடி முடிச்சுட்டு சிங்கர் பூத்தை விட்டு வெளியில வந்ததும், ‘வாணியம்மா இங்க வாங்க’னு கூப்பிட்டார். ‘என்ன சார்... நான் சரியா பாடலையா.. இன்னொரு டேக் வேணும்னா போலாமா?’னு கேட்டேன்.
‘அது இல்லைம்மா... நான் 15 நாள் கஷ்டப்பட்டு போட்ட ஒரு பாட்டை 5 நிமிஷத்துல ஒரு டம்ளர் தண்ணி குடிக்கிறது போல பாடிட்டீங்களே...’ சொல்லி வியந்துபோனார். அந்த வார்த்தைகளை என்னால் எப்பவும் மறக்க முடியாது.

அவர் இசையில் பாடினதெல்லாம் பொன்னான நாட்கள். காலையில் 9 மணிக்கு ரிக்கார்டிங்னா நான் சரியா போய்டுவேன்... பார்த்தா எனக்கு முன்னாடி அவர் கார் போயிட்டிருக்கும். தயாரிப்பாளர் எல்லோரையும் வயசு வித்தியாசம்லாம் பார்க்கமா முதலாளி முதலாளின்னுதான் கூப்பிடுவார். அவருக்கு இசையைத் தவிர வேறு ஒண்ணும் தெரியாது. செல்போனை எப்படி ஆபரேட் பண்ரதுன்னுகூட தெரியாது. அவங்க பொண்ணுங்க என்கிட்ட சொல்வாங்க... ‘எங்க அப்பா ஒரு குழந்தை மாதிரி. நாங்கதான் அவருக்கு வேண்டியதெல்லாம் பாத்துக்குவோம்.’ பாடகர்கள் சரியான ஸ்வரத்துல பாடுலனா விடவே மாட்டார் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொடுப்பார்.

ஆஸ்பத்திரில அவர் ஐசியுல இருந்தப்போ பார்க்க போனேன். ஒரு குழந்தை போல படுத்திருந்தார். ‘நாதம் என்னும் கோயிலில்...’ பாட்டை முழுசா பாடினேன். அதைக் கேட்டபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘வாணியம்மா பாடின பாட்டுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது எது?’னு அங்க இருந்தவங்க கேட்டாங்க. ‘அவர் பாடின எல்லாம் பாட்டும் எனக்கும் பிடிக்கும்’னு சொன்னார். இது எனக்கு பெரிய கொடுப்பினைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இழப்பு தென்னிந்த திரைக்கு மட்டுமல்ல, இந்திய இசைக்கு மட்டுமல்ல... உலக அளவில் ஒரு பெஸ்ட் கம்போசரை இழந்தவிட்ட இசையின் இழப்பு என்றுதான் சொல்லணும். எம்.எஸ்.வி அவர்கள் என்னளவில் ‘நாதம் என்னும் கோயில்’தான். அதில் அவர் ஏற்றிவைத்த ராகதீபங்கள் என்றும் அவரின் புகழை வெளிச்சமாக இசைக்கும்!


எம்.எஸ்.வி பற்றி புலவர் புலமைப்பித்தன் - நன்றி : ஆனந்த விகடன்

வீட்டில் இருந்து காலையில் ஏழு மணிக்கு எல்லாம் ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நாங்கள் அவர் வருவதற்கு முன்பே கூடிவிடுவோம். அவர் வரும்போது பத்து பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கி அடுக்கி இட்லி கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். ‘வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க... இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துடும்’ என என்னிடம் சொல்லிவிட்டு ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படிச் சிரிப்பார். எல்லாமே அவருக்கு விளையாட்டுத்தான். அப்படி ஒரு பிள்ளை மனசு.
உலக விஷயங்கள் எதுவும் தெரியாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது அவரிடம் சொன்னால், ‘அப்படியா... எப்ப வந்தார்?’ எனக் கேட்கும் அளவுக்கு வேட்டி சட்டை அணிந்த வெள்ளந்திப் பிள்ளை அவர்.

ஒருநாள் ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ‘வாத்தியார் அய்யா... நேத்து ஒரு கனவு கண்டேன். நீங்க எழுதிக்குடுத்த பாட்டுக்கு நான் போட்ட மெட்டு நல்லா வரலைன்னு, நீங்க என் கையை நீட்டச் சொல்லி அடி பின்னிடுறீங்க. அப்புறம் நான் முழிச்சுக்கிட்டேன்... பார்த்துக்கங்க’ எனக் கைகளை முன்னே காட்டி, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார். பக்கத்தில் இருந்த எல்லோரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் கண்டிப்பான தமிழ் வாத்தியார். கீழ்படியாத மாணவர்களைப் பிரம்பெடுத்து விளாசிவிடுவேன். மெல்லிசை மன்னரின் இரண்டு பிள்ளைகள் என் மாணவர்கள் என்பதால், அந்த விஷயம் அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு அப்படி ஒரு கனவு வந்தது என்றார்

‘குடியிருந்த கோயில்’ படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நான் எழுதின பாடல்தான் என் திரையுகல வாழ்வின் முதல் பாடல். கோவையில் இருந்து சென்னைக்கு என்னை அழைத்துவந்த கே.சங்கர்தான் இயக்குநர். ஏற்கெனவே இரண்டு மூன்று பேர் அந்தப் பாடல் சூழலுக்கு எழுதியும் திருப்தியாக வராத நிலையில்தான், என்னை எழுதச் சொன்னார்கள். சூழலைச் சொல்லிவிட்டு மேற்கு மாம்பலம் பவர் ஹவுஸ் பக்கத்தில், காரில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார் கே.சங்கர். காரில் வரும்போதே மனசுக்குள் பாடல் முழுவதும் வந்துவிட்டது. பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்கலாம் எனப் போனால், சட்டைப்பையில் பேப்பர் வாங்கக்கூட காசு இல்லை. கையில் வைத்திருந்த பேப்பர் ஃபைலைத் திருப்பி, அதில்தான் எழுதினேன் ‘நான் யார்... நீ யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்?’ அன்று மாலையே அந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு. பாடல் எழுதின பேப்பரைக் கையில் எடுத்த எம்.எஸ்.வி., ஒரே மூச்சில் முழுப் பாட்டையும் பாடி மெட்டமைத்த அதிசயத்தை, அன்றுதான் நேரில் பார்த்தேன். அந்தப் பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு எம்.எஸ்.வி. பழக்கம் என்றாலும் அந்தப் பாடலுக்குப் பிறகு எங்களுக்கு நட்பின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது.
தமிழ்த் திரையுலகில் எம்.எஸ்.வி&யைப் போல குருபக்தி கொண்டவர்களைக் காண்பது அரிது. தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை, தனது தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றியவர் எம்.எஸ்.வி. சுப்பையா நாயுடுவின் கடைசிக்காலம் வரை அவரிடம் எம்.எஸ்.வி காட்டிய நன்றி விசுவாசம் எல்லையற்றது. எம்.எஸ்.வி&யின் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏற்காட்டில் உள்ள அவரது பங்களாவில் நடக்கும். அவரோடு வேலைபார்க்கும் முக்கியமனவர்களை மட்டும் அழைப்பார். பிறந்த நாள் அன்று காலை குளித்து முடித்ததும் அவரது அம்மா நாராயணி அம்மாள், குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருவரின் கால்களிலும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவார். சுப்பையா நாயுடுவின் காலில் விழுந்து வணங்கி எழுந்திருக்கும்போது எம்.எஸ்.வி&யின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடும். அத்தனையும் நன்றிக்கடனுக்காக சிந்தும் கண்ணீர் என்பது என்னைப் போல எம்.எஸ்.வி&க்கு நெருக்கமாக இருந்த நண்பர்களுக்குத் தெரியும். சுப்பையா நாயுடு இறந்தபோது அவரது இறுதிச் சடங்குகளைப் பிள்ளையின் ஸ்தானத்தில் இருந்து செய்து முடித்தார் எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி., ஒரு பாடலுக்கு மெட்டு போட்டால் கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரஞ்சரமாகக் கொட்டும். ‘நேற்று இன்று நாளை’  படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலை நான்தான் எழுதினேன். எம்.ஜி.ஆருக்கு எழுதிய காதல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அந்தக் காலத்தில் பட்டிதொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்து பத்து மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார் எம்.எஸ்.வி. இந்தப் பாடல் வெளியாகி பிரபலமாகி இருந்த சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி பிலிம்ஸ் தாயரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்கு சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி&டமும் அப்படியே பேசியிருக்கிறார். ‘என்னடா... அண்ணனும் (எம்.ஜி.ஆர்) மலையாளி... நீயும் மலையாளி... அதனால அண்ணனுக்குத்தான் நீ நல்ல பாட்டா போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ என, ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’ பாடலைச் சொல்லிக் கேட்டார். பதறிப்போன எம்.எஸ்.வி. உடனே, ‘எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டுதான் நானு... பாட்டு எழுதினதெல்லாம் வாத்தியார் அய்யாதான்... நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க...’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்துவிட்டு எம்.எஸ்.வி&யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

வாஹிணி ஸ்டுடியோவில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்துக்கான பாடல் பதிவு. ‘தீர்த்தக்கரையிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்தினிலே...’ என்ற பாரதியார் பாடலை எடுத்துக்கொண்டு வந்துகொடுத்து இசையமைக்கச் சொன்னார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அது சிந்து வகைப் பாடல். மெட்டுக்குள் கட்டுப்படாமல், ஒரு குழந்தையைப் போல நழுவி நழுவி ஓடும் தன்மை கொண்டது. பாடலைக் கையில் வாங்கிய எம்.எஸ்.வி., ஏற்கெனவே பத்து முறை பாடி பயிற்சி எடுத்ததுபோல படபடவென்று பாடி முடித்துவிட்டார். எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சர்யம். பாடி முடித்ததும் என்னைப் பார்த்து ‘வாத்தியார் அய்யா பாட்டு எப்படி?’ என்று கேட்டார். நான் ‘பாரதியார் நேரில் வந்து மெட்டமைத்திருந்தால்கூட இப்படி அமைத்திருக்க மாட்டார்’ எனச் சொல்ல, எம்.எஸ்.வி&யின் கண்களில் தாரைத்தாரையாகக் கண்ணீர்... அவர் மிகவும் உணர்ச்சிவசப் பட்ட தருணம் அது.

எம்.எஸ்.வி., மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். தமிழ்த் திரையுலகில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்களா என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார் எம்.எஸ்.வி. உதாரணமாக மூன்று சம்பவங்களைச் சொல்கிறேன்...
 அப்போது தேவர் பிலிம்ஸ் கம்பெனியின் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்தான். ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, ‘தம்பி... நம்ம கம்பெனியோட புதுப்படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க...’ எனச் சொல்லிப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., ‘மாமா (கே.வி.மகாதேவன்)  இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது  இல்லைனு முடிவு பண்ணிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர் எம்.எஸ்.வி&யின் அம்மா நாராயணி அம்மாளிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் ‘என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி... அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். அடுத்து...
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘வியட்நாம் வீடு’ படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை. அப்போது அவர்கள் தயாரிக்கவிருந்த ‘கௌரவம்’ படத்துக்கான கதை விவாதம் முடிந்து இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை இசையமைக்கும்படி சொல்லி, கதை சொன்னார்கள். கதையைக் கேட்டு முடித்த கே.வி.எம்., எழுத்துபோயிருக்கிறார். ‘ஏன் கதை பிடிக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை... இந்தக் கதை கொஞ்சம் முற்போக்கானது. இதற்கு என்னைவிட எம்.எஸ்.வி பொருத்தமாக இருப்பார். அவரை இசையமைக்கச் சொல்லுங்கள்’ எனச் சொல்லிவிட்டார் கே.வி.எம்.
எம்.எஸ்.வி&யிடம் சொன்னால், ‘மாமா இசையமைப்பதாக இருந்த படத்த்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்’ எனச் சொல்லிவிட, கே.வி.எம்&மே போன் போட்டு, ‘நீயே இசையமைத்துக் கொடு எனக்கு அந்தப் படம் சரிவராது’ எனச் சொன்னபிறகுதான், கௌரவம் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். இதேபோலத்தான்... உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க இரண்டு பாடல்களும் பதிவாகிவிட்டன. எம்.ஜி.ஆரை அந்தப் பாடல்கள் ஈர்க்கவில்லை. குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து, ‘நான் எடுக்கவிருக்கும் ஒரு சரித்திரப் படத்தில் உங்களுக்கு நான் வாய்ப்புத் தர்றேன். இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி., இசையமைச்சா பொருத்தமா இருக்கும்’ எனச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார். குன்னக்குடி வைத்தியநாதனும் சம்மதித்துவிட்டார். ஆனால், வழக்கம்போல எம்.எஸ்.வி., ‘குன்னக்குடி அவர்கள் இசையமைத்த படத்துக்கு நான் எப்படி இசையமைப்பது முறை இல்லை...’ எனச் சொல்லி மறுக்க, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே நேரில் வந்து சொன்னப் பிறகுதான் எம்.எஸ்.வி. ஒப்புக்கொண்டு இசையமைத்துத் தந்தார். இதுதான் தமிழ்த் திரையிசை வரலாறு. வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அதிலும் பண்பாடு காத்து பாடல் போட்டவர் எம்.எஸ்.வி. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையில் மயங்கிப்போய் எம்.ஜி.ஆர்., 50000 ரூபாய் சம்பளம் தந்தார். அதுவரை எம்.எஸ்.வி. இசையமைக்க வாங்கியத் தொகை 25ஆயிரம்தான்.

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘இதயக்கனி’ படத்துக்காக எம்.எஸ்.வி. இசையில் ஒரு மெட்டுக்கு பாடலும் எழுதிவிட்டேன். இடைவேளையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தட்டைக் கீழே வைத்துவிட்டு, ஒரு மெட்டை பாடிக்காட்டி, ‘வாத்தியார் அய்யா இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு கொடுங்க... அந்தப் பாட்டு வேண்டாம்...’ என்றார். நானும் அப்போதே எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடல்தான் இன்பமே உந்தன் பேர் பெண்மை... அப்போது பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமான காதல் பாடல் இது. ஆனால் பிறந்தது என்னவோ ஒரு சாப்பாட்டு இடைவேளையில். அதே படத்துக்காக ‘நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...’ பாடலுக்கு முன்புவரும் தொகையறாவில், ‘காவிரியையும் எம்.ஜி.ஆரையும் இணைத்துப் பாடல் எழுத முடியுமா?’ என ஆர்.எம்.வி கேட்டார். ‘ஏன் முடியாது?’ எனச் சவாலாக எடுத்துக்கொண்டு எழுதிய
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி
&தொகையறாவை உடனே மெட்டமைத்துப் பாடிக்காட்டி அசத்தியவர் எம்.எஸ்.வி.

பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் காலைப் பிடித்துப் பாராட்டுவார் எம்.எஸ்.வி. ‘வரம்’ படத்தில் ஒரு பாடலில் ‘அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா’ என ஒரு வரி எழுதிவிட்டேன். அதை இசையமைக்கும்போது படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் என் காலைத் தொட்டுப் பாராட்டினார். ‘இப்படி நீங்கள் செஞ்சா நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், ‘வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜம்’ என்றார். ஒரு பாடலுக்கு நன்கு இசையமைத்துவிட்டால், அதுக்கான கிரெடிட்டை ‘வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனதுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு துட்டு வாங்கியது கிடையாது. பத்தாயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, 25 ஆயிரம் கொடுத்தாலும் அதே உழைப்பு, அதே இசைதான்.
டி.எம்.எஸ்& போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது. அப்போதெல்லாம் அவர் ட்யூனைக் கற்றுக்கொள்ளும் வரை விடமாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும் அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார்.

கௌரவம் படத்தில் ‘பாலூற்றி வளர்த்த கிளி’ பாடலை முதலில் பாடியது எம்.எஸ்.வி&தான். படத்தில் பின்னணியில் ஒலிக்கும் பாடலாக வரும் என்றுதான் முதலில் எடுத்தார்கள். அப்படியே எம்.எஸ்.வி&யும் பாடிமுடித்துவிட்டார். பாடலை கேட்ட சிவாஜி ‘இதற்கு நான் வாயசத்து நடித்துவிடுகிறேன்’ எனச் சொல்லி நடித்தும்விட்டார். ரீ ரிக்கார்டிங்கில்தான் எம்.எஸ்.வி&க்கு இந்த விஷ்யம் தெரியவந்தது. ‘சிவாஜிக்கு என் குரலா? இல்லை இல்லை டி.எம்.எஸ்ஸைக் கூப்பிடுங்கள்’ என்றார். நான் ‘உங்கள் குரல் சிவாஜிக்கும் சூழலுக்கும் பொருத்தமாதானே இருக்கு...’ என வற்புறுத்தினேன். உடனே எம்.எஸ்.வி. அவர்கள் ‘இல்ல வாத்தியார் அய்யா... சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடினால்தான் பொருத்தமா இருக்கும்’  என தனக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டுத்தந்த மாமேதை எம்.எஸ்.வி.

பாட்டுக்கு மெட்டு போட்டு விட்டு நேரம் கிடைத்தால் ‘வாத்தியார் அய்யா வாங்க சீட்டு போடுவோம்’ என்பார். எம்.எஸ்.வி., இயக்குநர் ஆர்.சி.சக்தி, நான்... மூவரும் இணைந்தால் அங்கே சீட்டாட்டம் நிச்சயம் இருக்கும். எம்.எஸ்.வி&க்கு சீட்டாடுவதிலே அவ்வளவு பிரியம். ஆனால், அவரைப் போல தோற்பவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சீட்டு விளையாடவே தெரியாது. சமயத்தில் ஜோக்கரையே கீழே இறக்கிவிடுவார். ‘அய்யோ... இது ஜோக்கர் எடுத்து உள்ள வைங்க’ என்று சொன்னால் அப்பாவிப் போல முகத்தை வைத்துக்கொண்டு, நாக்கைத் துருத்திச் சிரிப்பார். அவ்வளவு அப்பாவி.

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளையடித்தவன் நீதான் & என் உள்ளத்தை, கொட்டி வைத்தவன் நீதான் & இன்பத்தை’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி., 80 மெட்டுக்கள் போட்டார்; நான் 120 பல்லவிகள் எழுதினேன். அந்தப் படத்தின் உதவி இயக்குநராக இருந்த இடிச்சபுலி செல்வராஜ், இந்த விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் சொல்ல... ‘எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் உங்களை நான் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்’ என்றார். இல்லை தலைவரே இது ஒருவகையான பயிற்சி. இனி எந்தச் சூழலுக்கும் நான் பாட்டு எழுதிவிடுவேன்’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். ‘மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்.... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்’ பாடலை அழுதுகொண்டே மெட்டமைத்துப் பாடியது எம்.எஸ்.வி&யின் ஈர மனதுக்கு எடுத்துக்காட்டு.

திரைப்படங்களுக்கு மட்டும் அல்ல. நாங்கள் இருவரும் இணைந்து... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அதிமுக பிரசாரப் பாடல்களும் தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரமபலம். அதிமுக முதன்முறையாக தேர்தலில் நின்ற 1977&ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி. இசையமைக்க நான் எழுதிய ‘வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல் ஒலிக்காத ஊரே கிடையாது. 1984&ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டு மணி நேரத்தில் 9 பாடல்களை இரண்டே நாட்களில் மெட்டமைத்து பதிவு செய்து அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி.
 தான் கண்ட கனவு ஒன்றை 30 வருடங்களுக்கு முன்பு சொன்னார் எம்.எஸ்.வி.... ‘வாத்தியார் அய்யா நேத்து ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவுல நான் செத்துப் போயிட்டேன். இறுதி ஊர்லவத்துல என்கூட பழகினவங்கள்ல யாரெல்லாம் வர்றாங்கனு மேல போத்திருந்த துணியை விளக்கிப் பார்த்தேன்... அப்புறம் முழிச்சுக்கிட்டேன். என்னங்க வாத்தியார் அய்யா இப்படி ஒரு கனவு’ என்றார். நான் ‘உங்களுக்கு ஆயுசு நூறு இப்போ உங்களுக்கு சாவு கிடையாது’ என்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்திருக்கலாம். ஆனால், அவரது நாதம் காற்றை இன்றும் என்றும் உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரு இனம் இருக்கும்வரை அவர்களது சுக&துக்கங்கள் இருக்கிறவரைக்கு எம்.எஸ்.வி&யின் பாடல் ஒலிக்கும். அவை ஒலிக்கிற வரைக்கும் எம்.எஸ்.வி இருப்பார்! ஏனெனில் அவர் விஸ்வரூம் எடுத்த நாதம்!

விமர்சனம் ~ சொற்றுணை வாழ்க்கை ~ கவிஞர் விக்ரமாதித்யன் ~மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதைப் புத்தகம்

உன் பாசாங்குக்கும் பசப்புகளுக்கும் மயங்கியிருக்கும் நிலம்

எமக்கு வாய்த்தது நன்மைதான். 
நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து
அதனியல்பால் எல்லாம் கிட்டும். 
எழுதுகோல் முளைக்கும்.
கணினியும் கண்டடைவோம்.
மரித்திருக்கும் குலசாமிக்கு உயிர்ப்பு துளிர்விடும். 
சாங்கியமும் கொண்டாட்டமும் மீண்டும் நிறம்கொள்ளும். 
நிலத்தின் வண்டல்களால் செப்பமுறும் மூளை.
இருதயம் திடசித்தம் கொள்ளும். 
கனவுகள் கள்வெறியூட்டும். 
இறுகிக் கிடந்த இச்சைகளுக்கு றெக்கை அரும்பும். 
மூதாதையர் தேடிக் களைப்படைந்த புதையல்கள்
அகழாமல் மேல்வரும். 
நீளும் ஆயுள்ரேகைகளில் நம் சந்ததி வளப்பமுறும். 
எல்லாம் கிட்டும் எமக்கு
யாவற்றுக்கும் முன்
உன் பசப்புகளுக்கும் பாசாங்குகளுக்கும்
மயங்கி இருக்கும் நிலத்தை மீட்டாக வேண்டும்.

(‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’, பக்கம்: 31)

கவிஞனின் சமூகப் பொறுப்பே நல்லகவிதையை நல்கிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இந்தக் கவிதையை; தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையொன்றே சொல்லலாம்; சமகால உணர்வுள்ள கவிஞனுக்கே இது சாத்தியமாகும்;

‘‘இடதுசாரிக் கொள்கைப்பற்றும் விவசாய வாழ்வும் பின்னணிகளாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்’’ இப்படி எழுதுவது இயல்பேயாகும்; கதிர்பாரதியிடத்தே உள்ள விசேஷ அம்சமே இதுதான். 

‘‘எமக்கு வாய்த்தது நன்னிலம்தான்’’ என சர்வ நிச்சயமாகத் தொடங்கும் கவிதை, ‘‘நெகிழத் தொடங்கியிருக்கும் இக்கணத்திலிருந்து / அதனியல்பால் எல்லாம் கிட்டும்’’ எனத் தொடர்கிறது; என்னென்ன கிடைக்கும் நிகழும் என்று வளர்கிறது; இறுதி மூன்று வரிகளில், இதற்காக யாது செய்யவேண்டுமென தீர்க்கமாக முடிவுசெய்கிறது; இதுதான் கவிதைச்செய்தி; கவிச்சீற்றம். நிலத்தை மீட்டபிறகுதான் எல்லாம். 

சுருக்கமாக, தெளிவாக அமைந்துள்ள கவிதை; உண்மையான முற்போக்குக் கவிதைக்கு உதாரணமாக விளங்குவது சரளமான கவிதை மொழிதான்; அரசியல் கவிதைதான் & பார்க்கப் போனார். 

துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பு
அவனிடம் நெடுநாட்களாக சிரிப்பு ஒன்று இருந்து வருகிறது. 
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அதை உபயோகித்து என்னவெல்லாமோ செய்துவிடுகிறான். 
முதலில் ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்தான்
அது கைவிடப்பட்ட வீடொன்றுக்கு விளக்கேற்றுவதாக அமைந்தது. 
பிறகு புறாவொன்றை கூண்டிலிருந்து திறந்துவிட்டு
அதன் உரிமையாளரோடு சமாதானம் செய்வித்தான்
அது சிறுமியின் சிராய்ப்புக்கு மருந்திடுவதற்கு ஒப்புமை கூறப்பட்டது. 
பூர்விகச் சொத்துக்காக ரத்தவெறிகொண்ட பங்காளிகளிடையே
மிதக்கும் இலவம்பஞ்சைப் போல நுழைந்த அவன் சிரிப்பு
வல்லூறுவிடமிருந்து கோழிக்குஞ்சை மீட்பதற்கு உவமையானது. 
வலி சுமந்து பாரமிழுக்கும் வண்டிமாட்டின் கழுத்தை 
ஆசுவாசப்படுத்தி அவன் சிரித்தது
கயவர்களால் வல்லாங்குக்குள்ளான காதலியைத் தோள் சாய்த்து
ஆறுதல் தரும் காதலனைப் போன்றிருந்தது. 
புகை வீட்டு மறிக்கும் தீவனக்கிளை உடைத்துப்போடுவதாக
மூர்ச்சையுற்ற கர்ப்பிணிக்கு விசிறிவிடுவதாக
அவ்வப்போது தோற்றம் கொள்ளும் அந்தச் சிரிப்பில்
திக்கற்ற அகதிக்கு தாய்நாட்டைத் தரும் கரிசனமும் 
வறிய யாசகனுக்கு விருந்துண்டு கிறங்கும் பாக்கியமும்
சுடர்ந்தபோது நான் அதற்கு ரசிகனாகி இருந்தேன். 
சமீபத்தில்,
இலவச வேட்டி சேலை நெரிசலில் இறந்தவனின்
மரணப் பந்தலில் இடிஇடியென அவன் சிரித்தது மட்டும்
துப்பாக்கிக்கு ரவை நிரப்பியதைப் போலானது. 
(பக்கம்: 52)

அவனிடம் நெடுநாள்களாக இருந்துவரும் சிரிப்பைப் பற்றிக் கூறி ஆரம்பமாகிறது கவிதை; அந்தச் சிரிப்பினால், அவன் ஆக்கபூர்வமாக எவ்வளவோ காரியங்களும் சாதிக்கிறான்தான்; அந்தச் சிரிப்புக்கு இவன் ரசிகனாகி இருந்ததும் கூறப்படுகிறது; சமீபத்தில் சிரித்ததுதான் கவிதையின் பாடுபொருளே. 

எதார்த்தத்தின்மீது கட்டப்பெற்ற புனைவு; புனைவின் வழிலேதான் இந்த விஷயத்தையே சொல்லமுடியும்; தீர்க்கமான சமூகப்பார்வைதான் விசேஷமே; இதுவும் அரசியல்கவிதைதான்; கதிர்பாரதி கட்டும் புனைவுகள் அனைத்துமே அழகானவையும் வசீகரமானவையும் ஆகும்; அவை பொருத்தமான இடங்களில் பொருந்தியிருக்கின்றன என்பதும் சுட்டப்பட வேண்டியதே; பெரும்பான்மைக் கவிதைகளும் புனைவின் வாயிலாகவே பேசப்பட்டுள்ளன என்பதும் கவனம்கொள்ள வேண்டியதே; இவருக்குப் புனைவுபடுத்துவது கைவந்த கலையாகவே கூடிவந்திருக்கிறது; ஒரு கவிஞனுக்கு இது பெரிய கொடுப்பினை; கூடவே ஒரு சந்தேகமும்; புனைவு, நிறையப் பயன்படுத்தப்பட்டு விட்டதனால், காலாவதியாகிவிடக் கூடுமே என்றும்; கதிர், சுதாரித்துக் கொள்வாராக. 

கோழிக்காலக் குறிப்புகள்
கோழியைக் கண்டால் எச்சரிக்கையோடு கூடிய
ஆசூயையும் தொற்றிக் கொண்டபோது
இறைக்காக அது மலம் கொத்திக் கொண்டிருந்தது
எனச் சொன்னால் நீங்கள் வாழ தகுதியவற்றவர். 
குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து, 
புழுதி குடைந்தாடி, எச்சங்களை உண்டு... என
உங்கள் குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கிறேன் எனில்
நானும் அப்படித்தான். 
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழியிடமிருந்து
அபயஹஸ்தம் கிட்டிவிட்டால் அப்பப்பா மோட்சம்தான். 
பெட்டையோடு சுற்றிவந்து கொண்டை நிமிர்த்தி
அது கொக்கரிப்பதைத் தரிசித்துவிட்டால்
ஜென்மாந்திர ஜென்மமும் சாபல்யமடைந்திடும்.
வராதுவந்த ஓரிரண்டு வரன்களும்
இரண்டொரு பவுனில் இடறிப்போக
கன்னி கழியாமலே காலம் கழியும்
கோமதி அக்காவின் பார்வைக் குவிமையத்தில்
விரட்டிவிரட்டி சேவலும் விரண்டு மிரண்டு பெட்டையும்
சேர்ந்து தொலைக்கிறதா
அவற்றுக்குப் பொல்லாங்கு செய்யாது
தெண்டனிட்டு சேவியுங்கள். 
கோழிகள் நாளையே ஆட்சிப்பீடமேறி
கோமதி அக்காவுக்கு இலவசத் திருமணத்திட்டத்தில்...
(பக்கம்: 15)

கதிர்பாரதிக்குக் கிண்டலும் கேலியும் வசமாக வந்து வாய்த்திருக்கின்றன; அதுவும் ஆக்கமாகவே; அதற்கு ஓர் உதாரணம்தான் இந்தக் கவிதை; இன்றைய அரசியல் சமூக நிலைமைகளைக் கண்கொண்டு காணும் கருத்துக் கொண்டு வாழும் சீரிய கவிஞன் அவற்றையெல்லாம் ஏளனம் செய்யாது / ஏகடியம் பண்ணாது எப்படி இருக்கமுடியும்; நாளைக்கு வரலாறு எழுத முற்படும்போது, இந்தத் தமிழ்க் கவிஞர்கள் என்னதான் செய்து கொண்டிருந்தார்களாம் என்ற கேள்வி வந்து விழுந்துவிடலாகாது இல்லையா; எங்கேயோ எப்படியோ கால்கொள்ளும் கவிதை இலக்கை நோக்கி வந்துவிடும் விதம் செம்மையானதுதான்; இப்படியெல்லாம் சுவாரஸ்யமாகக் கவிதை சொல்ல முடியும் போல என்றே எண்ண வைத்துவிடுகிறார்கள் இளந்தலைமுறைக் கவிஞர்கள். 

இன்னொரு முக்கியமான செய்தியும் உண்டு. 

இங்கே பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிற இந்த மூன்று கவிதைகளுமே சமகாலத் தமிழ்ச் சமூக இருப்புநிலையை எடுத்துப் பேசுபவை என்பதே இவற்றின் பெறுமதி; தமிழ்நிலம் குரித்த ஓர்மையும் உணர்வும் கொண்ட கவிஞனாகவே கதிர்பாரதி திகழகிறார் என்பதுதான் அவருக்குப் பெருமை சேர்ப்பதுமாகும்; மண்ணையும் மக்களையும் மனசில் நிறுத்தியிருக்கும் கவிஞன், மகாகவியாக மாற நீண்டகாலம் பிடிக்காது; தன் திசைவழியைத் தெரிவு செய்துகொள்ள வேண்டியதுதான் நல்ல காரியமாக இருக்கும். 

மதுக்கூடங்களோடு புழுங்குதல்
சமூகநலக் கூடங்களுக்குள் நுழைதல் போல
அத்துணை லகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது. 
கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது 
அங்கு நுரைபூத்துத் ததும்பிக் கொண்டிருக்கும் சொற்களின்மீது
இடித்துக் கொள்ளாமல் நுழைதல் வேண்டும். 
உங்கள் இருக்கையை அணுகும்போது கரிசனம் முக்கியம்.
உங்களுக்கு முன் பின் அமர்ந்ததும் அமரப்போவதும்
அதி உன்னத அனுபவமல்லவே. 
மதுசிப்பந்திகளிடம் புன்னகையைக் கொடுத்துவிட்டு 
மதுவைப் பெற்றுக்கொள்ளுதலே சிறந்த தொடக்கம். 
உயிர்த் திரவமெனப் பூரிக்கும் மதுவில்
ஐஸ்கட்டிகளோடு உங்களையும் முக்கிவிடுங்கள்.
ஒவ்வொர் இருக்கையிலும் வெவ்வேறுலகம் சுழலும்
எதனோடு ஒட்டாது உரசாது
நீங்களும் சுழலவிடுங்கள் உங்கள் உலகை. 
போதையின் பெருங்காதலோடு உலகங்களை அவதானிப்பது
அடடா... எவ்வாறு ஆனந்தம்; எவ்வளவு பேரானந்தம். 
மூன்றாவது, நான்காவது... சுற்றுகளுக்குப் பிறகு
வாழ்க்கை குமட்டலெடுக்கத் தொடங்கும். 
அப்போது மனதுக்குள் மதுக்கூடத்தைத் தெண்டனிட்டு விட்டு
வெளியேறிவிடுதலே புத்திசாலித்தனம்.
இல்லையேல்... இன்றும் ஒரேயொரு மிடறுக்குப் பிறகு
ஈசானமூலையில் முகம் இருள அமர்ந்திருப்பவனின்
தனிப்பெரும் விசும்பலில்
மதுக்கூடமே திரும்பத் தொடங்கிவிடும். 
(பக்கம்: 65)

நகுலன்முதல் அப்பாஸ், வித்யாஷங்கர், மலைச்சாமி, முத்துமகரந்தன், குவளைக்கண்ணன், ரமேஷ் (பிரேம்), யூமா வாசுகி, லக்ஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், சி.மோகன், லிபி ஆரண்யா, வே.பாபுவரை நவீன கவிஞர்கள் பலரும் மதுசார்ந்த கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்; ஒரு தொகை நூலே கொண்டுவரலாம், தனியே; உள்ளபடியேயும், அவையெல்லாம் குடிபற்றிய கவிதைகள் அல்ல; ஒவ்வொருவர் கவிதையும் ஒவ்வொரு வகை; சொல்லியிருப்பதும் வேறுவேரு விதம்; எல்லாமே இந்த வாழ்வுகதி பற்றியவைதாம்; திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஒயின்ஷாப்களும் கிடாமார்க் கடைகளும் திறந்துவிடப்பட்டு, தமிழினத்தையே ‘குடிமக்களாக்கிய பிற்பாடு மதுவைப் பற்றிக் கவிஞன் எழுதாமல் இருக்கமுடியாதுதான்; தமிழ்வாழ்வின் ஓர் அம்சமாகவே ஆகிவிட்ட ஒன்றை எப்படித் தள்ளி வைக்க முடியும். 

இங்கே, கதிர்பாரதி, சொல்லும் விஷயம் தனியானது; சொல்முறை, சிலாகிப்புக்குரியது; எதார்த்தமும் புனைவும் விரவப் பேசப்படுவது; இறுதி நான்கடிகளில் வெளிப்படும் செய்தி, மனிதார்த்த அடிப்படையாக விளங்குவது; துயருக்குப் பிரிவு காட்டுவது; இதுதான் இன்றியமையாதது. 

ஆமாம் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்

நான்கைந்து தடவைகளுக்கு அதிகமாகவே
உதிர்ந்து ஒழுகிவிட்ட உங்கள் மனைவியின் கர்ப்பத்தால்
கலைந்துபோகின்றன உங்கள் உள்மன அடுக்குகள். 
அதற்குள், முற்காலத்துக்கும் முற்காலத்தில்
பறவைக்கூடுகளில் ஊடுருவித் திளைத்த சாரையாக
நீங்களிருந்த குற்றவுணர்வு வாலாட்டுகிறது. 
அதைக் கொல்ல நினைத்துதன் இப்போது
சாராயத்தால் மிடறுமிடறாக எரிந்துகொள்கிறேன் என்கிறீர்கள். 
சொல்லும்போதே, ஒரு தண்ணீர்க்காலத்தில்
நவாமரக் குரங்குக்கு நட்டாற்றில் துரோகமிழைத்த
முதலை நானென்று
கல்லீரல் அறைந்தறைந்து கலங்குகிறீர்கள். 
விபத்தில் நசுங்கிய உங்கள் பருவமகளின் துடிதுடிப்பு
செந்நாய்ப்பிறவியில் உங்களால் கிழிக்கப்பட்ட
கலைமான் குட்டியினுடையது என்று
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறு அரற்றுகிறீர்கள். 
ஒரு தேசத்துக்கு ராஜகுமாரனாக இருந்ததும்
தற்போது வாடகைக் குடித்தனத்தில் அவிவதும்
இப்படித்தானென ஆங்காரம் கொள்கிறபோது
உங்கள் போதை உச்சிக்கு வந்திருக்கிறது. 
என்ன வாழ்க்கையடா இதென்று
உயிரைக் கழற்றி எறிவதற்காக
தொப்பித்தூக்கிப் பாறையின் குணநலன்கொண்ட
காலத்தின் இரக்கமற்ற பள்ளத்தாக்கு முனைக்கு
ஒருமுறை சென்றுவிட்டதாகவும்... பிறகு, 
அந்த எண்ணத்தை மட்டும் கழற்றி எறிந்ததாகவும்
அது திரும்பி வந்து துரத்திக் கொண்டிருப்பதாகவும்
அதனால் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
ஆமாம்
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 
(பக்கம்: 66)

முதல் ஆறடிகளில் உள்ளது ஒரு செய்தி; நடந்தவை ஏற்படுத்திய குற்றவுணர்வு; அடுத்தடுத்து, நிகழ்கால ஸ்திதி; கவிதை சொல்வதென்ன; கடந்தகாலத்தில் செய்தனவற்றிற்காக இப்பொழுது மறுகிமறுகி வாடுவதையா; போதையில், உளம் கொளும் கோலங்களையா; இரண்டும்தான்; வினையிலிருந்து வந்த வினையும்தான்; தன் நெஞ்சே தன்னைச் சுடுகிறதோ; ‘‘குற்றம் புரிந்தவன், வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது’’ என்பதா; ‘‘நடந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அவன் மூடன்’’ என்பதா; கவிதை, ஒரு சித்திரமாய் விரிகிறது, நவீன ஓவியம்; அதில் வாசகன் காண்பதே பொருள்; உரைகாரன் சொல்வதல்ல. 

வேடிக்கைக் கவிதைகள், காதல் மற்றும் காமம்சார் கவிதைகள், பிள்ளைகள் பற்றிய கவிதைகள் என்றெல்லாம் கலந்து கட்டிய தொகுப்பு & மதுரைக் கதம்பம் மாதிரி; கட்டுரையில் எடுத்தாண்டிருப்பன், மானாமதுரை மரிக்கொழுந்துபோல; வாசிப்பு ஆனந்தம் தரும் கவிதைகள் தாம் அனைத்துமே; கவிதை வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். 

விமர்சனமாகச் சில வார்த்தைகள். 

அநேகம் கவிதைகளும் முன்னிலையை விளித்துப் பேசுவன; 
இந்தக் கூறலை அதிகம் பயன்படுத்தக் கூடாது; சிரிப்புத் தரும்;
பலவிதமான சொல்முறையும் பயின்றுவரவேண்டும்; 
இப்படித்தான் சொல்வான் இவன் என்று யாரும்
யூகிக்க இடம்தராமல் இருப்பதே உத்தமம்; 
அர்ஜூனனின் கணைகள், பெரும் இலக்குக் கொண்டவை என்பதைநவீன கவிஞர்கள் நினைவிலிருத்திக் கொண்டால் உலகத்தரத்துக்குத் தமிழ்க்கவிதை உயர்ந்துவிடும். 

‘கோழிக்காலக்குறீப்புகள்’ கவிதையில் இரு பிழைகள்; ஐந்தாவது வரி, ‘‘குப்பைகள் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து’’ என்பதில் ‘குப்பைகள்’ எனப் பன்மை வேண்டியதில்லை & ‘குப்பை’ போதும்; ‘‘குப்பையைக் கிளறிவிடும் கோழியே / கொண்டிருக்கும் அன்பிலே இரண்டுமுண்டு என்பதை / கண்டதுமில்லையோ வாழ்விலே’’ என்றுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருப்பார்; பதினான்காவது வரி, ‘‘வராது வந்த ஓரிரண்டு வரன்களும்’’ என்பதில், ‘வரன்’ என்பது பார்ப்பன வழக்கு இல்லையோ; எங்கள் பக்கத்தில், பார்ப்பரை நல்லாதோர், ‘வரன்’ என்று பேசிக் கேட்டதில்லை; ‘பொண்ணுவீடு’ ‘மாப்பிள்ளை வீடு’ என்பார்கள்; தஞ்சை ஜில்லா வழக்கு என்ன. 

மிகமிக முக்கியமான பொறுப்பு, ஒவ்வொரு நவீனகவிஞனுக்கும்; தங்கள் கவிதைத் தொகுப்புக்குத் தாங்களே மெய்ப்புப் பார்ப்பது; அச்சுப்பிழைகளும் ஒற்றுப்பிழைகளும்மரிந்த கவிதைத் தொகுப்புகள், வாசிப்புக்குப் பெரிய இடைஞ்சலை விளைவிக்கின்றன; உ.வே.சா.காலத்திலேயே செம்மையான பதிப்புக் கண்ட தமிழன், நகரத்தார் பதிப்பித்த ‘சிலம்பு’ காலத்திலேயே பிழைகளின் நூல் வெளியிட்ட இந்த இனம் இன்று ஏன் இப்படிக் கொடுமை செய்கிறது; கவிஞன்தான் சிரத்தை கொண்டிருக்க வேண்டும்; பதிப்பாளர் பொறுப்பில் விட்டுவிட்டு இருந்துவிட முடியாது. 

கட்டுரை நீண்டுவிட்டது; பத்திரிகை ஆசிரியரைப் படுத்தக்கூடாது; வாசகனை கஷ்டப்படுத்தக் கூடாது; நிறுத்திவிட வேண்டியதுதான். 
- விக்ரமாதித்யன் நம்பி

நூல்: மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
ஆசிரியர்: கதிர்பாரதி
முதற்பதிப்பு: டிசம்பர் 2012, இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2013
வெளியீடு: புது எழுத்து
எண்: 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டணம்- 635 112, 
கிருஷ்ணகிரி மாவட்டம்
விலை: ரூபாய் எழுபது